Published:Updated:

`211 பேர் அட்மிட்; வெளியில் வந்தால் வழக்கு!' - சென்னையில் தனிமைப்படுத்தப்பட்ட சந்தேக நபர்கள் #Corona

கொரோனாவால் தனிமைப்படுத்தப்பட்ட வீட்டில் ஸ்டிக்கர்
கொரோனாவால் தனிமைப்படுத்தப்பட்ட வீட்டில் ஸ்டிக்கர்

கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.

கொரோனா வைரஸ் தொற்று பரவுவதைத் தடுக்க நாடு முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. வீட்டைவிட்டு யாரும் வெளியில் வர வேண்டாம் என பிரதமர் நரேந்திரமோடி தெரிவித்துள்ளார். அதேபோல உங்கள் வீட்டுக்குள்ளேயும் உறவினர்கள், நண்பர்கள் என யாரையும் அனுமதிக்க வேண்டாம் என்று கூறியுள்ளார். வீட்டைவிட்டு வெளியில் சென்றால் கொரோனா வைரஸ் தொற்றை நீங்கள் சுமந்துகொண்டு வர வாய்ப்புள்ளதாக சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. அலுவலகங்கள், கல்வி நிலையங்கள், வணிக வளாகங்கள், மாவட்ட எல்லைகள், போக்குவரத்து சேவைகள் என அனைத்தும் முடங்கியுள்ளன.

சென்னையில் போலீஸ் சோதனை
சென்னையில் போலீஸ் சோதனை

தமிழகத்தைப் பொறுத்தவரை 23 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதியாகியுள்ளது. 211 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர கண்காணிப்பில் உள்ளனர். வெளிநாடுகளிலிருந்து தமிழகத்துக்கு வந்த 2,09,276 பயணிகள் பரிசோதனைக்குட்படுத்தப்பட்டுள்ளனர்.

அதில் 15,492 பேர் கண்காணிப்பில் உள்ளனர். 890 பேருக்கு ரத்த மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. இதில் 757 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இல்லை என்று தெரிந்துள்ளது. 110 பேருக்கான பரிசோதனை முடிவுகள் வரவில்லை. இந்தப் புள்ளி விவரங்களை சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிக்கப்பட்ட மதுரையைச் சேர்ந்தவர் உயிரிழந்துள்ளார். மற்றவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது.

வெளிநாடுகளிலிருந்து தமிழகத்துக்கு வந்தவர்கள் அனைவரையும் சுகாதாரத்துறையினர், மாவட்ட நிர்வாகத்தினர், காவல்துறை கண்காணிப்பாளர்கள் தீவிரமாகக் கண்காணித்துவருகின்றனர். அவர்கள் தங்கியுள்ள வீடுகளில் கொரோனா தொற்று, உள்ளே நுழையாதே, தனிமைப்படுத்தப்பட்ட வீடு போன்ற வாசகங்களைக் கொண்ட ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டுள்ளன. அதையும் மீறி தனிமைப்படுத்தப்பட்டவர்கள், வெளியில் சுதந்திரமாகச் சுற்றிதிரிந்ததால் காவல்துறையினர் நடவடிக்கை எடுத்துவருகின்றனர்.

வீட்டில் ஒட்டப்பட்டுள்ள ஸ்டிக்கர்
வீட்டில் ஒட்டப்பட்டுள்ள ஸ்டிக்கர்

ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டுள்ள வீடுகளை சுகாதாரத்துறையினரும் காவல்துறையினரும் கண்காணித்து வருகின்றனர். இதைத்தவிர அந்த வீட்டைச் சேர்ந்தவர்கள் வெளியில் நடமாடினால் அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் தகவல் தெரிவிக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இராக், சீனா ஆகிய நாடுகளிலிருந்து சென்னை வந்த 3 பேர் வெளியில் நடமாடியதால் அவர்கள் மீது கோயம்பேடு, திருமங்கலம் போலீஸார் வழக்குபதிந்துள்ளனர்.

இதுகுறித்து போலீஸ் உயரதிகாரி ஒருவர் கூறுகையில், ``சுகாதாரத்துறையிலிருந்து ஒவ்வொரு மாவட்ட கண்காணிப்பாளர்களுக்கும் போலீஸ் கமிஷனர் அலுவலகத்துக்கும் தனிமைப்படுத்தப்பட்டவர்களின் பட்டியல் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்ட பிறகு வெளிநாடுகளிலிருந்து தமிழகம் வந்தவர்களின் பெயர், முகவரி, செல்போன் நம்பர்களுடன்கூடிய விவரங்கள் அந்தப் பட்டியலில் உள்ளது. அதன்படி அவர்களைக் கண்காணிக்க சம்பந்தப்பட்ட காவல் நிலையங்களுக்கு பட்டியல் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அந்த வீடுகளை அடையாளப்படுத்த ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டுள்ளன" என்றார்.

சீல்
சீல்

சுகாதாரத்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், வெளிநாடுகளிலிருந்து தமிழகம் வந்தவர்களின் அடிப்படையில் இந்தப் பட்டியலைத் தயாரித்துள்ளோம். அவர்களில் சிலருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. சென்னை, காஞ்சிபுரம், சேலம் உள்ளிட்ட 10 மாவட்டங்களில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் அதிகம் பேர் உள்ளனர். மற்ற மாவட்டங்களில் உள்ளவர்களும் கண்காணிப்பில் உள்ளனர். தனிமைப்படுத்தப்பட்டவர்களில் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டவர்களுடன் தங்கியிருந்தவர்களும் தற்போது தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அவர்களை அடையாளம் காணும் வகையில் கைகளில் சீல் வைத்துள்ளோம்.

சென்னையைப் பொறுத்தவரைக்கும் திருவொற்றியூர் - 9, மணலி - 11, மாதவரம் - 16, தண்டையார்பேட்டை - 54, ராயபுரம் - 137, திரு.வி.க நகர் - 88, அம்பத்தூர் - 89, அண்ணா நகர் - 138, தேனாம்பேட்டை - 522, கோடம்பாக்கம் - 153, வளசரவாக்கம் - 74, ஆலந்தூர் - 110, பெருங்குடி - 103, சோழிங்கநல்லூர் - 46, மற்றவை - 47 என மொத்தம் - 1,890 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

இவை தவிர, புரசைவாக்கம் பகுதியில் 95 பேரும் அரும்பாக்கம் பகுதியில் 32 பேரும் ஆவடி பகுதியில் 25 பேரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இவர்களை அந்தந்தக் காவல் நிலையங்களில் உள்ள இன்ஸ்பெக்டர்கள் தலைமையிலான ஒரு டீம் கண்காணித்து வருகிறது. சென்னையில் மட்டும் 3,000 வீடுகளில் ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டுள்ளன. மேலும், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 211 பேரின் குடும்பத்தினர் அவர்களுடன் பழகியவர்களும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்" என்றார்.

கையில் சீல்
கையில் சீல்

கொரோனா வைரஸ் தொற்று பரவாமலிருக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு முன்எச்சரிக்கை நடவடிக்கை எடுத்து வருகின்றன. ஆனால், சென்னையில் பலர் அரசின் நடவடிக்கைகளை மீறி சாலையில் சுதந்திரமாகச் சுற்றித்திரிந்தனர். அவர்களை போலீஸார் எச்சரித்து அனுப்பினர். இன்னும் சிலர் வெறிச்சோடிக் கிடக்கும் சாலைகளில் பைக் ரேஸ், கிரிக்கெட், செல்ஃபி என அத்துமீறுகின்றனர். அவர்களையும் போலீஸார் எச்சரித்தனர். அரசின் நடவடக்கைகள் மீறி தேவையில்லாமல் வெளிவருபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக போலீஸ் உயரதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் தலைமைச் செயலாளர் சண்முகம், டி.ஜி.பி திரிபாதி மற்றும் அதிகாரிகள் கலந்துகொண்டனர். அதில் மக்கள் கூடுவதைத் தவிர்க்க டீக்கடைகளை மூடுவது உள்ளிட்ட முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.

அடுத்த கட்டுரைக்கு