`பதற்றமோ, பீதியோ வேண்டாம்; தமிழகத்தில் கொரோனா பாதிப்பு இல்லை!' - அமைச்சர் விஜயபாஸ்கர் #Corona

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு இல்லை என சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்திருக்கிறார்.
சீனாவின் ஹூபே மாகாணத்தில் உள்ள வுகான் நகரில் கொரோனா வைரஸ் பாதிப்பு கடந்த ஜனவரி 10-ம் தேதி கண்டறியப்பட்டது. சார்ஸ் வைரஸ் வகையில் பரவக்கூடிய கொரோனா வைரஸ் சீனாவில் பெரிய அளவில் பாதிப்புகளை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த வைரஸ் தாக்குதலால் மட்டும் இதுவரை சீனாவில் 300-க்கும் மேற்பட்டோரும், பிலிப்பைன்ஸில் ஒருவரும் உயிரிழந்துள்ளனர். மேலும், வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட ஆயிரக்கணக்கானோர், தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

வைரஸ் பரவுவதைத் தடுக்க சீனாவின் 12-க்கும் மேற்பட்ட நகரங்கள் வெளியுலகத் தொடர்பில் இருந்து துண்டிக்கப்பட்டிருக்கின்றன. அந்த நகரங்களுக்குப் பயணிக்கப்படவும், அங்கு வசிப்பவர்கள் வெளியூர்களுக்குப் பயணிக்கவும் சீன அரசு தடை விதித்துள்ளது. இதனால், சீனாவின் ஹூபே மாகாணத்தில் தவித்துவந்த தங்கள் நாட்டு மக்களை வெளியேற்றும் பணியில் பல்வேறு நாடுகளும் ஈடுபட்டு வருகின்றன. அங்கிருந்து 600-க்கும் மேற்பட்ட இந்தியர்களை மத்திய அரசு சிறப்பு விமானங்கள் மூலம் தாய்நாட்டுக்குக் கொண்டுவந்தது.
இந்தியாவில், கொரோனா பாதிப்பு இரண்டு பேருக்கு இருப்பது உறுதி செய்யப்பட்டிருக்கிறது. கேரள மாநிலத்தைச் சேர்ந்த அவர்கள் சமீபத்தில் சீனாவிலிருந்து திரும்பி வந்தவர்கள் ஆவர். அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறித்து சந்தேகப்படும் வகையில் யாருக்கும் அறிகுறிகள் தென்படவில்லை என சுகாதாரத் துறை செயலாளர் பீலா ராஜேஷ் கூறியிருந்தார்.

இந்த நிலையில், தமிழகத்தில் கொரோனா பாதிப்பு இதுவரை இல்லை என சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்திருக்கிறார். இதுகுறித்து பேசிய அவர், ``தமிழகத்தில் கொரோனா பாதிப்பு இல்லை. அதனால், மக்கள் பதற்றமோ, பீதியோ கொள்ளத் தேவையில்லை. அதேபோல், இந்த விவகாரத்தில் வதந்திகளைப் பரப்ப வேண்டாம்.
இதுதொடர்பாக அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் தமிழக அரசின் மக்கள் நல்வாழ்வுத் துறை எடுத்திருக்கிறது. தொற்றுநோயான கொரோனா இருமல், தும்மல் ஆகியவை மூலம் பரவும் என்பதால் அலட்சியம் கொள்ளாமல் கவனமாக இருக்க வேண்டியது அவசியம். இருமல், தும்மல் ஆகியவை மூலம் 20 சதவிகிதம் இந்த நோய் பரவுகிறது. ஆனால், வைரஸ் பாதிக்கப்பட்டவர்கள் பயன்படுத்திய இடங்கள், பொருள்கள் ஆகியவற்றைத் தொடுவதன் மூலமே 80 சதவிகிதம் பரவுகிறது. ஆகவே, பொது இடங்களுக்குச் சென்றுவரும்போது கைகளை சோப்புகள் அல்லது சோப் திரவங்கள் கொண்டு நன்றாகக் கழுவி விடுங்கள்.
நாட்டிலேயே புனே வைரலாஜி ஆய்வகத்துக்குப் பின்னர், கிண்டி மருத்துவமனையில் வைரஸ் தாக்குதலைக் கண்டறியக்கூடிய வசதி செய்யப்பட்டிருக்கிறது. அதேபோல், சீனாவிலிருந்து திரும்பியவர்கள் அவர்கள் வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டு தொடர் கண்காணிப்பில் வைக்கப்பட்டிருக்கிறார்கள். இந்த விவகாரத்தில் தமிழக அரசு அனைத்து விதமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுத்துவருவதால் பொதுமக்கள் அச்சமடையத் தேவையில்லை'' என்று தெரிவித்திருக்கிறார்.