Published:Updated:

`மாறி வரும் பரவல் தன்மை; உருமாற்றம் பெற்றதா கொரோனா...?' -பீலா ராஜேஷ் விளக்கம்

பீலா ராஜேஷ்
பீலா ராஜேஷ்

``அரசு மருத்துவமனைகளில் தற்போது 5,000 படுக்கை வசதிகள் உள்ளன. கூடுதலாக 10,000 படுக்கை வசதிகள் ஏற்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.”

தமிழகத்தில் நாளுக்குநாள் கொரோனா வைரஸால் பாதிப்படைபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே வருகிறது. இதில், சென்னையில் மட்டும் தினமும் 1,000 பேருக்கு மேல் கொரோனா பாதிப்பு உறுதிசெய்யப்படுகிறது. நேற்று 1,243 பேருக்கு பாதிப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது. சென்னையில், கொரோனா பாதிப்பு தற்போது 25,000-த்தை நெருங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் படுக்கைகள் உட்பட பல பற்றாக்குறைகள் மருத்துவமனைகளில் நிலவுவதாக குற்றச்சாட்டுகள் தொடர்ந்து எழுந்த வண்ணம் உள்ளன. அரசுத் தரப்பில் இந்தக் குற்றச்சாட்டுகள் மறுக்கப்பட்டு வருகிறது. எனினும், இதுதொடர்பான குழப்பங்கள் நிலவி வருகின்றன. ஒருபுறம் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை உயர்வதும் மறுபுறம் மருத்துவமனைகளில் பற்றாக்குறைகள் இருப்பது தொடர்பான குற்றச்சாட்டுகளும் அதிர்ச்சியளிக்கும் விதமாக இருந்து வருகின்றன.

மருத்துவர்கள்
மருத்துவர்கள்
மாதிரிப் படம்

இந்த நிலையில், தமிழகத்தில் உள்ள மருத்துவமனைகளில் கூடுதலாக மருத்துவர்களை நியமிப்பது தொடர்பான பணி நியமன ஆணைகளை தமிழக சுகாதாரத்துறைச் செயலர் பீலா ராஜேஷ் இன்று வழங்கினார். அதன்பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அவர், ``முதுநிலை பயின்று பயிற்சி பெறாத 574 மாணவர்கள் (Non service PG) மருத்துவமனைகளில் பணியாற்ற பணி அமர்த்தப்படுகிறார்கள். கடந்த மே 31-ம் தேதி முதுநிலை பயிற்சிகளை முடித்த 989 பேர் (service PG) பணியமர்த்தப்படுகிறார்கள். இவர்கள் தமிழகம் முழுவதும் உள்ள காலிப் பணியிடங்களில் மருத்துவராக நியமிக்கப்படுவார்கள். சென்னையில் அதிக மருத்துவர்கள் தேவைப்படுவதால் தற்போது அவர்கள் இங்கு பணியாற்ற உள்ளனர். மொத்தமாக 1,563 மருத்துவர்களை தற்போது பணியமர்த்தியுள்ளோம். இவர்கள் புறநகர் மருத்துவமனைகள், டிரிபிள் சி சென்டர்கள் மற்றும் மூன்றாம் நிலை மருத்துவமனைகளில் பணியாற்ற உள்ளனர்" என்றார்.

பீலா ராஜேஷ் குறித்து அவதூறு..! - வழக்கில் சிக்கிய சென்னைத் தொழிலதிபர்

தொடர்ந்து அவர் பேசும்போது, ``இவர்களைத் தவிர எம்.பி.பி.எஸ் படித்த 665 மருத்துவர்கள் மூன்றுமாத கால ஒப்பந்தத்தின் அடிப்படையில் பணியமர்த்தப்பட உள்ளனர். இவர்களுக்கு ரூ.60,000 சம்பளம் வழங்கப்படுகிறது. பயிற்சியில் உள்ள முதுகலை மாணவர்களுக்கு 75,000 சம்பளம் வழங்கப்படும். படித்து முடித்தவர்கள் ஏற்கெனவே சம்பளம் பெற்று வருகின்றனர். ஆய்வகங்களில் பணிபுரிபவர்கள், சுகாதார அலுவலர்கள், மருத்துவர்கள் ஆகியோரை தேவைக்கேற்ப பணியமர்த்தியதுபோல செவிலியர்களும் அடுத்தபடியாக பணியமர்த்தப்படுவார்கள்” என்றும் குறிப்பிட்டார்.

கொரோனா சிகிச்சை, மருத்துவர்கள்
கொரோனா சிகிச்சை, மருத்துவர்கள்
மாதிரிப் படம்

மேலும், மருத்துவமனைகளில் உள்ள படுக்கைவசதிகள் குறித்த கேள்விக்கு, ``சென்னையில் உள்ள அரசு மருத்துவமனைகளில் மட்டும் தற்போது 5,000 படுக்கை வசதிகள் உள்ளன. கூடுதலாக 10,000 படுக்கை வசதிகள் ஏற்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. இறப்பு எண்ணிக்கைகளைக் கணக்கிடவும் இறப்புக்கான காரணத்தை முறையாக ஆராயவும் பொது சுகாதாரத்துறை, மருத்துவக் கல்வி இயக்குநரகம், மாநகராட்சி அதிகாரிகள் அடங்கிய குழு ஒன்று அமைக்கப்படும். தமிழகத்தில் கொரோனா இறப்பு விகிதம், எண்ணிக்கை ஆகியவற்றை அரசு வெளிப்படையாக வெளியிட்டு வருகிறது. கொரோனா வைரஸ் உருமாற்றம் பெற்றதாகக் கூறப்படும் தகவல் குறித்த எந்தவிதமான அதிகாரபூர்வ ஆதாரங்களும் இல்லை. ஆனால், கொரோனாவின் பரவல் தன்மை மாறி வருகிறது. இதனால், டிஸ்சார்ஜ் செய்யும் நடவடிக்கைகளிலும் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன” என்றும் பீலா ராஜேஷ் தெரிவித்தார்.

கலெக்டரின் வருத்தம்; பீலா ராஜேஷ் பேசியும் தீராத பிரச்னை! -கோவை மருத்துவமனை டீன் மாற்றப்பட்ட பின்னணி
அடுத்த கட்டுரைக்கு