`இரண்டாவது டோஸ் தடுப்பூசி போட்டுக்கொள்வதில் தயக்கம் ஏன்?' - விளக்கும் ஜெ.ராதாகிருஷ்ணன்

தமிழகத்தில் இரண்டாம் தவணை தடுப்பூசி போட்டுக்கொள்பவர்களின் எண்ணிக்கை குறைவாக உள்ளது என்று கூறப்படுகிறது. இந்த விவகாரம் பற்றி தமிழக சுகாதாரத்துறைச் செயலர் ஜெ.ராதாகிருஷ்ணனிடம் பேசினோம்...
கோவிட்-19 தொற்று பற்றிய அச்சம் எவ்வாறு மக்களிடமிருந்து விலகத் தொடங்கியிருக்கிறதோ அதே போன்று தடுப்பூசி குறித்த ஆர்வமும் விலகிக்கொண்டிருக்கிறதோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. இந்தியாவில் ஜனவரி 16-ம் தேதி முதல் கோவிட் தடுப்பூசி முகாம்கள் நடைபெற்று வருகின்றன. முதல்கட்டமாக முன்களப் பணியாளர்களுக்குத் தடுப்பூசிகள் போடப்பட்டன. கோவிஷீல்டு, கோவாக்ஸின் ஆகிய இரண்டு தடுப்பூசிகளும் போடப்பட்டு வருகின்றன.

தமிழகத்தில் முதல் தவணைத் தடுப்பூசியை 2.47 லட்சம் பேர் செலுத்திக்கொண்டுள்ளனர். முதல் தவணைக்குப் பிறகு 28 நாள்கள் கழித்து இரண்டாம் தவணைத் தடுப்பூசி போட வேண்டும் என்று மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. அதன்படி பிப்ரவரி 13-ம் தேதி முதல் இரண்டாம் தவணைத் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் இரண்டாம் தவணை தடுப்பூசி போட்டுக்கொள்பவர்களின் எண்ணிக்கை குறைவாக உள்ளது என்று கூறப்படுகிறது.
இந்த விவகாரம் பற்றி தமிழக சுகாதாரத்துறைச் செயலர் ஜெ.ராதாகிருஷ்ணனிடம் பேசினோம்...
``இரண்டாம் தவணையைப் பொறுத்தவரை தேசிய அளவில் தடுப்பூசி எடுத்துக்கொண்டவர்களின் சராசரி எண்ணிக்கை தமிழகத்தைவிட குறைவாகவே உள்ளது. அந்த வகையில் தமிழகத்தில் அதிக எண்ணிக்கையிலானவர்கள் இரண்டாவது தவணை தடுப்பூசியைப் போட்டுக்கொண்டிருக்கிறார்கள். தமிழகத்தில் முதல் தவணை போட்டுக்கொண்டவர்களில் 50 சதவிகிதம் பேர் இரண்டாம் தவணையையும் எடுத்துக் கொண்டிருக்கின்றனர்.

பொதுவாகவே ரோட்டா வைரஸ், ஹியூமன் பாப்பிலோமோ வைரஸ் என எந்தப் புதிய தடுப்பூசிகள் அறிமுகப்படுத்தப்படும்போதும் பொதுமக்களின் பொதுவான நிலைப்பாடு `பொறுத்திருந்து பார்ப்போம்' என்பதுதான். அதனால்தான் ரோட்டரி கிளப் போன்ற நிறுவனங்களுடன் இணைந்து விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறோம்.
சில நாடுகளில் கொரோனா தாக்கம் கட்டுக்குள் வராததன் காரணமாகத் தடுப்பூசி தட்டுப்பாட்டைத் தவிர்க்க 12 வாரங்களுக்குப் பிறகு, இரண்டாம் தவணை போட்டால் போதும் என்று அந்நாடுகள் அறிவுறுத்தலாம். இந்தியாவைப் பொறுத்தவரை 28 நாள்களுக்குப் பிறகு, இரண்டாவது தவணை தடுப்பூசி எடுத்துக்கொள்ள வேண்டும் என்பது அரசின் அறிவுறுத்தல்.
பல கட்ட சோதனைகளுக்குப் பிறகு வழங்கப்பட்டிருக்கும் இந்த அறிவுறுத்தல்களைப் பின்பற்றுவதே நமக்குப் பயனளிக்கும்" என்று தெரிவித்தார்.

தடுப்பூசி போட்டுக்கொண்டதால் பக்கவிளைவுகள் ஏதும் ஏற்பட்டதா என்று கேட்டதற்கு, ``இரண்டாம் தவணை தடுப்பூசி போட்ட தினத்தன்று வழக்கத்துக்கு மாறாக இரவு 12 மணி வேலை பார்க்க நேர்ந்தது. எனக்கு எந்தப் பக்கவிளைவும் ஏற்படவில்லை" என்று தெரிவித்தார்.
தடுப்பூசி போட்டுக்கொள்வதில் முதல் தவணைக்கும் இரண்டாம் தவணைக்கும் வேறுபாடுகள் இருப்பதற்கான காரணம் பற்றி, பெயர் குறிப்பிட விரும்பாத சுகாதாரத்துறை உயர் அதிகாரி தெரிவித்தது...

``கோவிட்-19 தாக்கம் குறைந்து வருகிறது. அதனால் எதற்கு தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்ற மனநிலையில் சிலர் இருக்கின்றனர். சமூக ஊடகங்களிலும் தடுப்பூசிகள் குறித்து தவறான கருத்துகள் பரப்பப்படுகின்றன.
அதுவும் சிறிது தாக்கத்தை ஏற்படுத்துகிறது. முக்கியமாக, தடுப்பூசி போட்டுக்கொள்பவர்கள் சில நாள்களுக்கு மது அருந்தக் கூடாது என்று அறிவுறுத்தப்படுவதாலும் தவிர்க்கின்றனர். தமிழகத்தைப் பொறுத்தவரை தகவல்தொடர்பு விஷயத்தில் சில சவால்கள் இருக்கவே செய்கின்றன" என்றார் அவர்.
நோய் பாதிப்பு ஏற்பட்ட காலத்தில் கான்டாக்ட் ட்ரேசிங் செய்து தொற்று பாதித்தவர்களுடன் தொடர்பிலிருந்தவர்களைக் கண்டறிந்ததுபோல், தடுப்பூசி விவகாரத்திலும் செய்ய முடியாதா என்று கேட்டோம்:
``தடுப்பூசி போட்டுக்கொள்வது என்பது உடல்நலத்தைப் பேணுவதற்கான நல்ல விஷயம். ஒவ்வொருவரும் தங்கள் பொறுப்பை உணர்ந்து தடுப்பூசியைப் போட்டுக்கொள்ள வேண்டும்.

கோவிட்-19 தொற்று பிரச்னை இன்று நாளையோடு முடியப்போவது இல்லை. அதே போன்று நாட்டு மக்கள் அனைவருக்கும் தடுப்பூசி போடுவது என்பதும் ஓரிரு நாள்களில் நிறைவடையும் பணி அல்ல. சில ஆண்டுகள் நீடிக்கும் பணி. அதனால் முன்களப் பணியாளர்களோ பொதுமக்களோ தங்கள் பொறுப்பை உணர்ந்து, பாதுகாப்பை உணர்ந்து தடுப்பூசி போட்டுக்கொள்வதற்கு ஆர்வம் காட்ட வேண்டும்" என்றார் அவர்.