Published:Updated:

`புதிதாக 86 பாசிட்டிவ்; கண்காணிப்பில் 90,824 பேர்!’- #Corona தடுப்பில் தமிழக அரசு தீவிரம்

தமிழக சுகாதாரத்துறை செயலர் பீலா ராஜேஷ்
தமிழக சுகாதாரத்துறை செயலர் பீலா ராஜேஷ்

தமிழகத்தில் இன்று ஒரேநாளில் 86 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. இதன்மூலம் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 485-ல் இருந்து 571 ஆக அதிகரித்திருக்கிறது.

கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் தீவிரமாக முன்னெடுத்து வருகின்றன. 21 நாள் ஊரடங்கு அமலில் இருக்கும் நிலையில், நாடு முழுவதும் 274 மாவட்டங்கள் கொரோனா வைரஸ் தாக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ளன. இதுவரை 3,374 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. நேற்று மட்டும் 472 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. கொரோனா தொற்று காரணமாக இதுவரை 76 பேர் உயிரிழந்துள்ளனர். அதேவேளையில் 267 பேர் குணமடைந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை இணைச் செயலாளர் லாவ் அகர்வால் தெரிவித்தார்.

கொரோனா
கொரோனா
pixabay

இந்தநிலையில் தமிழகத்தின் நிலை குறித்து சுகாதாரத் துறை செயலாளர் பீலா ராஜேஷ் கூறுகையில், `` தமிழகத்தில் வீட்டுக் கண்காணிப்பில் 90,824 பேர் இருக்கிறார்கள். அரசு கண்காணிப்பில் 127 பேர் இருக்கும் நிலையில், 10,814 பேருக்கு 28 நாள்கள் கண்காணிப்பு முடிந்திருக்கிறது. இதுவரை மொத்தம் 4,612 மாதிரிகள் சோதனை செய்யப்பட்டதில் 571 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. இன்று மட்டும் 86 பேருக்கு நோய்த் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதில், 85 பேர் ஒரே மாநாட்டில் பங்கேற்றவர்கள். மற்றொருவர் துபாயில் இருந்து நாடு திரும்பியவர். இதுவரை 8 பேர் பாதிப்பிலிருந்து குணமடைந்திருக்கிறார்கள்.

தமிழகம் முழுவதும் 15,000 களப்பணியாளர்கள் மூலம் 9,22,860 வீடுகளும் 38,88,896 பேரும் கண்காணிக்கப்பட்டார்கள். அதேபோல் தனிமைப்படுத்தப்பட்ட வார்டுகளில் 1,848 பேர் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். தனியார் மருத்துவமனைகளில் 7 பேர் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள். சிகிச்சை பெற்று வருபவர்களில் 7 பேர் உடல்நிலை சரியில்லாமல் இருக்கிறது.

கொரோனா வார்டு
கொரோனா வார்டு

இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் பரிசோதனை மையங்கள் அதிகம் இருக்கின்றன. மத்திய அரசின் ஒப்புதலோடு தமிழகத்தில் இருக்கும் அனைத்து மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளிலும் பரிசோதனை மையங்கள் அமைக்கப்பட இருக்கின்றன. அதற்கான உபகரணங்கள் வாங்கப்பட்டு, அவை வந்துகொண்டிருக்கின்றன. உபகரணங்கள் வருவதற்கு முன்பாக அதுதொடர்பான பயிற்சிகள் அளிக்கப்பட்டு டெக்னீசியன்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.

தமிழகமே உற்றுநோக்கும் இந்த பீலா ராஜேஷ் யார்?

தமிழகம் இப்போது வைரஸ் பரவலில் ஸ்டேஜ் -2வில் இருக்கிறது. இது அடுத்தகட்டத்துக்கு செல்லாமல் இருக்க ஒவ்வொருவரும் ஒத்துழைக்க வேண்டும். தொற்று கண்டறியப்பட்ட பகுதிகளைத் தனிமைப்படுத்தும் பணிகளை முழுவீச்சில் முடுக்கிவிட்டிருக்கிறோம். அதேபோல், பாதிப்பு கண்டறியப்பட்ட நபர் பயணித்த வழியையும் கண்டுபிடித்து அந்தப் பகுதிகளிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியிருக்கிறோம்’’ என்றார்.

அடுத்த கட்டுரைக்கு