Published:Updated:

போராடிய மருத்துவர்களுக்கு டிரான்ஸ்ஃபர் ஆர்டர்... அரசு அதிரடி!

அரசின் இடமாற்ற நடவடிக்கை, போராடும் மருத்துவர்களிடையே அதிர்வை ஏற்படுத்தியிருக்கிறது.

Doctors Protest
Doctors Protest

ஊதிய உயர்வுகோரி அரசு மருத்துவர்கள் நடத்திய போராட்டம் 7-வது நாளாக நீடித்து வருகிறது. அரசு மருத்துவர்களில் 5 சங்கங்களைச் சேர்ந்தவர்கள் இந்தப் போராட்டத்தில் பங்கேற்றனர். தமிழ்நாடு அரசு டாக்டர் சங்கம் மட்டும் இந்தப் போராட்டத்தில் பங்கேற்கவில்லை. இந்தச் சங்கம் மட்டுமே அரசால் அங்கீகரிக்கப்பட்ட சங்கம். இந்நிலையில் தமிழ்நாடு அரசு டாக்டர் சங்கம் அக்டோபர் 29, 30 தேதிகளில் மட்டும் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுவதாக அறிவித்தது.

காவல்துறை கெடுபிடி
காவல்துறை கெடுபிடி

ஆனால், மாநிலம் முழுவதும் போராடிய மருத்துவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தவில்லை. இந்நிலையில் நேற்று இரவு செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர், நாளைக்குள் (வியாழக்கிழமை) மருத்துவர்கள் பணிக்குத் திரும்பாவிட்டால் அவர்களின் பணிப்பலன்கள் ரத்து செய்யப்படும். அவர்களிடம் இடங்கள் காலியிடங்களாக அறிவிக்கப்பட்டு, புதிய மருத்துவர்கள் நியமிக்கப்படுவார்கள் என்று தெரிவித்தார்.

இன்று காலை சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையிலிருந்து பிற மருத்துவமனை மருத்துவர்கள் வெளியேற்றப்பட்டனர். மருத்துவமனைக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டது. சீமான், கி.வீரமணி, திருமாவளவன், சி.வெற்றிவேல் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் நேரில் சென்று, போராட்டத்தில் ஈடுபட்டிருந்த மருத்துவர்களுக்கு ஆதரவளித்தனர்.

Minister Vijayabaskar
Minister Vijayabaskar

இந்நிலையில் இன்று காலை செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி "மருத்துவர்கள் போராட்டத்தை அரசு வேடிக்கை பார்க்காது. அரசுக்கு நெருக்கடி கொடுக்கவே மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபடுகின்றனர். அவர்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் விஜயபாஸ்கர் தெளிவுபடுத்தியுள்ளார். அங்கீகரிக்கப்படாத சங்கங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தும் எண்ணமும் இல்லை" என்று தெரிவித்தார்.

இந்நிலையில் அமைச்சர் விஜயபாஸ்கர் இன்றும் தனது அதே கருத்தைத் தெரிவித்தார். அரசு அழுத்தம் கொடுத்ததையடுத்து 1,550 மருத்துவர்கள் பணிக்குத் திரும்பியுள்ளனர். இன்று மதியம் 2 மணிக்குள் பணிக்குத் திரும்புவதற்குக் கெடுவும் கொடுத்தார். ஆனாலும் மருத்துவர்கள் போராட்டத்தைக் கைவிடவில்லை.

அரசியல் தலைவர்கள் ஆதரவு
அரசியல் தலைவர்கள் ஆதரவு

இந்நிலையில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் சங்கங்களின் பிரதிநிதிகளைத் தொடர்பு கொண்டபோது பலர் அழைப்பை ஏற்கவில்லை. அழைப்பை ஏற்ற ஒரே ஒரு மருத்துவர் மட்டும், ``போராட்டத்தில் தீவிரமாக ஈடுபட்ட நான் உள்ளிட்ட 50 மருத்துவர்களுக்கு டிரான்ஸ்ஃபர் ஆர்டர் கொடுத்திருக்கிறார்கள். சென்னையைச் சேர்ந்த எனக்குக் கொடைக்கானலுக்குப் பணிமாறுதல் கொடுத்திருக்கிறார்கள். ஆனாலும் தொடர்ந்து போராட்டத்தில்தான் இருக்கிறோம். சற்று நேரம் கழித்துப் பேசுகிறேன்" என்று முடித்துக்கொண்டார். அரசின் இடமாற்ற நடவடிக்கை, போராடும் மருத்துவர்களிடையே அதிர்வை ஏற்படுத்தியிருக்கிறது. இதனால் அடுத்து என்ன செய்வது என்ற குழப்பத்துக்குள்ளாகியிருக்கின்றனர் அரசு மருத்துவர்கள்.