Published:Updated:

`திருநங்கைகளுக்கு தனிப்பிரிவு!' - மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் தொடக்கம்

``மதுரையில் இருக்கும் திருநங்கைகளுக்கு மட்டுமல்லாது தென்மாவட்டங்களில் உள்ள அனைவருக்கும் இது ஒரு மகிழ்ச்சிகரமான தருணம்" திருநங்கை பிரியாபாபு.

மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனை
மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனை

திருநங்கைகள் கல்வியிலும் வேலைவாய்ப்பிலும் சாதித்து வருகின்றனர். அவர்களின் திறமையை அங்கீகரிக்கும் வகையில் அரசும் அவர்களுக்கு உதவிகள் செய்துவருகிறது. அதன் நீட்சியாக, அவர்களின் ஆரோக்கியத்திலும் அக்கறை கொண்டு ஒரு முயற்சியை எடுத்திருக்கிறது அரசு.

மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனை - ட்ரான்ஸ்ஜெண்டர் மல்டி ஸ்பெஷாலிட்டி க்ளினிக்
மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனை - ட்ரான்ஸ்ஜெண்டர் மல்டி ஸ்பெஷாலிட்டி க்ளினிக்

மதுரை ராஜாஜி மருத்துவமனையில் ஆண், பெண் இருவருக்கும் தனித்தனியாக சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இப்போது, திருநங்கை சமூகத்துக்கும் சிகிச்சைக்காகத் தனிப்பிரிவு தொடங்கப்பட்டுள்ளது. `அரசு மருத்துவமனைகளில் திருநங்கைகளுக்கான சிகிச்சைப் பிரிவு தொடங்கப்படும்' என முன்னதாகவே அறிவித்திருந்தது அரசு. தொடர்ந்து, மதுரை அரசு மருத்துவமனையில் தனிப்பிரிவு அமைக்க தேசிய சுகாதாரத் திட்டத்தில் ரூபாய் 19 லட்சம் ஒதுக்கப்பட்டது. இதற்கு `ட்ரான்ஸ்ஜெண்டர் மல்டி ஸ்பெஷாலிட்டி க்ளினிக்' எனப் பெயர் சூட்டப்பட்டுள்ளது.

இதேபோல, மதுரை நகருக்குள் திருநங்கைகளுக்கான பொதுக் கழிப்பறைகளையும் ஏற்படுத்தித் தர கோரிக்கை வைக்கிறோம்
திருநங்கை பாரதி கண்ணம்மா

இதுகுறித்து மதுரை அரசு மருத்துவமனை டீன் சங்குமணி கூறும்போது, ``திருநங்கைகளுக்கான தனிப்பிரிவு தொடங்கப்பட்டுள்ளது. இதுவரை அவர்கள் செலவு செய்து மருத்துவம் பார்த்து வந்தார்கள். இனி எந்தத் தயக்கமுமின்றி அரசு மருத்துவமனையில் அவர்கள் சிகிச்சை பெறலாம். இந்த மருத்துவப் பிரிவு தனி வார்டு போன்று செயல்படும். அகச்சுரப்பி நிபுணர்கள், சிறுநீரக அறுவை சிகிச்சை நிபுணர்கள், பிளாஸ்டிக் சர்ஜரி நிபுணர்கள், மனநல மருத்துவர்கள், ஒட்டுறுப்பு அறுவை சிகிச்சை மருத்துவர்கள் ஆகியோர் அடங்கிய மருத்துவக் குழுவினர் சிகிச்சையளிப்பார்கள்.

``அவமானங்கள்தான்  இன்ஸ்பிரேஷன்!’’ - டி.டி.பி மையம் தொடங்கிய திருநங்கை சுவேதா
திருநங்கை பிரியாபாபு
திருநங்கை பிரியாபாபு

திருநங்கைகளுக்கான சிகிச்சை, பால் மாற்று அறுவை சிகிச்சை, மனநல ஆலோசனைகள் ஆகியவற்றை இக்குழுவினர் வழங்குவார்கள். மதுரை அரசு மருத்துவமனை சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது. அதே ஆற்றலோடு புதிதாகத் தொடங்கியுள்ள திருநங்கைகளுக்கான பிரிவிலும் நிபுணர்கள் செயல்படுவார்கள்'' என்றார்.

இந்த முயற்சி தொடர்பாக திருநங்கை பிரியாபாபு, ``மதுரையில் இருக்கும் திருநங்கைகளுக்கு மட்டுமல்லாது தென்மாவட்டங்களில் உள்ள அனைவருக்கும் இது ஒரு மகிழ்ச்சிகரமான தருணம். மதுரையில் திருநங்கைகளுக்கான தனி நூலகம் இருப்பதுபோல் தற்போது மருத்துவ வசதியையும் அமைத்துத் தந்துள்ளது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது'' என்றார்.

திருநங்கை பாரதி கண்ணம்மா
திருநங்கை பாரதி கண்ணம்மா

`மதுரை பாரதி கண்ணம்மா அறக்கட்டளை' நடத்திவரும் திருநங்கை பாரதி கண்ணம்மா, ``அரசு எங்களுக்குத் தரும் அங்கீகாரமாக இதை நாங்கள் உணர்கிறோம். இதேபோல, மதுரை நகருக்குள் திருநங்கைகளுக்கான பொதுக் கழிப்பறைகளையும் ஏற்படுத்தித் தர கோரிக்கை வைக்கிறோம்'' என்றார்.