Published:Updated:

கொரோனாவை வென்ற சிட்லிங்! - அடுத்த அலைகளை வெல்வதற்கும் அசத்தல் வழிகாட்டும் கிராமம்!

மருத்துவமனை
பிரீமியம் ஸ்டோரி
மருத்துவமனை

நாட்டு நடப்பு

கொரோனாவை வென்ற சிட்லிங்! - அடுத்த அலைகளை வெல்வதற்கும் அசத்தல் வழிகாட்டும் கிராமம்!

நாட்டு நடப்பு

Published:Updated:
மருத்துவமனை
பிரீமியம் ஸ்டோரி
மருத்துவமனை

நாட்டிலேயே முதன்முறையாக மலைவாழ் கிராமத்தில் கொரோனா வார்டு அமைத்து முன்மாதிரியாகத் திகழ்ந்துள்ளது சிட்லிங் பஞ்சாயத்து. தர்மபுரி மாவட்டம், அரூர் வட்டம், சிட்லிங் பஞ்சாயத்தில் ‘ட்ரைபல் ஹெல்த் இனிஷியேட்டிவ்’ அமைப்பினரின் இந்த முயற்சியை ஒன்றிய பஞ்சாயத்து ராஜ் அமைச்சகம் பாராட்டியுள்ளதுடன், மற்ற பஞ்சாயத்துகளும் இதை முன்மாதிரி யாகக் கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளது.

இதுபற்றி அறிய தர்மபுரி மாவட்டம், அரூர் வட்டத்தில் உள்ள சிட்லிங் பஞ்சாயத்துக்குப் பயணப்பட்டோம். ஊரின் முகப்பிலேயே வரவேற்கிறது ‘ட்ரைபல் ஹெல்த் இனிஷியேட்டிவ்’ (Tribal Health Initiative) மருத்துவமனை. கொரோனா வார்டை பார்வையிட்ட பிறகு, இதைத் தொடங்க காரணமாயிருந்த மருத்துவர் ரெஜி ஜார்ஜைச் சந்தித்தோம். இவர் சிட்லிங்கியில் இயற்கை விவசாயம் மேம்படுத்துவதற்கான பணிகளிலும் ஈடுபட்டு வருகிறார். இதுசம்பந்தமான கட்டுரைத் தொடர் பசுமை விகடனில் வெளிவந்துள்ளது. ‘‘கிராமங்களில் பணி செய்வதற்குப் பெரும்பான்மையான மருத்துவர்கள் தயங்குகிறார்கள். அதுவும் மலைக்கிராமங்களில் பணி செய்வதற்கு யாரும் முன்வருவதில்லை. அப்படியிருந்த சூழ்நிலையில் 1993-ம் ஆண்டுச் சிறிய குடிலில் இங்கு மருத்துவமனையைத் தொடங்கினோம். இத்தனை ஆண்டுகளில் சந்திக்காத ஒரு பெரிய சவாலை இந்த கொரோனா காலத்தில் சந்தித்தோம். முதல் அலையில் கிராமங்கள் பெரிய அளவில் பாதிக்கப்படவில்லை. ஆனால், இரண்டாம் அலையில் கிராமங்கள் பெரிய அளவில் பாதிக்கப்பட்டன. அதன் தாக்கம் இங்கும் எதிரொலித்தது.

கொரோனா வார்டு
கொரோனா வார்டு

சிட்லிங் பஞ்சாயத்திலிருந்து பெரும்பான்மையான மக்கள் விவசாய வேலை, விளை பொருள்கள் விற்பனை, மற்ற வேலைகள் என வெளியில் சென்று வருகிறார்கள். அப்படிச் சென்று வந்ததில் ‘கோவிட்’ தொற்று இங்கும் பரவ ஆரம்பித்தது. நிறைய பேர் காய்ச்சல், தலைவலி, உடல் சோர்வு என்று அவதிப்பட்டார்கள். காரணம் அரசு மருத்துவமனைகளில் இடம் கிடைப்பதில்லை, தனியார் மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை பெறுவதற்கான வசதியும் இல்லை. இதை உணர்ந்து கடந்த மே முதல் வாரத்தில் இங்கே 15 படுக்கைகளுடன் கொரோனா வார்டைத் தொடங்கினோம்.

‘‘நிறைய பேர் மருத்துவமனைக்கு வர்றதுக்கே தயங்குனாங்க. அதற்குத் தன்னார்வலர்கள் அடங்கிய ஒரு குழுவை உருவாக்கிக் கிராமம்தோறும் விழிப்புணர்வு பிரசாரம் செய்தோம்.’’


கையிலிருந்த நிதியோடு மும்பை, டெல்லி என்று தெரிந்து நண்பர்களிடமிருந்து நிதியுதவி, மாஸ்க், பி.சி.ஆர் கிட், டெஸ்ட்டுக்கான கிட், மருந்து, மாத்திரைகள், ஆக்ஸிஜன் சிலிண்டர் என்று வாங்கினோம். இங்கே சி.டி ஸ்கேன் எடுக்கும் வசதியில்லை. அதனால் வாழப்பாடிக்கு அனுப்பி அங்கே சி.டி ஸ்கேன் எடுக்க வைத்தோம். இங்கு சிகிச்சைக்கு வரும் பெரும்பான்மையோர் விவசாயிகள், விவசாயக் கூலிகள். அதனால் ஸ்கேனுக்காகக் கட்டணத்தை நாங்களே கட்டினோம். இதுவரை 400 பேருக்கு கொரோனா சிகிச்சை அளித்திருக்கிறோம். 50-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற்றிருக்கின்றனர்” என்றார்.

மருத்துவமனையில்
மருத்துவமனையில்கொரோனா வார்டை நிர்வகித்து வரும் மருத்துவர் சங்கீதா, ‘‘கிராமங்களில் விழிப்புணர்வு பிரசாரத்துக்காகக் ‘கம்யூனிட்டி ஹெல்த் டீம்’ அமைத்திருக்கிறோம். அவர்கள்தான் விழிப்புணர்வு பணிகளைச் செய்து வருகிறார்கள். மருத்துவமனையில் மூன்று வேலை உணவு, மருந்து, மாத்திரைகள், ஆக்ஸிஜன் அனைத்தும் இலவசமாகக் கொடுத்துக் காப்பாற்றி அனுப்புகிறோம். நோய் தாக்குதலுக்கு உள்ளானோர் அனைவரும் வந்து இங்கு சிகிச்சை எடுத்துக்கொள்ளலாம்” என்றார்.

விழிப்புணர்வு பிரசாரம்
விழிப்புணர்வு பிரசாரம்
மலைவாழ் மருத்துவமனை
மலைவாழ் மருத்துவமனைசிட்லிங் பஞ்சாயத்துத் தலைவர் மாதேஸ்வரி மஞ்சுநாத் பேசியபோது, ‘‘சிட்லிங்கிலிருந்து தர்மபுரி சுமார் 100 கி.மீ, சேலம் 85 கி.மீ இங்கிருந்து கொரோனா சிகிச்சைக்குப் போகணும்னா இவ்வளவு தூரம் பயணப்பட்டே ஆகணும். அப்படியே போனாலும் இடம் கிடைப்பது அதைவிடப் பெரிய விஷயம். இதனால கொரோனா தொற்று முற்றிப்போய் 4 உயிர்களை இழந்துட்டோம். சிட்லிங் பஞ்சாயத்தில் 42 குக்கிராமங்கள் இருக்கின்றன. 15,000-க்கும் மேற்பட்ட மக்கள் இருக்காங்க. இங்க ஆரம்பிச்ச கொரோனா வார்டு மூலம் பல உயிர்களைக் காப்பாற்றி இருக்கிறோம். நிறைய பேர் மருத்துவமனைக்கு வர்றதுக்கே தயங்குனாங்க. அதற்குத் தன்னார்வலர்கள் அடங்கிய ஒரு குழுவை உருவாக்கிக் கிராமம்தோறும் விழிப்புணர்வு பிரசாரம் செய்தோம். மருத்துவமனையின் உதவி எண்களைக் கொடுத்து அதில் ஆலோசனை பெற வெச்சோம். இலவச மருத்துவ ஆலோசனை மையம் அமைச்சோம். கிராமங்கள்ல தண்டோரா மூலம் கொரோனா விழிப்புணர்வை ஏற்படுத்தினோம்.

ரெஜி ஜார்ஜ், மருத்துவர் சங்கீதா, மாதேஸ்வரி மஞ்சுநாத்
ரெஜி ஜார்ஜ், மருத்துவர் சங்கீதா, மாதேஸ்வரி மஞ்சுநாத்


இப்படிப் பல பணிகளால் சிட்லிங் பஞ்சாயத்தில் கொரோனா தொற்று கட்டுக்குள் வந்திருக்கு. கிராமங்களிலும் கொரோனா வார்டு அமைச்சு சிகிச்சைக் கொடுக்க முடியும். அதை நாங்க சாதிச்சு காட்டியிருக்கிறோம். இது மற்ற பஞ்சாயத்துகளுக்கு ஒரு முன்மாதிரி” என்றார் பெருமையுடன்.

கொரோனா தொற்று காரணமாகப் பாதிக்கப்பட்டு, குணமான வர்களில் அரசாங்கத்தின் பட்டியலில் இடம்பிடித்தோர் சில லட்சங்களே. ஆனால், இப்படி பட்டியலில் இடம்பிடிக்காமல், ஆங்காங்கே கிராமப்புற மருத்துவ மனைகளாலும், மருத்துவர் களாலும் குணப்படுத்தப்பட்டோர் பல லட்சம் பேர். இத்தகையோரின் சிறப்பான பணிகள் காரணமாகத்தான், மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள், மாவட்ட மருத்துவமனைகள் மேலும் நிரம்பி வழியாமல் பல லட்சம் பேர் காப்பாற்றப்பட்டார்கள். இத்தகைய மருத்துவர்களின் அனுபவங்களையும் கேட்டுப் பெறுவதோடு, அவர்களுக்குத் தேவையான வழிகாட்டல்கள் மற்றும் கருவிகளையும் வழங்கும் பட்சத்தில், அடுத்தடுத்த கொரோனா அலைகளை மட்டுமல்ல, எதிர்காலத்தில் எத்தகைய பேரிடர்கள் ஏற்பட்டாலும், பேரிழப்பு இல்லாமல் மக்களைக் காப்பாற்றுவதற்கு உதவியாக இருக்கும்.

அரசாங்கம் யோசிக்குமா?

 தனபால்
தனபால்

“உயிருக்குப் பாதுகாப்பு கிடைச்சிருக்கு!”

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மீண்ட, சிட்லிங் பஞ்சாயத்து ஏ.கே, தண்டா கிராமத்தைச் சேர்ந்த தனபால், ‘‘12 நாள்களுக்கு முன்ன எனக்குக் கொரோனா தாக்குச்சு. பக்கத்திலே இருந்த இந்த மருத்துவமனையில வந்து அட்மிட் ஆனேன். காய்ச்சல், இருமல், மூச்சுத்திணறல்னு அறிகுறிகள் இருந்துச்சு. இப்போ ஓரளவுக்கு நல்லாயிட்டேன். இந்தக் காட்டுப்பகுதில கொரோனா மருத்துவமனை இருக்கிறதாலதான் என்னைக் காப்பாத்த முடிஞ்சிருக்கு. இன்னொண்ணு இங்கே இருக்கிறவங்க ரொம்ப அன்பா பார்த்துக்குறாங்க. நேரத்துக்குச் சாப்பாடு கொடுத்திடுறாங்க. சிகிச்சையும் நல்லா தரமா இருக்குது. லட்சம் லட்சமா செலவு பண்ணி மருத்துவம் பார்த்தாலும் இந்த வசதி கிடைக்காது. இந்த கொரோனா வார்டு தொடங்கப்பட்டதன் மூலம் மலைவாழ் மக்களோட உயிருக்குப் பாதுகாப்புக் கிடைச்சிருக்கு” என்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism