Published:Updated:

புதுச்சேரியில் இருவருக்குக் கொரோனா தொற்று! - சீல் வைக்கப்பட்ட 2 பகுதிகள்

கொரோனா
கொரோனா

யூனியன் பிரதேசமான புதுச்சேரியில் இருவருக்குக் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது.

உலகம் முழுக்கத் தீவிரமாகப் பரவி வரும் கொரோனா தொற்றுக்கு இதுவரை சுமார் 37,000-க்கும் அதிகமானவர்கள் உயிரிழந்திருக்கின்றனர். இந்தியாவில் கடந்த திங்கள் கிழமை நிலவரப்படி கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டவர்கள் 1,251 என்றும் அதில் 32 உயிரிழப்புகள் என்றும் மத்திய சுகாதார மற்றும் குடும்பநல அமைச்சகம் தெரிவித்திருக்கிறது. புதுச்சேரியின் பிராந்தியங்களில் ஒன்றான மாஹேவைச் சேர்ந்த 68 வயது மூதாட்டி ஒருவர் அபுதாபியில் உள்ள உறவினர் வீட்டுக்குச் சென்று வந்தவருக்குக் கொரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டது. மாஹே அரசு மருத்துவமனையில் அவருக்கு அளிக்கப்பட்ட தொடர் சிகிச்சையின் காரணமாக அவர் முழுமையாக குணமடந்து வீடு திரும்பினார்.

புதுச்சேரி
புதுச்சேரி

அதையடுத்து புதுச்சேரி கொரோனா தொற்று இல்லாத மாநிலமாக இருந்தது. இந்நிலையில் டெல்லி மேற்கு நிஜாமுதீனைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் தப்லீக் ஜமாத்தில் (Tablighi Jamaat) கடந்த மார்ச் மாதம் 13 முதல் 15-ம் தேதி வரை நடைபெற்ற கூட்டத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்டனர்.

சுமார் 300-க்கும் மேற்பட்ட வெளிநாட்டவர்களும் அதில் இடம்பெற்றிருந்தனர் என்று கூறப்படுகிறது. தொடர்ந்து ஜம்மு காஷ்மீர், மஹாராஷ்டிரா மற்றும் தமிழகத்தில் ஏற்பட்ட கொரோனா தொற்றும் அதன் தொடர்ச்சியாக ஏற்பட்ட உயிரிழப்புகளும் நிஜாமுதீன் கூட்டத்துடன் தொடர்புடையது என்பது தெரியவந்தது.

புதுச்சேரி போலீஸ்
புதுச்சேரி போலீஸ்

குறிப்பாக அந்தக் கூட்டத்தில் கலந்துகொண்ட தெலங்கானாவைச் சேர்ந்த 6 பேர் கொரோனா தொற்றால் உயிரிழந்ததால் அதிர்ச்சியில் உறைந்தது இந்தியா. அதையடுத்து அந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டு திரும்பியவர்களைக் கண்டறியும் பணியில் இறங்கியிருக்கும் சுகாதாரத்துறை, சம்பந்தப்பட்டவர்கள் தாமாகவே முன்வந்து அரசின் கொரோனா தடுப்பு நடவடிக்கைக்கு உதவ வேண்டுமென்று வேண்டுகோள் வைத்திருக்கிறது.

அதேபோல அந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டு திரும்பிய விழுப்புரத்தைச் சேர்ந்த 3 பேருக்குக் கொரோனா தொற்று இருப்பதை நேற்று உறுதி செய்திருந்தார் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர்.

அரியாங்குப்பத்தில் எஸ்.எஸ்.பி ராகுல் அல்வால் தலைமையில் போலீஸ் அதிகாரிகள் ஆலோசனை
அரியாங்குப்பத்தில் எஸ்.எஸ்.பி ராகுல் அல்வால் தலைமையில் போலீஸ் அதிகாரிகள் ஆலோசனை

அதையடுத்து விழுப்புரம்-புதுச்சேரி எல்லையில் பாதுகாப்பை பலப்படுத்த உத்தரவிட்ட முதல்வர் நாராயணசாமி, டெல்லி நிஜாமுதீன் கூட்டத்திற்குச் சென்றுவிட்டு திரும்பியிருக்கும் புதுச்சேரி அரியாங்குப்பத்தைச் சேர்ந்த 6 பேர் தனிமைப்படுத்தப்பட்டுக் கண்காணிக்கப்பட்டு வருவதாகத் தெரிவித்திருந்தார். இந்நிலையில் அதில் இருவருக்குக் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டிருப்பதையடுத்து, அதிகாலை 2.30 மணிக்கு அங்கு போலீஸார் குவிக்கப்பட்டனர். அதைத் தொடர்ந்து அரியாங்குப்பம் புறவழிச்சாலையில் அவர்களின் வீடுகள் இருக்கும் ஸ்ரீராம் நகர் மற்றும் சொர்ணா நகர் இரண்டு பகுதிகளும் முழுமையாக சீல் வைக்கப்பட்டன. அந்தப் பகுதியில் இருக்கும் மக்களை வீட்டைவிட்டு வெளியே வர வேண்டாம் என்றும் உத்தரவிட்டிருக்கிறது போலீஸ்.

அடுத்த கட்டுரைக்கு