Published:Updated:

கொரோனா: `மதுரையில் பாசிட்டிவ்; சென்னையில் நெகட்டிவ்!’ - குழப்பிய முடிவுகள்

மதுரையில் கொரோனா டெஸ்ட்
மதுரையில் கொரோனா டெஸ்ட்

கொரோனா பாசிட்டிவ் என்று வந்து இரண்டு நாள்களுக்குள் எப்படி நெகட்டிவ் என்று வரும் எனக் குழம்பி போய்விட்டேன். மதுரையில் பாசிட்டிவ் - சென்னையில் நெகட்டிவ்' குழப்பும் ரிசல்ட் விளக்கும் அதிகாரி.

`கொரோனா தொற்று எல்லா இடங்களிலும் பரவலாக வந்துவிட்டது. உலக நாடுகள் அச்சத்தில் இருந்தாலும் பலர் இதை அலட்சியமாகவே நினைக்கின்றனர். தமிழகத்தில் கொரோனா தொற்று தீவிரமடைந்து தலைநகர் உட்பட பல மாவட்டங்கள் எண்ணிக்கை பன்மடங்காகப் பெருகிவருகிறது. இந்நிலையில் சென்னையில் இருந்து மதுரை சென்று மீண்டும் ஊர் திரும்பியவருக்கு மதுரையில் கொரோனா பாசிட்டிவ் என்றும், சென்னையில் எடுத்த டெஸ்ட் நெகட்டிவ் என்றும் வந்துள்ளது. இதனால் மிகப்பெரும் மன உளைச்சலில் இருந்து மீண்டதாக நம்மிடம் பகிர்ந்துகொண்டார்.

கொரோனா - உலகம்
கொரோனா - உலகம்

இது குறித்து அவர், ``எனக்கு சொந்த ஊர் மதுரை. சென்னையில் இருந்து வெளிநாடுகளுக்கு எக்ஸ்போர்ட் பிசினஸ் செய்கிறேன். அதனால் கடந்த 20 வருடமாக சிந்தாதிரிப்பேட்டையில்தான் குடும்பத்துடன் வசித்து வருகிறேன். இந்நிலையில் கடந்த 7-ம் தேதி மதுரையில் என் பெரியப்பா இறப்புக்கு சென்னையில் இருந்து செல்லூர் சென்றேன். டிரைவர் உட்பட நான்கு நபர்கள் காரில் சென்றோம்.

அப்போது மதுரை மாவட்டத்துக்குள் நுழையும்போது கொட்டாம்பட்டியில் கொரோனா டெஸ்ட் எடுக்கப்பட்டது. அதற்குப் பின் இறப்பு நிகழ்ச்சிக்குச் சென்றுவிட்டு அன்றே ஊர் திரும்பிவிட்டோம். மறுநாள் என்னைத் தொடர்புகொண்டு எனக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதாகப் போனில் தெரிவித்தனர். அதனால் மருத்துவமனையில் சேர்ந்துகொள்ளவும் அறிவுறுத்தினர். என் குடும்ப டாக்டர் என்னை தனியாரில் மீண்டும் டெஸ்ட் எடுத்துக்க சொன்னார். நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் டெஸ்ட் எடுத்தேன்.

கொரோனா பரிசோதனை
கொரோனா பரிசோதனை

ஆனால், அங்கு வந்த ரிசல்ட்டில் நெகட்டிவ் என்று வந்துவிட்டது. கொரோனா பாசிட்டிவ் என்று வந்து இரண்டு நாள்களுக்குள் எப்படி நெகட்டிவ் என்று வரும் எனக் குழம்பி போய்விட்டேன். எனக்கு 15-க்கும் மேற்பட்ட முறை மதுரையில் இருந்து போன் செய்த அதிகாரிகள் மருத்துவமனையில் சேர்ந்துகொள்ள சொல்லி தொடர்ந்து வலியுறுத்தினர். தொடர்ந்து மன உளைச்சலுக்கு ஆளான நான் சென்னையில் எடுத்த ரிசல்ட்க்கு பின்னர்தான் நிம்மதியடைந்தேன். எனக்கு கொரோனா தொற்று அறிகுறிகள்கூட இல்லை. பின்னர், ஏன் எனக்கு ரிசல்ட் அவ்வாறு வந்ததென தெரியவில்லை" என்றார்.

இது குறித்து மதுரை மாவட்ட சுகாதாரத்துறை இணை இயக்குநர் பிரியாராஜ், ``ஒவ்வொரு நபருக்கும் தொண்டையில் இருக்கும் சாம்பிளைப் பொறுத்து மாறுபடும். மேலும், டெஸ்ட் எடுக்கும் முறையையும் பொறுத்துள்ளது. தொற்று உள்ள சிலர் சூடான உணவுகள் எடுத்துக்கொண்ட உடனே டெஸ்ட் எடுத்தால் நோய்த் தொற்று இல்லை என்றுகூட வருகிறது. தனியார் பரிசோதனை மையங்களை விமர்சிக்க விரும்பவில்லை.

Coronavirus drawing
Coronavirus drawing

அரசு சார்ந்து எடுக்கும் ஒவ்வொரு டெக்னீசியன்களும் நன்கு பயிற்சி பெற்றவர்கள். அரசு சார்ந்து எடுக்கப்படும் கொரோனா பரிசோதனைகள் முடிவுகள் சரியாகவே கிடைக்கின்றன. கொரோனா பாசிட்டிவ் உள்ள நபர்கள் அறிகுறிகள் இல்லை என்றாலும் அவர்கள் சிகிச்சை பெற வேண்டும்" என்றார்.

அடுத்த கட்டுரைக்கு