`புகைபிடித்தல் புற்றுநோயை உண்டாக்கும் மற்றும் உயிரைக் கொல்லும்', `குடி குடியைக் கெடுக்கும்' என அரசு விளம்பரங்கள் கொடுத்தாலும், குடிப்பழக்கம் மற்றும் போதைப்பழக்கத்தால் பலர் உயிரிழப்பது நடந்துகொண்டுதான் இருக்கிறது. இந்த நிலையில், மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்களுக்கான இணை அமைச்சர் கவுஷல் கிஷோர், குடிப்பழக்கத்துக்கு அடிமையான தன் மகனைக் காப்பாற்ற முடியவில்லை என்றும், போதைப்பழக்கத்தால் ஆண்டுக்கு 20 லட்சம் பேர் இறக்கின்றனர் என்றும் கூறியிருக்கிறார்.

லம்புவா சட்டமன்றத் தொகுதியில் நேற்று நடைபெற்ற போதை மற்றும் குடிப்பழக்கத்துக்கு எதிரான கூட்டத்தில் தன்னுடைய சொந்த அனுபவத்தை பகிர்ந்த கவுஷல் கிஷோர், ``என் மகனுக்கு நண்பர்களுடன் சேர்ந்து மது அருந்தும் பழக்கம் இருந்தது. அதனால் போதை ஒழிப்பு மையத்தில் சேர்க்கப்பட்டான். அந்த தீய பழக்கத்தை விட்டுவிடுவான் என்று நினைத்தோம். ஆறு மாதங்கள் கழித்து அவன் திருமணம் செய்து கொண்டான். ஆனால், அவன் மீண்டும் குடிக்கத் தொடங்கினான். இது இறுதியில் அவனின் மரணத்துக்கு வழிவகுத்தது. இரண்டாண்டுகளுக்கு முன்பு அவன் இறந்தபோது, அவனுடைய மகனுக்கு இரண்டு வயது தான்.

என்னால் என் மகனைக் காப்பாற்ற முடியவில்லை. அவனுடைய மனைவியும் விதவையானாள். எம்.பி-யாக நானும், எம்.எல்.ஏ-வாக என் மனைவியும் இருந்தபோதும் என் மகனின் உயிரைக் காப்பாற்ற முடியாத நிலையில், பொதுமக்கள் எப்படிக் காப்பாற்றுவார்கள். எனவே இதுபோன்றவற்றிலிருந்து உங்களின் மகள்கள், சகோதரிகளை நீங்கள் காப்பாற்ற வேண்டும். குடிகாரனின் ஆயுட்காலம் மிகவும் குறைவு. குடிகார அதிகாரியைவிட ஒரு கூலித் தொழிலாளி சிறந்த மணமகன் என்பதை நிச்சயம் நிரூபிப்பார்" என்று அறிவுரை வழங்கினார்.

மேலும் தொடர்ந்து பேசிய கவுஷல் கிஷோர், ``சுதந்திர போராட்டத்தின்போது 90 ஆண்டுகளில் 6.32 லட்சம் பேர் ஆங்கிலேயர்களுடன் சண்டையிட்டு தங்கள் இன்னுயிரைத் தியாகம் செய்தனர். ஆனால் இன்று போதைப்பழக்கத்தால் ஆண்டுக்கு சுமார் 20 லட்சம் பேர் உயிரிழக்கின்றனர். அதுமட்டுமல்லாமல், புற்றுநோய் இறப்புகளில் 80 சதவிகிதம் புகையிலை, சிகரெட், பீடி போன்றவற்றுக்கு அடிமையாவதால் ஏற்படுகிறது. எனவே, போதை ஒழிப்பு பிரசாரத்தை அனைத்து பள்ளிகளுக்கும் கொண்டுசெல்ல வேண்டும்" என்று கூறினார்.