Published:Updated:

ராம்தேவின் `பதஞ்சலி’ மருந்துகளுக்கு விதித்த தடை நீக்கம் - உத்தரகாண்ட் அரசு திடீர் பல்டி!

Ayurvedic medicine (Representational Image) ( Photo by Vicky Tran from Pexels )

`முந்தைய உத்தரவை திருத்துவதன் மூலம் மருந்துகளின் (ஐந்து தயாரிப்புகள்) உற்பத்தியை முன்பு இருந்ததைப்போலவே தொடர அனுமதிக்கிறோம். முந்தைய உத்தரவை நாங்கள் அவசரமாக வெளியிட்டோம்; அது ஒரு பிழை’ என்று உத்தரகாண்ட் அரசு விளக்கம் அளித்துள்ளது.

ராம்தேவின் `பதஞ்சலி’ மருந்துகளுக்கு விதித்த தடை நீக்கம் - உத்தரகாண்ட் அரசு திடீர் பல்டி!

`முந்தைய உத்தரவை திருத்துவதன் மூலம் மருந்துகளின் (ஐந்து தயாரிப்புகள்) உற்பத்தியை முன்பு இருந்ததைப்போலவே தொடர அனுமதிக்கிறோம். முந்தைய உத்தரவை நாங்கள் அவசரமாக வெளியிட்டோம்; அது ஒரு பிழை’ என்று உத்தரகாண்ட் அரசு விளக்கம் அளித்துள்ளது.

Published:Updated:
Ayurvedic medicine (Representational Image) ( Photo by Vicky Tran from Pexels )

யோகா பயிற்றுநர் ராம்தேவின் சில மருந்துகளை உற்பத்தி செய்வதற்கு விதித்த தடை உத்தரவை, உத்தரகாண்ட் மாநில ஆயுர்வேதம் மற்றும் யுனானி உரிம ஆணையம், திடீரென ரத்து செய்துள்ளது.

ராம்தேவின் பதஞ்சலியின் கிளை நிறுவனமான திவ்யா மருந்தகத்தில், ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் மற்றும் குளுக்கோமா, கொலஸ்ட்ரால் போன்றவற்றுக்கான மருந்துகளை உற்பத்தி செய்ய, உத்தரகாண்ட் மாநில ஆயுர்வேதம் மற்றும் யுனானி உரிமை ஆணையம், கடந்த 9-ம் தேதி அன்று தடை விதித்திருந்தது.

இந்நிலையில், கடந்த 12-ம் தேதியே அந்தத் தடை உத்தரவை ரத்து செய்த உத்தரகாண்ட் மருந்து ஒழுங்குமுறை அதிகாரி டாக்டர் ஜி.சி.என் ஜங்கபாங்கி, `முந்தைய உத்தரவைத் திருத்துவதன் மூலம் மருந்துகளின் (ஐந்து தயாரிப்புகள்) உற்பத்தியை முன்பு இருந்ததைப்போலவே தொடர அனுமதிக்கிறோம். முந்தைய உத்தரவை நாங்கள் அவசரமாக வெளியிட்டோம்; அது ஒரு பிழை. புதிய ஆர்டரை வழங்குவதன் மூலம் ஐந்து மருந்துகளின் (தயாரிப்புகள்) உற்பத்தியைத் தொடர திவ்யா மருந்தகத்தை அனுமதித்துள்ளோம், உற்பத்திக்கு தடை விதிக்க உத்தரவிடுவதற்கு முன், நிறுவனத்தின் நிலைப்பாட்டை விளக்குவதற்கு நாங்கள் அவகாசம் கொடுத்திருக்க வேண்டும்" என்றார்.

பதஞ்சலி பாபா ராம்தேவ்
பதஞ்சலி பாபா ராம்தேவ்
vikatan

தடை ரத்து உத்தரவுக்குப் பிறகு, பதஞ்சலி செய்தி தொடர்பாளர் எஸ்.கே.திஜாரிவாலா செய்தியாளர்களிடம் கூறுகையில், ``சரியான நேரத்தில் பிழையை சரிசெய்ய, ஆயுர்வேதத்தை இழிவுபடுத்தும் இந்தப் பகுத்தறிவற்ற செயலைக் கவனத்தில் கொண்ட உத்தரகாண்ட் அரசுக்கு நாங்கள் பணிவுடன் நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம்" என்று தெரிவித்திருக்கிறார்.

மேலும், இது குறித்து அந்நிறுவனம் அறிக்கையில், `30 ஆண்டுக்கால தொடர் முயற்சி மற்றும் ஆராய்ச்சியின் மூலம், பதஞ்சலி நிறுவனம், உலகிலேயே முதன்முறையாக ஆயுர்வேத மருந்துகளை ஆராய்ச்சி மற்றும் சான்று அடிப்படையிலான மருந்துகளாக ஏற்றுக்கொண்டுள்ளது. துரதிர்ஷ்டவசமாக, உத்தரகாண்ட் ஆயுர்வேத உரிம ஆணையத்தின் அறியாமை, உணர்ச்சியற்ற மற்றும் தகுதியற்ற அதிகாரிகள் சிலர் ஆயுர்வேதத்தின் முழு பாரம்பர்யத்தையும் களங்கப்படுத்தி வருகின்றனர்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, கடந்து ஜூலை மாதம் கேரளாவைச் சேர்ந்த கண் மருத்துவரான கே.வி.பாபு, நிறுவனம், மருந்துகள் மற்றும் மந்திர மருந்து (ஆட்சேபனைக்குரிய விளம்பரம்) சட்டம் 1954 மற்றும் மருந்துகள் மற்றும் அழகுசாதனப் பொருள்கள் சட்டம் 1940 மற்றும் விதிகள் 1945-ன் அடிப்படையில், நோய்களுக்கான மருந்துகளை விளம்பரப்படுத்துவதன் மூலம், சட்ட விதிமுறைகளை பதஞ்சலி நிறுவனம் மீறுவதாகப் புகார் கூறினார். கூடவே மற்றொரு புகாரை மாநில உரிம ஆணையத்துக்கு (SLA) அக்டோபர் 11 அன்று மின்னஞ்சல் மூலம் அனுப்பினார்.

இதைத் தொடர்ந்து நவம்பர் 9 அன்று, ``தவறான மற்றும் ஆட்சேபனைக்குரிய விளம்பரங்களை ஊடக வெளியில் இருந்து உடனடியாக அகற்ற வேண்டும் என்றும், நிறுவனம் அங்கீகரிக்கப்பட்ட விளம்பரங்களை வெளியிட வேண்டும், இல்லையெனில் அதன் உற்பத்தி உரிமம் ரத்து செய்யப்படும்" என்றும் தெரிவித்ததுடன் இதுகுறித்து பதிலளிக்க நிறுவனத்துக்கு ஒரு வாரம் அவகாசம் அளித்தது. சனிக்கிழமையன்று, அதன் பதிலை சமர்ப்பிக்க நிறுவனத்துக்கு வழங்கப்பட்ட காலத்தை ஒரு வாரத்திலிருந்து 15 நாள்களுக்கு நீட்டித்திருந்தது.

ஆயுர்வேதம்
ஆயுர்வேதம்
மாதிரிப்படம்

இந்நிலையில், பதஞ்சலி இந்த உத்தரவுக்கு கடுமையாக எதிர்ப்பு தெரிவித்ததுடன், இது போதைப்பொருள் மாஃபியாவின் செயல் என்றும், தங்கள் இமேஜை கெடுக்க முயற்சி செய்பவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறியிருந்தது. தொடர்ந்து அதன் தயாரிப்புகளுக்கு புதிய ஒப்புதலுக்காக ஐந்து ஃபார்முலா ஒவ்வொன்றுக்கும் திருத்தப்பட்ட ஃபார்முலேஷன் ஷீட்கள் மற்றும் லேபிள் க்ளைம்களை சமர்ப்பிக்குமாறு பதஞ்சலி நிறுவனத்தை ஆணையம் கேட்டுக்கொண்டது. திருத்தப்பட்ட அந்த அறிக்கையைப் பார்த்து ஆணையம் ஒப்புதல் அளித்த பின்னரே உற்பத்தியை மீண்டும் தொடங்க முடியும் என்று பதஞ்சலி நிறுவனம் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.