Published:Updated:

கோவிட் தடுப்பூசி: மாநிலங்களுக்கு விநியோகிக்க மறுக்கும் நிறுவனங்கள்; மத்திய அரசு செய்யவேண்டியது என்ன?

Sputnik V vaccine
Sputnik V vaccine ( AP Photo / Mahesh Kumar A )

தடுப்பூசி நிறுவனங்கள் நாடுகளுடன் நேரடியாக ஒப்பந்தம் செய்ய விரும்புகின்றன. அவை, மாநில அரசுகளுடன் ஒப்பந்தம் செய்வதைத் தவிர்க்கின்றன. இந்த விஷயத்தில் மத்திய அரசு உடனடியாகத் தலையிட்டு தீர்வு காண வேண்டும்.

நாடு முழுவதும் தடுப்பூசி போடும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. முன்னதாக மத்திய அரசு, மாநிலங்கள் நேரடியாகத் தடுப்பு மருந்து தயாரிக்கும் நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்து தடுப்பு ஊசிகள் வாங்குவதற்கு அனுமதி அளித்திருந்தது. அதன் தொடர்ச்சியாகத் தமிழகம் உட்பட பல மாநிலங்கள் வெளிநாட்டு நிறுவனங்களுடன் தடுப்பூசி கொள்முதல் செய்வது தொடர்பாகப் பேசி வருகின்றன. தமிழக அரசும் உலகளாவிய டெண்டரை தடுப்பூசி கொள்முதலுக்காக வெளியிட்டுள்ளது.

இதன் தொடர்ச்சியாக பஞ்சாப் மற்றும் டெல்லி மாநிலங்கள் தடுப்பூசி உற்பத்தியில் முன்னணியில் உள்ள பைசர் மற்றும் மாடர்னா நிறுவனங்களுடன் தடுப்பூசி கொள்முதல் செய்வது பற்றிப் பேசியுள்ளனர்.

கொரோனா தடுப்பூசி
கொரோனா தடுப்பூசி

இதில் முக்கிய திருப்பமாகத் தடுப்பூசி வழங்கும் வெளிநாட்டு நிறுவனங்கள் இது தொடர்பாக மாநிலங்களுடன் பேச இயலாது என்றும் நேரடியாக இந்திய அரசிடம் மட்டும்தான் தடுப்பூசி கொள்முதல் பற்றிய ஒப்பந்தங்கள் செய்துகொள்ள முடியும் என்றும் தெரிவித்துவிட்டதாக டெல்லி மற்றும் பஞ்சாப் மாநிலங்கள் தெரிவிக்கின்றன.

தற்போது இந்தியாவில் கோவாக்சின் மற்றும் கோவிஷீல்டு என்ற இரண்டு தடுப்பூசிகள் மட்டுமே உற்பத்தி செய்யப்பட்டு வருகின்றன. மேலும் ரஷ்யாவின் ஸ்புட்னிக் தடுப்பூசி தயாரிப்பதற்கு இந்தியாவைச் சேர்ந்த டாக்டர் ரெட்டிஸ் லேபரட்டரிஸ் ஒப்பந்தம் செய்து தடுப்பூசி தயாரிக்கும் பணிகளை முடுக்கி விட்டுள்ளது. மேலும் ரஷ்யாலிருந்து நேரடியாகத் தடுப்பூசிகளைக் கொள்முதல் செய்து விநியோகிக்கவும் ஆரம்பித்துள்ளது. இதன் மூலம் தற்போது இந்தியாவில் அதிகாரபூர்வமாக மூன்று தடுப்பூசிகள் பயன்பாட்டுக்கு வந்துள்ளன என்றாலும் கடுமையான தடுப்பூசி தட்டுப்பாடு ஓய்ந்தபாடில்லை.

இந்தியாவிலுள்ள 130 கோடி மக்களில் 18 வயதுக்குள் உள்ளவர்களைக் கழித்துவிட்டால் 90 கோடி மக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட வேண்டும். ஒருவருக்கு இரண்டு தடுப்பூசி விகிதம் 180 கோடி தடுப்பூசிகள் நமது நாட்டு மக்களுக்கு தேவைப்படுகிறது. இதுவரை 20 கோடி தடுப்பூசிகள் மட்டுமே போடப்பட்டுள்ளன.

சென்ற மாதம் தொடக்கத்தில் சராசரியாக ஒரு நாளைக்கு 35 லட்சம் தடுப்பூசிகள் போடப்பட்டு வந்தன. மே மாதம் 1 முதல் 18 வயதுக்கு மேற்பட்ட நபர்களுக்குத் தடுப்பூசி போடலாம் என்று மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. என்றாலும், தேவைப்படும் அளவுக்கு தடுப்பூசிகளை உற்பத்தி செய்வதில் சுணக்கம் ஏற்பட்டுள்ளது.

கொரோனா தடுப்பூசி
கொரோனா தடுப்பூசி

இந்த மாதத்தில் மிகக் குறைவாக 20 லட்சத்துக்கும் குறைவான தடுப்பூசிகளே நாளொன்றுக்கு போடப்பட்டு வருகின்றன. இந்த வேகத்தில் சென்றால் மீதியுள்ள 180 கோடி ஊசிகள் போடப்படுவதற்கு இன்னும் மூன்று வருட காலம்கூட ஆகலாம். டாக்டர் ரெட்டிஸ் லேபரட்டரி நிறுவனம் தமது சோதனை தடுப்பூசிகளைத் தற்போது வெற்றிகரமாக உற்பத்தி செய்துள்ளது. இதை ரஷ்யாவுக்கு அனுப்பி தரச் சான்று பெற்று முழுவீச்சில் தடுப்பூசி தயாரிக்க உள்ளது. ஆகஸ்ட் மாதம் தொடக்கத்தில் இருந்து ஸ்புட்னிக் தடுப்பூசி அதிக அளவு கிடைப்பதற்கு வாய்ப்புள்ளது.

மத்திய சுகாதார அமைச்சர் ஹர்ஷவர்தன் இந்த ஆண்டு இறுதிக்குள் இந்தியாவில் 200 கோடி தடுப்பூசிகள் தயாரிக்கப்பட்டு விடும் என்று கூறியிருக்கிறார். பல நிறுவனங்கள் தடுப்பூசி தயாரிப்பதில் முழு முனைப்பு காட்டி வருகின்றன. கோவாக்சின் நிறுவனம் அதிக தடுப்பூசி உற்பத்தி செய்வதற்கு இந்திய அரசு 3,000 கோடி ரூபாய் நிதியை ஒதுக்கியுள்ளது. இதன் காரணமாக கோவாக்சின் தடுப்பூசி இன்னும் சில மாதங்களில் அதிக அளவு கிடைப்பதற்கு வாய்ப்புள்ளது. ஆனால், இந்தியாவில் தயாரிக்கப்படும் கோவாக்சின் தடுப்பூசியை உலக சுகாதார மையம் இன்னும் ஏற்றுக்கொள்ளவில்லை. அதனால் இந்தியாவிலிருந்து வேறு உலக நாடுகளுக்கு கோவாக்சின் தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களால் செல்ல முடியாத சூழ்நிலை நிலவுகிறது. இதுபற்றிய தெளிவான விவரங்களும் தற்போது இல்லாமல் இருக்கிறது.

மேலும் மாடர்னா நிறுவனம் மருத்துவத் துறையில் பணிபுரியும் முன்களப் பணியாளர்களும், இணை நோய்கள் உள்ளவர்களும் கூடுதலாக மூன்றாவது தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்று தெரிவித்துள்ளது.

தடுப்பூசி
தடுப்பூசி

இது தடுப்பூசிகளுக்கு ஆன தேவையை மேலும் அதிகரிக்கும் வாய்ப்பை வழங்கியுள்ளது. அமெரிக்கா, ஐரோப்பா போன்ற வளர்ந்த நாடுகளில் தமது தேவைக்கு அதிகமாகத் தடுப்பூசிகளை மருந்து நிறுவனங்களிடம் இருந்து கொள்முதல் செய்து வருகின்றன. இதுவும் தடுப்பூசி கிடைப்பதில் சிக்கலை ஏற்படுத்துகிறது.

ரஷ்யாவின் ஸ்புட்னிக் நிறுவனம் ஒரு முறை மட்டும் செலுத்திக் கொள்ளும் தடுப்பூசியைத் தயாரித்துள்ளது. இந்தத் தடுப்பு ஊசியும் இந்தியாவில் உற்பத்தி செய்வதற்கு அதிக வாய்ப்பு உள்ளது.

இந்தியாவில் இரண்டாவது அலை காரணமாகப் பலர் மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். முதல் அலையில் அங்கொன்றும் இங்கொன்றுமாக நமக்கு தெரிந்தவர்கள் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்று பேசி வந்தோம். ஆனால், இந்த அலையில் ஒவ்வொரு குடும்பத்திலும் அவர்களின் நெருங்கிய குடும்ப உறுப்பினர்கள் நோய்த்தொற்றைப் பெற்றிருக்கிறார்கள்.

இந்தியாவில் மகாராஷ்டிரா மாநிலத்தில் ஏப்ரல் 12 அன்று போடப்பட்ட ஊரடங்கு தற்போது பெரும்பாலான மாநிலங்களில் நிலவி வருகிறது. பொருளாதார ரீதியாக மக்கள் கடும் சிரமத்தை அடைந்து வருகின்றனர். நோய்த் தொற்று காரணமாகப் பல குடும்பங்களில் உயிர் இழப்பும் ஏற்பட்டுள்ளது.

இதைச் சரி செய்வதற்கு தடுப்பூசி மட்டுமே ஒரே தீர்வாகும். இந்திய அரசு போர்க்கால அடிப்படையில் தடுப்பூசி தயாரிக்கும் பணிகளை முடுக்கிவிட்டாலும் பெரும்பாலான மக்களுக்கு தடுப்பு ஊசி செலுத்துவதற்கு ஒரு வருடத்துக்கு மேல் ஆகும் என்பதே யதார்த்தமான உண்மையாக உள்ளது. டெல்லி, பஞ்சாப் மாநிலங்கள் நேரடியாகத் தடுப்பூசிகள் கொள்முதல் செய்ய முடியாத சூழ்நிலை இதைத்தான் நமக்கு உணர்த்துகிறது. உலக சுகாதார நிறுவனம் (WHO), தடுப்பூசிகளை நாடுகள் நேரடியாக தடுப்பூசி நிறுவனங்களிடமிருந்து கொள்முதல் செய்துகொள்ளலாம் எனத் தெரிவித்திருக்கிறது. அதனால்தான் தடுப்பூசி நிறுவனங்கள் நாடுகளுடன் நேரடியாக ஒப்பந்தம் செய்ய விரும்புகின்றன. அவை, மாநில அரசுகளுடன் ஒப்பந்தம் செய்வதைத் தவிர்க்கின்றன. இந்த விஷயத்தில் மத்திய அரசு உடனடியாகத் தலையிட்டு தீர்வு காண வேண்டும்.

தடுப்பூசி
தடுப்பூசி
தடுப்பூசி, ஆக்ஸிஜன் விநியோகம்... தமிழகத்துக்கு அநீதி இழைக்கிறதா பா.ஜ.க அரசு?

இப்போது தமிழகத்தில் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டாலும் பெரும்பாலான இடங்களில் தடுப்பூசி கிடைக்காத சூழ்நிலையே நிலவுகிறது. இந்தப் பேரிடர் காலத்திலிருந்து தப்புவது இப்போது ஒவ்வொருவரின் கையில்தான் உள்ளது. தனிமனித இடைவெளி காண்பது, மாஸ்க் அணிவது, கைகளை சோப்புப் போட்டு கழுவுவது, முடிந்தவரை வாய்ப்பிருக்கும் பட்சத்தில் விரைவாகத் தடுப்பூசி போட்டுக்கொள்வது ஆகியவை மட்டுமே இந்தத் தொற்றில் இருந்து நம்மை பாதுகாக்கும்.

அடுத்த கட்டுரைக்கு