Published:Updated:

`எஸ்கேப்பான கொரோனா நோயாளி; பதறவைத்த பரிசோதனை..!'- அடுத்தடுத்த காட்சிகளால் அச்சத்தில் விழுப்புரம்

விழுப்புரம்
விழுப்புரம்

கொரோனா நோய்த் தொற்று விவகாரத்தில், விழுப்புரம் மாவட்ட நிர்வாகமும் சுகாதாரத்துறையும் காட்டிவரும் அலட்சியத்தால், அதிர்ந்து போய் உள்ளனர் பொதுமக்கள்.

இந்தியாவில் நாளுக்குநாள் கொரோனா தொற்று தீவிரமடைந்துவரும் நிலையில், அதைத் தடுப்பதற்காக ஊரடங்கு, தனிமனித இடைவெளி, முகக்கவசம், கை கழுவுதல் எனப் பல அறிவுரைகளை வழங்கிவருகின்றன மத்திய, மாநில அரசுகள். ஆனால், சில அதிகாரிகளின் அலட்சியத்தால் அரசு எடுக்கும் முயற்சிகள் பயனற்றுப்போகின்றன.

முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை
முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை

விழுப்புரம் மாவட்டத்தில் 16 பேருக்கு கொரோனா தொற்று (07.04.2020 நிலவரப்படி) உறுதிசெய்யப்பட்ட நிலையில், அவர்கள் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் சிகிச்சைபெற்றுவருகின்றனர். இவர்களைத் தவிர 1,924 பேர் தனிமைப்படுத்தப்பட்டு, கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டு இங்கு சிகிச்சைபெற்றுவந்த 51 வயதுடைய தலைமை ஆசிரியர் ஒருவர், சில தினங்களுக்கு முன்பு உயிரிழந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்நிலையில், கடந்த 7-ம் தேதி அன்று கொரோனா தொற்று சந்தேகத்தின் அடிப்படையில் அனுமதிக்கப்பட்டிருந்த 26 பேரை, தொற்று இல்லை என்று வீட்டுக்கு அனுப்பியது மருத்துவமனை நிர்வாகம். ஆனால், மறுநாளே கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் 20 பேர் என்று கூறிய சுகாதாரத்துறை, அதில் ஒருவரைக் காணவில்லை என்றும் கூறியது.

விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அண்ணாதுரை
விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அண்ணாதுரை

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட ஒருவர் மருத்துவமனையில் இருந்து தப்பிவிட்டார் என்று செய்தி பரப்பப்பட்டது. கொரோனா குறித்த எந்தத் தகவலைக் கேட்டாலும் எங்களுக்கு அந்த அதிகாரம் இல்லை என்று கூறும் அதிகாரிகள், கொரோனா பாதித்தவர் தப்பிவிட்டார் என்ற தகவலை மட்டும் செய்தியாளர்களிடம் அதிகாரபூர்வமாகக் கூறாமல் கசியவிட்டனர்.

ஆனால், தொற்று இல்லை என்று வீட்டுக்கு அனுப்பப்பட்ட 26 பேரில் 4 பேருக்குத்தான் கொரோனா தொற்று இருக்கிறது என்பதை மாவட்ட நிர்வாகமும், சுகாதாரத்துறையும் மறைக்க முயற்சி செய்தது.

இதுகுறித்து முண்டியம்பாக்கம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் டீன் சுந்தரிதேவியைத் தொடர்பு கொண்டபோது, ``எனக்கு அந்த அதிகாரம் இல்லை. மாவட்ட நிர்வாகத்திடம் கேளுங்கள்” என்று தொடர்பைத் துண்டித்தார்.

விழுப்புரம் மாவட்ட மக்கள் தொடர்பு அதிகாரி சுப்பையாவைத் தொடர்பு கொண்டபோது, ``அங்கிருந்து வரும் ரிப்போர்ட்டை மட்டுமே நாங்கள் அனுப்புவோம். வேறு எந்தத் தகவலும் எனக்குத் தெரியாது” என்று முடித்துக்கொண்டார்.

விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அண்ணாதுரையைத் தொடர்புக்கொண்டு, `வீட்டுக்கு அனுப்பப்பட்ட 26 பேரில் 4 பேருக்குத்தான் கொரோனா உறுதி செய்யப்பட்டிருக்கிறதா?' என்றோம்.

`` 4 பேருக்கு பாசிட்டிவ், நெகட்டிவ் பற்றியெல்லாம் ஏன் கேட்கிறீர்கள். இது அவ்வளவு பரபரப்பான செய்தி கிடையாது. இதற்குத்தான் பி.ஆர்.ஓ இருக்கிறார். அவரிடம் கேளுங்கள்” என்று காட்டமாகப் பேசியவர்,``டாக்டர் தமிழன்பன் என்று ஒருவர் இருக்கிறார். அவரிடம் பேசுங்கள்” என்று ஒரு எண்ணை அனுப்பினார். பலமுறை முயற்சி செய்தும் அந்த மருத்துவரை நம்மால் தொடர்புகொள்ள முடியவில்லை.

முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை டீன் சுந்தரிதேவி
முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை டீன் சுந்தரிதேவி

தொற்று இல்லை என்று 7-ம் தேதி வீட்டுக்கு அனுப்பியவர்களில் 4 பேருக்கு கொரோனோ தொற்று உறுதிசெய்யப்பட்டவுடன் போலீஸுக்கு தகவல் கொடுக்கப்பட்டிருக்கிறது. அந்த 4 பேரில் 3 பேர் விழுப்புரத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால், அவர்களை உடனே அழைத்துச்சென்று மருத்துவமனையில் ஒப்படைத்திருக்கிறது போலீஸ்.

டெல்லியைச் சேர்ந்த அந்த நான்காவது நபர், ஹோட்டல் மேனேஜ்மென்ட் படிப்பை முடித்துவிட்டு, வேலை தேடி கடந்த டிசம்பர் மாதம் புதுச்சேரிக்கு வந்திருக்கிறார். அப்போது, கார் திருட்டு வழக்கு மற்றும் கவர்னர் கிரண்பேடிக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த வழக்கில் 3 மாதங்கள் காலாப்பட்டு சிறையில் இருந்துவிட்டு, சில நாள்கள் புதுச்சேரியில் தங்கிவிட்டு விழுப்புரம் சென்றிருக்கிறார். அப்போது ஊரடங்கில் மாட்டிக்கொண்ட அவர், கொரோனா தொற்று சந்தேகத்தின் அடிப்படையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். அதன்பிறகுதான், அவரை வீட்டுக்கு அனுப்பியிருக்கிறது மருத்துவமனை நிர்வாகம். தற்போது வெளியாகியிருக்கும் இந்தத் தகவலால் விழுப்புரம், புதுச்சேரி மக்கள் அதிர்ச்சியில் உறைந்திருக்கின்றனர்.

தற்போது, 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டு, அந்த நபரைத் தேடி வருகிறது விழுப்புரம் மாவட்ட போலீஸ். கொரோனா தொற்று தீவிரமடைந்துவரும் நிலையில், தொற்றுள்ளவரை அலட்சியமாக வெளியே அனுப்பிய அதிகாரிகள்மீது நடவடிக்கை எடுக்கப்படுமா என்று கேள்வி எழுப்புகின்றனர் விழுப்புரம் மக்கள்.

அடுத்த கட்டுரைக்கு