Published:Updated:

ஊரே உறவுதான், உழைப்பேன் அவர்களுக்காக!

‘கொரோனா வார்டு’ பணி முடித்துவிட்டு ஓய்வில் இருந்த மீனாவிடம் உரிய வழிமுறைகளைப் பின்பற்றி உரையாடினேன்.

பிரீமியம் ஸ்டோரி
சென்னை, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையின் ‘கொரோனா வார்டு.’ பயம், நம்பிக்கை, கண்ணீர், அவநம்பிக்கை, கோபம், அமைதி என உணர்வுகள் அந்த வெளியெங்கும் உறைந்துகிடக்கின்றன.

வாசலில் அடுத்தடுத்து ஆம்புலன்ஸ் வந்துகொண்டும் சென்றுகொண்டும் இருக்க, உள்ளேயும் வெளியேயுமாக மனிதர்கள் இழைந்துகொண்டே இருக்கிறார்கள்.

முகப்பின் ஒருபக்கத்தில் இருக்கிறது பதிவு மையம். புதிதாக வரும் நோயாளிகள் அந்த இடத்தில் நின்று தங்கள் விவரங்களைத் தெரிவிக்க, என்ட்ரி செய்து அவர்களை உள்ளே அனுப்புகிறார் மீனா சத்யமூர்த்தி. கொரோனா அச்சம் உயிர் உறுத்திக் கொண்டிருக்கும் இந்தச்சூழலில் எவ்வித அச்சமும் இன்றி கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் தன்னார்வலராகப் பணியாற்றுகிறார் மீனா. அரசு மருத்துவமனை களின் கொரோனா வார்டுகளில் தன்னார்வலராகப் பணியாற்றும் ஒரே பெண் இவர்தான்.

மீனாவின் பூர்வீகம் கரூர். விவரமறியாத பருவத்தில் பெற்றோர் இறந்துவிட, தாத்தா பாட்டியின் அரவணைப்பில் வளர்ந்தார். பத்தாம் வகுப்பு முடித்ததுமே, 15 வயதில் திருமணம். பின்னர் சென்னையில் குடியேறினார். அடுத்த மாதமே ஒரே ஆதரவாய் இருந்த தாத்தாவும் இறந்துவிட்டார். திருமண வாழ்க்கையும் சரியாக அமையாமல், 19 வயதில் விவாகரத்து பெறும் நிலை. கனவு காணும் வயதில், மீனாவின் வாழ்வில் சோகங்கள் சூழ்ந்தன. கடந்த ஆறு ஆண்டுகளாகப் பிறர் ஆதரவின்றித் தனியாகவே வாழ்ந்துவருகிறார், சேவையின் வழியே வலி மறக்கிறார். ‘கொரோனா வார்டு’ பணி முடித்துவிட்டு ஓய்வில் இருந்த மீனாவிடம் உரிய வழிமுறைகளைப் பின்பற்றி உரையாடினேன்.

“எனக்குச் சில உறவுகள் ஊர்ல இருக்காங்க. ஆனா, நான் யாருக்கும் பாரமா இருக்க விரும்பலை. குறிப்பிட்ட வயசுக்குப் பிறகு எல்லோருமே சுயமா வாழுற பக்குவத்துக்கு வந்துடணும். விவாகரத்து வாங்கினபிறகு தனிச்சு நின்னு வாழ முடிவெடுத்தேன். கையில ஒரு ரூபாய்கூட இல்லை. ஒரு காப்பகத்துல கொஞ்சநாள் தங்கினேன். எனக்கு ஆங்கிலம் நல்லாத் தெரியும். சில தனியார் நிறுவனங்களில் வேலை செஞ்சேன். சம்பளப் பணத்தைச் சேர்த்துவெச்சு, வேலைக்கு நடுவே மெடிக்கல் கோடிங் கோர்ஸ் படிச்சேன். ஐ.டி நிறுவனத்தில் கொஞ்ச காலம் வேலை செஞ்சேன். நைட் ஷிஃப்ட் வேலையால் சரியா சாப்பிட முடியாம, தைராய்டு உள்ளிட்ட உடல்நலப் பிரச்னைகள் ஏற்பட்டுச்சு. அதனால, நீண்டகால விருப்பப்படி சுயதொழில் செய்யத் தொடங்கிட்டேன். சின்ன அளவில் ஈவன்ட் மேனேஜ்மென்ட் வேலைகள் செய்து கொடுக்கறேன். விவசாயிகள்கிட்ட இருந்து சிறுதானியங்கள், பாரம்பர்ய அரிசிகளை வாங்கி, பெருங்களத்தூர்ல சின்னதா மாலைநேர சிற்றுண்டிக்கடை வெச்சேன். சில நண்பர்களும் உதவினாங்க. கடை வேலை தவிர, தனியார் நிறுவனங்களுக்கு ஸ்நாக்ஸ் ஆர்டரும் சப்ளை செஞ்சேன்...’’ - மெல்லிய புன்னகையுடன் பேசும் மீனாவுக்கு வயது இப்போது 25.

மீனா
மீனா

வலிகளைக் கடந்தவர்கள்தாம் மற்றவர்களின் வலியைப் புரிந்துகொண்டு உதவ முன்வருவார்கள். தனக்கு யாரும் ஆதரவாய் இல்லையே என வருத்தப்படாமல், தானே மற்றவர்களுக்கு ஆதரவாக மாற முடிவெடுத்திருக்கிறார் மீனா.

‘உறவுகள்’ என்ற அமைப்பின் மூலம், ஆதரவற்ற சடலங்களை அடக்கம் செய்யும் பணியைச் சில ஆண்டுகளாகச் செய்துவருகிறார். ‘தோழன்’ என்ற அமைப்பில் இணைந்து சிக்னல்களில் சாலைப் பாதுகாப்பு, கட்டாய ஹெல்மெட், பேருந்துப் படிக்கட்டுப் பயணத்தைத் தவிர்ப்பதற்கான விழிப்புணர்வுப் பிரசாரங்களையும் செய்துவருகிறார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

“கேள்வி கேட்க கேட்கத்தான் மாற்றத்துக் கான வழி பிறக்கும். என் கண் முன்னாடி பொதுமக்கள் எதிர்கொள்ளும் சிரமங்களுக்கு மாநகராட்சி அதிகாரிகள் உட்பட துறை சார்ந்த அதிகாரிகளிடம் உடனே புகார் தெரிவிப்பேன். மாற்றங்களும் நடக்கும், ‘உனக்கு எதுக்குமா தேவையில்லாத வேலை?’ன்னு ஏளனமான பதில்களும் வரும். ஆனாலும், என் வேலையைத் தொடர்ந்து செய்வேன். போன வருஷம், ‘30 நாள்கள் சேலஞ்ச்’னு ஒரு முயற்சியைச் செய்துகாட்டினேன். நான் பயணிக்கிற கே.கே.நகர் முதல் கிண்டி வரையிலான பாதையில பொதுமக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துற பிரச்னைகள் பத்தி ஒவ்வொரு நாளும் புகார்களைப் பதிவு செஞ்சேன். இதன் மூலம் குப்பைகளை அப்புறப்படுத்துறது, எரியாத தெரு விளக்கைச் சரிசெய்றது, பாதாள சாக்கடைக் கழிவுகள் சரிசெய்யப்படுவதுன்னு பல்வேறு மாற்றங்கள் உடனடியா நடந்துச்சு” என்பவரின் பேச்சு லாக்டெளன் காலத்துக்குத் திரும்பியது.

“லாக்டெளனால் என்னோட தொழில் சுத்தமா முடங்கிடுச்சு. ‘அர்த்தமுள்ளதா என்ன வேலை செய்யலாம்?’னு யோசிச்சப்போதான், சில டாக்டர்ஸ் மூலம் கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் தன்னார்வலராக வேலை செய்ய வாய்ப்பு கிடைச்சுது. கொரோனா வார்டு வாசல்ல, ‘நான் உங்களுக்கு உதவி செய்யலாமா?’ என்ற பிரிவு செயல்படுது. இந்த வார்டுக்கு தினமும் வரக்கூடிய எல்லா நபர்களும் எங்ககிட்ட முதல்ல வருவாங்க. அவங்ககிட்ட எல்லா விவரங்களையும் வாங்கிட்டு, தேவையான ஆலோசனைகளைக் கொடுத்து டெஸ்ட்டிங் எடுக்க அல்லது சிகிச்சைக்கு அனுப்புவோம். காலை, மதியம், இரவுன்னு ஒவ்வொருநாளும் ஷிஃப்ட் மாறும். ஞாயிற்றுக்கிழமை மட்டும் லீவ். ஒருநாளைக்கு 250-க்கும் மேற்பட்டோர் இந்த வார்டுக்கு வருவாங்க. நான் மட்டும் 125 பேருக்கு என்ட்ரி போடுவேன்.

கொரோனா பாதிப்பு உறுதிசெய்யப்பட்ட வங்களில் ஹெச்.ஐ.வி, காசநோய், இருதய பாதிப்புன்னு முக்கியமான உடல்நல பாதிப்புகள் உள்ளோரும் இருப்பாங்க. டாக்டர்கள்கிட்ட போன்ல ஆலோசனை செய்துட்டு, என்ட்ரி போடுறது அல்லது கூடுதல் ஆலோசனைகளைக் கொடுப்பேன். கொரோனா வார்டுல எல்லா உதவிக்கும் பணியாளர்கள் இருக்காங்க. ஆனாலும், அவங்க பிஸியா இருந்தால், பாசிட்டிவ் நோயாளிகளைச் சிகிச்சைக்கு வீல்சேரில் வெச்சுக் கொண்டுபோறது, வயதான, உடல்நிலை சரியில்லாத பெண்களை பாத்ரூம் கூட்டிட்டுப்போறதுன்னு அடிப்படைத் தேவைகளுக்கு உடன் இருந்தும் உதவுவேன். இந்த வார்டுக்குள் நுழையும்போது பலரின் முகத்திலும் கவலையும் பயமும் அதிகமிருக்கும். ‘கொஞ்ச நாள் சிகிச்சை எடுத்தால் போதும். குணமாகி வீட்டுக்குப் போயிடுவீங்க’ன்னு சொல்வோம். சிகிச்சை முடிஞ்சு வீட்டுக்குப் போறப்போ, என்கிட்ட சந்தோஷமா பேசிட்டுப் போறவங்களும் உண்டு. சிகிச்சை பலனில்லாம இறந்துபோறவங்க குடும்பத்தினரின் அழுகை, விவரிக்க முடியாத வேதனையைத் தரும்.

கடந்த நாலு மாசமா இந்த வேலையைச் செய்றேன். எனக்குக் குடும்பம் இருந்திருந்தா, இந்த வேலைக்குப் போக சம்மதிச்சிருக்க மாட்டாங்க. ஒருவேளை அனுப்பியிருந்தாலும், என் மூலமா என் குடும்பத்தாருக்கு நோய் பரவிடுமோங்கிற பயம் இருக்கும். நான் தனியா இருக்கிறதால இந்த ரெண்டு பிரச்னைக்கும் இடமில்லை. என் வாழ்க்கையில் பயம் இருந்திருந்தா, இந்நேரம் நான் உயிரோடு இருந்திருக்க வாய்ப்பில்லை. ‘இதுவும் கடந்து போகும்’னுதான் போயிட்டிருக்கேன். எனக்கான பாதுகாப்பை முடிஞ்சவரைக்கும் உறுதி செஞ்சுக்கிறேன். ஆஸ்பத்திரியில் பத்து நாளைக்கு ஒருமுறை எங்களைப் பரிசோதனை செய்றாங்க. ஒருவேளை பாதிப்பு வந்தா, எப்பவும் எனக்குப் பக்கபலமா இருக்கிற டீன் வசந்தா மணி மேடமும் மருத்துவ நண்பர்களும் என்னைக் குணப்படுத்திடுவாங்கன்னு உறுதியா நம்பறேன்.

மீனா
மீனா

ஆன்லைன்ல புடவை உள்ளிட்ட பெண்களுக்கான சில பொருள்களை விற்கிறேன். இதுல கிடைக்கும் குறைந்த வருமானத்துல, வீட்டு வாடகை, உணவுத் தேவையைப் பூர்த்தி செய்துக்கறேன். ‘பெண்ணால தனியா வாழ முடியாது’ன்னு என்கிட்டயும் சிலர் சொல்லியிருக்காங்க. ஆறு வருஷமா தனியாதான் வாழறேன். அதுவும் மனதளவில் எந்தக் குறைபாடும் இல்லாம, பிறர் தயவில்லாம, முடிஞ்ச அளவுக்குப் பொதுநலன் சார்ந்து மகிழ்ச்சியாகத்தான் வாழறேன். தொடர்ந்து சாமான்ய மக்களுக்குத் தோள்கொடுக்க ஆசைப்படறேன். கொரோனா பாதிப்பு முடியிறவரைக்கும், இந்த வார்டில் வேலை செய்வேன்” உள்ளத்திலிருந்து வரும் வார்த்தைகள், மீனாவின் விழிகளில் நம்பிக்கையுடன் ஒளிர்கின்றன!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு