Published:Updated:

பதஞ்சலியின் கொரோனில்: `இந்திய மருத்துவ கவுன்சிலின் சந்தேகம்; அனுமதிக்க முடியாது!’ - மகாராஷ்டிரா அரசு

பதஞ்சலியின் கொரோனா தடுப்பு மருந்து
பதஞ்சலியின் கொரோனா தடுப்பு மருந்து

பதஞ்சலியின் கொரோனா தடுப்பு மருந்தை மகாராஷ்டிராவில் விற்பனை செய்ய அனுமதிக்க மாட்டோம் என்று அமைச்சர் அனில் தேஷ்முக் தெரிவித்தார்.

யோகா குரு பாபா ராம்தேவின் பதஞ்சலி நிறுவனம் புதிதாக கொரோனா தடுப்பு மருந்தை தயாரித்திருக்கிறது. `கொரோனில்’ என்று பெயரிடப்பட்டிருக்கும் அந்த மருந்து மாத்திரை வடிவில் கிடைக்கிறது. சமீபத்தில் இந்த மருந்தின் தொடக்கவிழா நடைபெற்றது. இதில் சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் உட்பட பலர் கலந்துகொண்டனர். இந்தநிகழ்ச்சியில் பேசிய பாபா ராம் தேவ், தங்களது கொரோனில் மருந்துக்கு உலக சுகாதார மையத்தின் ஒப்புதல் கிடைத்திருக்கிறது என்று தெரிவித்திருந்தார். கொரோனில் மாத்திரை கொரோனாவை எதிர்த்துப்போராடுகிறது என்பது ஆதாரத்துடன் நிரூபிக்கப்பட்டிருக்கிறது என்றும் தெரிவித்தார்.

கொரோனா தடுப்பு மருந்து வெளியீடு
கொரோனா தடுப்பு மருந்து வெளியீடு

பாபா ராம்தேவின் இந்தக் கருத்தைக் கேட்டு அதிர்ச்சியடைந்த இந்திய மருத்துவ கவுன்சில், `உலக சுகாதார மையம் எந்தவித மருந்துக்கும் ஒப்புதல் கொடுக்கவில்லை’ என்று விளக்கம் அளித்திருக்கிறது. இது தொடர்பாக வெளியான கருத்து முற்றிலும் தவறானது என்றும் தெரிவித்திருந்தது. பாபா ராம் தேவின் மருந்து வெளியீட்டு விழாவில் கலந்துகொண்ட ஹர்ஷ்வர்தன் இது தொடர்பாக விளக்கம் அளிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டது. உலக சுகாதார மையமும் இது தொடர்பாக விளக்கம் அளித்திருக்கிறது. கொரோனா சிகிச்சைக்கு பாரம்பர்ய மருந்துக்கு ஒப்புதல் கொடுக்கப்படவில்லை என்று தெரிவித்திருக்கிறது.

"அறமா அமைச்சர்களே?!"- பாபா ராம்தேவின் கொரோனில் மருந்தும், சர்ச்சைகளும்!

இந்தநிலையில், பாபா ராம்தேவின் கொரோனில் மருந்து மகாராஷ்டிராவில் விற்பனை செய்ய அனுமதிக்கப்படாது என்று மகாராஷ்டிரா அரசு தெரிவித்திருக்கிறது. இது தொடர்பாக மாநில உள்துறை அமைச்சர் அனில் தேஷ்முக் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டிருக்கும் செய்தியில், ``முறையான சான்றிதழ் இல்லாமல் கொரோனில் மருந்தை மகாராஷ்டிராவில் விற்பனை செய்ய அனுமதிக்க முடியாது. இந்த மருந்தின் தொடக்கவிழாவில் இரண்டு மத்திய அமைச்சர்கள் கலந்துகொண்டது மிகவும் மோசமான ஒன்று. கொரோனில் ஆயுர்வேத மருந்து குறித்து இந்திய மருத்துவ கவுன்சில் சந்தேகம் எழுப்பியிருக்கிறது. எனவே, முறையான அனுமதி இல்லாமல் கொரோனில் மருந்தை மகாராஷ்டிராவில் விற்பனை செய்ய அனுமதிக்க முடியாது” என்று தெரிவித்திருக்கிறார்.

அடுத்த கட்டுரைக்கு