Published:Updated:

தமிழகத்தின் முன்களப் பணியாளர்களுக்கு என்னென்ன சலுகைகள் கிடைக்கின்றன?

மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவப் பணியாளர்கள், காவல்துறையினர், சுகாதாரப் பணியாளர்கள் என ஏற்கெனவே முன்களப் பணியாளர்கள் பட்டியலில் உள்ளவர்களுக்கு என்னென்ன சலுகைகள் வழங்கப்படுகின்றன?

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

`முன்களப் பணியாளர்கள் பட்டியலில் ஊடகவியலாளர்களும் சேர்க்கப்படுவார்கள்’ என்று மு.க.ஸ்டாலின் வெளியிட்டிருக்கும் அறிவிப்பு பெருந்தொற்றுக் காலத்தில் உயிரையும் பொருட்படுத்தாமல் களத்தில் பணியாற்றும் ஊடகவியலாளர்களுக்கு நம்பிக்கையையும் ஆதரவையும் அளித்திருக்கிறது.

``மழை, வெயில், பெருந்தொற்றிலும் உயிரைப் பணயம் வைத்து செய்தித்தாள், காட்சி ஒலி ஊடகங்களில் பணியாற்றி வருகின்ற அனைவருமே தமிழகத்தில் முன்களப் பணியாளர்களாகக் கருதப்படுவர். அவர்களுக்கு முன்களப் பணியாளர்களுக்குரிய உரிமைகளும் சலுகைகளும் வழங்கப்படும்” என்று அறிவித்துள்ளார் மு.க.ஸ்டாலின்.

ஸ்டாலின்
ஸ்டாலின்

ஒடிசா, உத்தரகண்ட், பீகார், மேற்குவங்கம் உள்ளிட்ட மாநிலங்களில் பத்திரிகையாளர்கள் முன்களப் பணியாளர்களாக அறிவிக்கப்பட்டிருக்கின்றனர். இந்நிலையில், நேற்றைய முன் தினம் தமிழகத்திலும் பத்திரிகையாளர்கள் முன்களப் பணியாளர்களாகக் கருதப்படுவார்கள் என்ற அறிவிப்பை தமிழகத்தின் புதிய முதல்வராகப் பதவியேற்கவிருக்கும் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். அதே நாளில் கர்நாடக மாநில அரசும் பத்திரிகையாளர்களை முன்களப் பணியாளர்கள் பட்டியலில் இணைத்துள்ளது.

மு.க.ஸ்டாலினின் அறிவிப்பு குறித்துப் பேசிய ஃப்ரன்ட் லைன் இதழின் ஆசிரியரான விஜயசங்கர் ராமச்சந்திரன், ``மிகவும் வரவேற்கத்தக்க அறிவிப்பு. செய்தித்தாள்களில் பணியாற்றுபவர்கள்கூட ஓரளவுக்கு பாதுகாப்பான முறையில் பணியாற்றும் வாய்ப்பு உள்ளது. ஆனால், தொலைக்காட்சி செய்தியாளர்கள் மிகவும் அபாயகரமான சூழலில் பணியாற்றுகின்றனர். சென்னையில் ஸ்டான்லி மருத்துவமனை, ஓமந்தூரார் மருத்துவமனை உள்ளிட்ட பல்வேறு அரசு மருத்துவமனைகளுக்கும் கொரோனா கேர் சென்டர்களுக்கும் தினமும் சென்று செய்தி சேகரிக்கும் செய்தியாளர்கள் இருக்கின்றனர்.

கொரோனா பெருந்தொற்றுக் காலத்தில் களத்தில் பணியாற்றும் ஒவ்வொரு செய்தியாளரும் போர் முனையிலிருந்து செய்தி கொடுக்கும் செய்தியாளருக்கு ஒப்பானவர். போர் முனையில் இருக்கும் ஒருவருக்கு எப்போது வேண்டுமானாலும் மரணம் நிகழலாம். கொரோனாவிலும் அப்படியான சூழல்தான் இருக்கிறது. இதுவரை இந்தியா முழுவதும் நூற்றுக்கும் மேற்பட்ட பத்திரிகையாளர்கள் கொரோனாவால் இறந்திருப்பதாக ஒரு புள்ளிவிவரம் கூறுகிறது. இந்த நிலையில், ஸ்டாலின் அறிவிப்பை நான் மனதார வரவேற்கிறேன்.

விஜயசங்கர் ராமச்சந்திரன்
விஜயசங்கர் ராமச்சந்திரன்
தமிழகத்தில் அதிகரிக்கும் கொரோனா... கட்டுக்குள் கொண்டுவர புதிய ஆட்சி செய்ய வேண்டியது என்ன?

கொரோனாவால் பத்திரிகையாளர்கள் உயிரிழக்க நேரிட்டால் அவர்களின் குடும்பத்துக்கு 15 லட்சம் நிதி உதவி வழங்கப்படும் என்று ஒடிசா அரசு அறிவித்திருக்கிறது. அதைத் தவிர 2 லட்சம் ரூபாய் மருத்துவக் காப்பீடும் வழங்கியிருக்கிறது. இப்படி ஒவ்வொரு மாநிலத்திலும் ஒவ்வொரு நடைமுறை இருக்கிறது. இங்கு என்னென்ன உரிமைகளும் சலுகைகளும் வழங்கப் போகிறார்கள் என்பது குறித்து இன்னும் முழுமையாகத் தெளிவுபடுத்தப்படவில்லை. ஸ்டாலின் பதவியேற்ற பிறகு அதுகுறித்து முழுமையான தகவல் தெரிய வரும்” என்றார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவப் பணியாளர்கள், காவல்துறையினர், சுகாதாரப் பணியாளர்கள் என ஏற்கெனவே முன்களப் பணியாளர்கள் பட்டியலில் உள்ளவர்களுக்கு என்னென்ன சலுகைகள் வழங்கப்படுகின்றன என்பது குறித்து மருத்துவச் செயற்பாட்டாளரான மருத்துவர் சாந்தி ரவீந்திரநாத்திடம் பேசினோம், ``முன்களப் பணியாளர்களுக்குத் தடுப்பூசி போட்டுக்கொள்வதற்கு முன்னுரிமை வழங்கப்படுகிறது. முன்களப் பணியாளர்கள் கொரோனா தொற்றால் இறக்க நேரிட்டால் 25 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படுகிறது. இதுதான் தமிழக அரசால் முன்களப் பணியாளர்களுக்கு வழங்கப்படும் உரிமையும் சலுகையும். புதிய அரசு வந்ததும் அந்தத் தொகையை உயர்த்தி வழங்குவார்களா அல்லது அதே தொகையை வழங்குவார்களா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

மருத்துவர். சாந்தி ரவீந்திரநாத்
மருத்துவர். சாந்தி ரவீந்திரநாத்

`ஏற்கெனவே கொரோனாவால் இறந்த முன்களப் பணியாளர்கள் பலருக்கு இன்னும் நிவாரணத் தொகை வழங்கப்படவில்லை’ என்பதை இங்கு குறிப்பிட்டுச் சொல்ல வேண்டியுள்ளது. வரவிருக்கிற புதிய அரசு அவர்களுக்கு உடனடியாக நிவாரணத் தொகையை வழங்க வேண்டும். அதேபோல, மத்திய அரசின் முன்களப் பணியாளர்கள் பட்டியலில் உள்ளவர்கள் இறந்தால் 50 லட்சம் ரூபாய் இழப்பீடாக வழங்கப்படும் என அறிவித்திருக்கிறது. ஆனால், கொரோனாவால் இறந்த மருத்துவர்கள் பலருக்கும் அந்த நிவாரணத் தொகையை வழங்காமல், இழுத்தடிக்கப்படுகிறது. `மத்திய அரசின் முன்களப் பணியாளர்கள் பட்டியலிலும் ஊடகவியலாளர்களைச் சேர்க்க வேண்டும்’ என்று பல பத்திரிகையாளர்கள் குரல் கொடுத்து வருகின்றனர். ஆனால், மத்திய அரசு அந்தக் கோரிக்கையை பொருட்படுத்தவே இல்லை.

இந்த அசாதாரண சூழலில் தங்கள் உயிரைப் பணயம் வைத்து மக்களுக்காகப் பணியாற்றும் ஒவ்வொரு முன்களப் பணியாளருக்கும் மத்திய மாநில அரசுகள் உரிய மரியாதையைக் கொடுக்க வேண்டும். அறிவிப்புடன் நிறுத்திக்கொள்ளாமல் அதை உடனடியாக செயல்பாட்டுக்குக் கொண்டு வர வேண்டும். குறிப்பாக நிவாரணம் வழங்குவதில் தாமதம் கூடாது” என்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு