Election bannerElection banner
Published:Updated:

தமிழகத்தில் அதிகரிக்கும் கொரோனா... கட்டுக்குள் கொண்டுவர புதிய ஆட்சி செய்ய வேண்டியது என்ன?

ஸ்டாலின்
ஸ்டாலின்

தேர்தலில் கொடுக்கப்பட்ட வாக்குறுதிகளை அவர்கள் கட்டாயம் நிறைவேற்றியாக வேண்டும் என்றாலும், முதன்மையாக அவசர கால அடிப்படையில், கோவிட் கட்டுப்பாட்டுத் திட்டங்களில் கவனம் செலுத்த வேண்டியது அவசியம்.

கொரோனா இரண்டாம் அலை மிகுந்த வீரியத்தோடு பரவிக் கொண்டிருக்கும் சூழ்நிலையில், 2021-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலும் நடந்து முடிந்துவிட்டது. அடுத்து ஆட்சிக்கு வந்துள்ள தி.மு.க அரசு, முழுமுதற் காரியமாகச் செய்ய வேண்டியது கொரோனா இரண்டாம் அலையிலிருந்து தமிழ்நாட்டு மக்களைக் காப்பாற்றுவதுதான்.

கொரோனாவைக் கட்டுப்படுத்த அடுத்து என்னென்ன நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமென்று செயற்பாட்டாளரான மருத்துவர் புகழேந்தி நம்மிடம் சில பரிந்துரைகளைப் பகிர்ந்துகொண்டார். அவை, ``தமிழகத்தில், முக்கியமாக உருமாற்றமடைந்த கொரோனாவை பரிசோதனை செய்யும் வசதிகளைக்கொண்ட பரிசோதனைக் கூடங்களை அமைக்க வேண்டும். அப்படியிருந்தால் மட்டுமே இங்கு அதனுடைய பாதிப்பு எவ்வளவு இருக்கிறது என்பதைத் துல்லியமாகப் பார்க்க முடியும்.

கொரோனா பரவல்
கொரோனா பரவல்

உருமாற்றமடைந்த கொரோனாவோ, பழைய கொரோனாவோ, அதை ஆரம்பத்திலேயே கண்டுபிடித்து, அவர்களைத் தனிமைப்படுத்தி, உரிய சிகிச்சை அளிக்க வேண்டுமென்று உலகளவில் ஒப்புக் கொள்ளப்படுகிறது.

ஒரு பாதிப்பை மிக ஆரம்பத்திலேயே கண்டுபிடித்து, தனிமைப்படுத்தி, அவர்களிடம் பரவக்கூடிய சங்கிலித்தொடரைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கூடுதலாக, அவர்களோடு தொடர்பில் இருந்தவர்களின் சங்கிலித் தொடரைக் கண்டுபிடித்து, பரிசோதிக்க வேண்டும். அது தற்போது முழுமையாக நடப்பதில்லை. அதிகபட்சம் பாதிக்கப்பட்டவரோடு தொடர்பில் இருந்த இரண்டு அல்லது மூன்று பேரைத்தான் கவனிக்கின்றனர். ஆனால் 10 பேரிடமாவது பரிசோதிக்க வேண்டும்.

பேருந்துகளில் யாரும் நின்றுகொண்டு பயணிக்கக் கூடாது என்று சொல்கிறார்கள். ஆனால், அமர்ந்து பயணிப்பவர்களுக்கு எந்தக் கட்டுப்பாட்டையும் விதிக்கவில்லை. ஏன், உட்கார்ந்திருப் பவர்களுக்கு இடையே ஏற்படும் தொடர்பினால் கொரோனா பரவாதா! ஆட்டோவில் சமூக இடைவெளி இருக்க வேண்டும் என்பதற்காக, ஓட்டுநரைத் தவிர இருவர் மட்டுமே அமர வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. அந்த சமூக இடைவெளி ஏன் பேருந்துகளில் இல்லை. அதேபோல், பேருந்துப் பயணம் பகலில் இருக்கலாம், இரவில் இருக்கக் கூடாது என்கிறார்கள். ஏன் பகலில் கொரோனா பரவாதா" என்று கேட்கிறார் மருத்துவர் புகழேந்தி. அதோடு, ``கட்டுப்பாடுகளை இப்படி மேம்போக்காக இன்றி, அறிவியல்பூர்வமாகவும் மக்களுக்கு உண்மையாகவே பாதுகாப்பு அளிக்கக்கூடியவையாகவும் விதிக்க வேண்டும். இரவோ பகலோ, மக்கள் சமூக இடைவெளியோடு பயணிக்கும் வகையில் கட்டுப்பாடுகள் இருக்க வேண்டும்" என்றும் கூறுகிறார்.

கொரோனா தடுப்பூசி
கொரோனா தடுப்பூசி

மேலும், தமிழக அரசு செய்த ஒரு நல்ல விஷயம் என்னவெனில், தற்போது பரிசோதனை எண்ணிக்கையை அதிகப்படுத்தியுள்ளது. இதைக் கண்டிப்பாகக் குறைக்கக் கூடாது. மேலும் அதிகப்படுத்த வேண்டும்.

இவைபோக, லாக்டௌன் போடலாமா என்ற ஆலோசனையும் ஓடிக்கொண்டிருக்கிறது. உலக வல்லுநர்கள், இந்தியா சில வாரங்களுக்காவது லாக்டௌன் போட்டால்தான் இதைக் கட்டுப்படுத்த முடியும் என்கின்றனர். ஆனால், இங்கு முழு லாக்டௌனால் பொருளாதாரத் தாக்கமும் குறிப்பிடத்தக்க அளவில் இருக்கும். அதற்குப் பதிலாக, தமிழ்நாட்டில் எங்கெல்லாம் பாதிப்பு மிகத் தீவிரமாக உள்ளது என்ற புள்ளி விவரங்களைக் கணக்கில் கொண்டு, அங்கு லாக்டௌன் உட்பட சில கடுமையான கட்டுப்பாடுகளை விதிக்கலாம். பாதிப்பு குறைவாக இருக்கும் பகுதிகளில், பரவலைக் குறைப்பதற்கென கட்டுப்பாடுகளை விதிக்கலாம்.

மேற்கொண்டு, ``நம் அனைவரின் பாதுகாப்பாகவும் அரசு SMS மந்திரத்தைப் பரிந்துரைக்கிறது. அதாவது, Sanitizer, Mask, Social Distance. ஆனால், கொரோனா வைரஸ் வாய், மூக்கு வழியாகப் பரவுவது போலவே கண் வழியாகவும் பரவும் என்கிறார்கள். அப்படியிருக்கும்போது, இதிலிருந்தும் மக்கள் தங்களைப் பாதுகாத்துக்கொள்ள என்ன செய்யலாம் என்றும் அறிவியல்பூர்வமாகத் திட்டமிட வேண்டும்" என்று கூறினார்.

மேலும், ``தெருவுக்குத் தெரு, கொரோனா தடுப்புக் குழு அமைக்கப்பட வேண்டும். அந்தக் குழுவில் 50% சுகாதாரத்துறை ஊழியர்களும் 50% பொதுமக்களில் வரும் தன்னார்வலர்களும் இருக்க வேண்டும்.

கொரோனா பரிசோதனை
கொரோனா பரிசோதனை

இவர்களை வைத்துக்கொண்டு, ஒரு தெருவில் எத்தனை பேர் 60 வயதுக்கு மேலே உள்ளார்கள், எத்தனை பேருக்கு நீரிழிவு, ரத்த அழுத்தம், இதய பாதிப்பு போன்ற நோய்கள் இருக்கின்றன... ஒவ்வொரு நாளும் எத்தனை குடும்பங்கள் கொரோனா தொற்றுக்குப் பாதிக்கப்படுகிறார்கள். அவர்களை தனிமைப்படுத்தும் வேலைகள் எந்தளவுக்கு நடக்கின்றன ஆகிய தகவல்களைத் தினமும் அப்டேட் செய்ய வேண்டும். அதன்மூலம், அந்தந்தத் தெருவில் தேவையான நடவடிக்கைகளை தன்னார்வலர்களின் உதவியோடு மேற்கொள்ள முடியும்.

இதன்மூலம், எந்த ஒளிவுமறைவும் இன்றி வெளிப்படைத்தன்மையோடு மக்களையும் ஈடுபடுத்தி கொரோனாவுக்கு எதிராகச் சிறப்பாகப் போராட முடியும்" என்றார்.

மிக முக்கியமாக, ஆக்ஸிஜன் தேவையைப் பூர்த்தி செய்வதில் மிக முக்கியமாகக் கவனம் செலுத்த வேண்டும். எங்கெல்லாம் பற்றாக்குறை நிலவுகிறதோ, இனி நிலவும் என்று கணிக்கப்படுகிறதோ, அங்கெல்லாம் அருகிலேயே ஆக்ஸிஜனை உற்பத்தி செய்து விநியோகிக்கக்கூடிய சிறு சிறு உற்பத்தி நிலையங்களைத் தற்காலிகமாக அமைக்கலாம்.

கொரோனா தடுப்பூசி
கொரோனா தடுப்பூசி

தற்போது நம்மிடம் இருக்கின்ற அனைத்து வசதிகளையும் வளங்களையும் உழைப்பையும் கோவிட்-19 பரவலின் இரண்டாவது அலையைக் கட்டுக்குள் கொண்டுவருவதற்குப் பயன்படுத்த வேண்டும். மூன்றாம் அலைக்கும் வாய்ப்பு இருப்பதாக எச்சரிக்கப்படும் சூழலில் நாம் இருக்கிறோம். இந்நிலையில், அனைவருக்கும் தடுப்பூசி கிடைக்கவும் உடனடியாக வழி செய்ய வேண்டும்.

தேர்தலில் கொடுக்கப்பட்ட வாக்குறுதிகளை அவர்கள் கட்டாயம் நிறைவேற்றியாக வேண்டும் என்றாலும், முதன்மையாக அவசர கால அடிப்படையில், கோவிட் கட்டுப்பாட்டுத் திட்டங்களில் கவனம் செலுத்த வேண்டியது அவசியம்.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு