Election bannerElection banner
Published:Updated:

கொரோனா: ஆக்சிஜன் வசதியுடன் படுக்கை முதல் கட்டுப்பாட்டுப் பகுதிகள் வரை..! - சென்னை நிலை என்ன?

கொரோனா பரவல் சென்னை நிலை
கொரோனா பரவல் சென்னை நிலை ( Twitter )

தமிழகத்தில் கடந்த ஒரு மாதமாக கொரோனா பரவல் தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே வருகிறது. அதிகம் பாதிப்புக்கு உள்ளான சென்னை மாநகரத்தில் நிலை என்ன?

அதிகரிக்கும் கொரோனா பரவல்:

தமிழகத்தில் கடந்த ஆண்டு தொடங்கிய கொரோனா பேரிடர், மெல்ல மெல்லக் குறைந்து, தினசரி புதிய பாதிப்பானது 400 என்கிற குறைவான எண்ணிக்கையில் பதிவானது. இது கடந்த மார்ச் மாத தொடக்கத்தில் அதிகரிக்கத் தொடங்கியது. கடந்த ஆண்டை காட்டிலும் நோய்த் தொற்று பரவல் பன்மடங்கு வேகத்தில் அதிகரித்து வருகிறது. தற்போதைய நிலையில், தமிழகத்தில் நாளொன்றுக்குக் கிட்டத்தட்ட 11,000 புதிய பாதிப்புகள் பதிவாகிறது. இது கடந்த ஆண்டை காட்டிலும் மிக அதிகம்.

கொரோனா பரவல்
கொரோனா பரவல்

தமிழகத்தில் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 400-ல் இருந்து 11,000-தை நெருக்கி வந்துள்ளது தினசரி பாதிப்பு. தற்போதைய நிலையில் தமிழகத்தில் 75,000-க்கும் அதிகமானோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். நாளொன்றுக்கு 1,11,000-க்கும் அதிகமான பரிசோதனைகள் செய்யப்படுகிறது. தமிழகத்தைப் பொறுத்தவரை கொரோனா பரவலின் இரண்டு அலைகளிலும் பெருமளவு பாதிக்கப்பட்டது சென்னை தான்.

சென்னை நிலை என்ன?

தற்போதைய நிலையில் சென்னையில் நாளொன்றுக்கு 3,300-க்கும் அதிகமான நபர்கள் கொரோனா தொற்றில் பாதிக்கப் படுகிறார்கள். சென்னை முழுவதும் 26,000-க்கும் அதிகமானவர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் ஒரு நாள் பாதிப்பு என்பது கொரோன முதல் அலையைக் காட்டிலும் மிக அதிகம்.

வீடுகளில் ஒட்டப்படும் ஸ்டிக்கர்
வீடுகளில் ஒட்டப்படும் ஸ்டிக்கர்
Twitter

பாதிக்கப்படுவோர்களின் எண்ணிக்கை அதிகரிக்கவும், மருத்துவமனைகளில் உள்ள படுக்கைகள் நிரம்பத் தொடங்கின, அரசு மருத்துவமனை தொடங்கி தனியார் மருத்துவமனைகளின் படுக்கைகளும் நிரம்பத் தொடங்கியது. இந்நிலையில், மருத்துவமனைகளின் வேலைப்பளு மட்டும் கூட்டத்தைக் குறைக்கும் வகையில். சென்னை நகராட்சி நிர்வாகம் கடந்தாண்டு செய்தது போல கொரோனா கண்காணிப்பு முகாம்களை அதிகரிக்கத் தொடங்கியது.

தயார் நிலையில் 12,000 படுக்கைகள்:

அடுக்குமாடிக் குடியிருப்புகள், கல்லூரி வளாகங்கள் என்று 15-க்கும் மேற்பட்ட இடங்களில் மாநகராட்சி கொரோனா கண்காணிப்பு முகாம்கள் தொடங்கப்பட்டுக் கிட்டத்தட்ட 12,000 படுக்கை வசதிகள் தயார்செய்யப்பட்டுள்ளது. இந்த மையங்களில் 1,400-க்கும் அதிகமானோர் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், 10,000-க்கும் அதிகமான படுகைகள் காலியாக உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜெருசலேம் பொறியியல் கல்லூரி,ஜோசப் பொறியியல் கல்லூரி, சென்னை ஐ.ஐ.டி., குருநானக் கல்லூரி, முகமது சதக் நர்சிங் கல்லூரி, விக்டோரியா விடுதி, மாநில கல்லூரி, ஜவஹர் பொறியியல் கல்லூரி, என்.எஸ்.டி.ஐ., கிண்டி, அண்ணா பல்கலை, சென்னை பல்கலை, அத்திப்பட்டு அடுக்குமாடிக் குடியிருப்பு, வேலம்மாள் பொறியியல் கல்லூரி, டாக்டர் அம்பேத்கர் அரசு கலை கல்லூரி, பாரதி மகளிர் கல்லூரி. ஆகிய இடங்களில் கொரோனா கேர் செண்டர் செயல்படுவதாகச் சென்னை மாநகராட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் உள்ள ஐந்து பெரிய மருத்துவமனை உட்பட மொத்தம் 30 அரசு மருத்துவமனைகளில் கொரோனாவுக்கு சிகிச்சை வழங்கப்படுவதாக சுகாதாரத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் அரசு ராஜாஜி மருத்துவமனையில் உள்ள 1,600 படுகைகளில் தற்போது 500-க்கும் மேற்பட்ட படுகைகள் காலியாக உள்ளது. அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் உள்ள 1,200 படுகைகளில் 650-க்கும் மேற்பட்ட படுக்கைகளும், கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் கிட்டத்தட்ட 140 படுக்கைகளும், ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் 60-க்கும் மேற்பட்ட படுக்கைகளும், கிண்டி அரசு மருத்துவமனையில் கொரோனா பிரிவில் 40-க்கும் மேற்பட்ட படுக்கைகளும் காலியாக உள்ளதென்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெரிய மருத்துவமனைகள் அல்லது அண்ணா நகர், எக்மோர், தண்டையார்பேட்டை, தாம்பரம் உள்ளிட்ட சென்னையின் பல்வேறு பகுதிகளில் உள்ள அரசு மருத்துவமனைகளில் 1,800 படுக்கை வசதிகள் உள்ளது. இந்த மருத்துவமனைகளில் 1,000-க்கும் மேற்பட்ட படுக்கைகள் காலியாக உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் ஆக்சிஜன் வசதியுடன் 40,000-க்கும் மேற்பட்ட படுக்கை வசதிகள் உள்ளது. இதில் தற்போது கிட்டத்தட்ட 2,000 ஆக்சிஜன் படுகைகள் காலியாக உள்ளது. மொத்தமுள்ள படுகைகளில் சென்னையில் மட்டும் 10,500-க்கும் மேற்பட்ட படுக்கைகள் உள்ளது.

சென்னையைப் பொறுத்தவரை தற்போதுவரை தேவைக்கு அதிகமாகப் படுக்கை வசதிகள் தயார் நிலையில் இருப்பதாகவும், தேவைப்பட்டால் உடனடியாக படுக்கை வசதிகளை ஏற்படுத்த அரசு தயார் நிலையில் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

1,271 தெருக்கள் கட்டுப்பாட்டுப் பகுதிகள்:

பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட 15 மண்டலங்களில் உள்ள 45,000-க்கும் மேற்பட்ட தெருக்களில், தற்போது 1,271 தெருக்கள் நோய் கட்டுப்பாட்டுப் பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் அதிகபட்சமாக 9-வது மண்டலத்தில் 214 தெருக்களும், 5-வது மண்டலத்தில் 120 தெருக்களும் கட்டுப்பாட்டுப் பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன.

நோய் கட்டுப்பாட்டுப் பகுதி
நோய் கட்டுப்பாட்டுப் பகுதி
Twitter

கடந்த முறையைப் போல இந்த தெருபகுதிகள் அனைத்தும் மூடிவிடாது, தெருவின் இரண்டு முனைகளிலும் கொரோனா கட்டுப்பட்டு பகுதி என்ற அறிவிப்புப் பலகை மட்டும் வைக்கப்பட்டுள்ளது. இந்த வழியாகச் செல்லும் பொதுமக்களும் கவனமுடன் இருக்கவும் வலியுறுத்தப்படுகிறார்கள். அதுமட்டுமல்லாது, தற்போது நடைபெற்றுவரும் காய்ச்சல் முகாம்களின் எண்ணிக்கையையும் அதிகரிக்கத் திட்டமிடப்பட்டிருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு