Election bannerElection banner
Published:Updated:

``வெறும் மெஷினை இயக்கிப் பார்த்துட்டு இருக்கோம்!" - செங்கல்பட்டு தடுப்பூசி மையத்தின் பரிதாப நிலை

தடுப்பூசி உற்பத்தி மையம்
தடுப்பூசி உற்பத்தி மையம்

சுமார் ரூ.600 கோடி மதிப்பில் உருவாக்கப்பட்ட இந்த தடுப்பூசி உற்பத்தி மையம் ஒரு தடுப்பூசிகூடத் தயாரிக்காமல் வெறும் கட்டடமாக நின்று கொண்டிருக்கிறது.

`கையில் வெண்ணெய் இருக்க நெய்க்கு அலைவது' என்றொரு பழமொழி உண்டு. கோவிட்-19 தொற்றுநோயின் பிடியில் சிக்கிக்கொண்டிருக்கும் இந்தச் சூழலில் தடுப்பூசிதான் கலங்கரை விளக்கமாகக் கண்ணுக்குத் தெரிகிறது. கோவிட்-19 மட்டுமல்ல உலகில் பல்வேறு நோய்களைத் தடுப்பதற்கும் தடுப்பூசிதான் ஒற்றை ஆயுதமாக உள்ளது.

vaccines
vaccines

தற்போது தடுப்பூசிக்கான தேவை அதிகரிக்கு வரும் நிலையில், தமிழகத்தில் சுமார் ரூ.600 கோடி மதிப்பில் உருவாக்கப்பட்ட தடுப்பூசி உற்பத்தி மையம் கிட்டத்தட்ட 9 ஆண்டுகளாக ஒரு தடுப்பூசியைக்கூடத் தயாரிக்காமல் வெறும் கட்டடமாக நின்றுகொண்டிருக்கிறது. சென்னையை அடுத்த செங்கல்பட்டில் அமைந்துள்ளது ஒருங்கிணைந்த தடுப்பூசி உற்பத்தி மையம். 2012-ம் ஆண்டு மத்திய ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியிலிருந்தபோது, மத்திய அரசின் 100 சதவிகித மானியத்துடன் இந்த மையம் அமைப்பதற்கான பணிகள் தொடங்கின.

தமிழக அரசின் சார்பில் 100 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டது. மத்திய அரசின் சார்பில் ரூ.594 கோடி நிதி ஒதுக்கப்பட்டது. 2017-ம் ஆண்டில் கட்டுமானப் பணிகள், மெஷின்கள் நிறுவுவது என அனைத்துப் பணிகளும் நிறைவடைந்தன. இந்த நிறுவனமானது மத்திய சுகாதாரத்துறையின் கீழ் செயல்படும் ஹெச்.எல்.எல் லைஃப்கேர் லிமிடெட் நிறுவனத்தின் கீழ் செயல்படும் ஹெச்.எல்.எல் பயோடெக் நிறுவனத்தால் நடத்தப்படுகிறது.

டி.கே.ரங்கராஜன்
டி.கே.ரங்கராஜன்

இந்த நிறுவனத்தை தனியாருக்கு தாரை வார்ப்பதற்கு மத்திய அரசு முயன்று வருவதாகக் கூறப்படுகிறது. அதனால்தான் அதற்காக நிதி ஒதுக்காமல் இழுத்தடிப்பதாகவும் தெரிவிக்கின்றனர். இது குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு உறுப்பினர் டி.கே.ரங்கராஜன் அண்மையில் பிரதமர் நரேந்திர மோடிக்குக் கடிதம் எழுதியுள்ளார்.

``தடுப்பூசி தயாரிப்பை வேகப்படுத்தும் அவசர அவசியம் உள்ளது. செங்கல்பட்டில் இருக்கும் இந்துஸ்தான் பயோடெக் என்ற அரசு நிறுவனத்தை இதற்காகப் பயன்படுத்த மத்திய அரசிடம் பலமுறை வலியுறுத்தியிருக்கிறேன். ஆனால், மத்திய அரசு இது உட்பட 4 பொதுத்துறை நிறுவனங்கள் எதையுமே பயன்படுத்தவில்லை" என்று தெரிவித்திருந்தார்.

அந்நிறுவனத்தின் நிலை தற்போது எப்படி இருக்கிறது என்று அறிந்துகொள்ள அந்நிறுவனத்தின் தொழிற்சங்கத் தலைவர் விநாயக மூர்த்தியிடம் பேசினோம்.

``இந்த மையத்தில் 215 பேர் பணியில் இருந்தனர். தற்போது வெறும் 95 பேர்தான் பணியாற்றுகின்றனர். பணியாற்றுபவர்களுக்கு சம்பளம் கொடுப்பதில்லை. பத்தாயிரம் ரூபாய் ஸ்டைஃபன்ட் மட்டுமே வழங்கப்படுகிறது.

Vaccine (Representational Image)
Vaccine (Representational Image)

அங்கிருக்கும் உபகரணங்கள், கருவிகள் அனைத்தும் செயலிழந்து, துருப்பிடித்துவிடக் கூடாது என்பதற்காக ஒரு ஷிஃப்ட்டுக்கு நான்கு முறை அதையெல்லாம் இயக்கிப் பார்க்கிறோம். தினமும் இந்த வேலை மட்டும்தான் நடைபெறுகிறது. நிச்சயம் நிதி ஒதுக்கப்படும் என்ற நம்பிக்கையிலும் அதைக் கைவிட்டுவிட்டால் மீண்டும் இதைப் போன்று உருவாக்குவது சிரமம் என்பதாலும் அதை இயக்கிக் கொண்டே இருக்கிறோம்.

2017-ம் ஆண்டிலிருந்து தடுப்பூசி உற்பத்திக்கு நிதி கேட்டு மத்திய அரசைத் தொடர்புகொண்டு நிதி கேட்டு வருகிறோம். கடைசியாக ரூ.219 கோடி நிதி வேண்டும் என்று கேட்டபோது மத்திய அரசு ஒதுக்க முன்வரவில்லை. இந்நிலையில் இந்த நிறுவனத்தை 15 ஆண்டுகளுக்கு ஏற்று நடத்தலாம் என்று தனியாருக்கு மத்திய அரசு டெண்டர் அறிவித்துள்ளது. அதை எடுப்பதற்கு எந்த நிறுவனமும் முன்வரவில்லை.

Vaccine (Representational Image)
Vaccine (Representational Image)
`தடுப்பூசி போட்ட பிறகு ரத்த தானம் செய்யலாமா... கூடாதா?!’ - நிபுணரின் விளக்கம்

ரேபிஸ், ஜப்பானிய மூளைக்காய்ச்சல், ஹெபடைட்டிஸ் பி உள்ளிட்ட 12 நோய்களுக்கான தடுப்பூசி உற்பத்தி செய்வதற்கான வசதி உள்ளது. கோவிட்-19 தடுப்பூசியையும் உற்பத்தி செய்ய முடியும். இன்று நாங்கள் வேலையைத் தொடங்கினால்கூட அடுத்த இரண்டு மாதங்களில் தடுப்பூசிகள் வெளியே வந்துவிடும்" என்கிறார்.

இந்தத் தடுப்பூசி உற்பத்தி மையத்தைத் தொடர்ந்து நடத்த வேண்டும் என்று போராடி வரும் மக்கள் நலவாழ்வு இயக்கத்தின் தலைவர் டாக்டர் ரெக்ஸ் சற்குணத்திடம் பேசினோம்:

``ரூ.500 கோடிக்கும் மேல் முதலீடு போட்டு தொடங்கப்பட்ட இந்த உற்பத்தி மையத்தில் ஒரு தடுப்பூசிகூட இதுவரை உற்பத்தி செய்யப்படவில்லை என்பது கவலையளிக்கிறது. எந்தச் சூழலிலும் இந்த மையத்தைத் தனியார்மயமாக்கவோ மூடவோ அரசு முயலக்கூடாது. பி.எம் கேருக்கு பல கோடி நிதி வருவதாகக் கூறுகின்றனர். அதிலிருந்து ரூ.200 கோடியை ஒதுக்கினால்கூட இந்த மையம் செயல்படத் தொடங்கிவிடும்.

Vaccine (Representational Image)
Vaccine (Representational Image)
18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கான தடுப்பூசி முன்பதிவில் சிக்கல்... என்ன சொல்கிறார்கள் அதிகாரிகள்?

கோவிட்-19 தொற்றின் இரண்டாம் அலை தீவிரமடைந்துள்ள நிலையில், 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், அனைவருக்கும் தேவையான தடுப்பூசிகள் கிடைப்பதில் தட்டுப்பாடு நிலவுகிறது. இதுபோன்ற கடினமான சூழலில் 585 மில்லியன் டோஸ் தயாரிக்கும் திறன் வாய்ந்த உற்பத்தி மையத்தை செயல்படுத்தாமல் வைத்திருப்பது வேதனையளிக்கிறது" என்றார்.

தடுப்பூசி தட்டுப்பாடு, அதிகரிக்கும் மரணங்கள், பொருளாதார மந்தநிலை எனப் பல்வேறு பிரச்னைகளைச் சந்தித்துக் கொண்டிருக்கிறோம். இந்த நேரத்தில் கையில் வெண்ணெய் அல்ல நெய்யே இருக்கிறது. அதைப் பயன்படுத்தாமல் வீணடிப்பது நியாயமல்ல.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு