Published:Updated:

மதுரையில் என்னென்ன கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் அமலில் இருக்கின்றன?!

இராசாசி மருத்துவமனை
இராசாசி மருத்துவமனை

மதுரையைச் சுற்றியுள்ள ஏழு மாவட்டங்களிலிருந்தும் சிகிச்சைக்காக மக்கள் மதுரை அரசு மருத்துவமனையையே நாட வேண்டியுள்ளது. இந்த நிலையில் மருத்துவர்கள் மற்றும் மருத்துவமனையில் உள்ள அனைவருக்கும் N95 முகக்கவசம் அதிகம் தேவை.

நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் இருக்கும் நிலையில், தூங்கா நகரமான மதுரை மக்களும் தங்களை அதற்குப் பழக்கப்படுத்தி வருகிறார்கள். இரவில் எத்தனை மணி ஆனாலும், ஆவி பறக்கும் தெருவோர இட்லிக்கடைகளும் ஆள்களும் நிறைந்திருக்கும் மதுரை மாநரத் தெருக்கள் தற்போது வெறிச்சோடிக் காணப்படுகின்றன. ஆனாலும், ஒருசிலர் அரசின் உத்தரவை மீறி வெளியில் நடமாடிக் கொண்டுதான் இருக்கிறார்கள். ”காய்கறி, மளிகைப் பொருள்கள் வாங்க வெளியே வரவேண்டிய கட்டாயம் உள்ளது” என்பதே அதற்கு அவர்கள் சொல்லும் காரணம். மதுரைக்கு மட்டுமல்லாது, நாடு முழுவதும் இத்தகைய நடைமுறைச் சிக்கல் இருந்துவரும் நிலையில், மதுரை மாநகரட்சி அதைச் சரி செய்யும் விதமாக வீட்டுக்கே பொருள்கள் விநியோகம் செய்யும் 17 கடைகளின் பட்டியலை வெளியிட்டுள்ளது.

கொரோனா
கொரோனா

மேலும், மதுரை மாநகராட்சியில் மக்கள் நலனைக் கருத்தில்கொண்டு என்னென்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என்பது குறித்து, மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசனிடம் பேசினோம்.

சு.வெங்கடேசன் எம்.பி
சு.வெங்கடேசன் எம்.பி

``மதுரை மக்கள் தற்போதுதான் வழக்கத்துக்கு மாறான ஒரு நடைமுறைக்குப் பழகி வருகிறார்கள். நோய் தொற்று அதிகமாகப் பரவாமல் இருக்கவும் மக்களை வெளிவர விடாமல் தடுக்கவும் தொடங்கப்பட்டதுதான் வீட்டுக்கே சென்று மளிகைப் பொருள்களை விநியோகம் செய்யும் திட்டம். இதனால் சிறு கடைகள் பாதிப்படையாமல் இருக்க குறிப்பிட்ட நேரம் சிறு கடைகளைத் திறக்கவும் குறிப்பிட்ட நேரங்களில் மட்டும் பொருள்களை வீட்டிற்கு விநியோகம் செய்யவும் நடவடிக்கை எடுக்கப்படும்.

(டோர் டெலிவரி செய்யும் கடை விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன)

download
`பத்து நிமிடத்தில் கொரோனா ரிசல்ட்!’ -சமூகப் பரவலைத் தடுக்க கேரளாவின் ரேபிட் டெஸ்ட் டெக்னிக்

இராசாசி மருத்துவமனையில் உள்ள கொரோனா சிகிச்சை பிரிவுக்கு உபகரணங்கள் வாங்குவதற்காக எம்.பி நிதியிலிருந்து 55 லட்சம் நிதி ஒதுக்கியிருக்கிறேன். இன்னும் ஓரிரு தினங்களில் உபகரணங்கள் மருத்துவமனையின் பயன்பாட்டுக்கு வந்து விடும். மேலும், கூடுதலாக 50 லட்சம் கொரோனா சிகிச்சைக்காக ஒதுக்கவுள்ளேன். மாநகராட்சி அதிகாரிகளுடன் இணைந்து, சாலையோர வாசிகளின் பாதுகாப்புக்காக, உணவு மற்றும் தங்குவதற்கான இடம் ஆகியவற்றை மண்டல வாரியாக ஏற்பாடு செய்துள்ளோம். இதனால் சாலையோரங்களில் வாழ்ந்துவந்த மக்களின் வாழ்வாதாரம் பாதுகாக்கப்படும். இதேபோல மேலூர், உசிலம்பட்டி, திருமங்கலம் ஆகிய ஊர்களை மையமாகக்கொண்ட சாலையோர வாசிகளுக்கு உணவு வழங்கவும் தங்க இடமும் கூடிய விரைவில் ஏற்பாடு செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.

மதுரை மாநகராட்சி
மதுரை மாநகராட்சி

மதுரை இராசாசி மருத்துவமனையில் N95 முகக் கவசம், வென்டிலேட்டர் குறைவான அளவில்தான் உள்ளன எனப் புகார் அளித்தும் பெரிதாக எந்த ஒரு மாற்றமும் இல்லை. மதுரையைச் சுற்றியுள்ள ஏழு மாவட்டங்களிலிருந்தும் சிகிச்சைக்காக மக்கள் மதுரை அரசு மருத்துவமனையையே நாட வேண்டியுள்ளது. இந்த நிலையில் மருத்துவர்கள் மற்றும் மருத்துவமனையில் உள்ள அனைவருக்கும் மிக அவசியம் இந்த N95 முகக் கவசம். எனவே அதில் சுகாதாரத்துறை கவனம் செலுத்த வேண்டும்.

ஊரடங்குக்குப் பழகுதலும் பழக்குதலும் எளிதல்ல. அதேபோல கொரோனா தொற்றிலிருந்து காத்துக்கொள்வதும் எளிதன்று. இரண்டு மிகப்பெரிய, பழக்கமில்லாத பிரச்னைகளை எப்படிச் சமாளிப்பதெனத் தெரியாமல் திக்குமுக்காடி நிற்கிறது மதுரை.

எல்லோருடைய அன்றாட வாழ்வும் நிறுத்தப்பட்டிருக்கிறது. எனவே எல்லோரும் ஏதோ ஒருவகையில் தொந்தரவுக்கு உள்ளாகியுள்ளோம். தொந்தரவுகளும் இடைஞ்சல்களும் பெருக்கெடுத்து, அங்குமிங்குமாக முட்டி மோதிக் கொண்டிருக்கின்றன. எல்லாப் பிரச்னைகளும் சரிசெய்யப்பட வேண்டும். ஆனால் இப்பொழுது எது தலையாயப் பிரச்னை, அதைத் தீர்மானித்துக்கொள்வது அவசியம். தற்பொழுது, எல்லாவகையிலும் முன்னுரிமை "நோய் தொற்றின்றி மக்களின் உயிர்காக்கும்" நடவடிக்கைக்கே.

கொரோனா அதிக பரவுதலைக் கொண்டதே தவிர அதிக பாதிப்பை தரும் நோயல்ல. பரவுதலைத் தடுப்பதுதான் நம் தலையாய கடமை. கொரோனா நோயை அடக்க மருந்துகள் பயன்பாட்டில் பல முன்னேற்றங்கள் வந்துள்ளன. இந்தச் சூழலில், பாதிப்புற்றோர் விரைவில் அரசை அணுக மக்களும் மருத்துவர்களும் முழு ஒத்துழைப்பு நல்க வேண்டும்.

இராசாசி மருத்துவமனை
இராசாசி மருத்துவமனை

இன்னும் ஓரிரு வாரங்கள் முழுமையாய்த் தனிமைப்பட்டு ஒவ்வொருவரும் இருத்தலை முழு உறுதி செய்யுங்கள்.

கிருமியும் நோயும் நம்மைச் சீண்டாது கடந்து போகும்...

கடந்த இரண்டு நாள்களில் சராசரியாக. 15-20 நபர்கள் கொரோனா சிகிச்சைப் பிரிவில் கண்காணிக்கப்பட்டு வருகிறார்கள். இந்த விகிதம் கூடாமல் இருப்பது மக்கள் கைகளில்தான் உள்ளது. ’தனித்து இருங்கள், வீட்டிலேயே இருங்கள்’ நோய்க்கான அறிகுறி இருந்தால் அரசு மருத்துவமனையைத் தொடர்பு கொள்ளுங்கள்” என்றார்.

மதுரை எம்.பி மற்ற அதிகாரிகளுடன் இணைந்து எடுத்து வரும் முயற்சி மக்களிடையே கொரோனா குறித்த அச்சத்தை விலக்கி நம்பிக்கையை விதைத்து வருகிறது.

அடுத்த கட்டுரைக்கு