Published:Updated:

அதிகரிக்கும் கொரோனா... `அச்சம் கொள்ள வேண்டாம்’ நம்பிக்கை வார்த்தை சொல்லும் அதிகாரிகள் #ChennaiUpdate

சென்னை சந்தை
சென்னை சந்தை

சென்னையில் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை ஒவ்வொரு நாளும் புதிய உச்சத்தைத் தொட்டுவருகிறது. தலைநகரின் இந்தத் தலைவலி எப்போது தீரும் என்பது தெரியவில்லை.

மே 3-ம் தேதியுடன் ஊரடங்கு முடியப்போகிறது என்ற சூழலில், கொரோனாவின் தாக்கம் குறையும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அப்போதுதான் கொரோனா தலைநகர் சென்னையில் எகிறியடிக்கத் தொடங்கியது. சென்னையை சிவப்பு மண்டலம் என்று அரசு குறிப்பிட்டாலும், அந்தச் சிவப்பின் அடர்த்தி ஒவ்வொரு நாளும் கூடிக்கொண்டே இருப்பது மேலும் மேலும் மக்களை அச்சமூட்டிக்கொண்டிருக்கிறது. தமிழகத்தில் நேற்று (7-ம் தேதி) 580 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனால், கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 5,409 ஆக உயர்ந்துள்ளது. இதில், 1547 பேர் குணமடைந்துள்ளனர். 3,822 பேர் சிகிச்சையில் உள்ளனர். தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 31 பேர் குணமடைந்துள்ளனர். சென்னையில் நேற்று ஒரே நாளில் மட்டும் 316 பேருக்கு கொரோனா (சென்னை மட்டும் மொத்தம் 2,644) இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதுவரை, தமிழகத்தில் கொரோனாவுக்கு 37 பேர் இறந்துள்ளனர்.

பரிசோதனை
பரிசோதனை

கடந்த ஒரு வார காலமாக, சென்னை நிலவரம் கலவரமாகவே இருக்கிறது. சென்னையில் கடந்த 4 நாள்களில் மட்டுமே 1,185 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டது. இவர்களில் 100-க்கும் மேற்பட்டவர்கள் கோயம்பேடு சந்தையுடன் தொடர்புடையவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. மே 7 நிலவரப்படி தமிழகத்தில் சென்னையைத் தவிர்த்து பிற மாவட்டங்களில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கையின் கூட்டுத்தொகை 2765. சென்னையில் மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் 2644. கிட்டத்தட்ட சரி சம அளவில் சென்னையின் எண்ணிக்கை கூடிக்கொண்டே போவது பலரையும் அச்சத்துக்குள்ளாக்கியிருக்கிறது.

நாளுக்கு நாள் எண்ணிக்கை எகிறிவருவதால் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை, ஸ்டான்லி அரசு மருத்துவமனை, ஓமந்தூரார் அரசு மருத்துவமனை ஆகியவற்றில் உள்ள கோவிட் 19 சிறப்பு வார்டுகள் நோயாளிகளால் நிரம்பிவழிகின்றன.

சென்னை மாநகராட்சியில் மொத்தம்15 மண்டலங்கள் உள்ளன. அவை, 200 வார்டுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. சென்னை மாநகராட்சியில் மொத்தம் 80 லட்சம் பேர் வசிக்கிறார்கள். ராயபுரம், தண்டையார்பேட்டை, திரு.வி.க நகர், தேனாம்பேட்டை, கோடம்பாக்கம் ஆகிய பகுதிகளில்தான் கொரோனா பாதிப்பு அதிகமாக இருக்கிறது. அதனால், இவை கட்டுப்படுத்தப்பட்ட பகுதியாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளன. இவற்றில் திரு.வி.க நகர் அதிகமான கொரோனா நோயாளிகளுடன் முன்னணியில் இருக்கிறது.

ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை
ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை
`ஆன்லைன் விற்பனை மட்டுமே அனுமதி; நாளை முதல் டாஸ்மாக்கைத் திறக்கக் கூடாது!’ - உயர் நீதிமன்றம் அதிரடி #NowAtVikatan

சென்னை நம்பர் ஒன் ஆக இருப்பதற்கு பல காரணங்கள் சொல்லப்படுகின்றன. அதிகமான மக்கள்தொகை கொண்ட நகரம் என்பது ஒரு காரணம். கொரோனா தொற்று அதிகமாக இருக்கும் பகுதிகளின் பட்டியலில் முதல் மூன்று இடங்கள் வடசென்னையில் உள்ளன. மக்கள் நெருக்கம் அதிகமாக இருக்கும் பகுதிகள்தான் அதற்கு காரணம் என்று சொல்லப்படுகிறது. மேலும்,வெளிநாடுகளிலிருந்து வந்தவர்கள், டெல்லி மாநாட்டில் பங்கேற்றவர்கள், திரு.வி.க.நகரில் நடைபெற்ற பிரார்த்தனைக் கூட்டத்தில் பங்கேற்றவர்கள், கோயம்பேடு மார்க்கெட் உட்பட கொரோனா வைரஸ் பரவியதற்கான முக்கிய `சோர்ஸ்’ என்று சில காரணங்களை சென்னை மாநகராட்சி அதிகாரிகள் குறிப்பிடுகிறார்கள்.

கோயம்பேடு மார்க்கெட் மிகப்பெரிய சவாலாக இருந்துவந்தது. சில்லறை வியாபாரிகளும் பொதுமக்களும்கூட அங்கு சர்வசாதாரணமாக சென்றுவந்தனர். அவர்களில் பலர், தங்கள் பகுதிகளில் கொரோனா வைரஸ் பரவுவதற்குக் காரணமாகினர். அதனால், கோயம்பேடு மார்க்கெட்டில் கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை அரசு எடுத்துவந்தது. அவை பெரிய அளவில் பலனளிக்கவில்லை. அது மட்டுமல்லாமல், எடுக்கத் தவறிய நடவடிக்கைகள் என ஒரு பெரிய பட்டியலே போடப்படுகிறது. இந்த நிலையில் செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், அரியலூர், பெரம்பலூர் என தமிழகத்தின் பல பகுதிகளுக்கு கோயம்பேட்டிலிருந்து கொரோனா சப்ளையாகியிருக்கிறது என்பது பிரச்னையை மேலும் அதிகரிக்கச் செய்துள்ளது.

ரயில் நிலையம்
ரயில் நிலையம்

இதுகுறித்து சென்னை மாநகராட்சி அதிகாரிகள் சிலரிடம் பேசியபோது, "சென்னையில், கடந்த ஒரு வார காலமாக கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துவருகிறது. கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டவர்களின் தொடர்பில் இருந்த அனைவரையும் சுகாதாரப் பணியாளர்கள் கண்டறிந்துவருகிறார்கள். அவர்களுக்கு, அறிகுறிகள் இல்லையென்றாலும்கூட, கொரோனா பரிசோதனை நடத்தப்படுகிறது. அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

சென்னை மாநகராட்சியில் தூய்மைப்பணியாளர்கள் 20,000 பேர், சர்வே எடுக்கும் பணியில் 12,000 பேர், மற்ற ஊழியர்கள் 3,000 பேர் என சுமார் 35,000 பேர் களப்பணியில் ஈடுபட்டுள்ளனர். சுகாதார அதிகாரிகள் எண்ணிக்கை குறைவாக இருக்கிறது. அதனால், தற்போதுள்ள சுகாதாரப் பணியாளர்களுக்கு அதிகமாக வேலைப்பளு இருக்கிறது. எனவே, 500 சுகாதாரப் பணியாளர்களை தற்காலிக அடிப்படையில் நியமிக்கவிருக்கிறோம். வடசென்னையில் ஒவ்வொரு சதுர கிலோ மீட்டருக்கும் 50,000 முதல் 60,000 பேர் வசிக்கிறார்கள். நெருக்கமாக மக்கள் வசிப்பதால் வைரஸ் பரவல் அதிகமாக இருக்கும். ராயபுரம், தண்டையார்பேட்டை, திரு.வி.க நகர் உள்ளிட்ட பகுதிகளை `கன்டெய்ன்மென்ட்’ பகுதிகள் என்று வகைப்படுத்தி, அந்தப் பகுதிகள் தீவிர கண்காணிப்பில் உள்ளன. ஆகவே பயப்படத் தேவையில்லை” என்றனர்.

ரவீந்திரநாத்
ரவீந்திரநாத்

"சென்னையில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்துவருவதால், அவற்றைக் கட்டுப்படுத்துவதற்கு ராணுவ மருத்துவக் குழு வரவழைக்கப்பட வேண்டும்” என்கிறார் சமூக சமத்துவத்துக்கான டாக்டர்கள் சங்கத்தின் தலைவர் மருத்துவர் ஜி.ஆர்.ரவீந்திரநாத்.

"சென்னையில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. அதிகமான சோதனைகள் மேற்கொள்ள வேண்டும் என்று தொடர்ந்து சொல்லிவருகிறோம். இப்போதுதான், அதிக சோதனைகள் செய்ய ஆரம்பித்துள்ளார்கள். ஆனால், அரசு சொல்லும் புள்ளிவிவரத்தைவிட, கொரோனாவின் தாக்கம் அதிகமாக இருக்கிறது. வெளிப்படைத்தன்மையுடன் அரசு நடந்துகொள்ள வேண்டும். மண்டல அளவில் ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் அதிகாரிகளைப் போட்டிருக்கிறார்கள்.

ஆய்வு
ஆய்வு

ஆனால், அடிமட்டத்தில் வேலை செய்யத்தான் போதுமான ஆட்கள் இல்லை. அதற்கு என்ன செய்யப்போகிறார்கள் என்று தெரியவில்லை. ராணுவ மருத்துவக் குழுக்களை வரவழைக்கலாம். அது வந்தால் நிலைமை ஓரளவு சீரடையும். எல்லா மருத்துவமனைகளிலும் கொரோனா தொற்று நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கிறார்கள். அதனால், மற்ற பிரச்னைகளுக்காக மருத்துவமனைகளை நாடுகிற நோயாளிகள் பாதிக்கப்படுகிறார்கள். எனவே, குறிப்பிட்ட ஒன்றிரண்டு மருத்துவமனைகளில் மட்டுமே அவர்களை அனுமதித்து சிகிச்சை அளிக்க வேண்டும்” என்றார் டாக்டர் ஜி.ஆர்.ரவீந்திரநாத்.

டெஸ்ட் எண்ணிக்கையை சென்னையில் அதிகரித்துள்ள போதிலும் இன்னும் அதை அதிகரிக்க வேண்டும் என்கிறார், பூவுலகின் நண்பர்கள் அமைப்பைச் சேர்ந்த பொறியாளர் சுந்தர்ராஜன்.

சுந்தர்ராஜன்
சுந்தர்ராஜன்

``சென்னையில் நாளொன்றக்கு 3,000 பேருக்கு டெஸ்ட் எடுப்பதாகச் சொல்கிறார்கள். ஆனால், 80 லட்சம் மக்கள்தொகை கொண்ட சென்னை நகரத்தில், இன்னும் ஒரு சதவிகிதத்தினருக்குக்கூட டெஸ்ட் எடுக்கப்படவில்லை. `கன்டெய்ன்மென்ட்’ பகுதிகளை இன்னும் தீவிரமாகக் கண்காணிக்க வேண்டும். `மொபைல் பரிசோதனை ஆய்வகங்களுடன் வீதி வீதியாகச் சென்று பரிசோதனை மேற்கொள்ள வேண்டும். நாளொன்றுக்கு 10,000 பேருக்காவது பரிசோதனை மேற்கொள்ள வேண்டும்” என்றார் சுந்தர்ராஜன்.

கொரோனா நம் மண்ணுக்கு வந்து மூன்று மாதங்களைக் கடந்த நிலையில், தற்போது அது உச்சக்கட்டத்தை நோக்கி சென்றுகொண்டிருக்கிறது. பிளேக், டெங்கு, எலிக்காய்ச்சல் எனப் பல தொற்றுநோய்களை எதிர்கொண்ட வரலாறு சென்னை மாநகரத்துக்கு உண்டு. இப்போது எண்ணிக்கை அதிகரித்தாலும், இன்னும் சில வாரங்களில் கொரோனா தாக்கம் கட்டுப்பாட்டுக்குள் வந்துவிடும் என்ற நம்பிக்கையை தொற்றுநோய் மருத்துவ நிபுணர்கள் சிலர் கூறிவருகிறார்கள்.

ஜெயக்குமார்
ஜெயக்குமார்

தலைநகர் சென்னையில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுவரும் அமைச்சர் ஜெயக்குமாரிடம் பேசினோம்.

"தமிழகம் முழுவதும் கொரோனாவைக் கட்டுப்படுத்துவதற்கு தமிழக அரசு அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்துவருகிறது. தலைநகர் சென்னையில் எண்ணிக்கை அதிகமாக இருப்பதால், இங்கு கொரோனா தடுப்பு நடவடிக்கையை அரசு தீவிரப்படுத்தியுள்ளது. முதல்வர் தலைமையில் அமைச்சர்கள் கூட்டம் நடைபெற்று, மேலும் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. மண்டல அளவில் மூத்த ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ் அதிகாரிகள் கண்காணிப்பு அதிகாரிகளாக நியமிக்கப்பட்டு பணிகள் நடைபெற்றுவருகின்றன.

இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத அளவுக்கு சென்னையில்தான் கொரோனா பரிசோதனை மையங்களின் எண்ணிக்கையை அதிகரித்துள்ளோம். அதனால், தினமும் பரிசோதனை செய்யப்படும் நபர்களின் எண்ணிக்கையையும் அதிகரித்துள்ளோம். அரசின் நடவடிக்கைகளுக்கு பெரும்பாலான மக்கள் ஒத்துழைப்பு அளித்துவருகிறார்கள். அனைத்து மக்களும் ஒத்துழைக்க வேண்டும். கொரோனா விரைவில் கட்டுக்குள் வரும்” என்றார் அமைச்சர் ஜெயக்குமார்.

மருத்துவப் பணியாளர்கள்
மருத்துவப் பணியாளர்கள்
`இதில் அரசியல் செய்வதில் அர்த்தமில்லை!' -கொரோனா வார்டு திகில் காட்சிக்கு அமைச்சர் விளக்கம்

பரிசோதனைகளை இன்னும் அதிகரிக்க வேண்டும், ராணுவ மருத்துவக் குழுக்களை வரவழைக்க வேண்டும் என்பது போன்ற யோசனைகள் உடனடியாகப் பரிசீலித்து அரசு செயல்பட வேண்டும்.

தலைநகரில் கொரோனா எண்ணிக்கை அதிகரித்துவருவது பெரும் அச்சத்தை ஏற்படுத்துவதாக இருக்கிறது என்றாலும், சென்னை நகரில் கொரோனாவைக் கட்டுப்படுத்துவதற்கு சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ள வருவாய் நிர்வாக ஆணையரான ஜெ.ராதாகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ் கூறும் விளக்கம் சற்று ஆறுதல் அளிப்பதாக இருக்கிறது.

ஜெ.ராதாகிருஷ்ணன்
ஜெ.ராதாகிருஷ்ணன்

"சென்னையில் மக்கள்தொகை அதிகமாக இருப்பதுதான் கொரோனா வைரஸ் பரவுவதற்குக் காரணம். அரசு மேற்கொண்டுவரும் நடவடிக்கைகளுக்கு மக்கள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். அப்போதுதான் வைரஸ் மேலும் பரவாமல் தடுக்க முடியும். கடந்த சில நாள்களாக அதிக எண்ணிக்கையில் பரிசோதனை மேற்கொண்டுவருவதால், கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டவர்களின் எண்ணிக்கையும் அதிகமாக இருக்கிறது. பரிசோதனை அதிகமாக மேற்கொள்வதால், வரும் நாள்களில் இந்த எண்ணிக்கையும் அதிகமாக இருக்கும். இதைக் கண்டு மக்கள் அஞ்ச வேண்டாம்” என்று ஜெ.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.

அஞ்ச வேண்டாம் என்று மக்களிடம் அதிகாரிகள் கூறினாலும், அவர்கள் என்னவோ அதிகரிக்கும் எண்ணிக்கையைப் பார்த்து கலங்கித்தான் போயிருக்கிறார்கள். நோய்த் தொற்று நாளுக்குநாள் தீவிரமடைந்துவருவதாலும், மருத்துவமனைகளில் கொரோனா வார்டுகள் நிரம்பிவழிவதாலும், சென்னையில் உள்ள தனியார் திருமண மண்டபங்களையும் அரசு மற்றும் தனியார் பள்ளிகளின் கட்டடங்களையும் மாநகராட்சியிடம் ஒப்படைக்குமாறு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

முதல்வருடன் அதிகாரிகள்
முதல்வருடன் அதிகாரிகள்

ஆனால், அந்த தனியார் மண்டபங்களையும் பள்ளிகளையும் பயன்படுத்தும் யோசனை இருக்கிறதா என்ற சந்தேகமாக இருக்கிறது. ஏனென்றால், லேசான அறிகுறி இருப்பவர்கள் தங்களை வீடுகளிலேயே தனிமைப்படுத்திக்கொள்ளுங்கள் என்று அரசு அறிவித்துள்ளது. மருத்துவமனைகளிலோ, திருமண மண்டபங்களிலோ, பள்ளிக்கூட கட்டடங்களிலோ நோயாளிகளாக அனுமதித்துவிட்டால், அவர்களுக்கு மூன்று வேளை உணவு வழங்க வேண்டும், மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் உள்ளிட்ட மருத்துவப் பணியாளர்கள் சேவை செய்ய வேண்டும். அந்தளவுக்கு தம்மால் செய்ய முடியாது என்று அரசு நினைக்கிறதா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. ஒருவேளை போதுமான மருத்துவப் பணியாளர்கள் சென்னையில் இல்லையென்றால், சென்னையின் அவசர நிலை கருதி பிற மாவட்டங்களிலிருந்து மருத்துவக் குழுக்களை சென்னைக்கு வரவழைக்கலாம். ராணுவ மருத்துவக் குழுக்களையும் மத்திய அரசிடம் கோரலாம்.

அடுத்த கட்டுரைக்கு