Election bannerElection banner
Published:Updated:

சொல்லும் காலம்: கொரோனா இரண்டாம் அலை... நாம் என்ன செய்ய வேண்டும்?

கொரோனா தொற்று
கொரோனா தொற்று

கடந்த இரண்டு மாதங்களாக உயர்ந்துகொண்டே வரும் கொரோனா தொற்று எண்ணிக்கை, இந்தியாவில் இரண்டாம் அலை பரவலை உறுதி செய்திருக்கிறது.

இந்தியாவில் தினசரி கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை ஒரு லட்சத்தைத் தாண்டியதும் தேசம் முழுக்க பதற்றம் சூழ்ந்திருக்கிறது. 'மீண்டும் ஊரடங்கு அறிவிப்பார்களா?' என்று கவலையும் அச்சமும் கலந்த குரலில் கேட்கிறார்கள் மக்கள். சில நாள்களுக்கு முன்பிருந்தே 'ஊரடங்குக் கட்டுப்பாடுகள்' என்ற பெயரில் போலி அரசாணை ஒன்று உலா வருகிறது. அநேகமாக தமிழகத்தில் எல்லோருக்கும் அது வாட்ஸ்அப் ஃபார்வர்டாக சென்று சேர்ந்திருக்கும். மகாராஷ்டிரா மற்றும் டெல்லியில் அறிவிக்கப்பட்ட இரவு நேர ஊரடங்கு இந்தப் பதற்றத்தை இன்னும் அதிகமாக்கி இருக்கிறது.

ஒரு விஷயத்தை அரசுகள் நினைவில் கொள்ள வேண்டும். இந்தியாவில் கொரோனா தொற்று இதற்குமுன்பு உச்சத்தில் இருந்தது 2020 செப்டம்பரில்! ஊரடங்குக் கட்டுப்பாடுகள் எதுவும் இல்லாமல்தான் அந்த சீற்றத்தை நாம் தணித்தோம். தீவிர பரிசோதனை, சிகிச்சை, தனிமனித பாதுகாப்பு ஏற்பாடுகள் ஆகியவையே கொரோனாவை கட்டுக்குள் கொண்டுவந்தன. இப்போதும் நம் தேவை அவைதானே தவிர, ஊரடங்கு அல்ல! ஊரடங்கு பொருளாதாரத்தை முடக்கும்; அடித்தட்டு மக்களை இன்னும் மோசமான வறுமையில் தள்ளும். நோய் பயத்தை அதிகமாக்கும். ஆனால், நோய் பரவுவதைக் கட்டுப்படுத்தாது. 'இந்தியா போன்ற மக்கள் நெருக்கம் அதிகமாக உள்ள நாடுகளுக்கு ஊரடங்கு சரியான தீர்வு அல்ல' எனப் பல நிபுணர்கள் பலமுறை சொல்லிவிட்டனர்.

கோவிட் - 19 கொரோனா வைரஸ்
கோவிட் - 19 கொரோனா வைரஸ்

'முகக்கவசம் அணிவதில்லை. கும்பலாகக் கூடுகிறார்கள்' என மக்களை அரசு குறை கூறுவதும் ஏற்க முடியாத ஒன்று. ஆயிரக்கணக்கானவர்களை கும்பலாகத் திரட்டி அத்தனை அரசியல் கட்சிகளும் தேர்தல் பிரசாரம் செய்தன. தலைவர்களே முகக்கவசத்தைத் தவிர்த்துவிட்டு பயணம் செய்தார்கள். முன்மாதிரிகளாக இருக்க வேண்டியவர்களே இப்படிச் செய்யும்போது, சாதாரண மக்களிடம் வேறென்ன எதிர்பார்க்க முடியும்?

கடந்த இரண்டு மாதங்களாக உயர்ந்துகொண்டே வரும் கொரோனா தொற்று எண்ணிக்கை, இந்தியாவில் இரண்டாம் அலை பரவலை உறுதி செய்திருக்கிறது. மகாராஷ்டிரா, சத்தீஸ்கர், கர்நாடகா, உத்தரப் பிரதேசம், டெல்லி, மத்தியப் பிரதேசம் போன்ற மாநிலங்கள் அளவுக்கு தமிழகம் மோசமாகவில்லை என்றாலும் கூட, கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்துவதற்கு சில புத்திசாலித்தனமான நடவடிக்கைகள் தேவை.

* முகக்கவசம் அணியாமல் வெளியில் செல்வதில்லை என்ற உறுதியை மக்கள் அனைவரும் ஏற்க வேண்டும். மக்கள் கும்பலாகக் கூடும் நிகழ்ச்சிகள் மற்றும் விழாக்களை சுயக்கட்டுப்பாடுடன் தவிர்க்க வேண்டும்.

* காய்ச்சல் பரிசோதனை முகாம்களைத் தமிழக அரசு நடத்துவது நல்ல முயற்சி. தமிழகம் முழுக்க இதைச் செய்ய வேண்டும். கொரோனா தொற்றுக்கு ஆளானவர்களுக்கு மருத்துவ சிகிச்சை கிடைப்பதில் எந்தத் தாமதமும் இருக்கக்கூடாது. அதுவே அச்சத்தை அதிகமாக்குகிறது. முன்பு தீவிரத் தொற்று இருந்தபோது செய்ததைப் போலவே, தேவைப்படும் பகுதிகளில் தற்காலிக மருத்துவ முகாம்களை ஏற்படுத்த வேண்டும்.

கொரோனா தடுப்பூசி
கொரோனா தடுப்பூசி

* தடுப்பூசியைப் பரவலாக்குவதே நோய் அச்சம் தடுக்கும் முக்கியமான வழி. இந்த ஆண்டு ஜனவரி மாதமே கோவிஷீல்டு, கோவேக்ஸின் என்ற இரண்டு தடுப்பூசிகளுக்கு அவசரகால பயன்பாட்டுக்கு அனுமதி அளித்தது மத்திய அரசு. நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகளுக்கு இந்தியாவில் தயாரான இந்தத் தடுப்பூசிகள் சென்றன. உலகையே கொரோனாவிலிருந்து காக்கும் ரட்சகனாக இந்தியா தோற்றம் தந்தது. ஆனால், கொரோனா இரண்டாவது அலையில் தவிக்கும் சொந்த நாட்டின் மக்களை முதலில் கவனிக்க வேண்டும். மகாராஷ்டிரா, உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்கள் தடுப்பூசி பற்றாக்குறை உள்ளதாகப் புகார் செய்கின்றன. எல்லா மாநிலங்களுக்கும் தேவைப்படும் அளவுக்கு தடுப்பூசிகளை மத்திய அரசு வழங்க வேண்டும்.

* 'கேட்கும் எல்லோருக்கும் தடுப்பூசி தர முடியாது. யாருக்கு அவசியமோ, அவர்களுக்கு மட்டுமே தரப்படும்' என மத்திய சுகாதாரத் துறை செயலாளர் ராஜேஷ் பூஷண் சொல்வதை எந்த வகையிலும் ஏற்க முடியாது. கொரோனா முன்களப் பணியாளர்கள், 45 வயதுக்கு மேற்பட்டவர்கள், இணைநோய் உள்ளவர்கள் ஆகியோருக்கு முன்னுரிமை தர வேண்டியது அவசியம்தான். ஆனால், அச்சத்துடன் வரும் மற்றவர்களுக்கு அதை மறுப்பதில் நியாயம் இல்லையே! '18 வயதுக்கு மேற்பட்ட எல்லோருக்கும் தடுப்பூசி வழங்க வேண்டும்' என இந்திய மருத்துவ சங்கம் கேட்டிருக்கிறது. டெல்லி மாநில அரசும் இதைப் பின்பற்ற அனுமதி கோரியுள்ளது. 25 வயதுக்கு மேற்பட்ட எல்லோருக்கும் தடுப்பூசி வழங்க மகாராஷ்டிர அரசு அனுமதி கேட்டுள்ளது. நோய்ப் பரவலின் தீவிரத்துக்கு ஏற்றபடி ஒவ்வொரு பகுதிக்கும் தேவைப்படும் அனுமதிகளை மத்திய அரசு வழங்க வேண்டும்.

கொரோனா தடுப்பூசி
கொரோனா தடுப்பூசி

* பிரிட்டன் நாடு, அங்கு தயாராகும் தடுப்பூசிகளை தங்கள் மக்களுக்கே பயன்படுத்துகிறது. அங்கு எல்லோருக்குமே தடுப்பூசி போடப்படுகிறது. தங்கள் தேவை போக மிஞ்சுவதையே ஏற்றுமதி செய்ய உள்ளது பிரிட்டன். இந்தியாவில் சமீபகாலம் வரை ஏற்றுமதியே அதிகம் இருந்தது. இப்போதுதான் நிலைமையின் தீவிரத்தை உணர்ந்து, அதைக் குறைத்துள்ளது அரசு. நம் மக்கள்தொகை அதிகம் என்பதால், நம் தடுப்பூசி தேவையும் அதிகம். இதை உணர்ந்து செயல்பட வேண்டும்.

கொரோனா வைரஸ்: தமிழகத்தில் விதிக்கப்பட்டிருக்கும் தடைகள் என்னென்ன?

* சீரம் இன்ஸ்டிட்யூட், பாரத் பயோடெக் ஆகிய நிறுவனங்கள் 'எங்களுக்கு அரசு நிதியுதவி செய்தால், கட்டமைப்பை மேம்படுத்தி இன்னும் அதிக அளவில் தடுப்பூசி தயாரிக்க முடியும்' எனக் கோரிக்கை வைத்துள்ளன. குஜராத், கர்நாடகா போன்ற மாநிலங்களில் இருக்கும் தங்கள் மையங்களை மேம்படுத்தினால், ஏழு மடங்கு அதிகமாக தடுப்பூசிகளை உற்பத்தி செய்ய முடியும் என பாரத் பயோடெக் கூறியுள்ளது. மகாராஷ்டிரா அரசு அங்கிருக்கும் தனியார் மருந்து நிறுவனங்களை தடுப்பூசி உருவாக்கத்துக்கு பயன்படுத்த அனுமதி கோரியுள்ளது. இவற்றை அவசர சூழல் கருதி மத்திய அரசு உடனடியாக பரிசீலிக்க வேண்டும்.

கொரோனா
கொரோனா
நோய்க் கண்டறிதல், உடனடி சிகிச்சை மற்றும் தடுப்பு நடவடிக்கைகளே கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் முதன்மை ஆயுதங்கள். நிச்சயமாக ஊரடங்கு அல்ல! அரசுகள் இதை நினைவில் கொள்ள வேண்டும்.
Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு