Published:Updated:

`5 மணி நேரத்தில் பரிசோதனை முடிவுகள்!’ - புதிய வகை கொரோனாவை எதிர்கொள்ளத் தமிழகம் தயாரா?

கொரோனா பரிசோதனை நிலையம் - (சென்னை விமான நிலையம்)
கொரோனா பரிசோதனை நிலையம் - (சென்னை விமான நிலையம்) ( GCC )

பிரிட்டனில் புதிய வகை கொரோனா வைரஸ் உருவாகியிருக்கிறது. அந்த வைரஸின் தாக்கம் எப்படியிருக்கும்... இந்தியாவில் அது என்ன மாதிரியான பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடும்?

இங்கிலாந்தில் புதிய வகை கொரோனா வைரஸ் வேகமாகப் பரவிவருவதாக அந்த நாட்டின் சுகாதாரத்துறை தெரிவித்திருக்கிறது. இந்தப் புதிய வகை வைரஸுக்கு `B.1.1.7’ எனப் பெயரிடப்பட்டிருக்கிறது. இதையடுத்து அங்கு அறிவிக்கவிட்டிருந்த பல்வேறு தளர்வுகளும் நீக்கப்பட்டு, கடுமையான ஊரடங்கு அமல்படுத்தப்பட்டிருக்கிறது. இங்கிலாந்தில் கடந்த வாரத்தோடு ஒப்பிட்டுப் பார்க்கையில் வைரஸால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை இரண்டு மடங்காக அதிகரித்திருக்கிறது. முதலில் உருவான வைரஸ் ஏற்படுத்திய தாக்கத்திலிருந்தே உலக நாடுகள் பலவும் இன்னும் மீளாத நிலையில், தற்போது உருவாகியிருக்கும் புதிய வகை வைரஸ் மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது.

வைரஸ் அதன் தாக்குதல் முறையை மாற்றும்போது, ​​நாம் நமது பாதுகாப்பு முறையை மாற்ற வேண்டும்!
இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன்

நோய் பரவுவதைத் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 40-க்கும் மேற்பட்ட உலக நாடுகள், இங்கிலாந்துடனான விமான மற்றும் கப்பல் சேவையைத் தற்காலிகமாக நிறுத்தியுள்ளன. இந்த நாடுகளின் பட்டியலில் இந்தியாவும் இணைந்துள்ளது. இதையடுத்து நேற்று பிரிட்டனிலிருந்து இந்தியா வந்த 250-க்கும் மேற்பட்ட நபர்களுக்குப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது, அதில் ஏழு பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. அதிலும் பிரிட்டனிலிருந்து டெல்லி வழியாகச் சென்னை வந்தவருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது.

அவருக்குப் புதிய வகை வைரஸ் தொற்று ஏற்பட்டிருக்கிறதா என்பதைக் கண்டறிய, அவரின் சளி மாதிரிகள் புனேவுக்கு சோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளன. மேலும், அவர் மருத்துவமனையில் மருத்துவர்களின் தொடர் கண்காணிப்பில் இருந்துவருகிறார். அதைத் தொடர்ந்து, இங்கிலாந்திலிருந்து தமிழகம் திரும்பியவர்களின் பட்டியலைத் தமிழக சுகாதாரத்துறை எடுத்திருக்கிறது. அந்தப் பட்டியலின்படி, 1,000-க்கும் மேற்பட்டவர்கள் சுகாதாரத்துறையின் கண்காணிப்பு வளையத்துக்குள் கொண்டுவரப்பட்டிருக்கிறார்கள். அவர்களுக்குப் பரிசோதனை மேற்கொள்ளவும், அவர்களைத் தனிமைப்படுத்தவும் திட்டமிடப்பட்டு அதற்கான பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.

புதிய வகை கொரோனா வைரஸ்
புதிய வகை கொரோனா வைரஸ்

பிரிட்டனிலிருந்து தமிழகம் வரும் நபர்களைத் தனிமைப்படுத்தி அவர்களுக்குப் பரிசோதனை மேற்கொள்ளும் பணியையும் தமிழக அரசு செய்திருக்கிறது. இங்கிலாந்திருந்து இந்தியாவின் மற்ற நகரங்களுக்கு வந்து, அங்கிருந்து தமிழகம் திரும்பும் நபர்களையும் தனிமைப்படுத்தும் பணிக்கான திட்டமிடலையும் செய்து வருகிறது. விமான நிலையங்களில் கொரோனா பரிசோதனை மையங்களும் செயல்படுத்தப்பட்டுள்ளன.

இதற்கிடையே பிரிட்டனிலிருந்து இந்தியா திரும்பியவர்களுக்கான வழிகாட்டுதல் நெறிமுறைகளை மத்திய அரசு வெளியிட்டிருக்கிறது. அதில், நவம்பர் 25-ம் தேதிக்குப் பிறகு பிரிட்டனிலிருந்து இந்தியா திரும்பியவர்களைக் கண்காணிக்கவும், அவர்கள் மாதிரிகளை புனே ஆய்வகத்துக்கு அனுப்ப வேண்டும் என்றும், அதில், அவர்களுக்குத் தொற்று இல்லை என்று முடிவுகள் வந்தாலும் அவர்கள் தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும் என்றும் மத்திய அரசு கூறியிருக்கிறது.

`புதிய வகை கொரோனா வைரஸ்; பிரிட்டனிலிருந்து விமானங்கள் இந்தியா வர தடை!’ - மத்திய அரசு

புதிய வகை கொரோனா வைரஸ்

ஒரு வைரஸில் உருமாற்றம் என்பது நடந்துகொண்டேதான் இருக்கும். வைரஸின் புரதங்களில் ஏற்படும் தொடர் மாற்றங்களின் காரணமாக இந்த உருமாற்றம் நடக்கும். தற்போது இந்தப் புதிய வைரஸில் ஏற்பட்டுள்ள மாற்றம் காரணமாக இது ஏற்படுத்தும் பாதிப்புகள் அதிகமாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த வைரஸ் பரவும் தன்மை 70 சதவிகிதம் அதிகமாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது. தற்போது இந்த வைரஸ் குறித்த ஆராய்ச்சி நடந்துகொண்டிருப்பதால், இப்போது இந்த வைரஸின் தாக்கம் எப்படியிருக்கும் என்று மிகச் சரியாகச் சொல்ல முடியாது. இதற்கு முன்னர் சில முறை கொரோனா வைரஸில் மாற்றம் நடந்து, புதிய வகை கொரோனா வைரஸ்கள் கண்டிறியப்பட்டிருப்பது என்பது குறிப்பிடத்தக்கது.

இங்கிலாந்து ஊரடங்கு
இங்கிலாந்து ஊரடங்கு
AP

தற்போது, இங்கிலாந்தில் இந்த வைரஸ் பரவியுள்ளவிதத்தை வைத்து, இந்த வைரஸின் பரவும் வேகத்தையும், ஏற்படுத்தும் தாக்கத்தையும் அறிந்துகொள்ள முடிகிறது. மிகக் குறுகிய காலத்திலேயே பிரிட்டனின் பல்வேறு பகுதிகளில் இந்த வைரஸ் பரவியிருக்கிறது. மேலும், இங்கிலாந்திலிருந்து அவர்களின் சொந்த நாட்டுக்குத் திரும்பிய சிலருக்கும் இந்தப் புதிய வகை வைரஸ் தொற்று இருப்பது உறுதியாகியிருக்கிறது. இந்த வைரஸ் இந்தியாவில் பரவுமா என்பதைத் தற்போது கூறிவிட முடியாது. இங்கிலாந்திலிருந்து திரும்பியவர்களின் மாதிரிகள் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளன. அந்த முடிவுகளின் மூலமாகவே நாம் ஒரு முடிவுக்கு வர முடியும். தற்சமயத்துக்குத் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதின் மூலம் கண்டிப்பாகக் கட்டுப்படுத்த முடியும் மற்றும் பரவுவதைத் தடுக்க முடியும். தற்போதுள்ள தடுப்பு மருந்துகள் இந்த வைரஸுக்கு எதிராக எவ்வளவு வீரியமாகச் செயலாற்றும் என்ற ஆய்வுகளும் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன.

இது குறித்து நம்மிடம் பேசிய சுகாதாரத்துறைச் செயலர் ராதாகிருஷ்ணன், ``முதல்வரின் அறிவுறுத்தலின்பேரில் நேற்றைய தினமே புதிய வைரஸ் பரவாமல் தடுக்க தடுப்பு நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டன. சமீபத்தில், இங்கிலாந்திலிருந்து தமிழகம் வந்தவர்களின் பட்டியல்கள் எடுக்கப்பட்டுள்ளன. அவர்களைக் கண்காணிக்கும் பணியை அரசு மேற்கொண்டுவருகிறது.

அதோடு, நேற்று இங்கிலாந்திலிருந்து சென்னை திரும்பிய 15 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் ஒருவருக்குத் தொற்று உறுதிசெய்யப்பட்டதை அடுத்து, அவர் சிகிச்சைக்காக கிண்டி கொரோனா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். இங்கிலாந்திருந்து திரும்பும் அனைவருக்குமே பரிசோதனை மேற்கொள்ளப்படும்; ஆய்வின் முடிவுகள் வரும்வரை அவர்கள் தனிமைப்படுத்தப்படுவார்கள்.

ஐந்து மணி நேரத்தில் பரிசோதனை முடிவுகள் கிடைப்பதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தமிழகத்திலுள்ள அனைத்து விமான நிலையங்களிலும் பரிசோதனை மேற்கொள்ள ஏற்பாடுகள் தயார்நிலையில் உள்ளன. இந்த வைரஸ் குறித்து மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம். அனைத்து வகையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் அரசு மேற்கொண்டுவருகிறது. மக்கள் அனைவரும் அரசு கூறியுள்ள பாதுகாப்பு வழிமுறைகளைப் பின்பற்ற வேண்டும். அதில் அலட்சியம் இருக்கக் கூடாது. முகக்கவசம் அணிவதையும், தனிமனித இடைவெளியையும் அனைவரும் பின்பற்ற வேண்டும்" என்று கூறினார்.

சுகாதாரத்துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணன்
சுகாதாரத்துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணன்

இந்த புதிய வகை கொரோனா வைரஸ் செப்டம்பர் மாதம் கடைசியில் பரவ ஆரம்பித்திருக்கிறது. இந்தியாவைப் பொறுத்தவரை இன்று முதல்தான் விமானத்துக்கான தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கிறது. இதற்கு முன் வந்தவர்களின் பட்டியல் சேகரிக்கப்பட்டு அவர்களைக் கண்காணிக்கும் பணியை மேற்கொண்டிருப்பதோடு, அவர்களில் யாருக்கேனும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டால், அவர்கள் சம்பந்தப் பட்ட அனைவருக்குமே பரிசோதனை மேற்கொள்ளவும் அரசு முடிவு செய்திருக்கிறது. அதோடு, வெளிநாடுகளிலிருந்து திரும்பியவர்களில் யாருக்கேனும் கொரோனா அறிகுறி இருந்தால் உடனடியாக அரசுக்குத் தெரிவிக்கவும் வலியுறுத்தியிருக்கிறது.

என்னதான் அரசு எத்தனை தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டாலும், இந்த கொரோனா தொற்று பரவாமல் தடுப்பது மக்களாகிய நமது கைகளில்தான் இருக்கிறது. நாம் அனைவரும் வெளியே செல்லும்போது முகக்கவசம் அணிவதையும், சரியான தனி மனித இடைவெளியையும் கடைப்பிடித்தால், கொரோனா பரவலிலிருந்து நம்மை நாம் தற்காத்துக்கொள்ள முடியும்!

அடுத்த கட்டுரைக்கு