Published:Updated:

கொரோனாவை `லெப்ட்’ கையில் டீல் செய்யும் ஒடிசா! சொல்லித்தரும் பாடம் என்ன?

ஒடிசா மாடல்
ஒடிசா மாடல்

ஒடிசாவில் ஒவ்வொரு மாவட்டத்திலும் குறைந்தது 500 படுக்கைகள் கொண்ட கொரோனா சிறப்பு மருத்துவமனைகள் உருவாக்கப் பட்டிருக்கின்றன. இதுமட்டுமன்றி, கொரோனா நோயால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் உணவு முதல் மருந்து வரை இலவசமாகக் கிடைக்கவும் வழி செய்திருக்கிறது அந்த மாநில அரசு.

பேரிடர் மேலாண்மையில் உலக நாடுகளுக்கு எல்லாம் எடுத்துக்காட்டாக விளங்கும் மாநிலம் ஒடிசா. அடிக்கடி அம்மாநிலத்தைப் புயல் களைத்துப் போட, அசராமல் அடுக்கி அடுக்கி வைக்கும் திறமை வாய்ந்த தலைமை கொண்ட மாநிலம். சுதாரிப்பதற்குள் சட்டென வரும் புயலையே சமாளித்தவர்கள் என்பதால், ஒவ்வொருவராய் பரவும் வைரஸ் தொற்றை எளிதாக அதேநேரத்தில் வெற்றிகரமாகச் சமாளித்துக்கொண்டு இருக்கிறார்கள். ஒடிசாவில் ஜூன் 10-ம் தேதி நிலவரப்படி, 998 பேருக்கு நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டு சிகிச்சை பெற்றுக்கொண்டிருக்கிறார்கள்; இதுவரை 2,133 பேர் குணமடைந்து வீடு திரும்பி இருக்கிறார்கள், 11 பேர் மரணமடைந்திருக்கிறார்கள்.

கொரோனா தொற்று
கொரோனா தொற்று

இந்தியாவில், ஜூன் 10 நிலவரப்படி, கொரோனா நோய்த் தொற்று ஏற்பட்டு 7,745 பேர் மரணமடைந்து இருக்கிறார்கள். இதில் 70 சதவிகிதம் பேருக்கு கொரோனா நோயுடன் சேர்த்து வேறு உடல் உபாதைகளும் இருந்ததால் மரணமடைந்திருக்கிறார்கள் என இந்தியாவின் சுகாதார மற்றும் குடும்பநலத்துறை அமைச்சகம் அறிவித்திருக்கிறது. ஏற்கெனவே இதயநோய், சுவாசக்கோளாறு, சர்க்கரை நோய் போன்ற வியாதி இருப்பவர்களுக்கு கொரோனா போன்று மற்றொரு தொற்றும் ஏற்பட்டால் அவற்றை Comorbid (இணை நோய்கள்) என மருத்துவ உலகம் குறிப்பிடுகிறது. இதுவே, அதிக மரணத்துக்குக் காரணமாக இருக்கிறது. கொரோனா நோய் உள்ளவர்களை மற்ற நோயாளிகளும் வந்து போகும் பொது மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளிப்பதால், ஏற்கெனவே நோயுற்று இருப்பவர்கள் எளிதில் நோய்த் தொற்று அடைய வாய்ப்பு உண்டு. இதைத் தடுக்க விரும்பிய ஒடிசா அரசு, கொரோனா அச்சுறுத்தல் தொடங்கிய உடனேயே, கொரோனாவிற்கென தனிச் சிறப்பு மருத்துவமனைகளை மாவட்டம்தோறும் தொடங்கியது. இதுவே ஒடிசாவின் கொரோனா போரின் வெற்றிக்கான முதல் படி. இதைத் தொடர்ந்து ஒடிசா மாநிலம் செயல்பட்டிருக்கும் விதம் மற்ற நாடுகள் பார்த்துக் கற்றுக்கொள்ள வேண்டியவை.

இந்த தனி மருத்துவமனைகள் அமைப்பதை அரசு மட்டும் தனியாகச் செயல்படுத்த முடியாது என்பதால், தனியார் மருத்துவமனைகளை அழைத்துப் பேசி, அவர்களோடு ஒப்பந்தம் போட்டு அந்த மருத்துவமனைகளைக் கையகப்படுத்தி இருக்கிறது ஒடிசா அரசு. பல அரசு நிறுவனங்களும் நிதி அளிக்க முன்வந்தன. இதையடுத்து, ஒடிசாவில் ஒவ்வொரு மாவட்டத்திலும் குறைந்தது 500 படுக்கைகள் கொண்ட கொரோனா சிறப்பு மருத்துவமனைகள் உருவாக்கப்பட்டிருக்கின்றன. இதுமட்டுமன்றி, அந்த மாநிலத்தில், கொரோனா நோயால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் உணவு முதல் மருந்து வரை ஒரே தரத்தில் இலவசமாகக் கிடைக்கவும் வழி செய்திருக்கிறது அந்த மாநில அரசு.

கொரோனா ட்ரீட்மென்ட் - ஒடிசாவில் இலவசம்... தமிழகத்தில் ரூ.2.55 லட்சம்

ஒடிசாவில் உருவாக்கப்பட்டுள்ள 35 கோவிட் மருத்துவமனைகளில், 17 மருத்துவமனைகள் தனியார்-பொதுத்துறை நிறுவனப் பங்களிப்போடு அமைக்கப்பட்டுள்ளன. இந்த கொரோனா சிறப்பு மருத்துவமனைகளில், சிகிச்சைக்கான செலவு மட்டுமன்றி நோயாளிகள் இருந்தாலும் இல்லாவிட்டாலும் அமைக்கப்பட்டிருக்கும் படுக்கை வசதிகளுக்கு ஏற்ப நிதி அளிக்கிறது அரசு. பெருநகரங்களிலுள்ள மருத்துவமனைகளுக்கு ஒரு நாளைக்கு, ஒரு படுக்கைக்கு 3,000 ரூபாயும் கிராமப்புறங்களிலுள்ள மருத்துவமனைகளுக்கு 2,500 ரூபாயும், ஐ.சி.யு-வுக்கு 5,000 ரூபாயும் வழங்குகிறது அரசு.

ஒடிசா  மாடல்
ஒடிசா மாடல்

கொரோனா போரில், துணிந்து துரிதமாகச் செயலாற்றுகிறது ஒடிசா. மார்ச் 15-ம் தேதி, முதல் கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்ட உடனேயே இந்தியாவில் முதல் முதலாக, ஒடிசாவில் பேரழிவு மேலாண்மை சட்டம் (Disaster management act) நடைமுறைப்படுத்தப்பட்டது. அதன்பிறகு ஒவ்வொருமுறையும் மத்திய அரசு அறிவிப்பதற்கு முன்னதாகவே இங்கு முழு முடக்கம் அறிவிக்கப்பட்டது. சுகாதாரத்துறை மட்டுமன்றி அனைத்துத் துறைகளும் இணைந்து செயல்படத் தொடங்கின. இதற்காக உடனடியாக சிறப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டனர்.

ஒடிசாவில் உள்ள கிராம பஞ்சாயத்துத் தலைவர்களுக்குக் கூட அவர்களின் பஞ்சாயத்தைப் பொறுத்தவரை ஒரு மாவட்ட ஆட்சியாளருக்கு இருக்கும் அதே அளவிலான அதிகாரம் வழங்கப்பட்டது. பஞ்சாயத்துத் தலைவர்கள் அவர்களின் பஞ்சாயத்து எல்லைக்குள் தனியாக ஊரடங்கு, முடக்கம் அறிவிக்கலாம். பஞ்சாயத்து நிதியை நிவாரணத்துக்காக செலவழிக்கலாம் என்ற உரிமைகள் அவர்களுக்கு வழங்கப்பட்டது. அதேசமயம், பஞ்சாயத்துக்கு உட்பட்ட பகுதியில் இருக்கும் முகாம்களில் உணவு ஏற்பாடு தொடங்கி, தனித்தனியாக வெளியூர் பயணம் செய்தவர்களைக் கண்காணிப்பது வரை பல கடமைகளும் பொறுப்புகளும் வழங்கப்பட்டன.

ஒடிசா மாநிலம்
ஒடிசா மாநிலம்
odishaassembly.nic.in

ஒடிசா மாநில தேசிய சுகாதார இயக்கத்தின் இயக்குநர் ஷாலினி பண்டிட் அம்மாநிலத்தின் சுகாதாரத்துறை கட்டமைப்பைப் பற்றி நம்மிடம் விளக்கினார்...

"ஒடிசாவின் சுகாதாரக் கட்டமைப்பை வலுப்படுத்தும் வேலையை நீண்ட காலமாகவே அரசு செய்துவருகிறது. சிறப்பான, அதேசமயம் அனைவர்க்கும் சமமான, மக்கள் எளிதாகப் பயன் அடையக்கூடிய வகையில், மருத்துவ வசதிகளை உறுதிப்படுத்துவதே அரசின் முக்கியக் கடமையாக இருந்து வருகிறது. BSKY எனும் பிஜு ஸ்வஸ்திய கல்யாண் யோஜனா திட்டத்தின் கீழ் ஒடிசா மண்ணில் வாழும் அனைவருக்கும் மருத்துவக் காப்பீட்டு வசதி மேம்படுத்தப்பட்டுள்ளது. பொருளாதாரத்தில் பின்தங்கிய சூழலில் இருப்பின், ஒரு குடும்பத்துக்கு 5 லட்சம் ரூபாய் மருத்துவக் காப்பீடு வழங்கப்படுகிறது. பெண்களுக்கு மட்டும் கூடுதலாக 5 லட்சம் காப்பீடு வழங்குகிறது ஒடிசா அரசு. அரசு மருத்துவர்களுக்கும் அவர்களின் பணி சூழலின் கடினத்தைப் பொறுத்தே ஊதியம் வழங்கப்படுகிறது.

அரசால் சென்றடைய முடியாத பகுதிகளில்கூட, தனியார் நிறுவனத்தோடு ஒப்பந்தமிட்டு, அனைவரும் அணுகக்கூடிய தொலைவில் மருத்துவ வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறது அரசு. இதுமட்டுமன்றி, மருத்துவமனைகளில் உணவு வழங்கும் பொறுப்பு, சுய உதவிக் குழுக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு, நீண்ட கால முயற்சியால், ஒடிசாவின் மருத்துவ கட்டமைப்பு பலப்படுத்தப்பட்டிருக்கிறது. கொரோனவைக் கட்டுப்படுத்துவதில் அதுவே மிகவும் உறுதுணையாக இருந்தது.

 ஷாலினி பண்டிட்
ஷாலினி பண்டிட்

கொரோனா பரிசோதனைகளைப் பொறுத்தவரை, பிப்ரவரி இறுதியில் ஒரேயொரு பரிசோதனைக் கூடத்திலிருந்து இரண்டு சோதனைகள் செய்யத்தான் வசதிகள் இருந்தது. இந்த இரண்டு மாதங்களில், மாநிலம் முழுக்க ஒரு நாளில் சுமார் 10,000 பரிசோதனைகள் செய்யும் திறன் வளர்க்கப்பட்டிருக்கிறது. முக்கியமாக மாநிலம் முழுக்க இருக்கும் அனைத்து மருத்துவம் சார்ந்த பணியாளர்களில் தொடங்கி, தனிமைப்படுத்தலில் இருக்கும் பொதுஜனம் வரை சிறப்பாகப் பயிற்சி அளிக்கப்பட்டிருக்கிறது" என்கிறார்.

மேலும், கொரோனா சிறப்பு மருத்துவமனைகள் தவிர்த்து 30 கோவிட் ஹெல்த் சென்டர்கள், 134 கோவிட் கேர் சென்டர்கள் மாநிலம் முழக்க அமைக்கப்பட்டுள்ளன. இன்றைய தேதியில், ஒடிசாவில் சுமார் 22,000 மருத்துவமனை படுக்கைகளும், 500 ICU படுககைகளும் தயார் நிலையில் உள்ளது. மருத்துவச் சிகிச்சை முழுவதும் இலவசமாகக் கிடைப்பது ஒடிசாவின் மிகப் பெரிய பலம். கொரோனா மருத்துவமனைகள் தனியாக அமைக்கப்பட்டதால், மற்ற பிரச்னைகளுக்கு மக்கள் தைரியமாக மருத்துவமனைகளை நாட முடிகிறது.

ஒடிசா அரசின் செயல்பாடுகள் குறித்து பொதுமக்களின் பார்வை எப்படி இருக்கிறது என நம்மிடம் பகிர்ந்துகொண்டார், ஒடிசா கைவினைப் பொருள்கள் அருங்காட்சியகத்தில் பணி புரியும் யஷஸ்வினி குமாரி தேவி.

யஷஸ்வினி குமாரி தேவி
யஷஸ்வினி குமாரி தேவி

அவர் பேசுகையில், "அரசு மேலயும் சுகாதாரத்துறை மேலயும் மக்களுக்கு நம்பிக்கை வர்றது அவசியம். அப்பதான் நாம இந்த மாதிரியான அசாதாரண சூழல்ல தைரியமா இயங்க முடியும். நான் அரசுத்துறையில வேலை செய்றேன். தினமும் நானும் என் சக அலுவலக நண்பர்களும் வேலைக்கு வரக் காரணம் அந்த நம்பிக்கைதான். ஒடிசால இன்னொரு நல்ல விஷயம் நகரம், கிராமம்னு எல்லாப்பகுதி மக்களுக்கும் அரசின் கவனம் ஒரே மாதிரி கிடைச்சிருக்கு. நான் போன வாரம் ஒரு கிராமத்துக்குப் போயிருந்தேன். உணவிலிருந்து, மருத்துவ உதவி வரை அவங்களுக்கு எல்லாம் கிடைச்சிருக்கு. மாநில அரசு மேல்மட்ட அதிகாரிகள் மட்டுமன்றி கிராம பஞ்சாயத்து அலுவலர்கள் வரை சிறப்பா செயல்பட்டு கொரோனா பிரச்னையை நல்ல முறையில சமாளிக்கிறாங்க. பெரிய நகரங்கள் மட்டுமல்லாம மாநிலம் முழுக்க பிரச்னை கட்டுக்குள் இருக்கு. மக்கள் வேலைக்கு வரத் தயாரா இருக்கிறாங்க. அதுக்குக் காரணம், ஒருவேளை நமக்கு உடல்நலம் சரியில்லாம போனாலும் நம்மள பாத்துக்க அரசு இருக்குன்ற நம்பிக்கை ஒடிசா மக்களுக்கு இருக்கு" என்கிறார்.

நோய்கள் பாரபட்சமின்றி அனைவரையும் தாக்குகிறது, அதேபோலத்தான் அரசும் பராபட்சமின்றி அனைத்து மக்களுக்கும் ஒரே போல மருத்துவ வசதிகள் கொடுக்க வேண்டும் என்ற சித்தாந்தம்தான் ஒடிசா அரசை வழிநடத்துகிறது. தமிழகம் மட்டுமல்ல... இந்தியாவே ஒடிசாவிடம் இருந்து கற்றுக்கொள்வதற்கு நிறைய இருக்கிறது.

அடுத்த கட்டுரைக்கு