Published:Updated:

`கொரோனா மூன்றாவது அலை குழந்தைகளை பாதிக்கும் என்பது ஆதாரமற்ற தகவல்’ - விஞ்ஞானி த.வி.வெங்கடேஸ்வரன்

த.வி.வெங்கடேஸ்வரன்
த.வி.வெங்கடேஸ்வரன்

இந்தியாவில் கொரோனா மூன்றாம் அலை வரப்போவதாக நிபுணர்கள் எச்சரித்துவரும் நிலையில், எச்சரிக்கையாக இருப்பது எப்படி என்கிற விவாதங்களும் நடைபெற்றுவருகின்றன.

இந்தியாவில் கொரோனா முதல் அலை உச்சத்திலிருந்த நேரத்திலேயே, இரண்டாவது அலை வரப்போகிறது என்கிற கருத்துகள் நிபுணர்கள் தரப்பிலிருந்து வந்தன. அதன்படியே, இரண்டாவது அலை வந்துவிட்டது. முதல் அலையைக் காட்டிலும் பல மடங்கு பாதிப்புகளை இரண்டாவது அலை ஏற்படுத்திவிட்டது. முதல் அலையில் தினமும் புதிதாக ஒரு லட்சம் பேருக்கு தொற்று ஏற்பட்டது என்றால், இரண்டாவது அலையில் அது நான்கு லட்சம் என்ற அளவுக்கு அதிகரித்தது. இந்த முறை மரணங்களும் பல மடங்கு அதிகம்.

கொரோனா வைரஸ்
கொரோனா வைரஸ்

இப்போது, மூன்றாம் அலை வரப்போகிறது என்கிற எச்சரிக்கைகள் வந்துகொண்டிருக்கின்றன. இரண்டாவது அலையைக் காட்டிலும் மூன்றாவது அலையில் பாதிப்புகள் மோசமாக இருக்கும் என்கிற கணிப்பும் இருக்கிறது. எச்சரிக்கைகள் வந்தபோதும் இரண்டாவது அலையை எதிர்கொள்வதற்கான ஏற்பாடுகளை மத்திய அரசு செய்யவில்லை என்றும், அதனால்தான் உயிரிழப்புகள் உட்பட பெரும் பாதிப்புகள் ஏற்பட்டன என்றும், பல தரப்பினரும் குற்றம்சாட்டிவருகிறார்கள்.

ஊரடங்கு, தடுப்பூசி, முகக்கவசம், தனிமனித இடைவெளி, சானிடைஸர் போன்றவற்றால் தற்போது கொரோனா பெருந்தொற்று பரவல் இந்திய அளவிலும், மாநில அளவிலும் குறைந்துவருகிறது. ஆனால், தீப்பொறி அணைந்துவிடவில்லை. ஆங்காங்கே தீப்பொறிகள் இருக்கின்றன. பற்றிக்கொள்வதற்கான சூழல் உருவாகும்போது, மீண்டும் அது தீவிரமாகப் பரவுவதற்கு வாய்ப்பு உண்டு. எனவே, மூன்றாவது அலை வருகிறதோ இல்லையோ, அதை எதிர்கொள்வதற்கு உரிய முன்னேற்பாடுகளை இப்போதே மத்திய, மாநில அரசுகள் செய்ய வேண்டும்.

மூன்றாம் அலை வரும் பட்சத்தில், அதன் பாதிப்புகள் எந்த மாதியாக இருக்கும், என்னென்ன முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்பது குறித்து டெல்லியில் மத்திய அரசின் விஞ்ஞான் பிரசார் துறையில் பணியாற்றும் மூத்த விஞ்ஞானியான முனைவர் த.வி.வெங்கடேஸ்வரனிடம் பேசினோம்.

மருத்துவமனையில்
மருத்துவமனையில்

``கொரோனா பெருந்தொற்றுப் பரவலை, இந்தியாவில் நூறு ஆண்டுகளுக்கு முன்பாக நிகழ்ந்த ‘ஸ்பானிஷ் ஃப்ளூ’ பரவலுடன் ஒப்பிடலாம். மும்பை, சென்னை, கொல்கத்தா போன்ற பெருநகரங்களில்தான் ஸ்பானிஷ் ஃப்ளூ முதலில் பரவியது. ஐரோப்பாவிலிருந்து வந்ததால், ஆங்கிலேயர்கள் அதிகம் வாழக்கூடிய நகரங்களில் முதலில் அது பரவியது. அடுத்ததாக, மதுரை, தஞ்சாவூர் போன்ற சிறிய நகரங்களில் பரவியது. மூன்றாம் கட்டமாக கிராமப்புறங்களில் பரவியது. பெரும்பான்மையாக இருக்கும் ஏழை எளிய மக்களிடையே பரவியபோதுதான், அது பெரிய பிரச்னையாகப் பார்க்கப்பட்டது. கொரோனா பெருந்தொற்று பரவலும் அப்படித்தான் இருக்கிறது.

கொரோனா முதல் அலையில் சென்னை போன்ற பெரிய நகரங்களில் பாதிப்பு அதிகமாகவும், சிறிய நகரங்களில் குறைவாகவும் இருந்தது. பல சிறிய நகரங்களில் கொரோனாவே இல்லை என்கிற நிலையும் இருந்தது. இரண்டாவது அலையில் சிறிய நகரங்கள் பாதிக்கப்பட்டிருக்கின்றன. முதல் அலையில் பெரிதும் பாதிக்கப்படாத கோயம்புத்தூர், இந்த முறை கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறது. மூன்றாவது அலையின்போது, கிராமங்களுக்குப் பரவுவதற்கு வாய்ப்பு அதிகம் இருக்கிறது” என்றார் த.வி.வெங்கடேஸ்வரன்.

த.வி.வெங்கடேஸ்வரன்
த.வி.வெங்கடேஸ்வரன்

``மூன்றாவது அலையில் குழந்தைகள் அதிகமாகப் பாதிக்கப்படுவார்கள் என்று சொல்லப்படுகிறதே?” என்று கேள்விக்கு,``இல்லை. அது ஒரு பொய்ப் பிரசாரம். அதற்கு எந்தவோர் ஆதாரமும் கிடையாது” என்று அவர் மறுத்தார். மேலும், ``இரண்டாம் அலையில் இளைஞர்கள் அதிகமாக பாதிக்கப்படுகிறார்கள் என்று சொல்லப்படுகிறது. அது உண்மையல்ல. ஏன் அப்படிச் சொல்லப்படுகிறது என்பதற்கான காரணத்தைப் புள்ளிவிவரங்களின் அடிப்படையில் பார்த்தால் புரியும்.

கொரோனா முதல் அலையில் அதிகபட்சமாக ஒவ்வொரு நாளும் புதிய தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகபட்சம் ஒரு லட்சம் என இருந்தது. இந்த முறை, நான்கு லட்சமாக அதிகரித்துள்ளது. மருத்துவமனைக்கு வந்தவர்களில் பாதிப்பேர் 50 வயதுக்கு மேற்பட்டவர்கள். மற்றவர்களெல்லாம் 30, 35, 40, 45 என்ற வயதுகளில் இருப்பவர்கள். அதாவது, முதல் அலையின்போது பாதிக்கப்பட்ட இளைஞர்கள் மற்றும் இரண்டாவது அலையில் பாதிக்கப்பட்ட இளைஞர்கள் ஆகியோருக்கிடையே சதவிகித அடிப்படையில் பெரிய வித்தியாசம் கிடையாது. தொற்றாளர்களின் எண்ணிக்கை நான்கு மடங்கு அதிகரித்த காரணத்தால், இளைஞர்கள் அதிகம் கவனம் பெறுகிறார்கள். ஆகவே, அதிகமான இளைஞர்கள் பாதிக்கப்படுவதுபோலத் தெரிகிறது.

கொரோனா தொற்றாளர்கள்
கொரோனா தொற்றாளர்கள்

முதல் அலையில் வயது மூத்தவர்கள் பாதிக்கப்பட்டார்கள், இரண்டாம் அலையில் இளைஞர்கள் பாதிக்கப்படுகிறார்கள், மூன்றாம் அலையில் குழந்தைகள் பாதிக்கப்படுவார்கள் என்று குத்துமதிப்பாகச் சிலர் பேசுகிறார்கள். அது அடிப்படை ஆதாரம் அற்றது” என்றார் த.வி.வெங்கடேஸ்வரன்.

ப்ளஸ் டூ தேர்வுகள் ரத்து; புதிய கல்விக் கொள்கைக்கு வாசலைத் திறந்துவிடுமா?

“இரண்டாவது அலையின்போது கறுப்பு பூஞ்சை என்கிற பிரச்னை புதிதாக வந்திருப்பதாகப் பார்க்கப்படுகிறது. அது உண்மையா?” என்று கேட்டபோது,“கறுப்பு பூஞ்சை என்பது புதிய பிரச்னை அல்ல. அது, காலம் காலமாக இருக்கும் நோய்தான். இப்போது எண்ணிக்கை அதிகமாக இருப்பதால், புதிய பிரச்னைபோல பலருக்கும் தெரிகிறது. கறுப்பு பூஞ்சைக்கு ஏற்கெனவே மருந்து இருக்கிறது” என்றார் அவர்.

கொரோனா தொற்றாளர்
கொரோனா தொற்றாளர்

இரண்டாவது அலை குறித்து முன்னெச்சரிக்கைகள் வந்தபோது, ஆட்சியாளர்கள் அலட்சியமாக இருந்ததால் பல்லாயிரக்கணக்கான உயிர்களை இழக்க வேண்டிய அவலம் இந்திய தேசத்துக்கு ஏற்பட்டது. ஒருவேளை கொரோனா மூன்றாவது அலையைக் கட்டுப்படுத்தத் தவறினால், தற்போது தேவைப்படும் ஆக்சிஜனைக் காட்டிலும் 4-5 மடங்கு ஆக்சிஜன் தேவைப்படும். தற்போதுள்ள மருத்துவப் படுக்கைகளைக் காட்டிலும் லட்சக்கணக்கான படுக்கைகள் கூடுதலாகத் தேவைப்படும் என்றெல்லாம் நிபுணர்கள் எச்சரிக்கிறார்கள்.

எனவே, முகக்கவசம் அணிவது, தனிமனித இடைவெளியைக் கடைப்பிடிப்பது, நெரிசலாகக் கூடுவதைத் தவிர்ப்பது, சானிடைஸர் பயன்படுத்துவது ஆகியவற்றைப் பொதுமக்கள் கடைப்பிடிக்க வேண்டும். ஆட்சியாளர்களைப் பொறுத்தவரை எவ்வளவு விரைவில் அதிகமானோருக்கு தடுப்பூசி செலுத்த முடியுமோ, அதை உறுதிப்படுத்த வேண்டும். அப்போதுதான், கொரோனாவிடமிருந்து நம்மைப் பாதுகாத்துக்கொள்ள முடியும்.

அடுத்த கட்டுரைக்கு