Published:Updated:

பரோட்டா, பிரியாணி - அதிகரிக்கும் சுகாதாரமற்ற உணவகங்கள்; கண்டுகொள்ளுமா அரசு நிர்வாகம்?

தரமற்ற உணவுப்பொருள்களின் விற்பனை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இந்த உணவுப்பொருள்களை வாங்கி உண்பவர்கள் பல்வேறு உடல் சார்ந்த பிரச்னையை சந்திக்கிறார்கள்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

சமீபத்தில் திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி டவுன் பழைய பேருந்து நிலையம் அருகிலுள்ள அசைவ உணவகம் ஒன்றில் உணவருந்திய 40-க்கும் மேற்பட்டவர்களுக்கு வாந்தி, மயக்கம் உள்ளிட்ட பல்வேறு உடல் பிரச்சனைகள் ஏற்பட்டன. இவர்கள் அனைவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர். தீவிர சிகிச்சை பெற்றுவந்த 10 வயது சிறுமி ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த விவகாரத்தில் உணவக உரிமையாளர், சமையல் மாஸ்டர் இருவரும் கைதுசெய்யப்பட்டனர். சிறுமி உயிரிழந்த விவகாரம் பெரிதாகவே, தமிழகம் முழுவதும் பல்வேறு உணவகங்களில் ஆய்வு நடத்தப்பட்டுவருகிறது.

ஆரணி உணவகம்
ஆரணி உணவகம்
Vikatan

தேவகோட்டையில் நடைபெற்ற ஆய்வில் கெட்டுப்போன 20 கிலோ இறைச்சி, 10 கிலோ பரோட்டா, முதல் நாள் தயாரிக்கப்பட்டு மீதமிருந்த உணவுப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டு அப்புறப்படுத்தப்பட்டன. மேலும் விழுப்புரம் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், கெட்டுப்போன 27 கிலோ இறைச்சி, ஐந்து கிலோ பதப்படுத்தப்பட்ட பரோட்டா மாவு, செயற்கை நிறமூட்டி போன்றவை கைப்பற்றப்பட்டு அழிக்கப்பட்டன. திருப்பூர் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், 36 கிலோ கெட்டுப்போன இறைச்சி கைப்பற்றப்பட்டது. ராமநாதபுரம் மாவட்டத்தில் 40 கிலோ கெட்டுப்போன கோழி இறைச்சி கைப்பற்றப்பட்டு அப்புறப்படுத்தப்பட்டது. இப்படி தமிழகம் முழுவதும் நடைபெற்ற ஆய்வில் பல்வேறு பகுதிகளில் கெட்டுப்போன இறைச்சிகள் ஃப்ரீஸரில் வைத்துப் பயன்படுத்தப்பட்டது தெரியவந்தது.

சென்னை புதுவண்ணாரப்பேட்டையில் குளிர்பானம் அருந்திய இரண்டு சிறுவர்கள் ரத்த வாந்தி எடுத்திருக்கிறார்கள். உடனடியாக சிறுவர்கள் இருவரும் ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டனர். தற்போது சிறுவர்கள் இருவரும் ஆபத்தான கட்டத்தைத் தாண்டிவிட்டதாகக் கூறப்பட்டிருக்கிறது. சிறுவர்கள் அருந்திய குளிர்பான நிறுவனம், கிருஷ்ணகிரியில் செயல்பட்டுவருகிறது. அந்த நிறுவனத்தில் சோதனை செய்து பார்த்ததில் முறையான அனுமதி பெறாமல் விற்பனை செய்துவருவது தெரியவந்திருக்கிறது. இதே போன்று கடந்த மாதம் சென்னை பெசன்ட் நகரில் குளிர்பானம் அருந்திய 13 வயது சிறுமி உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

பாதிக்கப்பட்ட சிறுவன்
பாதிக்கப்பட்ட சிறுவன்

இந்தச் சம்பவத்தை அடுத்து, சிறுவர்கள் குளிர்பானம் வாங்கிய பெட்டிக்கடையில் அதிகாரிகள் சோதனை நடத்தினர். அந்தக் கடையில் காலாவதியான குளிர்பானங்களும், மாவு பாக்கெட்டுகளும் பறிமுதல் செய்யப்பட்டு அப்புறப்படுத்தப்பட்டன. சிறுவர்கள் குடித்த குளிர்பானத்தின் மாதிரி, கிண்டி கிங் பரிசோதனை மையத்துக்கும், சிறுவர்களின் ரத்த மாதிரியை ஆய்வுக்கும் அனுப்பப்பட்டுள்ளன. சிறுவர்கள் குடித்த குளிர்பான நிறுவனத்தின் குளிர்பானங்களைப் பறிமுதல் செய்யவும், தற்காலிகமாகக் குளிர்பான விநியோகத்தை நிறுத்தவும் அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பித்திருக்கிறது உணவு பாதுகாப்புத்துறை.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

சென்னையை மிரட்டும் பிரியாணி கடைகள்:

சென்னை மாநகரத்தில் மட்டும் சிறியதும் பெரியதுமாக 40,000-க்கும் அதிகமான பிரியாணிக் கடைகள் இருப்பதாக அதிகாரிகள் சொல்கிறார்கள். ஒரு கிலோ பிரியாணி 50 ரூபாய் முதல் விற்பனை செய்யப்படுகிறது. புற்றீசல்போல இருக்கும் கடைகளில், பெரும்பாலான கடைகள் உரிய அனுமதி பெறாமல் நடத்தப்படுகின்றன என்கிறார்கள் அதிகாரிகள். கொரோனாவுக்கு முன்புவரை ஆடு, மாடுகளை இறைச்சிக்காக வெட்டும்போது, கால்நடை மருத்துவர் பரிசோதனை செய்து சான்றளிப்பார். கொரோனாவுக்குப் பிறகு ஆட்டுத்தொட்டிகள் மூடப்பட்டுள்ளன. இதன் காரணமாக அவரவர்களே தேவைக்கேற்ப வெட்டிக்கொள்கிறார்கள். இதனால், உயிரற்ற ஆடு, மாடுகள் வெட்டப்பட்டாலும் அது தெரிவது கிடையாது.

பிரியாணி
பிரியாணி

பிரியாணியைப் பொறுத்தவரை, பல்வேறு இடங்களில் மலிவு விலைகளில் கிடைக்கும் தரமில்லாத அரிசிதான் பயன்படுத்தப்படுகிறது எனப் பல்வேறு ஆய்வுகளில் தெரியவந்திருக்கிறது. இது போன்ற மலிவான அரிசியைப் பயன்படுத்துவதால்தான் குறைவான விலையில் பிரியாணியை விற்பனை செய்ய முடிகிறது. சென்னையிலுள்ள ஒரு தனியார் அசைவ உணவகத்தில் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் மட்டன் பிரியாணியில் மட்டனுக்கு பதிலாகப் பூனை இறைச்சி பயன்படுத்துவது கண்டுபிடிக்கப்பட்டது. இந்தச் சம்பவம் பிரியாணி பிரியர்களுக்கு பெரும் அதிர்ச்சியாக இருந்தது. அதேபோல, இறந்துபோன ஆடு, மாடு, கோழிகளின் இறைச்சிகள் குறைந்த விலைக்குக் கிடைக்கின்றன என்பதால், பல கடைகளில் இந்த இறைச்சிதான் பயன்படுத்தப்படுகிறது என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிறது.

எல்லாக் கடைகளிலும் இது போன்ற நிகழ்வுகள்தான் நடைபெறுகின்றன என்பதல்ல. அதிக லாபம் வேண்டும் என்ற நோக்கத்தில் சிலர் மட்டுமே இது போன்ற செயல்களில் ஈடுபடுகிறார்கள். உணவு பாதுகாப்புத் துறையைப் பொறுத்தவரை, ஓர் உணவகத்தில் கெட்டுப்போன உணவே கண்டறியப்பட்டால் இரண்டு முறை அந்த உணவகத்துக்கு அபராதமும், நோட்டீஸ் மட்டுமே வழங்கப்படுகிறது. மூன்றாவது முறை அது தொடர்ந்தால் மட்டுமே அந்த நிறுவனத்துக்கு சீல் வைக்கப்படுகிறது.

உணவு பாதுகாப்புத் துறை
உணவு பாதுகாப்புத் துறை

இது குறித்து உணவு பாதுகாப்புத் துறை அதிகாரி ஒருவரிடம் பேசியபோது, ``சென்னை மட்டுமல்லாமல் தமிழகம் முழுவதுமே இந்த அனுமதி பெறாத குளிர்பானங்கள் வெவ்வேறு பெயர்களில் விற்பனை செய்யப்படுகின்றன. விலை மலிவாகக் கிடைப்பதால் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை இந்த வகை குளிர்பானங்களை வாங்கிக் குடிக்கிறார்கள். இது போன்ற உரிமம் இல்லாத குளிர்பானங்களை விற்பனை செய்யக் கூடாது என்றும், விற்பனை செய்யும் கடைகள்மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. மேலும், கெட்டுப்போன இறைச்சிகளை வைத்திருந்த கடைகளுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. இது தொடர்ந்தால் அந்தக் கடை உரிமையாளர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். பொதுமக்களும் மலிவு விலைகளில் கிடைக்கும் பொருள்களை வாங்காமல், நல்ல உணவுப் பொருள்களை வாங்கிப் பயன்படுத்த வேண்டும். தரமில்லாத பொருள்கள் விற்பனை செய்வது தெரிந்தால் உணவு பாதுகாப்புத்துறைக்கு 9444042322 என்ற எண்ணில் வாட்ஸ்அப் மூலம் புகார் தெரிவிக்கலாம்" என்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு