Published:Updated:

`2,000 பேருக்கு ஒரு படுக்கை; 11,000 பேருக்கு ஒரு மருத்துவர்!’- கொரோனாவை சமாளிக்குமா இந்தியா?

India Fight Against Corona
India Fight Against Corona ( Hasif Khan )

தற்போது பரவிவரும் இதே வேகத்தில் கொரோனா தொற்று பரவினால், இந்தியா முழுவதும் மருத்துவமனைகளில், வரும் மே மாதம் போதிய வசதிகள் இருக்காது என்று கூறப்படுகிறது. இந்தியா முழுவதும் உள்ள மருத்துவமனைகளில், சராசரியாக 2,000 பேருக்கு ஏறத்தாழ ஒரு படுக்கை மட்டுமே இருப்பது தெரியவந்துள்ளது.

கொரோனா வைரஸ் தொற்றைத் தடுப்பதற்காக போர்க்கால நடவடிக்கைகளை எடுத்துவருகின்றன உலக நாடுகள். இந்தியாவில், மத்திய அரசு 21 நாள்களுக்கு ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தியுள்ளது. பரவிவரும் கொரோனா தொற்றைத் தடுப்பதற்காக, தமிழ்நாட்டிலும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. கொரோனாவின் அச்சம் ஒவ்வொரு மனிதரிடமும் பரவி வரும் இந்தச் சூழலில், இந்தியாவில் உள்ள சுகாதாரத்துறையின் கட்டமைப்பு, கொரோனா தொற்றுக்கு எதிராக எவ்வாறு செயலாற்றும் என்ற கேள்வி எழுகிறது.

மிக வேகமாகப் பரவிவருகிறது கொரோனா வைரஸ். இந்தியாவில் கடந்த ஜனவரி 30 அன்று, முதன்முதலாக கொரோனாவால் பாதிக்கப்பட்ட நபர் கண்டறியப்பட்டார். தற்போது, இந்தியா முழுவதும் ஏறத்தாழ 691 பேர் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளனர். இதுவரை கொரோனாவால் 13 உயிர்ப்பலிகள் நிகழ்ந்துள்ளன. கொரோனா வைரஸ் ஒரு மனிதரிடமிருந்து மற்றொருவருக்கு, மிகவும் வேகமாகத் தொற்றும் தன்மையுடையது.

கொரோனா அலர்ட்
கொரோனா அலர்ட்
144 தடை உத்தரவு... என்ன செய்யலாம், என்ன செய்யக் கூடாது? சில கேள்விகளும் விடைகளும்! #FAQ

உலக சுகாதார நிறுவனத்தின் இயக்குநர் டாக்டர் டெத்ரோஸ் அதனொம் கெப்ரீயெசஸ் செய்தியாளர்கள் சந்திப்பில், ``கோவிட்-19 எனப்படும் கொரோனா தொற்று நோய், மிக வேகமாகப் பரவி வருகிறது. சீனாவில் முதல் நோயாளி தென்பட்டது முதல், உலகம் முழுவதும் நோயாளிகளின் எண்ணிக்கை 1 லட்சமாக அதிகரிப்பதற்கு 67 நாள்கள் ஆனது. அடுத்த 1 லட்ச நோயாளிகள் 11 நாள்களிலும், அதற்கடுத்த 1 லட்ச நோயாளிகள் 4 நாள்களிலும் அதிகரித்தனர். இந்த எண்கள், பல்வேறு மக்களின் சுகாதாரத்தையும், வாழ்வாதாரத்தையும் குறிக்கின்றன. உலக சுகாதார நிறுவனம் கையறுநிலையில் நின்றுகொண்டிருக்கவில்லை. நோய் பரவும் வேகத்தைக் குறைக்க வழிமுறைகளைப் பரிந்துரைத்துக்கொண்டிருக்கிறது” என்றார்.

கொரோனா தொற்று பரவும் வேகத்தை முன்வைத்து, இந்தியாவில் நோயாளிகளின் எண்ணிக்கையைச் சோதித்த பொது சுகாதார நிபுணர் பேராசிரியர் ரமணன் லக்‌ஷ்மிநாராயண், ``இந்தியாவில் 30 முதல் 50 கோடி பேர் வரை கொரோனாவால் பாதிக்கப்படுவர்; அவர்களுள் ஏறத்தாழ 20 லட்சம் பேர் உயிர் இழக்கலாம்” என்று கூறியுள்ளார். மேலும், இந்தியாவில் கொரோனா நோய் பாதிப்பைப் பரிசோதனை செய்யும் பணி ஆமை வேகத்தில் நடைபெறுவதால், அரசு தரும் எண்ணிக்கையைவிட அதிக அளவில் பாதிப்பு இருக்கலாம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இந்தியா Vs கொரோனா
இந்தியா Vs கொரோனா

தற்போது பரவி வரும் இதே வேகத்தில் கொரோனா தொற்று பரவினால், இந்தியா முழுவதும் மருத்துவமனைகளில், வரும் மே மாதம் போதிய வசதிகள் இருக்காது என்று கூறப்படுகிறது. இதற்காக, இந்தியா முழுவதும் பொது மருத்துவமனைகளில் பயன்பாட்டில் உள்ள படுக்கைகளின் எண்ணிக்கையைக் கணக்கிட்டபோது, இந்தியா முழுவதும் சராசரியாக 2,000 பேருக்கு ஏறத்தாழ ஒரு படுக்கை மட்டுமே இருப்பது தெரிய வந்தது. பீஹார், ஜார்க்கண்ட், குஜராத், உத்தரப் பிரதேசம், ஆந்திரப் பிரதேசம், சத்தீஸ்கர், மத்தியப் பிரதேசம், ஹரியானா, மகாராஷ்டிரா, அஸ்ஸாம், மணிப்பூர், ஒடிஷா ஆகிய மாநிலங்களில் தேசிய சராசரியைவிட குறைவான படுக்கைகளே உள்ளன. இவற்றுள் பீஹார் மாநிலத்தில், சராசரியாக 10,000 பேருக்கு ஏறத்தாழ ஒரு படுக்கை என்ற விகிதத்தில்தான் மருத்துவ வசதிகள் உள்ளன.

தமிழ்நாட்டில், சராசரியாக 1000 பேருக்கு 1 படுக்கை என்ற விகிதத்தில் உள்ளது. தமிழ்நாட்டைப் போல, கேரளா, டெல்லி ஆகிய மாநிலங்களில் சராசரியாக 1000 பேருக்கு 1 படுக்கை என்ற விகிதத்திலும், மேற்கு வங்காளம், சிக்கிம் ஆகிய மாநிலங்களில் சராசரியாக 500 பேருக்கு ஒரு படுக்கை என்ற விகிதத்திலும் வசதிகள் இருக்கின்றன.
தமிழ்நாடு Vs கொரோனா
தமிழ்நாடு Vs கொரோனா

60 வயதுக்கு மேற்பட்ட முதியோர், கொரோனா தொற்றுக்கு எளிய இலக்காக இருப்பதாக சர்வதேச அளவில் மருத்துவர்கள் கண்டறிந்துள்ளனர். அதன்படி, இந்தியா முழுவதும் மக்கள்தொகையில் ஏறத்தாழ 8.5 சதவிகிதம் பேர் 60 வயதுக்கும் மேற்பட்டோர். தமிழ்நாட்டில் 60 வயதைக் கடந்த முதியோர்கள் தமிழகத்தின் மக்கள்தொகையில் ஏறத்தாழ 10 சதவிகிதம் உள்ளனர். முதியோர் எண்ணிக்கையைக் கணக்கில்கொண்டு, படுக்கைகளின் விகிதத்தைக் கணக்கிடும்போது, தேசிய சராசரியாக 1000 பேருக்கு 5 படுக்கைகள் எனவும், தமிழ்நாடு அளவில் 1000 பேருக்கு 8 படுக்கைகள் எனவும் தெரியவருகிறது.

இந்தக் கணக்குகளில் பொது மருத்துவமனைகள், ராணுவ மருத்துவமனைகள், தொழிலாளர் காப்பீட்டு மருத்துவமனைகள் முதலானவையுடன், நிலைமை மோசமடைந்தால் ஆயுஷ் மருத்துவமனைகள் பயன்படுத்தப்படலாம் என்ற அடிப்படையில் கணக்கில் சேர்த்துள்ளோம். தனியார் மருத்துவமனைகள் குறித்த தரவுகள் பொதுவில் வெளியிடப்படவில்லை.

உலக சுகாதார நிறுவனம் அறிவுறுத்திய `1000 பேருக்கு ஒரு மருத்துவர்’ என்ற அறிவுரையையும் கடந்த காலங்களில் இந்தியா பின்பற்றத் தவறியதால், நாடு முழுவதும் ஏறத்தாழ 11,000 பேருக்கு ஒரு மருத்துவர் என்ற விகிதத்தில் மருத்துவர்கள் பணியாற்றிவருகின்றனர். மற்ற மாநிலங்களோடு ஒப்பிடுகையில், தமிழ்நாடு அதிகபட்சமாக ஏறத்தாழ 9500 பேருக்கு ஒரு மருத்துவர் என்ற விகிதத்தில் செயல்பட்டுவருகிறது.
அமைச்சர் விஜயபாஸ்கர் ஆய்வு
அமைச்சர் விஜயபாஸ்கர் ஆய்வு
``அடுத்த வாரம் ஆபத்து அதிகம்!”- எச்சரித்த ஆய்வு... அதிர்ச்சியடைந்த மோடி

தற்போதைய தரவுகள் கொரோனா பரவலையும், இந்தியாவின் தற்கால சுகாதாரக் கட்டமைப்பையும் ஒப்பிட்டுக் கணக்கிடப்பட்டுள்ளன. ஊரடங்கு, சமூக விலகல் முதலானவை இந்தப் புள்ளிவிவரங்களில் மாற்றத்தை ஏற்படுத்தலாம். மேலும், தமிழ்நாட்டில் படுக்கைகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும் எனவும், தனியார் மருத்துவமனைகள் பயன்படுத்தப்படும் எனவும் மாநில சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. இது, கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் எனத் தெரிகிறது.

கடந்த காலங்களில், மத்திய மாநில அரசுகள் பொது சுகாதாரத்திற்குப் போதிய நிதி ஒதுக்காததும், மருத்துவத் துறையில் தனியார் நிறுவனங்களுக்கு முக்கியத்துவம் அளித்ததன் விளைவைச் சந்தித்துவருகின்றனர் சாமான்ய இந்திய மக்கள். அரசின் போர்க்கால நடவடிக்கைகளும், மக்களின் ஒத்துழைப்பும் மட்டுமே, கொரோனாவைக் கட்டுப்படுத்த உதவும். கொரோனாவின் பேராபத்து முடிவடைந்தவுடன், மத்திய மாநில அரசுகள் பொது சுகாதாரத்தில் கவனம்செலுத்துவது எதிர் வரும் அபாயங்களைத் தவிர்க்க உதவும்.

அடுத்த கட்டுரைக்கு