Election bannerElection banner
Published:Updated:

இரவு நேர ஊரடங்கு பயனளிக்குமா? - மோடி வலியுறுத்தும் `கொரோனா லாக்டெளனின்' அவசியம் என்ன?

இரவு ஊரடங்கு
இரவு ஊரடங்கு

``இந்த இரவு நேர ஊரடங்கை `கொரோனா ஊரடங்கு' என்று மக்கள் மத்தியில் பிரபலப்படுத்த வேண்டும்'' எனப் பிரதமர் மோடி மாநில முதல்வர்களிடம் கூறியிருக்கிறார். இரவு நேர ஊரடங்கின் மூலம் கொரோனாவைக் கட்டுப்படுத்த முடியுமா?!

சமீபகாலமாக, இந்தியாவில் கொரோனா தொற்று அதிக அளவில் பரவிவருகிறது. அதுவும் கடந்த சில நாள்களாக இந்திய அளவில், தினசரி லட்சத்துக்கும் அதிகமானோர் கொரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டுவருகின்றனர். இந்தநிலையில் கொரோனாவைக் கட்டுக்குள் கொண்டுவருவது குறித்து மாநில முதல்வர்களுடன் காணொலி வாயிலாக ஆலோசனை நடத்தினார் பிரதமர் மோடி.

அப்போது பேசிய அவர், ``கொரோனாவை ஒரு போர் நிலையென எதிர்த்து நாம் போராட வேண்டும். கடந்த ஆண்டை ஒப்பிடும்போது நம்மிடம் அனுபவங்களும், தடுப்பூசிகளும் இருக்கின்றன. இரவு 9 அல்லது 10 மணி முதல் காலை 5 அல்லது 6 மணி வரை ஊரடங்கு அமல்படுத்தினால் நல்லது. இந்த இரவு நேர ஊரடங்கை `கொரோனா ஊரடங்கு' என்று மக்கள் மத்தியில் பிரபலப்படுத்த வேண்டும். இந்த `கொரோனா ஊரடங்கு' மக்கள் மத்தியில் கொரோனா வைரஸ் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும்'' என்று பேசியிருந்தார்.

மோடி
மோடி

இந்த இரவு ஊரடங்கு என்பது நமக்குப் புதிதல்ல. கடந்த ஆண்டு மே 17 அன்று, இரவு 7 மணி முதல் காலை 7 மணி வரை (12 மணி நேரம்) எவ்வித தளர்வுமின்றி முழு ஊரடங்கு அமலில் இருக்கும் என மத்திய அரசு அறிவித்திருந்தது. அதன் பிறகு ஆகஸ்ட் 1-ம் தேதி முதல் இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரை இரவு ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட வேண்டுமென உத்தரவிடப்பட்டது.

கொரோனா பரவல்: தடைகள்.. புதிய கட்டுப்பாடுகள்! - அமலாகும் புதிய நடைமுறைகள் என்னென்ன? முழுத் தகவல்

அதேபோல தற்போதும் மகாராஷ்டிரா, டெல்லி, ராஜஸ்தான் உள்ளிட்ட சில மாநிலங்களிலும், சில நகரங்களிலும் இரவு ஊரடங்கு அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த இரவு ஊரடங்கு குறித்து பலவிதமான கருத்துகள் சமூக வலைதளங்களில் பரவிவருகின்றன. ``பெரும் தீயை அணைப்பதற்குக் குழந்தைகள் விளையாடும் Water Gun (தண்ணீர் துப்பாக்கி)-ஐ பயன்படுத்துவது போலத்தான் இந்த இரவு ஊரடங்கு. இதனால் எந்தப் பயனும் இல்லை'' என்றும் ``அனைவரும் தூங்கும் நேரத்தில் ஏற்கெனவே ஊர் அடங்கிட்தான் இருக்கும். பிறகு எதற்கு ஊரடங்கு'' என்றும் இரவு ஊரடங்கைக் கலாய்த்துப் பல மீம்கள் வெளியிடப்பட்டு வருகின்றன.

உண்மையிலேயே இரவு ஊரடங்கு மூலம் கொரோனாவைக் கட்டுக்குள் கொண்டு வர முடியுமா என்கிற கேள்வி நம் அனைவரிடமும் இருக்கும். இந்தக் கேள்வியை ஆங்கில ஊடகம் ஒன்று, ஹரியானாவிலுள்ள அசோகா பல்கலைக்கழகத்தின் இயற்பியல் மற்றும் உயிரியல்துறை பேராசிரியர் கௌதம் மேனனிடம் முன்வைத்தது.

இரவு பொதுமுடக்கம்
இரவு பொதுமுடக்கம்

அதற்கு, ``இரவு நேர ஊரடங்கு என்பது எந்த வகையிலும் கொரோனாவைக் கட்டுக்குள் கொண்டு வர உதவும் என்று எதிர்பார்க்க முடியாது. ஆனால், இரவு பகல் பாராமல் கொரோனாவை எதிர்த்துப் போராடிவரும் சுகாதாரத்துறை, காவல்துறை ஊழியர்களுக்குச் சற்று ஓய்வு கொடுப்பதற்காக இந்த முறை அமல்படுத்தப்பட்டிருக்கலாம்'' என்று பதிலளித்தார் பேராசியர் கெளதம் மேனன்.

பிரேசில், அமெரிக்கா, பிரான்ஸ்... கொரோனாவால் மீண்டும் தவிக்கும் உலக நாடுகளின் நிலை என்ன?

இவரைப்போலவே இன்னும் சில அறிவியல் பேராசிரியர்கள், ``இரவு நேர ஊரடங்கால் கொரோனாவைக் கட்டுக்குள் கொண்டு வர முடியும் என அறிவியல்ரீதியாக நிரூபிக்கப்படவில்லை'' என்ற கருத்தை முன்வைக்கின்றனர். ஆனால், மருத்துவர்கள் சிலர் இந்த இரவு ஊரடங்கு குறித்து வேறு சில கருத்துகளை அடுக்குகிறார்கள்.

``இரவு ஊரடங்கை நடைமுறை மற்றும் தத்துவார்த்த அடிப்படையில் நியாயப்படுத்த முடியும். இரவு நேர ஊரடங்கு மூலம் பார்ட்டிகளுக்காக உள் அரங்குகளில் ஒன்று கூடுவோர்களைத் தடுக்க முடியும். உணவகங்களில் அமர்ந்து உணவருந்துபவர்களையும் தடுக்க முடியும். உணவு அருந்தும்போதும், பார்ட்டியில் ஈடுபடும்போதும் மாஸ்க் அணிய முடியாது. எனவே, இது போன்ற இடங்களில் கோரோனா அதிகம் பரவும் என்பதால் இரவு ஊரடங்கு அவசியமாகிறது. இந்தியா முழுவதும் இல்லையென்றாலும், பார்ட்டிகள் அதிகம் நடைபெறும் பெரு நகரங்களிலாவது இரவு நேர ஊரடங்கை அமல்படுத்துவது அவசியம்.

தத்துவார்த்த அடிப்படையில் பார்த்தால், பகல் நேரத்தைவிட குளிர்ச்சி மிகுந்த இரவு நேரங்களில்தான் வைரஸ் எளிதாகப் பரவக்கூடும். புற ஊதா ஒளி (Ultra Violet light) குறைந்த அளவில் இருக்கும் இரவு நேரங்களில் வைரஸ் நீண்ட நேரம் தாக்குப் பிடிக்கும். எனவே, இரவு நேரங்களில் நிச்சயம் கொரோனாவின் தாக்கம் அதிகமாகவே இருக்கும்'' என்கிறார்கள் மருத்துவர்கள்.

corona
corona

மேலும், ``பிரதமர் மோடி இரவு ஊரடங்கு குறித்துப் பேசும்போதுகூட, இதை `கொரோனா ஊரடங்கு' என்று மக்கள் மத்தியில் பிரபலப்படுத்துங்கள் என்று கூறியிருக்கிறார். கொரோனா வைரஸ் குறித்து மக்கள் மறந்துவிட்டதாகவே தெரிகிறது. எல்லா இடங்களிலும் கூட்டம் கூடுகிறார்கள். மாஸ்க் அணிவது உள்ளிட்ட கொரோனா தடுப்பு விதிமுறைகளையும் மறந்துவிட்டார்கள். எனவே, இன்னும் முழுமையாக கொரோனா வைரஸ் இந்தியாவைவிட்டுப் போகவில்லை என்று நினைவுபடுத்துவதற்காவது இந்தியா முழுவதும் இரவு ஊரடங்கு போடப்பட வேண்டும். அப்படி இரவு நேர ஊரடங்கு போடப்பட்டால் அது மக்களிடையே கொரோனா குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும்'' என்கிறார்கள் மருத்துவர்கள்.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு