Published:Updated:

தடுப்பூசியின் பாதுகாப்பு, செயல்திறன்... கொரோனா அச்சம் குறைந்த சூழலில் மக்களிடையே ஆர்வம் இருக்குமா?

தடுப்பூசி
தடுப்பூசி

பொதுமக்களுக்கு கொரோனா வைரஸ் குறித்த அச்சம் குறைந்திருக்கும் நிலையில், தடுப்பூசி போட்டுக்கொள்ள மக்கள் ஆர்வம் காட்டுவார்களா?

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

இந்தியாவில் கடந்த ஆண்டு தொடக்கத்தில் பரவ ஆரம்பித்த கொரோனா வைரஸ், உலகின் பல்வேறு நாடுகளிலும் பேய் ஆட்டம் ஆடிச் சென்றது. உலகின் வல்லரசு நாடுகளையும் விட்டுவைக்கவில்லை இந்த வைரஸ். இந்த நூற்றாண்டில் மனிதகுலம் பார்த்திராத பல்வேறு பாதிப்புகள் நம் கண்முன்னே அரங்கேறின. உலக மக்கள் அனைவருமே எதிர்பார்த்துக் காத்திருந்தது இந்த வைரஸை ஒழிப்பதற்கான மருத்தைத்தான்.

கொரோனா வைரஸ்
கொரோனா வைரஸ்

வைரஸ் பரவல் ஆரம்பித்த காலம் தொட்டு வைரஸ் பரவலைத் தடுக்கும் முயற்சி ஒருபுறம் நடந்துகொண்டிருக்க, இன்னொருபுறம் தடுப்பு மருந்து தயாரிப்பில் உலகின் பல்வேறு முன்னணி மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் தீவிரமாக ஈடுபட்டுவந்தன. ஒவ்வொரு பகுதிக்கும் வைரஸின் தன்மை தொடர்ந்து உருமாறிக்கொண்டே இருந்ததால், மருந்து கண்டுபிடிப்பதில் சற்று தொய்வு ஏற்பட்டிருந்தது. இருந்தபோதிலும் உலகின் பல்வேறு நிறுவனங்களும் மருந்தைக் கண்டுபிடித்து முடித்திருந்தன.

அந்த மருந்துகளில் சில மருந்துகள் மட்டும் அனைத்துக்கட்ட சோதனைகளையும் முடித்து, மனிதர்களுக்குச் செலுத்துவதற்குத் தயாரானது. சீனா, அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட பல்வேறு உலக நாடுகளும் பொதுமக்களுக்குத் தடுப்பூசி போடும் பணியை மேற்கொண்டனர். பெரும்பாலான நாடுகளில் தடுப்பூசிகளில் முன்களப் பணியாளர்களுக்குத்தான் முன்னுரிமை வழங்கப்பட்டிருந்தது.

கொரோனா வைரஸ்
கொரோனா வைரஸ்

இந்தியாவைப் பொறுத்தவரை மிக அதிகமாகக் காணப்பட்ட வைரஸின் தாக்கம், கடந்த சில மாதங்களில் குறைந்துவந்தது. ஒரு சில மாநிலங்களைத் தவிர்த்து பல்வேறு மாநிலங்களிலும் கொரோனா வைரஸின் தாக்கம் குறைந்திருக்கிறது. பொதுமக்களும் மெல்ல மெல்ல இயல்புநிலைக்குத் திரும்பிவருகின்றனர். இந்தநிலையில், இந்தியாவில் ஆக்ஸ்ஃபோர்டின் கோவிஷீல்டு தடுப்பூசியை சீரம் நிறுவனம் தயாரித்துவருகிறது. அதேபோல், கோவாக்ஸின் தடுப்பூசியை பாரத் பயோடெக் நிறுவனமும் தயாரித்துவருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இந்த இரண்டு கொரோனா தடுப்பூசிகளுக்கு அவசரகால diஅனுமதியை மத்திய அரசு வழங்கியிருக்கிறது. விரைவில் இந்தியா முழுவதும் தடுப்பூசி போடும் பணி தொடங்குவதற்கான ஏற்பாடுகள் வேகமாக நடந்துவருகின்றன. தடுப்பூசி மருந்தை அந்தந்த மாநிலங்களுக்கு அனுப்பும் பணி தொடங்கப்பட்டிருக்கிறது. அந்த வகையில் தமிழகத்துக்கும் தடுப்பூசி வந்து சேர்ந்திருக்கிறது.

கொரோனா பரிசோதனை
கொரோனா பரிசோதனை

இந்திய அளவில் கொரோனா அதிகம் பாதித்த மாநிலங்களின் வரிசையிலிருந்த தமிழகத்தில், தற்போது மெல்ல மெல்ல கொரோனா பாதிப்பு குறைத்துவருகிறது. பல ஆயிரங்களிலிருந்த புதிய பாதிப்பு தற்போது ஆயிரத்துக்கும் குறைவான எண்ணிக்கையில் இருக்கிறது. தற்போது தமிழகத்தைப் பொறுத்தவரை கொரோனா பாதிப்புகளையும், கொரோனா வைரஸையும் மறந்து பொதுமக்கள் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பியிருக்கிறார்கள் என்றேதான் கூற வேண்டும்.

பொதுமக்கள் மட்டுமல்ல, தமிழக முதலமைச்சர் உட்பட தமிழக அரசியல் தலைவர்களும் சரி, ஆயிரக்கணக்கான மக்களைக் கூட்டி தேர்தல் பிரசார கூட்டங்களை நடத்திவருகிறார்கள். இன்னொரு பக்கம், சினிமா ரசிகர்கள் கூட்டம் கூடி, ஆட்டம் ஆடி தங்கள் கதாநாயகர்களின் படங்கள் வெளியாவதைக் கொண்டாடிவருகிறார்கள். பொது இடங்களில் பெரும்பாலான மக்கள் முகக்கவசங்களை அணிவதும் இல்லை, சமூக இடைவெளியைக் கடைப்பிடிப்பதும் இல்லை.

`விழித்திரு, விலகியிரு, வீட்டிலேயே இரு' என்று கூறிய முதலமைச்சரே கூட்டம் கூட்டி தொடர்ச்சியாகத் தேர்தல் பிரசாரத்தை மேற்கொண்டு வருகிறார். சமூக இடைவெளியை `கடைப்பிடியுங்கள், முககவசம் அணியுங்கள்’ என்று கூறிவரும் அரசும் பெரிதாக எதுவும் கண்டுகொள்வதில்லை. பொதுமக்களும் கொரோனா வைரஸ் என்ற ஒன்றை மறந்து தங்களின் இயல்பு வாழ்க்கைக்கு மாறிவிட்டனர். இந்தநிலையில் பொதுமக்களைத் தடுப்பூசி போட்டுக்கொள்ளுங்கள் என்று கூறினால் மக்கள் போட்டுக்கொள்வார்களா என்ற கேள்வி எழுகிறது.

கொரோனா தடுப்பூசிகளுக்கு ஒப்புதல்; கேள்வியெழுப்பும் நிபுணர்கள் - என்ன நடந்தது?

இந்தநிலையில்தான் தமிழகத்தில் கோவிஷீல்டு மற்றும் கோவாக்ஸின் தடுப்பு மருந்துகள் வந்தடைந்தன. இந்த மருந்துகள் சென்னையிலிருந்து அனைத்து மாவட்டங்களுக்கும் பிரித்து அனுப்பப்பட்டு வருகின்றன. முதற்கட்டமாக முன்களப் பணியாளர்களுக்கு இந்தத் தடுப்பூசியைப் போடுவதற்குத் திட்டமிடப்பட்டிருக்கிது. தடுப்பூசிகள் பாதுகாப்பு குறித்த சந்தேகங்கள் நிலவுவதால், மருத்துவ ஊழியர்களே இந்த தடுப்பூசியைப் போடுவதற்குத் தயக்கம் காட்டுவதாக மருத்துவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தமிழகம் வந்தடைந்த  தடுப்பு மருந்துகள்
தமிழகம் வந்தடைந்த தடுப்பு மருந்துகள்

ஒருமுறை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் அடுத்த மூன்று மாதங்களுக்குத் தடுப்பூசிகளை எடுத்துக்கொள்ள வேண்டாம் என்று அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்திருக்கிறார்கள். மேலும், அங்கு வழங்கப்படும் தடுப்பூசிகளின் ஆய்வு முடிவுகள் மற்றும் பாதுகாப்பு குறித்த வெளிப்படையான தகவல்கள் பொதுவெளியில் உள்ளன.

கொரோனா: `உலகின் மிகப்பெரிய தடுப்பூசி போடும் பணி; வதந்திகளுக்கு செவி சாய்க்காதீர்!’ - பிரதமர் மோடி

ஆனால், இந்தியாவிலுள்ள தடுப்பூசிகள் பாதுகாப்பு தன்மை குறித்த உரிய விளக்கங்களும், ஆய்வு முடிவுகளும் பொதுவெளியில் இல்லை. தடுப்பூசிகளின் பாதுகாப்பு குறித்த சந்தேகங்கள் மக்களின் மனதில் ஆழமாக எழுந்திருக்கிறது. அந்த சந்தேகங்கள் தீர்க்கப்படாமல் பொதுமக்கள் எப்படி தடுப்பூசிகளைப் போட்டுக்கொள்வார்கள். அதிலும் தமிழகத்தில் அதிகரித்திருந்த கொரோனா தொற்று குறைந்திருக்கும் சூழலில் இன்னும் சிறிது காலம் பொறுத்திருந்து தடுப்பூசிகளைப் பயன்படுத்தலாம் என்பது மருத்துவத்துறை சார்ந்த சிலரின் கருத்தாக இருக்கிறது.

கொரோனா தடுப்பூசி ஒத்திகை
கொரோனா தடுப்பூசி ஒத்திகை

அனுமதி அளித்திருக்கும் அரசியல்வாதிகளும், அமைச்சர்களும் முதற்கட்டமாகத் தடுப்பூசிகளைப் போட்டுக்கொள்வார்களா என்ற கேள்வி பொதுவெளியும் வெகுவாக எழுந்திருக்கிறது.

கொரோனா தடுப்பூசி குறித்து தமிழக சுகாதாரத்துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணனிடன் பேசினோம், ``தடுப்பூசிகள் முதற்கட்டமாக முன்களப் பணியாளர்களுக்கு வழங்கப்படவிருக்கின்றன. அடுத்தகட்டமாக ரத்த அழுத்தம், சர்க்கரைநோய், இதயநோய் போன்ற கூட்டு நோய் உள்ளவர்களுக்கு வழங்கப்படும். அடுத்ததாக, தேவையின் அடிப்படையில் அனைவருக்கும் வழங்கப்படும். மத்திய அரசின் ஒழுங்குமுறை அமைப்பால் தடுப்பூசியின் பாதுகாப்பு மற்றும் செயல்திறன் உறுதிப்படுத்தப்பட்ட பின்னரே அறிமுகப்படுத்தப்பட்டிருக்கிறது என்று மத்திய அரசு தெளிவுபடுத்தியிருக்கிறது. யாருக்கும் கட்டாயப்படுத்தி தடுப்பூசி போடப்பட மாட்டாது. இருப்பினும், தற்காப்புக்கும், நோய்ப் பரவலைத் தடுப்பதற்கும் தடுப்பூசி போட்டுக்கொள்வது சிறந்தது" என்றார்.

சுகாதாரத்துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணன்
சுகாதாரத்துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணன்

தொடர்ந்து பேசிய அவர், ``தற்போது முன்னுரிமை வழங்கப்பட்டவர்களுக்குத் தடுப்பூசி போடப்படவிருக்கிறது. மத்திய அரசு அனுமதி வழங்கியதும், முன்பதிவு வசதி தொடங்கப்படும். ஒருவர் தடுப்பூசியைப் போட்டுக்கொள்வதற்கு முன்கூட்டியே பதிவு செய்ய வேண்டும். அப்படிப் பதிவு செய்பவர்களுக்குத் தடுப்பூசி போடப்படும் இடம் குறித்த தகவல்கள் பகிரப்படும். மற்ற தடுப்பூசிகளைப்போல, சிலருக்குக் காய்ச்சல், வலி போன்ற எதிர்மறை நிகழ்வுகள் நடப்பதற்கு வாய்ப்பிருக்கிறது. அப்படி ஏற்படுபவர்களுக்கு சிகிச்சை அளிக்க மருத்துவர்கள் தயார்நிலையில் இருக்க அறிவுறுத்தப்பட்டிருக்கிறார்கள். அட்டவணை அடிப்படையில், கால இடைவேளையில் இரண்டு தடுப்பூசிகளைப் போட்டுக்கொள்வது அவசியம். இரண்டாவது தடுப்பூசி போட்டுக்கொண்ட பின்னர் இரண்டு வாரங்களுக்குப் பிறகு நோய் எதிர்ப்புத் திறன் உருவாகும்" என்று கூறினார்.

தடுப்பூசி விவகாரத்தில் எந்த அரசியல் லாப நோக்கத்துக்காகவும் செயல்படாமல், எவ்வித அவசரமும் இல்லாமல் அரசு செயல்பட வேண்டும் என்பதே ஒட்டுமொத்த மக்களின் கருத்தாக இருக்கிறது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு