Published:Updated:

`அதிகரிக்கும் மருந்துகளின் விலை; என்ன செய்யப்போகிறீர்கள்?' - முதல்வருக்கு ஓர் மருத்துவரின் கடிதம்

முதல்வர் ஸ்டாலின்

ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண்போம்" எனும் பேரறிஞர் அண்ணாவின் வாக்கு வெறும் வாசகம்தானா? மருந்துகளின் விலையேற்றத்தைத் தடுக்க நடவடிக்கைகள் வேண்டாமா?

`அதிகரிக்கும் மருந்துகளின் விலை; என்ன செய்யப்போகிறீர்கள்?' - முதல்வருக்கு ஓர் மருத்துவரின் கடிதம்

ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண்போம்" எனும் பேரறிஞர் அண்ணாவின் வாக்கு வெறும் வாசகம்தானா? மருந்துகளின் விலையேற்றத்தைத் தடுக்க நடவடிக்கைகள் வேண்டாமா?

Published:Updated:
முதல்வர் ஸ்டாலின்

கொரோனா பேரிடர் காரணமாக அடித்தட்டு மக்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட நிலையில், கொரோனா தவிர்த்த பல்வேறு நோய்கள் சரியாக சிகிச்சை அளிக்கப்படாத நேரத்தில், மக்கள் பயன்படுத்தும் அனைத்து மருந்துகளின் விலையேற்றம் (10.7%) ஏழை/எளிய மக்களை பாதிப்பதாக உள்ளது. அதன் தாக்கத்தைக் குறைப்பது காலத்தின் கட்டாயமாக இருப்பதால் அது பற்றி அரசு சிந்தித்து தக்க முடிவுகளை எடுக்க இருக்கும் வாய்ப்புகளை அரசின் கவனத்துக்குக் கொண்டு செல்ல சமூக ஆர்வலரும் மருத்துவருமான வீ.புகழேந்தி முதலமைச்சருக்கு ஒரு கடிதம் எழுதியிருக்கிறார்...

தமிழக முதல்வர் மாண்புமிகு மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு, மனம்திறந்த மடல்...

சட்டமன்றத்தில் மேற்கு மாம்பலம் அயோத்தியா மண்டபம் குறித்தான சர்ச்சையின்போது, பா.ஜ.க உறுப்பினர்கள் மக்களை அன்றாடம் பாதிக்கும் பிரச்னைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என சரியான பதிலை அளித்துள்ளீர்கள். மகிழ்ச்சி. பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயர்வை பற்றிப் பேசியுள்ளீர்கள். நல்ல செய்தி.

சில மாதங்களுக்கு முன் மத்திய அரசு, பெட்ரோல் சுங்க வரியில் 5% குறைத்தபோதும், மாநில அரசு தனது மதிப்பு கூடுதல் வரியில் மாற்றம் எதுவும் செய்யவில்லை. (மாநில அரசிற்கு 1 லிட்டர் பெட்ரோல் விற்றால் ரூ.21.46 வரியாகக் கிடைக்கிறது.) மாறாக பெட்ரோல் விலையில் லிட்டருக்கு ரூ.3 குறைத்தது வரவேற்கத் தக்கது. எனினும், கொள்கை முடிவில் மதிப்பு கூடுதல் வரியில் மாற்றம் செய்யப்படவில்லை.

பெட்ரோல் விலை
பெட்ரோல் விலை

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

டீசல் விலைக் குறைப்பும் தங்களின் தேர்தல் அறிக்கையில் இடம் பெற்றிருந்தாலும், நிதிநிலைமை மோசமாக இருப்பதால் அது உடனடி சாத்தியம் இல்லை எனக் கூறிவிட்டீர்கள். மத்திய அரசும் நிதிநிலைமையைக் காரணம் காட்டி டீசல் விலையைக் குறைக்க முடியவில்லை எனக் கூறினால் தங்களின் பதில் என்னவாக இருக்கும்?

டீசல் விலை குறையாததால், சரக்கு வாகனங்கள் மூலம் தொலைதூர இடங்களுக்கு அடிப்படை பொருள்களை எடுத்துச் செல்வதால். உதாரணம், - பழங்கள் விலை - கணிசமாக உயர்ந்துள்ளது. தேர்தல் வாக்குறுதிக்கு ஏற்ப டீசல் விலையைக் குறைத்திருந்தால் மக்களுக்கு அது நிச்சயம் நல்ல பலன்களைக் கொடுத்திருக்கும். அதைவிட இன்னொரு மிக முக்கிய பிரச்னை மக்களை அச்சுறுத்திக்கொண்டிருக்கிறது. அது மக்கள் பயன்படுத்தும் மருந்துகளின் கணிசமான விலையேற்றம்.

மருந்து
மருந்து

மருந்துகளின் விலை என்பது மத்திய அரசு, மாநில அரசின் கைகளில் உள்ளது. மருந்து விலை மத்திய அரசை அதிகம் சார்ந்திருந்தாலும், தன் பங்களிப்பை அளிப்பதிலும், மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுப்பதிலும் மாநில அரசின் பங்கு இருக்கிறது. (தமிழக அரசு பாஜ.க உறுப்பினர்களை, மாநில அரசுக்கு சேர வேண்டிய GST வரி நிலுவைத் தொகையான 20,000 கோடியை கேட்டு பெற்றுத் தருமாறு பணிப்பது).

வெகுவிரைவில், தமிழகம் / இந்தியாவில் 800-க்கும் மேற்பட்ட மிகத் தேவையான மருந்துகளும், மருத்துவ உபகரணங்களின் விலையும் (மொத்தம்-885) இதுவரை கண்டிராத 10.7% விலை உயர்வைச் சந்திக்க உள்ளது. சென்ற வருடம்கூட மருந்தின் விலையேற்றம் 5% ஆக மட்டுமே இருந்தது. மேலும் மிகத் தேவையான மருந்துகளின் விலை கூட (வலிபோக்கிகள், கிருமிக்கொல்லி மருந்துகள், வைட்டமின்கள், ரத்த அழுத்தம், சர்க்கரைநோய், புற்றுநோய் மருந்துகள்...) விலையேற்றம் கண்டால் சாதாரண ஏழை/எளிய மக்கள் பாதிப்படைவார்கள் என்பது நிச்சயம். ``ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண்போம்" எனும் பேரறிஞர் அண்ணாவின் வாக்கு வெறும் வாசகம்தானா? மருந்துகளின் விலையேற்றத்தைத் தடுக்க நடவடிக்கைகள் வேண்டாமா?

மெடிக்கல்
மெடிக்கல்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

சில முக்கிய செய்திகள்

தமிழகத்தில் 2016-ல் கிருஷ்ணகிரியில் செய்த ஆய்வில் 60% மக்கள், அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை சரியில்லை என்றும்,போதுமான வசதிகள் இல்லை என்றும், ஊழல் மலிந்துள்ளது என்றும் தெரிவித்துள்ளது கனடா நாட்டின் பல்கலைக்கழக ஆய்வில் தெரிய வந்துள்ளது.

இந்தியாவில் சமீபத்தில் செய்த ஆய்வில் மருத்துவ சிகிச்சைக்காக தன் சொந்தச் செலவில் பணம் செலவழிக்க வேண்டிய சூழலால் 65% மக்கள் (5.5 கோடி மக்கள்) வறுமைக் கோட்டுக்குக் கீழே தள்ளப்படும் சூழல் இருந்துள்ளது என்றும், மருத்துவ செலவில் மூன்றில் இரண்டு பங்கு (2/3) மருந்து (Medicines) செலவுக்காகப் பயன்படுவதால் 3.8 கோடி பேர் வறுமைக் கோட்டுக்குக் கீழ் தள்ளப்படுகின்றனர் என்ற செய்தியும் உள்ளது.

தமிழகத்தில் 56% பேர் வறுமைக் கோட்டுக்குக் கீழ் தள்ளப்படுகின்றனர். (மற்ற மாநிலங்களில் அது 60% தாண்டி உள்ளது. அந்த அளவில் தமிழக அரசின் செயல்பாடு பாராட்டத்தக்கது.) 2021ல் தமிழகத்தில் செய்த ஆய்வில் 78% மருத்துவமனைகள், 44.6% மருந்து நிலையங்கள், 77.7% மருத்துவமனை படுக்கைகள் அரசு செயல்பாட்டில் உள்ளது நல்ல செய்திதான். தலைநகர் சென்னையில், 50% படுக்கைகள், 40% மருத்துவர்கள்-தனியார்மயம் என்றே அதிக அளவில் உள்ளது.

மருத்துவர் புகழேந்தி
மருத்துவர் புகழேந்தி

தமிழகத்தின் பிற இடங்களில், 21%படுக்கைகள்,
29% மருத்துவர்கள் தனியார்மயம் என்றுள்ளது. இந்திய அளவில்,
35% படுக்கைகள், 30% மருத்துவர்கள் தனியார்மயம் என்றுள்ளது.
தமிழகத்தில் புறநோயாளிகள் என வரும்போது 70 - 85% தனியாரைச் சார்ந்தும், உள்நோயாளிகள் என வரும்போது
கிராமப்புறத்தில்-52% நகர்புறத்தில்-61% பேரும் அரசு மருத்துவமனைகளையே நம்பியுள்ளனர்.

தமிழகத்தில் ஆரம்ப சுகாதார நிலையங்களில் நாள்பட்ட நோய்களுக்கு (குறிப்பாக சர்க்கரை, ரத்த அழுத்தம்) கொடுக்கப்படும் மருந்துகளின் தரம் சரியில்லை எனும் குற்றச்சாட்டுகள் உள்ளநிலையில் அதை ஆராய்ந்து மருந்தின் தரத்தை உறுதிப்படுத்த தகுந்த நடவடிக்கைகள் எடுக்கப்படுமா?

மத்திய அரசுகூட. மலிவுவிலை மருந்துக் கடைகளை திறந்தாகக் கூறினாலும், அவை எல்லா இடங்களிலும் இல்லை. குறிப்பாக கிராமப்புறங்களில் அதிகம் இல்லை. மேலும் 600 மருந்துகள் அங்கு கிடைக்கும் என உறுதியளித்தாலும், அதிகபட்சம் 100 - 150 மருந்துகளே அங்கு கிடைக்கின்றன.

மருந்தின் மீதான வரிகள்

GST வரி அமுலுக்கு வருமுன் பொதுவாக மருந்து வரி 9% என இருந்தது, தற்போது 0, 5, 12, 18% என வகைப்படுத்தப்பட்டுள்ளது. இதில் பெரும்பாலான மருந்துகள் 12%வரியின்(VAT) கீழ் வருகின்றது. (காய்ச்சலுக்குப் பயன்படும் பாரசிட்டமால் உட்பட)
முந்தைய வரியை விட இது 2.3% அதிகம்.

உயிர்காக்கும் சில மருந்துகள் மட்டுமே 5%வரிக்குள்- (உதாரணம். அமிக்காசின் ஊசி) வருகிறது. மதிப்புக் கூட்டல் வரி 12%ல் இருந்து அன்றாடம் பயன்படுத்தும் மருந்துகளை (வலிபோக்கிகள், கிருமிக்கொல்லி மருந்துகள், காய்ச்சல் மாத்திரைகள், சர்க்கரை, ரத்த அழுத்தத்துக்கான மாத்திரைகள்...) 5% வரிக்கு ஏன் மாற்றம் செய்யக் கூடாது? இதனால் விலையை ஓரளவுக்காவது கட்டுக்குள் கொண்டு வரமுடியும். எத்தனையோ கோடிகள் பெருநிறுவனங்கள் மீதான வரி+கடன்களை தள்ளுபடி செய்யும் அரசு, 10.7% மருந்தின் மீதான விலையேற்றம் இல்லாமல்கூட மக்களுக்கு உதவ ஏன் முன்வரக் கூடாது?

மருந்தின் உற்பத்தி மீதான சுய சார்பு இருந்தால் மட்டுமே மருந்தின் விலையை நாம் தீர்மானிக்க முடியும். இந்தியா தனது மருந்து மூலக்கூறின் (API) தேவையை 70% சீனாவை நம்பியுள்ளது. தமிழகத்தில் உள்ள சித்த, ஹோமியோ, அக்கு பங்சர், இயற்கை மருத்துவம், பிற மருத்துவ முறைகளில் உள்ள பயன்தரும் மருந்துகளைப் பட்டியலிட்டு அவற்றை பயன்பாட்டிற்கு கொண்டு வரவும் உடனடி நடவடிக்கைகள் தேவை. இவ்வாறாக உள்ளூர் மருந்துகளை மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு சேர்ப்பது ஆங்கில மருந்தின் பயன்பாட்டைக் குறைத்து மருந்து விலையேற்றத்தைச் சமாளிக்க உதவும். அரசு அதைச் செய்ய முன்வருமா?

முதல்வர் ஸ்டாலின்
முதல்வர் ஸ்டாலின்

கொரோனா பேரிடர் காலத்தில்கூட மாநில அரசுகள் சுகாதாரத்துக்கென மட்டும் தனியாக நிதி ஒதுக்குவது 2017 மத்திய சுகாதாரக் கொள்கை பரிந்துரைத்த 8% க்கூட வெறும் 6.6% ஆக அனைத்து மாநிலங்களிலும் செலவிடப்பட்டது எப்படிச் சரியாகும்? தமிழக அரசு அதன் மாநில GDPல் 0.6% மட்டுமே சுகாதாரத்திற்கு ஒதுக்குவது போதுமானதல்ல என தமிழக அரசின் பொருளாதார நிபுணர் குழுவில் இடம் பெற்ற திரு.ஜுன் ட்ரீஸ் கருத்து வெளியிட்டுள்ளார்.

சுகாதாரத்துக்கான மொத்த நிதி ஒதுக்கீட்டில் 15% மருந்துக்கென ஒதுக்க வேண்டும் என நிபுணர்களின் கூற்றை ஏற்று அரசு செயல்பட முன்வருமா? தமிழக அரசும் தற்போதைய பட்ஜெட்டில் கடந்த ஆண்டைக் காட்டிலும் சுகாதாரத்துறைக்கு கொரோனா பேரிடர் சமயத்தில் மக்கள் சிரமங்களை அனுபவித்து வரும் சூழலில் ரூ.1,000 கோடி குறைத்து ஒதுக்கீடு செய்தது எப்படிச் சரியாகும்?

ஆரம்ப சுகாதார நிலையம்
ஆரம்ப சுகாதார நிலையம்

தமிழகத்தில் சுகாதாரத்துறையில், நகர்புறம் கிராமப்புறங் களுக்கு எவ்வளவு நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது?
ஆரம்ப சுகாதார நிலையங்களில் எத்தனை மருந்துகள் உள்ளன? ஆரம்ப சுகாதார நிலையங்களில் மருந்து வாங்குவதற்கு மட்டும் எவ்வளவு நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது என்பதை வெளிப்படைத் தன்மையுடன் வெளியிட்டால் நல்லது.

சமூக நீதி- திராவிட மாடல்-அனைவருக்குமான வளர்ச்சி-பேசும் தமிழக அரசு அதை பேச்சளவில் மட்டுமன்றி நடைமுறைப்படுத்த செயல்பாடுகளை மேற்கொள்ள வேண்டாமா? சாதாரண ஏழை/எளிய மக்களை அதிகம் பாதிக்க இருக்கும் மருந்து விலையேற்றத்தைக் கட்டுப்படுத்த நடவடிக்கைகள் தேவையில்லையா? தகுந்த நடவடிக்கைகள் எடுப்பீர்கள் என நம்பிக்கையுடன் காத்திருக்கும்.

மரு. வீ.புகழேந்தி

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism