Published:Updated:

ரெம்டெசிவிர் - `3 மாத ஸ்டாக்கை முன்கூட்டியே கைப்பற்றிய அமெரிக்கா!’

ரெம்டெசிவிர்
ரெம்டெசிவிர்

வருங்காலத்தில் தடுப்பூசி பயன்பாட்டிற்கு வரும்போதும், அமெரிக்கா பெரும்பங்கு மருந்தை தங்கள் பக்கம் அபகரித்துக்கொள்ளும் வாய்ப்பு உள்ளதாக உலக நாடுகள் கூறுகின்றன.

கொரோனா வைரஸை எதிர்த்துப் போராட பிரத்யேகமாக மருந்துகள் இல்லை என்றாலும் மருத்துவ உலகில் பல காலமாக வெவ்வேறு நோய்களுக்கு உபயோகிக்கப்பட்ட மருந்துகள் கொரோனாவிற்கு நல்ல முன்னேற்றம் அளிப்பதாகக் கூறப்படுகின்றன. அவற்றுள் ரெம்டெசிவிர் மருந்தும் ஒன்று. இந்த மருந்தின் மூலம் நோயாளிகள் மருத்துவமனையில் தங்கும் நாள்கள் குறைக்கப்படுகின்றன என்று ஆராய்ச்சி முடிவுகள் தெரிவிக்கின்றன. தற்போது உலக அளவில் பயன்பாட்டில் இருக்கும் இம்மருந்துக்கான தேவை அதிகரித்துக்கொண்டே உள்ளது. இந்நிலையில் ரெம்டெசிவிர் தயாரிக்கும் Gilead's நிறுவனத்திடமிருந்து ரெம்டெசிவிர் மருந்தை அமெரிக்கா மொத்தமாக வாங்கியிருப்பது பெரும் அதிர்ச்சியை அளித்துள்ளது.

அமெரிக்கா
அமெரிக்கா

Gileads நிறுவனத்திடமிருந்து அவர்களின் ஜூலை மாத உற்பத்தி முழுவதையும் வாங்குவதாகவும் ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாத உற்பத்தியில் 90 சதவிகிதத்தையும் அமெரிக்காவே வாங்கிக் கொள்வதாகவும் அந்நிறுவனத்துடன் ஒப்பந்தம் போட்டுள்ளது. மூன்று மாத உற்பத்தியும் அமெரிக்கா வசம் செல்வதால் உலகம் முழுதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள மற்ற நாடுகளின் நிலைமை கேள்விக்குறியாக உள்ளது. ஜூலை தயாரிப்பில் 94,200 மருந்துகள் ஆகஸ்ட் தயாரிப்பில் 1, 74,900 மருந்துகள் செப்டம்பர் தயாரிப்பில் 2,32, 800 மருந்துகள் என மூன்று மாதங்களுகு ஐந்து லட்சத்திற்கு மேற்பட்ட ரெமிடெசிவிர் மருந்து அமெரிக்காவுக்குச் சொந்தமாகப்போகிறது.

அதிகரிக்கும் கொரோனா தொற்று...  சென்னையில் இயல்புச்சூழல் திரும்புவது எப்போது?

இதுகுறித்து அமெரிக்காவின் ஆரோக்கியம் மற்றும் மக்கள் சேவை துறைச் செயலாளர் அலெக்ஸ் அசார் கூறுகையில், அமெரிக்காவில், கோவிட்- 19 நோய்க்கு முதலில் ஒப்புதல் வழங்கப்பட்ட மருந்தான ரெம்டெசிவிரை அமெரிக்காவில் கொரொனாவால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் கிடைக்கும் வகையில் மிகச் சிறந்த ஒப்பந்தத்தை அதிபர் ட்ரம்ப் மேற்கொண்டுள்ளார். இதன் மூலம் மருந்து தேவைப்படும் எந்த அமெரிக்க நோயாளிக்கும் அது கிடைக்கும் வகையில் இந்த ஒப்பந்தம் அமையும். ட்ரம்ப் அரசாங்கம் கொரோனா தொற்றை எதிர்த்து உயிர்காக்கும் மருந்துகள், அமெரிக்க மக்களுக்குத் தடையின்றி கிடைக்க நடவடிக்கைகளை எடுத்து வருகிறது" என்று தெரிவித்திருக்கிறார்.

கொரோனா பரிசோதனை
கொரோனா பரிசோதனை

வருங்காலத்தில் தடுப்பூசி பயன்பாட்டிற்கு வரும்போதும், அமெரிக்கா பெரும்பங்கு மருந்தை தங்கள் பக்கம் அபகரித்துக் கொள்ளும் வாய்ப்பு உள்ளதாக உலக நாடுகள் கூறுகின்றன. அமெரிக்காவில் மீண்டும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

அந்நாட்டில் புகழ்பெற்ற தொற்றுநோய் மருத்துவர், ஆண்டனி ஃபாசி, ``சரியான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கவில்லை என்றால், அமெரிக்காவில் ஒரு நாளைக்கு ஒரு லட்சம் பேருக்கு மேல் பாதிக்கப்படலாம்'' என்று எச்சரித்துள்ளார்.

ரெம்டெசிவிர் மருந்து ஒரு கோர்ஸை 3,200 டாலருக்கு (கிட்டத்தட்ட ரூபாய் 2,40,000 ) அமெரிக்கா வாங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த கட்டுரைக்கு