Published:Updated:

`ட்ரம்பின் கேம் சேஞ்சர்..!' - தடுப்பு மருந்து ஆய்வை மீண்டும் தொடங்கிய உலக சுகாதார நிறுவனம்

உலக சுகாதார நிறுவனம்
உலக சுகாதார நிறுவனம்

அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கொரோனா வைரஸ் பரவத் தொடங்கியதிலிருந்தே உலக சுகாதார மையத்துடன் விரோதப்போக்கை கடைப்பிடித்து வந்தார்.

கோவிட்-19 கொரோனா வைரஸ் உலக அளவில் சுமார் 6 மில்லியன் பேரை தொற்றுக்கு உள்ளாக்கி இருக்கிறது. சீனாவில் கடந்த டிசம்பரில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ், உலக நாடுகளில் வேகமாகப் பரவியதால் உலகளாவிய பெருந்தொற்றாக உலக சுகாதார மையத்தால் அறிவிக்கப்பட்டது.

அறிவிப்பு வெளியான நாள் முதல் அனைத்து உலக நாடுகளும் கொரோனா வைரஸின் புதிய திரிபான கோவிட்-19 வைரஸுக்கு எதிராகச் செயல்படும் தடுப்பு மருந்து கண்டுப்பிடிப்பில் முழு வீச்சில் இறங்கியுள்ளன. ஆனால், தற்போது பரவியிருக்கும் கோவிட்-19 வைரஸ் புதிய திரிபு என்பதால், அதனை முழுமையாகப் புரிந்துகொள்வதில் ஏற்பட்டுள்ள சிக்கல், தடுப்பு மருந்து கண்டுப்பிடிப்புக்குத் தடையாக இருந்து வருகிறது.

கொரோனா
கொரோனா

சீனாவில் வைரஸ் தொற்று உச்சத்தில் இருந்தபோது, ஹெச்.ஐ.வி. தொற்றுக்கு மருந்தாகப் பயன்படுத்தப்படும் லோபினாவிர் மற்றும் ரெமெடிசிவிர் ஆகியவை கொரோனா நோயாளிகளின் சிகிச்சையில் பயன்படுத்தப்பட்டன. இந்த மருந்துகளை அமெரிக்கா உட்பட பல உலக நாடுகளும் தங்கள் நாட்டின் கொரோனா நோயாளிகளுக்கு வழங்கி வந்தனர்.

இதனிடையே, மலேரியா காய்ச்சலுக்கு மருந்தாகப் பயன்படுத்தப்படும் ஹைட்ராக்ஸி குளோரோகுயினைப் பயன்படுத்தலாம் என மருத்துவக் குழுக்கள் பரிந்துரைக்க, சிகிச்சையில் இந்த மருந்தும் பயன்படுத்தப்பட்டது. பின்னாளில், உலக சுகாதார மையமும் ஹைட்ராக்ஸி குளோரோகுயினைக் கொரோனா சிகிச்சையில் பயன்படுத்த பரிந்துரைத்தது. அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கொரோனாவுக்கு எதிரான கேம் சேஞ்சராக ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் இருக்கும் எனத் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

கொரோனாவுக்கு எதிராகச் செயல்படுவதில் ஹைட்ராக்ஸி குளோரோகுயின் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்துவதில்லை என ட்ரம்பின் கேம் சேஞ்சருக்கு எதிராக எதிர்ப்புக் குரல் வலுக்கத் தொடங்கியது. இதனிடையே, கொரோனாவுக்கு எதிராகச் செயல்படலாம் அல்லது செயல்படாமலும் போகலாம் என ஹைட்ராக்ஸி குளோரோகுயின் குறித்து ட்ரம்ப் கருத்து தெரிவித்திருந்தார்.

இதனிடையே, ஹைட்ராக்ஸி குளோரோகுயினை கொரோனா நோயாளிகளுக்குப் பயன்படுத்துவதால், அவர்களில் இறப்பு விகிதங்கள் மற்றும் ஒழுங்கற்ற இதயத் துடிப்புகளையும் ஏற்படுத்துவதாக புகார் எழுப்பப்பட்டதன்பேரில் அதன் மீதான ஆய்வுகளை நிறுத்த உலக சுகாதார நிறுவனம் பரிந்துரைத்தது. அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கொரோனா வைரஸ் பரவத் தொடங்கியதிலிருந்தே உலக சுகாதார மையத்துடன் விரோதப்போக்கை கடைப்பிடித்து வந்த நிலையில்தான், கேம் சேஞ்சராகக் குறிப்பிட்ட ஹைட்ராக்ஸி குளோரோகுயினை எடுத்துக் கொள்ளத் தொடங்கினார்.

கோவிட்-19 மருந்து
கோவிட்-19 மருந்து

இந்நிலையில், ட்ரம்பின் வருடாந்திர மருத்துவப் பரிசோதனை குறித்த அறிக்கையை வெளியிட்ட வெள்ளை மாளிகை, உடல் பருமனோடு இருக்கும் அதிபர் ஹைட்ராக்ஸி குளோரோகுயினை உட்கொண்ட பிறகும்கூட ஆரோக்கியமாக இருப்பதாக தெரிவித்துள்ளது.

கோவிட்-19 வைரஸுக்கு ஹைட்ராக்ஸி குளோரோகுயினைப் பயன்படுத்த இயலாதெனப் பல மருத்துவர்கள் அறிவித்திருந்த நிலையில், அம்மருந்தை எடுத்துக்கொண்ட ட்ரம்ப் எந்தவிதப் பக்க விளைவுகளும் இன்றி பாதுகாப்பாக இருப்பதால், இந்த சர்ச்சையைத் தற்போது முடிவுக்குக் கொண்டு வந்துள்ளார்.

இதனிடையே, ஹைட்ராக்ஸிகுளோரோகுயினை கொரோனா வைரஸ் தடுப்பு மருந்து ஆராய்ச்சியில் மீண்டும் பயன்படுத்த உலக சுகாதார நிறுவனம் விரும்புவதாக அந்நிறுவனத்தின் டைரக்டர் ஜெனரல் டெட்ரோஸ் அதானோம் தெரிவித்துள்ளார். உலக சுகாதார நிறுவனத்தின் தலைமை விஞ்ஞானி செளமியா சாமிநாதன் ஹைட்ராக்ஸி குளோரோகுயினைத் தவிர பிற மருந்துகளுக்கான சோதனைக்கும் அழைப்புவிடுத்துள்ளார்.

கொரோனா தொற்றாளர்களுக்கு அளிக்கப்படும் மருந்துகள் தொற்றுக்கு எதிராகச் செயல்படுகிறதா இல்லையா என்பதை பாதிக்கப்பட்டவரக்ளுக்குத் தெரியப்படுத்துவது தங்களின் கடமை என்பதோடு அவற்றை கண்காணிப்பதையும் உறுதிப்படுத்துவோம் என அவர் கூறியுள்ளார்.

ட்ரம்ப்
ட்ரம்ப்

கொரோனாவுக்கான மற்றொரு மருந்தாகக் கண்டறியப்பட்டுள்ள அபிபாவிர், ரஷ்ய மருத்துவமனைகளில் சோதனைக்கு விடப்பட்டிருப்பதை உலக சுகாதார நிறுவனம் ஆர்வமாகக் கண்காணிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

அடுத்த கட்டுரைக்கு