Published:Updated:

புதுச்சேரி: `கொரோனா 2-வது அலை இளைஞர்களை அதிகமாகத் தாக்குகிறது!’ - துணைநிலை ஆளுநர் தமிழிசை

புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை
புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை

``தனியார் மருத்துவமனைகளுக்கான மருந்தை அரசே கொடுத்துவிடுகிறது. தனியார் மருத்துவமனையில் கொரோனா நோயாளிகள் அனுமதிக்கப்பட்டால கூட அவர்களை அரசு பாதுகாக்கிறது. எனவே யாரும் அச்சப்பட வேண்டாம்” - புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன்

சமூகப் பொறுப்பு திட்டத்தில், புதுச்சேரியைச் சேர்ந்த தனியார் நிறுவனம் அளித்த 10,000 முக்ககவசங்களை சுகாதாரத்துறையிடம் துணைநிலை ஆளுநர் தமிழிசை ஒப்படைத்தார். தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர், ``மே மாதம் 1-ம் தேதி முதல் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் தடுப்பூசி போடப்படவிருக்கிறது. அதற்காக 28-ம் தேதியே அனைத்து இளைஞர்களும் இணையதளத்தில் பதிவு செய்துகொள்ள வேண்டும். கொரோனாவின் இரண்டாவது அலை தற்போது அதிகமாக இளைஞர்களைத் தாக்குகிறது. எனவே, இளைஞர்கள் தாங்களாகவே பதிவுசெய்து, தடுப்பூசி எடுத்துக்கொண்டு முன்னுதாரணமாகத் திகழ வேண்டும். புதுவையில் முழு ஊரடங்குக்கு ஒத்துழைப்பு கொடுத்த மக்களுக்கு நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். சில மாநிலங்களில் மருத்துவமனைகள் மற்றும் மயானங்களுக்கு வெளியே வரிசைகள் இருப்பதைப் பார்க்க முடிகிறது. அப்படிப்பட்ட சூழ்நிலை இனி எந்த மாநிலத்துக்கும் ஏற்படக் கூடாது. அதனால் சில நடைமுறைகளை முன்னெச்சரிக்கையாக எடுக்க வேண்டியுள்ளது.

புதுச்சேரி ஊரடங்கு
புதுச்சேரி ஊரடங்கு

படுக்கை, ஆக்ஸிஜன், வென்டிலேட்டர், மருந்துகள், மாஸ்க் உள்ளிட்ட எல்லாம் வேண்டிய அளவு இருக்கின்றன. எதுவும் தட்டுப்பாடு இல்லை. ஆனால் சிலர் தட்டுப்பாடு இருப்பதாக அறிக்கை கொடுக்கிறார்கள். தயவுசெய்து பொதுமக்களுக்கு அச்சத்தைத் தவிர்த்து, தைரியத்தை ஊட்டுங்கள் என்று அவர்களிடம் கேட்டுக்கொள்கிறேன். புதுவை மட்டுமல்லாமல் காரைக்கால், மாஹே, ஏனாமில்கூட காணொலிக் காட்சி மூலம் என்ன செய்கிறார்கள் என்பதைக் கண்காணித்துவருகிறோம். தனியார் மருத்துவமனைகளில் கட்டணத்தை முறைப்படுத்துமாறு சிலர் கேட்டுள்ளனர். தனியார் மருத்துவமனையில் கட்டணத்தை முறைப்படுத்த வேண்டிய அவசியமில்லை. ஏனென்றால், தனியார் மருத்துவமனைகளுக்கான மருந்தை அரசே கொடுத்துவிடுகிறது. தனியார் மருத்துவமனையில் கொரோனா நோயாளிகள் அனுமதிக்கப்பட்டால்கூட அவர்களை அரசு பாதுகாக்கிறது. எனவே யாரும் அச்சப்பட வேண்டாம்.

மேலும், வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் தயவுசெய்து வீட்டிலேயே இருங்கள். உங்களுக்கு உதவி செய்வதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கொரோனா தொற்றின் சூழ்நிலையைப் பார்த்து வரும் சனி, ஞாயிறுகளில் ஊரடங்கை அறிவிப்பது குறித்து முடிவு செய்யப்படும். தற்போது அதிகம் பேருக்கு பரிசோதனை செய்கிறோம். இதன் மூலம் அதிக நோயாளிகளைக் கண்டுபிடிக்கிறோம். பொதுத் தொண்டு நிறுவனங்களும் உதவி செய்ய ஆரம்பித்துள்ளார்கள். பாண்லேவில் 1 ரூபாய்க்கு முகக்கவசம் விற்பது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது.

புதுச்சேரி: `வார இறுதி நாள்களில் முழு ஊரடங்கு’ - புதிய கட்டுப்பாடுகளை அறிவித்த ஆளுநர் தமிழிசை

தற்போது புதுவையில் 95% பேர் முகக்கவசம் அணிய ஆரம்பித்துவிட்டனர். 5% பேர் முகக்கவசம் அணியவில்லை. அவர்களால் மற்றவர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுவிடக் கூடாது. இறை நம்பிக்கை உள்ளவர்கள் கொரோனா தொற்று நம்மைவிட்டு விலக வேண்டும் என வேண்டிக்கொள்வோம். அனைவரும் இணைந்துதான் கொரோனாவை வெற்றிகொள்ள முடியும். எனவே, அரசியல் கட்சியைச் சேர்ந்தவர்கள் மக்களுக்கு சேவை செய்யுங்கள். மேலும் அரசியல் கட்சியினர் வாக்கு எண்ணிக்கையை எச்சரிக்கையாக எதிர்க்கொள்ள வேண்டும்” என்றார்.

அடுத்த கட்டுரைக்கு