இப்போதெல்லாம் பொருட்களை தயாரிக்கும் ஒவ்வொரு தயாரிப்பு நிறுவனங்களும் தாங்கள் தயாரிக்கும் பொருட்களில் ஏதாவது ஒரு புதுமையை புகுத்தி மக்களை கவர வேண்டும் என்ற எண்ணத்தில் தான் பொருட்களை தயாரித்து வருகின்றனர். அப்படி பிரபல பீர் தயாரிக்கும் நிறுவனம் ஒன்று பீர் ஷூவைத் தயாரித்திருக்கிறது. அதென்ன பீர் ஷூ என்ற கேள்வி உங்களுக்கு வரும். உண்மையிலேயே ஹைனெகென் (Heineken) என்ற பிரபல பீர் நிறுவனம்தான் பீர் பிரியர்களுக்காக இப்படி ஒரு ஷூவைத் தயாரித்திருக்கிறது. தி ஷூ சர்ஜன் என்ற ஷூ நிறுவனத்துடன் இணைந்து இந்த ஷூவை தயாரித்துள்ளது. இதனை டாமினிக் சியம்ப்ரோனே (Dominic Ciambrone) என்பவர் வடிவமைத்துள்ளார்.
இந்த ஷூவின் சிறப்பு என்னவென்றால் அந்த ஷூவில் நிஜமாகவே பீர் நிரப்பப்பட்டிருக்கும். அதே போல இதை திறப்பதற்கு ஒரு ஓபனரும் அதில் அட்டாச் செய்யப்பட்டுள்ளது. ஷூவின் மேல் பகுதியிலும் ஹைனெகெனின் சில்வர் பீரை நிரப்பியுள்ளனர். இந்த ஷூவிற்கு ஹைனெகிக்ஸ் என்று பெயரிட்டுள்ளனர். சிவப்பு, பச்சை, சில்வர் போன்ற நிறங்கள் இதற்கு பயன்படுத்தப்பட்டுள்ளது.
இந்த ஷூவிலிருந்து பீர் சிந்தாமல் இருக்க, சர்ஜிகல் இன்ஜெக்ஷன் என்ற முறையில் பானத்தை உள்ளே செலுத்திய நிறுவனம் அவை வெளியேறாதபடியும் அமைத்துள்ளனர். இந்த ஷூவை பயன்படுத்துபவர்களுக்கு இது ஒரு புது வித அனுபவத்தைத் தரும் என்கிறது அந்நிறுவனம். அதே சமயம் இந்த பீரை நாம் அருந்த முடியாது என்றாலும், அதன் மீது நடக்கும் அனுபவம் எல்லா நேரத்திலும் கிடைக்காது என்றும் அந்த நிறுவனம் ட்விட்டரில் தெரிவித்துள்ளது. இப்போதுவரை 32 ஜோடி ஷூக்களை தயாரித்துள்ள அந்நிறுவனம் முதல்கட்டமாக 7 ஜோடி ஷூக்களை சிங்கப்பூரில் அறிமுகம் செய்ய உள்ளது. ஆகஸ்ட் 11ஆம் தேதி முதல் இவை சந்தைக்கு வரும் என்றும் தெரிவித்துள்ளது.