
இத்தனை கசப்புகளுக்கும் நடுவில்தான் பசுமையான மனிதம் பரப்புகிறார்கள் சிலர்.
கொரோனாச் சூழல் பலருக்குள் இருக்கும் மனிதத்தையும், சிலருக்குள் இருக்கும் மிருகத்தையும் வெளியில் கொண்டு வந்திருக்கிறது. மரணத்தின் வாயிலில் இருக்கும் தங்கள் உறவுகளைக் காப்பாற்ற, ஆக்சிஜன் சிலிண்டருக்கு அலைகிறார்கள் டெல்லிவாசிகள். அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்ட ரெம்டெசிவிர் மருந்தைக் கள்ளச்சந்தையில் பல ஆயிரங்களுக்கு விற்ற திருவண்ணாமலை மருந்தாளுநர் ஒருவரை சென்னை போலீஸ் கைது செய்துள்ளது.

இத்தனை கசப்புகளுக்கும் நடுவில்தான் பசுமையான மனிதம் பரப்புகிறார்கள் சிலர். சென்னைத் திருவான்மியூரைச் சேர்ந்த ஸ்ரீமதி என்பவர் பகிர்ந்த செய்தி அதற்கு உதாரணம். அவரின் அம்மாவுக்கு கொரோனாவால் கடுமையான மூச்சுத்திணறல் ஏற்பட்டு மரணத்துடன் போராடியிருக்கிறார். அரசு சேவையான 108 ஆம்புலன்ஸ் விரைந்து வந்தது. டிரைவர் பால்பாண்டியும், உதவியாளர் விவேக்கும் அவரை ஆம்புலன்ஸில் ஏற்றி அவசரமாக ஆக்சிஜன் அளித்து ஸ்டான்லி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று, மருத்துவமனையில் படுக்கை கிடைக்கும் வரை காத்திருந்து சேர்த்துச் சென்றிருக்கிறார்கள்.
இப்படித் தமிழகத்தில் தன்னலம் பாராமல் பிறருக்கு உதவிகள் செய்து இப்பேரிடர் காலத்திலும் நம்பிக்கையை விதைத்தவர்கள் பலர். அவர்களில் சிலர் பற்றி...
குளிரூட்டப்பட்ட கோவை இ.எஸ்.ஐ மருத்துவமனையில் மின்விசிறிகள் இல்லை. கொரோனாவால் ஏ.சி பயன்படுத்தமுடியாத சூழலில், மின்விசிறியும் இல்லாததால் நோயாளிகள் அவதியுற, தாமாக முன்வந்து 100 மின்விசிறிகளை வழங்கி முன்னுதாரணமாகி யிருக்கிறார்கள் ராஜேஷ் தம்பதியர். ஆனால், எந்தச்சூழலிலும் தங்கள் அடையாளம் வெளிப்படக் கூடாது என்ற உறுதியைப் பெற்றுக் கொண்டார்கள். அப்படியிருந்தும் அவர்களின் புகைப்படமும் பெயரும் வெளிவந்துவிட்டன. ஊடகங்கள் பலமுறை வலியுறுத்தியும் அவர்கள் யாரிடமும் பேசவில்லை. ராஜேஷைத் தொடர்புகொண்டோம்.

“நான் ஆனந்தவிகடனின் வாசகன். நீங்கள் அழைக்கும் அளவுக்கு நாங்கள் எதுவும் செய்யவில்லையே?” என்றவர், “மற்றவர்களும் உதவவேண்டும் என்ற விழிப்புணர்வுக்காகப் பேசுகிறேன். ஆனால், எங்களை மையப்படுத்தி எதுவும் எழுத வேண்டாம்” என்ற அன்புக் கோரிக்கையை வைத்துவிட்டுப் பேசத் தொடங்கினார்.
“நான் மருத்துவ உபகரணங்கள் விநியோகம் செய்யும் தொழில் செய்கிறேன். மருத்துவர்களும், செவிலியர்களும் படும் கஷ்டங்களை நேரடியாகப் பார்க்கிறேன். இருக்கும் வசதியைக்கொண்டு அவர்கள் செய்யும் அர்ப்பணிப்பான பணிகள் பெரும்பாலும் வெளியே வருவதில்லை.
நமது வீட்டுக்கு அருகிலுள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களிலோ, அரசு மருத்துவமனைகளிலோ சென்று பார்த்தால், அங்கு எவ்வளவு தேவை இருக்கிறது என்பது தெரியவரும். அதைக் கேட்டுச் செய்தாலே அவர்கள் நம்மை அன்பாகப் பார்த்துக் கொள்வார்கள். நம்மிடம் காசே இல்லை என்றால்கூட, எலக்ட்ரிகல், பிளம்பிங் வேலை தெரிந்தவர்கள் அதுதொடர்பான பணிகளைக்கூடச் செய்துகொடுக்கலாம்.
நான் கோவை இ.எஸ்.ஐ மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வரை நேரில் சந்தித்துப் பேசினேன். ‘ஏதாவது மருத்துவ உபகரணங்கள் வேண்டுமா?’ எனக் கேட்டேன். அவர், ‘அதெல்லாம் இருக்கிறது’ எனச் சொல்லி, அங்கு மின்விசிறி இல்லாதது குறித்துக் கூறினார். மத்திய அரசின் நிர்வாகத்தில் உள்ள மருத்துவமனை என்பதால், மின்விசிறி வாங்குவதற்கான ஒப்புதல் எல்லாம் உடனடியாகக் கிடைக்காது.

அதனால் மின்விசிறி வாங்கித்தர முடிவெடுத்தேன். நான் எல்லாச் செலவுகளையும் பார்த்துப் பார்த்துச் செய்யக்கூடிய ஆள்தான். ஆனால், இந்தச் சூழ்நிலையில் நிச்சயம் நாம் உதவியாக வேண்டும் என்று உணர்ந்தேன். என்னுடைய பிசினஸ் ஓரளவுக்கு நன்றாகவே இருக்கிறது. சேமிப்பும் சற்று இருக்கிறது. அதை உடனடியாக எடுக்க முடியவில்லை. உடனடியாக உதவ வேண்டும்... என்ன செய்வது என்று யோசித்தேன். அப்போது என் மனைவிதான் நகையை அடமானம் வைக்கலாம் என்று நம்பிக்கை கொடுத்தார்.
மருத்துவனை முதல்வர் அதை ஏற்கவில்லை. ‘இவ்வளவு கஷ்டப்பட்டு நீங்கள் செய்ய வேண்டாம். இது எல்லோரும் சேர்ந்து செய்ய வேண்டிய பணி. உங்கள் சக்திக்குட்பட்டு ஐந்து அல்லது பத்து மின்விசிறிகள் மட்டும் கொடுங்கள்’ என்றார். நான் ஒப்புக்கொள்ளவில்லை. அதன்பிறகும் அவர் கலெக்டரிடம் பேசினார். கலெக்டரும் என்னிடம் பேசினார். அப்போதும் நான் என்னுடைய முடிவில் உறுதியாகவே இருந்தேன். அதன்பிறகுதான் அவர்கள் வாங்கிக் கொண்டனர்” என்றார், ஒரு மகத்தான பணியைச் செய்ததன் தொனியே இல்லாமல்!
ஊரே கூடி ஒழிப்போம் கொரோனாவை!
கொரோனா முதல் அலை ஊரடங்கில் உணவுக்குத் தவித்த பலரின் பசியாற்றியவர் அண்ணாதுரை வேலுச்சாமி. நாமக்கல் மாவட்டம், மோகனூர் ஒன்றியத்தில் உள்ள மேலப்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியின் தலைமை ஆசிரியர். இரண்டாம் அலை வீரியத்தோடு மக்களைத் தாக்கிவரும் நிலையில், தம் சேவையின் எல்லையை விரிவுபடுத்தியிருக்கிறார் அண்ணாதுரை.
தமிழகமெங்கும் போதிய மருத்துவ உதவிகள் கிடைக்காமல் மக்கள் தவிக்கிறார்கள். அவர்களுக்கு உதவுவதற்காக சென்னையில் உள்ள ராஜேஷ்வரி ராதாகிருஷ்ணன் சாரிடபுள் டிரஸ்ட் என்ற அமைப்போடு கரம் கோத்திருக்கிறார் அண்ணாதுரை. தமிழகத்தில் உள்ள 37 மாவட்டங்களுக்கும் தலா ரூ. 50,000 ரூபாய் நிதி ஒதுக்கி, ஏழை மக்கள், கொரோனா சிகிச்சைக்காக மருந்து, கொரோனாத் தடுப்பூசி, ஆக்சிஜன் சிலிண்டர்கள் வாங்கப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று அறிவித்திருக்கிறார்கள்.இதுகுறித்து, ஆசிரியர் அண்ணாதுரையிடம் பேசினோம்.
“கொத்துக்கொத்தாக மனிதர்களை பலியாக்கும் கொரோனாவிலிருந்து நாம் தப்பித்துக்கொள்ள நமக்கு இருக்கும் ஒரே வழி, தடுப்பூசிதான். ஆனால், அது தட்டுப்பாடாக உள்ளது. அதோடு, தனியார் மருத்துவமனைகளில் அதிக விலை வைத்துப் போடப்படுகிறது. கொரோனாவால் வேலையிழந்து, உணவுக்கே அல்லாடும் நிலையில் பெரும்பகுதி மக்கள் இருக்கிறார்கள். அவர்களால் மருந்துகளுக்குப் பெருந்தொகை செலவு பண்ணமுடியாது. அப்படியான மக்களுக்கு உதவத்தான், இந்தத் திட்டத்தை அறிவித்திருக்கிறோம். 50,000 ரூபாய் என்பது முதற்கட்ட ஒதுக்கீடு. ஏழ்மை நிலையில் இருக்கும் மக்கள் கொரோனா சிகிச்சைக்குத் தேவைப்படும் மருந்துகள், தடுப்பூசி, ஆக்சிஜன் சிலிண்டர்கள் வாங்க எங்களை அணுகலாம். சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு நேரடியாக தொகையை அனுப்பி நாங்கள் அவற்றைப் பெற்றுத்தருவோம். இதில், பெரும்பகுதி நிதியை அந்த அறக்கட்டளை நிர்வாகம் தருகிறது. என்னால் முடிந்த அளவுக்கு நானும் இதில் பங்களிப்பு செய்கிறேன். ஊரே ஒன்றுபட்டு இணைந்தால்தான், இந்தப் படுபாதக கொரோனாவை ஒழிக்க முடியும்” என்கிறார் அவர்.
முகக்கவசம் அணிந்தால் இலவச பஸ் டிக்கெட்!
முகக் கவசத்தின் அவசியம் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தவும், அணிபவர்களை ஊக்கப்படுத்தவும் மன்னார்குடியில் செயல்படும் ஜேசிஐ அமைப்பு ஒரு வித்தியாசமான முயற்சியில் இறங்கியது. மன்னார்குடியிலிருந்து பிற ஊர்களுக்குச் செல்லும் பேருந்துகளில் முகக்கவசத்துடன் ஏறிய பயணிகளிடம் “நீங்க எந்த ஊருக்குப் போகணுமோ அதுக்கான டிக்கெட்டை மட்டும் வாங்கிக்குங்க. பணத்தை நீங்க கொடுக்க வேண்டாம். நாங்க கொடுத்திடுறோம்” என்று சொல்ல பயணிகள் மகிழ்ந்துபோனார்கள். தொடக்கநாளில் 200 பயணிகளுக்கு இலவச பயணச்சீட்டு வழங்கப்பட்டது. முகக்கவசம் அணியாதவர்களுக்கு முகக்கவசங்களும் வழங்கப்பட்டன. மன்னார்குடி தலைமை அஞ்சலகத்தில் தானியங்கி சானிட்டைசர் கருவி ஒன்றையும் நிறுவினார்கள். இவர்களின் பணிகளால் ஈர்க்கப்பட்ட இளைஞர்களும் தன்னார்வலர்களாகக் கரம் கோக்க, மன்னார்குடியைத் தாண்டியும் இந்தப் பணியை விரிவுபடுத்தவிருக்கிறது ஜேசிஐ அமைப்பு.

கனிவான கலெக்டர்
சுற்றுலாவை நம்பியிருக்கும் ஊட்டியை கொரோனா மொத்தமாக முடக்கிப் போட்டிருக்கிறது. ஆனாலும் மக்கள் நம்பிக்கையிழக்காமல் இருக்கிறார்கள். காரணம், மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா. முதல் அலையின் பொதுமுடக்க காலத்தில், தன்னார்வலர்களின் கை நீளும் முன்னரே ஆட்சியர் மூலம் மக்களின் கையில் நிவாரணப் பொருள்கள் சென்றுசேர்ந்தன. அரசியல் கட்சியினர், தன்னார்வலர்களை அழைத்துப்பேசி இயன்றவரை உதவிகளைக் கொண்டு சேர்த்தார்.
தற்போது இரண்டாம் அலையைக் கட்டுப்படுத்த, புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்ட நாளிலிருந்தே, சுற்றுலாத் துறையைச் சார்ந்துள்ள பல்லாயிரக்கணக்கான குடும்பங்கள் மீண்டும் பட்டினிக்குத் தள்ளப்பட்டுவிட்டன. இந்த முறையும் சிலரது உதவியோடு ஊட்டி அரசுத் தாவரவியல் பூங்கா பகுதியில் 500 நடைபாதை வியாபாரிகள் குடும்பங்களுக்கு மளிகை மற்றும் காய்கறிகளைக் கொடுத்திருக்கிறார். பெரிய பெரிய தனியார் நிறுவனங்களிடம் பேசி, சுற்றுலா வழிகாட்டிகளின் குடும்பங்களிலும் அடுப்பெரிய நடவடிக்கை எடுத்துவருகிறார். ‘எங்களை கலெக்டரம்மா பார்த்துக்குவாங்க!’ என்ற நம்பிக்கையில் வட மாநிலங்களைச் சேர்ந்த தொழிலாளர்கள் ஊர் திரும்பிச் செல்லாமல் நீலகிரியிலேயே தங்கியிருக்கிறார்கள்.