Published:Updated:

மோகன்லாலுக்காக உருவாகும் மூலிகை மண்வீடு!

சந்தோஷ்
பிரீமியம் ஸ்டோரி
News
சந்தோஷ்

வீடு கட்டுவதற்கான 1,300 மூலிகைகளை என் வீட்டுத் தோட்டத்திலேயே வளர்த்து வருகிறேன். அவற்றை, குமரி மாவட்டத்தின் மருந்துவாழ் மலையில் இருந்து எடுத்து வந்து வளர்க்கிறேன்

பழங்காலத்தில் கட்டப்பட்ட மண் வீடுகளுக்குள் நுழைந்தாலே இயற்கையான குளிர்ச்சியை உணர முடியும். ஆனால், சிமென்ட் பயன்பாட்டுக்கு வந்த பிறகு பழைமை மறக்கப்பட்டு எங்கு பார்த்தாலும் கான்கிரீட் வீடுகளாக மாறிவிட்டன. கேரளாவைச் சேர்ந்த சந்தோஷ், இப்போதும் பழைமை மாறாமல் மூலிகைகளைச் சேர்ந்து மண்ணைக் குழைத்து வீடுகளைக் கட்டிக் கொடுத்துவருகிறார். மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லாலுக்கு மூலிகை மண் வீடு கட்டிக்கொடுக்கும் சந்தோஷை சந்திக்க, கேரளாவின் பத்தனம்திட்டா மாவட்டத்தின் அடூரை அடுத்துள்ள துவையூர் மாஞ்ஞாலி கிராமத்துக்குச் சென்றேன்.இயற்கை சூழ்ந்த கிராமத்துக்குள் நுழைந்து எதிரில் வந்தவரிடம், ‘‘சந்தோஷின் வீடு எங்கே இருக்கிறது?’’ என்று கேட்டதும், ‘‘ஓ... சிலா மியூசியம் போறீங்களா?’’ என எதிர்க்கேள்வி கேட்டபடி வழிகாட்டினார்.

அவர் சுட்டிக்காட்டிய வீட்டுக்குள் நுழைந்ததும், அது வீடா அல்லது மியூசியமா என்ற சந்தேகம் ஏற்பட்டது. அந்த அளவுக்கு வீடு முழுவதும் பழங்காலப் பொருள்கள் நிறைந்திருந்தன. அதைப் பார்க்க வெளியூர்களில் இருந்தும் நிறைய பேர் தினமும் வந்து செல்கிறார்கள். மக்கள் வந்துசெல்லும் அந்த மியூசியத்துக்குள் வசிக்கிறது சந்தோஷின் குடும்பம்.

குடும்பத்துடன் சந்தோஷ்
குடும்பத்துடன் சந்தோஷ்

பழங்காலப் பொருள்களின் பெருமைகள் குறித்துப் பார்வையாளர்களுக்கு விளக்கிக்கொண்டிருந்த சந்தோஷிடம் அறிமுகப்படுத்திக்கொண்டேன். மூலிகை டீ உபசரிப்புக்குப் பின்னர் பேசத் தொடங்கினார். ‘‘தஞ்சாவூர்தான் எங்கள் பூர்வீகம். செங்கன்னூர் கோயில், ஆரன்முழா ஆலயம் போன்றவற்றை நிர்மாணிக்க நூறு வருடங்களுக்கு முன்பு கொச்சி, திருவிதாங்கூர் ராஜாக்கள் எங்கள் முன்னோரை அழைத்து வந்தார்கள். அதன் பிறகு எங்கள் குடும்பம் இங்கேயே தங்கிவிட்டது.

நான் பள்ளியில் படிக்கும்போதே பழங்கால நாணயங்கள், ஸ்டாம்புகள் சேகரித்துப் பரிசுகள் வாங்கியிருக்கிறேன். சிறு வயதிலேயே நன்றாக ஓவியம் வரைவேன். குடும்ப வறுமை காரணமாக எஸ்.எஸ்.எல்.சி-யுடன் படிப்பை முடித்துக்கொண்டு அப்பாவுடன் சிலைகள் செய்யும் தொழிலில் இறங்கினேன்.

வீடுகளின் உள்ளே கலைநயமிக்க தூண்கள் அமைப்பது, கோயில்களில் வேலைகள் செய்வது, காந்தி, நாராயண குரு, புத்தர் சிலைகள் செய்வது என்று இருந்தேன். அதனால் எனது பெயருடன் சிலை என்று பொருள்படும் வகையிலான மலையாளச் சொல்லான ‘சிலா’ என்பதும் சேர்ந்து ‘சிலா சந்தோஷ்’ என்று ஆகிவிட்டது.

23 வருடங்களாக நான் சேகரித்து வைத்திருந்த பழங்கால நாணயங்கள் உள்ளிட்ட பொருள்களை என் நண்பர்கள் ஆர்வத்துடன் பார்த்தார்கள். அவர்கள் மூலம் அது வெளியில் தெரியத் தொடங்கியதால் இப்போது தினமும் 100 பேராவது வந்து பார்த்துச் செல்கிறார்கள். இந்த வீட்டில் என் அப்பா சசிதரன், அம்மா கீதா, மனைவி சந்தியா, மகள்கள் அதுல்யா, அர்க்கிதா ஆகியோருடன் வாழ்கிறேன்” என்றார்.

சந்தோஷ் வீட்டில் 1912-ம் ஆண்டு டைட்டானிக் கவிழ்ந்த செய்தி வெளியான செய்தித்தாள், ஹிரோஷிமா மற்றும் நாஹசாகியில் அணுகுண்டு வீசப்பட்ட செய்தி தாங்கிய செய்தித்தாள், ஹிட்லர், காந்திஜி, நேரு, இந்திராகாந்தி மரணம் குறித்த செய்தி வெளிவந்த செய்தித்தாள்கள், எவரெஸ்ட் சிகரத்தில் மனிதன் ஏறியதை வெளியிட்ட செய்தித்தாள் உள்ளிட்ட 2,000 அரிய செய்தித்தாள்கள் உள்ளன.

சங்கர், குட்டி, டோம் என பிரபல கார்ட்டூனிஸ்ட்கள் வரைந்தவை மற்றும் யங் இந்தியா நாளிதழில் வெளிவந்த 2,700 கார்ட்டூன்கள் இருக்கின்றன. 1,700 சதுர அடியில் உள்ள அவரது வீட்டில் ஜப்பான் சாமுராய் வாள், பூமராங், மலப்புரம் கத்தி, சீனாவின் பழங்கால ஆயுதங்கள், உள்நாட்டு வாள்கள், ரத்தினம் பதித்த கத்திகள் ஆகியவற்றுடன் தானியங்களை அளக்கும் பாத்திரங்கள், கிராமபோன்கள் பழங்கால புரொஜக்டர் ஆகியவை இருக்கின்றன.

அந்தக் காலத்தில் ராஜா, ராணி பல்லக்கில் பவனி வரும்போது பொதுமக்கள் அவர்களின் கை, காலைத் தொட்டு வணங்குவது சம்பிரதாயம். அதற்காக தங்களின் வளையல் அணிந்த கை, கொலுசு அணிந்த கால் போல ஒரு தண்டை வெளியே நீட்டுவார்களாம். அதை உண்மையான கை, கால் என நம்பி, மக்கள் தொட்டு வணங்குவார்கள். அந்தத் தண்டை, மிகுந்த சிரமத்துக்குப் பிறகு மைசூரில் வாங்கியிருக்கிறார்.

உலகின் முதல் ஸ்டாம்ப், மிகவும் சிறிய செய்தித்தாள், தமிழ்நாட்டில் சைக்கிள், மாட்டு வண்டி, ரேடியோ ஆகியவற்றுக்கு அரசால் விநியோகிக்கப்பட்ட லைசென்ஸ் உள்ளிட்டவையும் அவரது சேகரிப்பில் இருக்கின்றன. பூக்கூடை, பியானோ, மரம், தபேலா, வயலின், அன்னப்பறவை, தர்ப்பூசணி எனப் பல வடிவங்களில் கிணற்றின் மேல் பகுதியை வடிவமைக்கும் சந்தோஷ், கடைசியாக ராணுவ பீரங்கி வடிவத்தில் அமைத்த கிணற்றுக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. கேரளாவின் துணை சபாநாயகர் சிற்றயம் கோபகுமாரின் வீட்டில் உள்ள கிராமபோன் வடிவிலான கிணறு, சந்தோஷ் அமைத்துக் கொடுத்ததே. அதில் கிடைக்கும் வருவாயை வைத்தே தன் மியூசியத்தைப் பரமாரிக்கிறார்.

இவை எல்லாவற்றையும்விட, மூலிகை மண் வீடு கட்டுவது தனக்குப் பிடித்தமானது என்று சொல்லும் சந்தோஷ், நடிகர் மோகன்லாலுக்கு மூலிகை மண்வீடு கட்ட இருக்கிறார். அது பற்றிப் பேசியவர், ‘‘வயநாட்டில் 150 வருஷத்துக்கு முன்பு கட்டப்பட்ட மண் வீடு இப்போதும் உறுதியுடன் இருக்கிறது.அதைப் பார்த்த பிறகே மண் வீட்டின் மீது ஈடுபாடு வந்தது. வெறும் மண் மட்டுமல்லாது அதனுடன் மூலிகைச் சாறுகளைக் கலந்து கட்டத் தொடங்கினேன். கேரளாவில் எட்டு, தமிழ்நாட்டில் ஒன்று என இதுவரை ஒன்பது மூலிகை மண் வீடுகளைக் கட்டியிருக்கிறேன். திருவனந்தபுரத்தின் ஆடிட்டர் தொழில் செய்யும் சனல்குமாருக்குத் தமிழ்நாட்டின் செங்கோட்டையில் 17 ஏக்கர் மாந்தோப்பு இருக்கிறது. அதில் ஒரு மூலிகை மண் வீடு கட்டிக் கொடுத்தேன்.

சனல்குமாரின் நண்பரான மோகன்லால் அங்கு சென்றபோது அந்த வீட்டைப் பார்த்து வியந்துள்ளார். இடுக்கியில் தனது 35 ஏக்கர் தோட்டத்தில் ஆயிரம் சதுர அடியில் மூலிகை வீடு, தியான மண்டபம் கட்ட என்னைத் தொடர்பு கொண்டார். விரைவில் அதற்கான வேலையைத் தொடங்குகிறேன்” என்ற சந்தோஷ், மூலிகை மண் வீடு கட்டுவது பற்றி விளக்கினார்.

மோகன்லாலுக்காக உருவாகும் மூலிகை மண்வீடு!

‘‘கருங்கற்களால் அஸ்திவாரம் அமைத்த பின்னர் மண்ணுடன் திரிபலா கஷாயம், சுண்ணாம்பு, ராமிச்சம், பச்சைக் கற்பூரம், வெந்தயம், சந்தனம், பழ மரங்களின் தோல் என 64 வகையான மூலிகைகளை இடித்துச் சேர்ப்போம். அதனுடன் கோமியம், சாணம் ஆகியவற்றைச் சேர்த்து, மூலிகைச் சாறுகளைக் கலந்து காலால் மண்ணை மிதித்துக் குழப்பி பக்குவத்துக்குக் கொண்டு வந்த பிறகு காய வைத்து செங்கல் செய்வோம். சுட்டால் மூலிகைத் தன்மைகள் மாறிவிடும் என்பதால், அப்படியே காயவைத்து சுவர் எழுப்புவோம்.

வீட்டின் மேல்பகுதியில் மரத்தால் சீலிங் அமைத்து அதற்கு மேல் ஓடு பதிப்போம். மண்ணால் செய்யப்பட்ட ஓடுகள் மூலம் தரை அமைப்போம். இந்த வேலைகளைச் செய்வதற்காகவே என்னிடம் 45 பணியாளர்கள் இருக்கிறார்கள். இந்த மூலிகை மண் வீட்டில் ஏ.சி., ஃபேன் தேவையில்லை. மின்விசிறியின் காற்று, நமது உடலின் ஈரத்தன்மையை எடுப்பதால் தூங்கி விழித்த பிறகு எனர்ஜி குறையலாம். ஆனால் இந்த இயற்கையான மூலிகை மண் வீட்டில் தூங்கி எழுந்ததும் சோர்வு முழுமையாக நீங்கி, புத்துணர்வு ஏற்படும்.

வீடு கட்டுவதற்கான 1,300 மூலிகைகளை என் வீட்டுத் தோட்டத்திலேயே வளர்த்து வருகிறேன். அவற்றை, குமரி மாவட்டத்தின் மருந்துவாழ் மலையில் இருந்து எடுத்து வந்து வளர்க்கிறேன். பத்து ஏக்கர் நிலம் வாங்கி மூலிகை வனம் ஏற்படுத்தி அதன் நடுவில் மண் வீடு கட்டி வாழ வேண்டும் என்பதே என் விருப்பம்” என்று சொன்ன சந்தோஷின் ஆசை நிறைவேற வாழ்த்தி விடைபெற்றோம்.