சமூகம்
Published:Updated:

வீடு தேடி உணவு மட்டுமல்ல, கஞ்சாவும் வரும்... அதிர்ச்சி தரும் ‘ஹைடெக்’ போதை விற்பனை!

அபிஜித்
பிரீமியம் ஸ்டோரி
News
அபிஜித்

நான் டெலிவரி வேலைகளை மட்டுமே செய்கிறேன். மற்றபடி எங்கே கலெக்ட் செய்ய வேண்டும், எங்கே டெலிவரி செய்ய வேண்டும் ஆகிய தகவல்கள் சோஷியல் மீடியாவின் வழியேதான் எனக்குச் சொல்லப்படும்

கஞ்சா, எல்.எஸ்.டி., கஞ்சா ஆயில், கஞ்சா புகைக்கும் பேப்பர் ரோல் உள்ளிட்ட போதை வஸ்துகளின் விற்பனை கர்நாடக மாநிலம், பெங்களூரில் ஹைடெக் முறையில் கொடிகட்டிப் பறக்கிறது. சோஷியல் மீடியா ஹேஷ்டேக்குகளைப் பயன்படுத்தி, ‘ஆன் லைன் ஃபுட் டெலிவரி பார்ட்னர்கள்’ மூலம் கஞ்சாவை டெலிவரி செய்யும் நெட்வொர்க் குறித்த தகவல் தற்போது கசிந்திருக்கிறது.

கஞ்சா விற்பனைக்காக நூற்றுக்கணக்கான பிரைவேட் அக்கவுன்ட்டுகள் மூலம் #weed #weedbangalore உட்பட பல ஹேஷ்டேக்குகளை இந்த நெட்வொர்க் பயன்படுத்துகிறது. மேலும், அந்த ஐடி-களுக்கு அவர்களுக்குள் புழங்கும் ஒரு ரகசியக் குறியீட்டை மெசேஜில் அனுப்பினால் போதும். பெங்களூரில் கஞ்சா கிடைக்கும் இடம், விலை, டெலிவரி பெறும் ரூட் மேப் ஆகியவற்றை அனுப்புகிறார்கள். க்யூ-ஆர் கோட், கிரிப்டோ கரன்ஸி மூலம் அதற்கான பணத்தையும் பெற்றுக்கொள்கிறார்கள். மேலும், ஆன்லைன் டெலிவரி நிறுவனங்களின் சீருடையில் போதைப்பொருள்களை டெலிவரி செய்கிறார்கள்.

வீடு தேடி உணவு மட்டுமல்ல, கஞ்சாவும் வரும்... அதிர்ச்சி தரும் ‘ஹைடெக்’ போதை விற்பனை!
வீடு தேடி உணவு மட்டுமல்ல, கஞ்சாவும் வரும்... அதிர்ச்சி தரும் ‘ஹைடெக்’ போதை விற்பனை!

கடந்த டிசம்பர் மாதம் 18-ம் தேதி, மத்திய குற்றப் புலனாய்வுத்துறை மற்றும் பெங்களூர் போலீஸார் நடத்திய சோதனையில், அபிஜித் என்ற பீகாரைச் சேர்ந்த நபர் கைதுசெய்யப்பட்டார். அவரிடம் 3 கிலோ கஞ்சா, 12 எல்.எஸ்.டி ஸ்டாம்ப்புகள் ஆகியவை கைப்பற்றப்பட்டன. அபிஜித்திடம் நடத்திய விசாரணையில், “நான் டெலிவரி வேலைகளை மட்டுமே செய்கிறேன். மற்றபடி எங்கே கலெக்ட் செய்ய வேண்டும், எங்கே டெலிவரி செய்ய வேண்டும் ஆகிய தகவல்கள் சோஷியல் மீடியாவின் வழியேதான் எனக்குச் சொல்லப்படும். போலீஸில் மாட்டிக்கொள்ளாமல் இருக்க ‘ஆன்லைன் ஃபுட் டெலிவரி பாய்’ யூனிஃபார்மில் செல்வேன்” என்று தெரிவித்திருக்கிறான். அபிஜித் மூலமாக கஞ்சா நெட்வொர்க் குறித்த மேலதிக விவரங்களை போலீஸார் விசாரித்துவருகிறார்கள்.

அபிஜித்
அபிஜித்

“பெங்களூரு மட்டுமல்ல, மும்பை, டெல்லி, சென்னை ஆகிய முக்கியமான நகரங்களிலும் இந்த நெட்வொர்க் தீவிரமாக இயங்கிவருகிறது” என்கிறார்கள் விவரமறிந்தவர்கள். இது குறித்து, என்.சி.பி சென்னை மண்டல இயக்குநர் அரவிந்தன் ஐ.பி.எஸ் பேசும்போது, ‘‘வாட்ஸ்அப், டார்க் வெப்சைட், இன்ஸ்டாகிராம் என அனைத்து சோஷியல் மீடியம்களையும் தீவிரமாகக் கண்காணித்துவருகிறோம். ‘ஹைடெக்’ முறையில் நடைபெறும் இந்த போதைப்பொருள்கள் விற்பனையைத் தடுக்க, ஃபுட் டெலிவரி நிறுவனங்களுடன் ஆலோசனை நடத்தவிருக்கிறோம்” என்றார்.

அரவிந்தன்
அரவிந்தன்

சமூகத்தைச் சீரழிக்கும் போதைப்பொருள்களின் பரவலை முன்கூட்டியே களையவேண்டியது காவல்துறையின் பொறுப்பு!