அரசியல்
அலசல்
Published:Updated:

மகளிர் இட ஒதுக்கீட்டில் சிக்கல்! - என்ன செய்யப்போகிறது தமிழக அரசு?

 உயர் நீதிமன்றம்
பிரீமியம் ஸ்டோரி
News
உயர் நீதிமன்றம்

உச்ச நீதிமன்றத் தீர்ப்பை ஒட்டித்தான் சென்னை உயர் நீதிமன்றம் இப்படியொரு தீர்ப்பை அளித்திருக்கிறது. ஆனால், இது தவறானது.

“மகளிருக்கு முதலில் 30% இட ஒதுக்கீடு வழங்கிவிட்டு, மீதமுள்ள 70% இடங்களிலும் அவர்களைப் போட்டியிட அனுமதிக்கத் தேவையில்லை” என சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி அமர்வு அளித்திருக்கும் தீர்ப்பு பலத்த விவாதங்களை ஏற்படுத்தியிருக்கிறது.

அரசு வேலைவாய்ப்புகளில் மகளிருக்கு 30% இட ஒதுக்கீடு வழங்கி 1989-ல் தமிழ்நாடு அரசு ஆணை பிறப்பித்தது. இதன்படி, பொதுப்போட்டிப் பிரிவு மற்றும் இட ஒதுக்கீட்டுப் பிரிவுகளில் 30% மகளிருக்கு ஒதுக்கப்பட வேண்டும். இதற்கிடையே மகளிருக்கான இட ஒதுக்கீட்டை 40%-ஆக உயர்த்தி, தி.மு.க தலைமையிலான தமிழ்நாடு அரசு 2021-ல் ஆணை பிறப்பித்தது. இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில்தான் சென்னை உயர் நீதிமன்றம் இப்படியோர் அதிரடித் தீர்ப்பை வழங்கியிருக்கிறது.

மகளிர் இட ஒதுக்கீட்டில் சிக்கல்! - என்ன செய்யப்போகிறது தமிழக அரசு?

இந்த வழக்கில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் சிங்காரவேலன், “உயர் நீதிமன்றம் இப்போது வழங்கியிருக்கும் தீர்ப்பு பெண்களுக்கு எதிரானது இல்லை. பெண்களுக்கென 30% இட ஒதுக்கீடு வழங்குவதில் தவறில்லை. ஆனால், அதற்கும் ஓர் எல்லை உண்டு என்பதைத்தான் இந்தத் தீர்ப்பு சொல்லவருகிறது. 100% இட ஒதுக்கீட்டில் 30% பெண்களுக்கு என்றால், பொதுப்பிரிவு தொடங்கி அனைத்தையும் உள்ளடக்கியதுதான் அந்த 30%. இந்த நடைமுறையைத்தான் நாம் பின்பற்றிவருகிறோம். இப்படி அனைத்துப் பிரிவுகளிலும் பெண்களுக்கு இட ஒதுக்கீடு இருக்கும்போது, மீதியுள்ள இடங்களிலும் ஆண்களுடன் போட்டியிட வாய்ப்பு கொடுத்தால் அது சமூக நீதியாக இருக்காது. இதனால் பலரும் பாதிக்கப்படுவார்கள் என்பதுதான் நாம் சொல்லவருவது. அதைத்தான் உயர் நீதிமன்றமும் சொல்லியிருக்கிறது” என்றார்.

அதேசமயம் தீர்ப்பு குறித்து விமர்சிக்கும் பா.ம.க வழக்கறிஞர் பாலு, “உச்ச நீதிமன்றத் தீர்ப்பை ஒட்டித்தான் சென்னை உயர் நீதிமன்றம் இப்படியொரு தீர்ப்பை அளித்திருக்கிறது. ஆனால், இது தவறானது. இந்தியாவிலுள்ள மக்கள்தொகையில் 57 சதவிகிதம் பெண்கள் இருக்கிறார்கள். அதனால்தான் உள்ளாட்சிப் பிரதிநிதிகள் சட்டத்தில் பெண்களுக்கு 50% இட ஒதுக்கீடு தரப்படுகிறது. ஆனால், வேலைவாய்ப்பில் மட்டும் 30%-க்குத் தாண்டக் கூடாது என்பது சமூக நீதிக்கே எதிரானது. அடுத்து, பொதுப் பிரிவில் தகுதியின் மூலமாகத் தேர்வுபெற்ற மகளிரையும்கூட இந்த 30%-க்குள் கொண்டு வருவதென்பது உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கும் எதிரானது” என்றார்.

பாலு
பாலு
சரவணன்
சரவணன்

‘உயர் நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிராகத் தமிழ்நாடு அரசு மேல்முறையீடு செய்ய வேண்டும்’ என்ற பெண்களின் கோரிக்கை குறித்து தி.மு.க வழக்கறிஞர் சரவணனிடம் கேட்டோம். “தமிழ்நாடு அரசின் கொள்கைக்கு எதிரான இந்தத் தீர்ப்பு குறித்து சட்ட வல்லுநர்களிடம் ஆலோசனை செய்து, தேவை ஏற்பட்டால் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வோம்” என்றார்.