2023-24-ம் ஆண்டுக்கான புதுச்சேரி மாநில அரசு தாக்கல் செய்திருக்கும் பட்ஜெட்டில், விவசாயத்துக்கும் விவசாயிகளுக்கும் பல அறிவிப்புகள் இடம் பெற்றுள்ளன.
அதில், “குறைந்த நீராதாரத்தை கொண்ட பயறு வகைகளை கூடுதல் பரப்பளவில் சாகுபடி செய்திடவும், உற்பத்தியை அதிகரித்திடவும், விவசாயிகளுக்கு கூடுதல் உற்பத்தி மானியம் வழங்கப்பட உள்ளது. தற்போது பயறு வகைகளுக்கு ஏக்கருக்கு ரூ.3,000/- வழங்கப்படுகிறது. இதனுடன் இடுபொருள் மானியமாக ரூ.2,000/- சேர்த்து ரூ.5,000/- வழங்கப்படும்.
மணிலாவுக்கு ஏக்கருக்கு வழங்கப்படும் ரூ.5,000/- உற்பத்தி மானியத்துடன் இடுபொருள் மானியமாக ரூ.3,000 சேர்த்து ரூ.8,000/-, எள் பயிருக்கு வழங்கப்படும் உற்பத்தி மானியம் ரூ.3,000/- உடன் இடுபொருள் மானியம் ரூ.2,000/- சேர்த்து ரூ.5,000/- வழங்கப்படும். சிறுதானிய பயருக்கு தற்போது வழங்கப்படும் ரூ.5,000/- மானியத்துடன் இடுபொருள் மானியம் ரூ.2,000/- சேர்த்து ரூ.7,000/- வழங்கப்படும்.

மண் வளத்தை காத்திட இடுபொருட்களான கம்போஸ்ட், எரு, உயிர் உரங்கள், ஜிப்சம், தழைச்சத்து அளிக்கும் தக்கைபூண்டு, சணப்பை விதைகள் பொதுப்பிரிவு விவசாயிகளுக்கு 75 சதவிகித மானியத்திலும், அட்டவணை விவசாயிகளுக்கு இலவசமாகவும் வழங்கப்படும்.
நெல் சான்று விதை கிலோவுக்கு ரூ.10, நெல் ஆதார நிலை விதை கிலோவுக்கு ரூ.14-ம், பயறு, மணிலா சான்று விதைகளுக்கு ரூ.12-ம், மணிலா சான்று விதை, ஆதார நிலை விதைக்கு ரூ.17-ம் ஊக்கத்தொகையாக வழங்கப்படும். மேலும் பொதுப்பிரிவினருக்கு விதை மானியம் 75 சதவிகிதம், அட்டவணை இனத்தவருக்கு 90 சதவிகிதம் மானியமும் வழங்கப்படும்.
பிரதமர் யோஜனா திட்டத்தின் கீழ் சிறு குறு விவசாயிகளுக்கு 90 சதவிகிதமும், பெரு விவசாயிகளுக்கு 75 சதவிகிதமும், அட்டவணை விவசாயிகளுக்கு இலவசமாகவும் நுண் பாசன கருவிகள் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படும். விவசாயிகளின் நீர்ப்பாசன தேவைக்கு புதுவையில் 6,700 குழாய் கிணறுகள் மின்சக்தியின் மூலம் இயக்கப்படுகிறது.
இதற்கான மின்கட்டணத்தை அரசே செலுத்துகிறது. இதற்கு மாறாக விவசாய குழாய் கிணறுகளை சூரிய சக்தி மூலம் இயக்கும் சாத்தியக்கூறுகளை எரிசக்தி முகமை நிறுவனத்துடன் இணைந்து செயல்படுத்த உள்ளோம். இதற்காக ஒரு கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

பாரம்பர்ய நெல் ரகங்களை உற்பத்தி செய்யும் விவசாயிகளுக்கும், இரண்டு பருவத்துக்கு மிகாமல் இயற்கை முறையில் நெல் ரகங்களை உற்பத்தி செய்யும் விவசாயிகளின் வருமானத்தை உயர்த்த ஏக்கருக்கு ரூ.8,000/- உற்பத்தி மானியம் வழங்கப்படும். 600 ஹெக்டேர் பரப்பளவு விளைநிலங்கள் இயற்கை விவசாய சாகுபடியின் கீழ் கொண்டு வரப்படும். 1,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட உயிரி எரிவாயு கலன்கள் வாங்க 50 சதவிகித மானியம் விவசாயிகளுக்கு வழங்கப்படும்.
ஏற்றுமதியை ஊக்குவிக்கும்பொருட்டு 5 முதல் 10 சென்ட் நிலங்களில் மல்லிகை சாகுபடி செய்ய விவசாயிகளை ஊக்குவிக்க புதிய திட்டம் கொண்டு வரப்படும். இந்த நிதியாண்டில் விவசாய துறைக்காக ரூ.159.36 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.