உலகம் முழுவதும் அதிவேகமாகப் பரவிவரும் கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்த அனைத்து நாட்டு அரசுகளும் பல்வேறு தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. கொரோனா வைரஸ் விழிப்புணர்வாக முதலில் கூறப்படுவது கைகளைக் கழுவ வேண்டும் என்பதுதான். வைரஸ் தொற்று அதிகமானதும் இந்தியா உட்பட பல நாடுகளில் ஹேண்ட் சானிடைஸர்களின் உபயோகம் அதிகரித்துள்ளது.

எனவே சானிடைஸர் மற்றும் முகமூடி ஆகிய இரண்டையும் அடுத்த நூறு நாள்களுக்கு அத்தியாவசியப் பொருள்கள் பட்டியலில் சேர்த்துள்ளது மத்திய அரசு. அதேநேரத்தில் இந்தியாவில் சானிடைஸர் மற்றும் முகமூடிகள் வாங்குபவர்களின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்துள்ளது. கடந்த 20 நாள்களுடன் ஒப்பிடும்போது சானிடைஸர் 559 சதவிகிதமும் முகமூடிகளின் விற்பனை 334 சதவிகிதமும் உயர்ந்துள்ளது. மும்பை, டெல்லி, பெங்களூரு போன்ற இந்தியாவின் முக்கிய நகரங்களில் இதன் தேவை பெருமளவு அதிகரித்துள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில், ஹேண்ட் சானிடைஸர்களை ஆரம்பச் சுகாதார நிலையங்களிலேயே தயாரித்துக் குறைந்த விலைக்கு விற்பனை செய்யலாம் என்ற சிறந்த நடவடிக்கையை முன்னெடுத்துள்ளார் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் விஜய கார்த்திகேயன். தமிழக சுகாதார அமைச்சகம் வழங்கியுள்ள வழிகாட்டலின்படி இந்த சானிடைஸர்கள் தயாரிக்கப்பட்டுள்ளன.
மாவட்ட கலெக்டர் விஜய கார்த்திகேயனிடம் பேசினோம். ``பொதுமக்கள் கொரோனா வைரஸ் அச்சத்தில் உள்ளனர். அதனால் சானிடைஸர்களின் பயன்பாடும் அதிகரித்துவிட்டது. இந்தநேரத்தில் சானிடைஸர் விற்பனைக்காக மார்க்கெட்டுகளை நம்பி இருக்காமல், ஆரம்பச் சுகாதார மையங்கள், நகர்ப்புற சுகாதார மையங்கள் மற்றும் அரசு மருத்துவமனைகள் போன்ற இடங்களில் நாமே சுயமாகத் தயாரித்துக்கொள்ளலாம்.

சானிடைஸர் தயாரிக்கப் பயன்படுத்தும் அனைத்துப் பொருள்களையும் முதலில் உயர் வெப்ப அழுத்தம் கொண்டு சுத்தப்படுத்த வேண்டும். பிறகு உலக சுகாதார அமைப்பு அளித்துள்ள ஃபார்முலாவின்படி நம் தமிழக சுகாதார அமைச்சகம் வழங்கியுள்ள வழிகாட்டலின்பேரின் திருப்பூரில் உள்ள அதிகாரிகள் நேற்று முதன்முறையாக சானிடைஸர்களை தயாரித்துள்ளனர். சானிடைஸர் தயாரிக்கும் ஃபார்முலா, சுகாதார அமைச்சகம் சார்பாக அனைத்து மாவட்டங்களுக்கும் அனுப்பப்பட்டுள்ளது.
ஐசோபுரஃபைல் ஆல்கஹால், கிளிசரால், ஹைட்ரஜன் பெராக்ஸைடு மற்றும் தண்ணீர் ஆகியவை கொண்டு இது தயாரிக்கப்பட்டுள்ளது. தற்போது தயாரிக்கப்பட்டுள்ள சானிடைஸர், அரசு மருத்துவமனை, சுகாதார நிலையங்களில் பொதுமக்கள் உபயோகத்துக்காக வைக்கப்பட்டுள்ளது. அங்கு வரும் உள் மற்றும் புற நோயாளிகள் இதைத் தவறாமல் பயன்படுத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இது மட்டுமல்லாது சானிடைஸர்களை அதிகப்படியாகத் தயாரித்து மலிவு விலையில் பொதுமக்களுக்கு விற்பனை செய்யவும் ஏற்பாடு செய்து வருகிறோம்.
தவிர, திருப்பூரில் தொழில் நிறுவனங்கள் அதிகம். எனவே அவர்களை வைத்துக் குறைந்த விலையில் மாஸ்க் தயாரித்து பொதுமக்களுக்கு அளிக்கலாம் எனவும் ஆலோசித்து வருகிறோம். விரைவில் அதைச் செயல்படுத்தத் திட்டமிட்டுள்ளோம்” என்றார் உறுதியான குரலில்.