சினிமா
தொடர்கள்
Published:Updated:

அத்துமீறும் ஒழுக்க போலீஸ்!

ஈரான்
பிரீமியம் ஸ்டோரி
News
ஈரான்

ஆண்களுக்கும் இதேபோல ஒழுக்க விதிகள் உண்டு. வெஸ்டர்ன் ஸ்டைலில் முடிவெட்டிக் கொண்டு வருபவர்கள் இவர்களிடம் சிக்குவார்கள்.

ஒவ்வொரு போராட்டத்துக்கும் ஒரு முகமே அடையாளமாகிவிடுகிறது. ஈரானில் இப்போது நடைபெறும் ஹிஜாப்புக்கு எதிரான போராட்டங்களின் முகம், மாஸா அமினி. இந்த 22 வயது குர்து இன இளம்பெண், தலைநகர் டெஹ்ரானில் கைது செய்யப்பட்டார். இறுக்கமான பேன்ட் அணிந்திருந்தார், தலையில் சரியாக ஹிஜாப் போடவில்லை என்பது குற்றச்சாட்டு. மூன்று நாள்கள் கழித்து மாஸா இறந்துவிட்டார். ஹார்ட் அட்டாக்கில் இறந்தார் என்கிறது அரசு. ஆனால், போலீஸ் அவர் தலையில் தாக்கியதில்தான் இறந்ததாக மக்கள் குற்றம் சாட்டுகிறார்கள்.

அன்று தொடங்கி, மாஸா புகைப்படத்தை ஏந்தியபடி ஈரான் முழுக்க மக்கள் போராட்டங்கள் வெடித்துள்ளன. பெண்கள் தங்கள் தலைமுடியைத் துண்டித்தும், ஹிஜாப்பை எரித்தும் போராடுகிறார்கள். அவர்களை போலீஸார் கடுமையாகத் தாக்கும் காட்சிகள் கவலை தருகின்றன. இந்தப் போராட்டங்களில் 40-க்கும் மேற்பட்டவர்கள் இறந்துவிட்டார்கள்.

அத்துமீறும் ஒழுக்க போலீஸ்!
அத்துமீறும் ஒழுக்க போலீஸ்!

மாஸா அமினி என்ற ஒற்றை மரணத்துக்கு மட்டுமேயான போராட்டம் இல்லை இது. உடையைக் காரணம் காட்டி நம் ஊரில் சில அடிப்படைவாத அமைப்புகள் பெண்களை மிரட்டும் சம்பவங்கள் நடப்பதுண்டு. ஈரானில் இதைச் செய்வதற்காக அரசே ஒரு போலீஸ் படையை வைத்திருக்கிறது. Gasht-e Ershad என்பது அந்த அமைப்பின் பெயர். இது ஒழுக்கத்தை வலியுறுத்தும் தனி போலீஸ் படை.

1979-ம் ஆண்டு நடைபெற்ற கிளர்ச்சிக்குப் பின் ஈரானில் இஸ்லாமிய சட்டப்படியான அரசு அமைந்தது. நாட்டின் முதன்மைத் தலைவரான அயத்துல்லா அலி கொமேனி அப்போது உருவாக்கிய அமைப்பு, கஷ்ட்-இ இர்ஷாத். உள்துறை அமைச்சகத்தின் கீழ், பாதுகாப்புப் படையில் தனிப் பிரிவாக இது தொடங்கப்பட்டது. கையில் வாக்கி டாக்கியை வைத்துக்கொண்டு நகரங்களில் இவர்கள் வேன்களில் ரோந்து செல்வார்கள். ரயில்வே ஸ்டேஷன், பூங்காக்கள் என்று பொது இடங்களைக் கண்காணிப்பார்கள். மேற்கத்திய கலாசாரத்துக்கு மக்கள் அடிமை ஆகிவிடாமல் காப்பதைத் தன் பணியாக இந்தப் படை கருதுகிறது. இந்தப் படையில் ஆண்கள், பெண்கள் இருவருமே இருப்பார்கள்.

அத்துமீறும் ஒழுக்க போலீஸ்!
அத்துமீறும் ஒழுக்க போலீஸ்!

ஈரானில் 9 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் ஹிஜாப் அணிவது கட்டாயம். ஜீன்ஸ் மற்றும் இறுக்கமான ஆடைகள் அணியக்கூடாது. பெண்கள் தங்கள் உருவத்தை மறைக்க நீண்ட, தளர்வான ஆடைகளை அணிவதும் கட்டாயம். இந்தச் சட்டத்தை மீறுபவர்களைப் பிடித்து வேனில் ஏற்றிச் செல்வார்கள். சீர்திருத்த முகாமுக்கு அழைத்துச் சென்று, ‘சரியாக உடை அணிவது எப்படி' என்று அவர்களுக்குப் பாடம் எடுக்கப்படும். உறவினர்களுக்குத் தகவல் சொல்லி, சட்டப்படி அணிய வேண்டிய உடைகளை எடுத்துவரச் சொல்வார்கள். அதை அணிந்துகொண்டு அன்றே வீட்டுக்குச் சென்றுவிடலாம். சிலருக்கு அபராதமும் உண்டு.

ஆண்களுக்கும் இதேபோல ஒழுக்க விதிகள் உண்டு. வெஸ்டர்ன் ஸ்டைலில் முடிவெட்டிக் கொண்டு வருபவர்கள் இவர்களிடம் சிக்குவார்கள். அப்படி வெட்டிவிடும் சலூன்களுக்கும் சீல் வைக்கப்படும்.

‘இஸ்லாமிய விதிகளின்படி எது சரி, எது தவறு' என்று அறம் போதிக்கும் அமைப்பாக மட்டுமே இருக்க வேண்டிய கஷ்ட்-இ இர்ஷாத் எல்லைமீறிச் செயல்படுவதால் பல பிரச்னைகள் எழுந்தன. ஈரான் - இராக் போரின்போது ‘பாசிஜ்' என்ற துணை ராணுவம் உருவாக்கப்பட்டது. போர் முடிந்தபிறகு இந்தத் துணை ராணுவம் வேலை இல்லாமல் இருந்தது. அவர்களை இந்த ஒழுக்க போலீஸுக்குத் துணையாக நியமித்தார்கள். அதன்பின் பெண்களை முகத்தில் அறைவது, தடியால் தாக்குவது, குண்டுக்கட்டாகத் தூக்கி வேனில் எறிவது என்று வன்முறைச் சம்பவங்கள் அடிக்கடி நிகழ்ந்தன.

அத்துமீறும் ஒழுக்க போலீஸ்!

இதற்குமுன்பு ஈரான் அதிபராக இருந்த ஹஸன் ரௌஹானிக்கு இந்தப் படையைப் பிடிக்காது. ‘குடிமக்களின் உணர்வுகளை மதிக்க வேண்டும்' என்று சொல்லி, இந்தப் படையை அடக்கி வைத்திருந்தார். கடந்த ஆண்டு ஆகஸ்டில் இப்ராஹிம் ரைஸி அதிபராகப் பதவியேற்றார். அதன்பின் இந்தப் படைக்கு முழு அதிகாரம் தரப்பட்டுவிட்டது. சில மாதங்களுக்கு முன்பு உடல்நிலை சரியில்லாத இளம்பெண் ஒருவரை ஹிஜாப் சரியாக அணியாத குற்றத்துக்காக வேனில் இவர்கள் ஏற்றிச் செல்வதும், அந்த இளம்பெண்ணின் தாய் கண்ணீர் மல்க வேன் பின்னால் ஓடுவதும் வீடியோவாக வெளியாகிப் பரபரப்பு ஏற்படுத்தியது. இப்படிப் பல சம்பவங்கள்... அத்தனை சம்பவங்களிலும் பாதிக்கப்பட்ட குடும்பங்கள் இன்று வீதிக்கு வந்திருக்கின்றன.

இம்முறை ஒரே வித்தியாசம், போராடும் மக்களுக்கு ஆதரவாக பெரும்குரல் ஈரானிலேயே எழுந்திருப்பது! அமைச்சர்கள், ஈரான் நாடாளுமன்ற சபாநாயகர் முகமது பாகர் காலிபாஃப் என்று பலரும் இந்தப் படையைக் கண்டித்திருக்கிறார்கள். ஆனால் அரசோ, ‘‘இந்தப் போராட்டத்தின் பின்னால் வெளிநாட்டு சதி இருக்கிறது'' என்கிறது.

ஏற்கெனவே பொருளாதாரத் தடைகளால் மூச்சுத் திணறிக்கொண்டிருக்கும் ஈரான் மக்கள், இதுபோன்ற கட்டுப்பாடுகளால் நிம்மதியைத் தொலைத்திருக்கிறார்கள்.