
பழைமையான இந்த மொழியைப் படிக்கக்கூடிய மணிப்பூரி முதியவர்களைப் பார்ப்பது இன்று அபூர்வம். காரணம் என்ன?
திருப்பூர் ரயில் நிலையத்தில் இருக்கும் ‘சேவை மையம்' இந்தி வார்த்தையை சுவீகரித்து ‘சகயோக்' என்று பெயர் சூட்டப்பட்டது. ரயில்களில் மாற்றுத் திறனாளிகளுக்கான வசதிகள் அனைத்தையும் ‘திவ்யாங்ஜன்' என்று இந்திப் பெயர் சூட்டியே விளிக்கிறார்கள். காசி தமிழ்ச் சங்கமத்தில் விருந்தினர்களுக்குத் தரப்பட்ட தண்ணீர் பாட்டிலில் ‘பாணி' என்றுதான் தமிழில் எழுதியிருந்தார்கள். பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா, பிரதான் மந்திரி உஜ்வாலா யோஜனா தொடங்கி இப்போது ‘வீர் பால் திவஸ்' வரை மத்திய அரசின் அனைத்துத் திட்டங்களும், எல்லா விளம்பரங்களும், பல அறிவிப்புகளும் இந்தி வார்த்தைகளைத் தமிழ்ப்படுத்தியே வெளியாகின்றன.
இவற்றையெல்லாம் தமிழன் புரிந்துகொள்ள மாட்டான் என்பதை யாரும் அறிந்திருக்க மாட்டார்களா? இவற்றுக்கு இணையான தமிழ் வார்த்தைகள் இருப்பது டெல்லியில் யாருக்கும் தெரியாதா? அல்லது தெரிந்தே இந்தியை மட்டுமே பயன்படுத்துகிறார்களா?
இன்னொரு பக்கம், தமிழ் பேசினாலும், தமிழைப் படிக்கத் தெரியாத ஒரு தலைமுறை உருவாகிவருகிறது. தமிழ் வார்த்தைகளை ஆங்கிலத்தில் எழுதிவைத்து தங்கிலீஷில் இவர்கள் படிக்கிறார்கள், அப்படி எழுதிக் கொடுத்தால்தான் படித்துப் பார்த்துப் பேசவே வருகிறது இவர்களுக்கு! தங்கிலீஷில் தமிழ் படிப்பதைப் பெருமையாக நினைப்பவர்களும் உண்டு.

ஒரு மொழி தன் இலக்கிய வளத்தை இழந்தாலோ, எழுத்து வடிவத்தை இழந்தாலோ, அந்த மொழிக்கு என்ன ஆகும் என்பதற்கு உதாரணம் மணிப்பூர் மாநிலத்திலேயே கிடைக்கிறது. தாங்கள் இழந்த மொழியை மீட்பதற்காக மணிப்பூர் மக்கள் எடுத்துவரும் முயற்சிகளும் உறுதியான செயல்பாடுகளும் ஒரு மொழிப் போராட்டத்துக்கு நிகரானவை. இந்த ஜனவரியில் அந்தப் போராட்டம் ஒரு முக்கியமான வெற்றியை அடையவிருக்கிறது.
பிரிட்டிஷ் ஆதிக்கம் வருவதற்கு முன்பு மணிப்பூர் சுதந்திரமான ஒரு பேரரசாக இருந்தது. மணிப்பூரி மக்கள் மீட்டி மேக் (Meetei Mayek) என்ற மொழி பேசுகின்றனர். இந்தியாவின் பழைமையான மொழிகளில் ஒன்றான அது, ஆறாம் நூற்றாண்டில் உருவானது. அந்த மொழியில் பல கல்வெட்டுகள் இருக்கின்றன. மொழி என்பது மனித வாழ்வில் ஓர் அங்கம் என்பதை உணர்த்துவது போல, அந்த மொழியின் ஒவ்வோர் எழுத்துக்கும் நம் உடல் பாகங்களின் பெயரையே வைத்திருக்கிறார்கள் மணிப்பூரிப் பழங்குடிகள்.
பழைமையான இந்த மொழியைப் படிக்கக்கூடிய மணிப்பூரி முதியவர்களைப் பார்ப்பது இன்று அபூர்வம். காரணம் என்ன?
மணிப்பூர் மன்னர் தொடங்கி கடைசிக் குடிமக்கள் வரை சனாமஹி என்ற மதத்தைப் பின்பற்றி வந்தனர். 1709-ம் ஆண்டு வங்காளத்திலிருந்து சாந்திதாஸ் கோசாய் என்பவர் வைணவத்தைப் பரப்புவதற்காக மணிப்பூர் வந்தார். அப்போது ஆட்சியில் இருந்த மன்னர் பாம்ஹெய்பா. அவரின் தந்தை வைணவத்துக்கு மாறியிருந்தார் என்றபோதிலும், பாம்ஹெய்பா ஆரம்பத்தில் அதில் ஆர்வமில்லாமல் இருந்தார். சாந்திதாஸ் வந்தபிறகு மன்னரும் அமைச்சர்களும் தலைகீழாக மாறினார்கள். வீரத்தை அடையாளப்படுத்துவதாக வைணவமே இருக்கிறது என்று சாந்திலால் சொன்னதால், தன் பெயரையே மாற்றிக்கொண்டார் பாம்ஹெய்பா. பர்மா நாட்டின் மீது போர் தொடுத்துப் பெற்ற வெற்றிகள், அவரைத் தீவிர வைணவ நம்பிக்கையாளராக மாற்றின. ஒரு கட்டத்தில் சனாமஹி மதத்தை நாட்டில் தடை செய்யும் அளவுக்கு அவர் போனார்.
சாந்திதாஸ் கோசாய் வைணவத்துடன் சேர்த்து வங்காளி மொழியையும் மணிப்பூரில் பரப்பினார். மணிப்பூரிகளின் தாய்மொழி தாழ்ச்சியானது என்று மன்னரையே நம்பவைத்தார். மன்னரின் உத்தரவுப்படி மீட்டி மேக் மொழியில் மணிப்பூரி மக்கள் எழுதி வைத்திருந்த அத்தனை இலக்கியங்களும் தீயிட்டு அழிக்கப்பட்டன. மக்கள் மீட்டி மேக் மொழி பேசினாலும், அதை வங்காளி எழுத்துகளைப் பயன்படுத்தியே எழுத வேண்டும் என்பது கட்டாயம் ஆக்கப்பட்டது. ஒரே தலைமுறையில் மீட்டி மேக் மொழி, எழுத்து வழக்கிலிருந்து அழிந்துபோனது. தங்கள் தாய்மொழி வார்த்தைகளையே வங்காள மொழியில் எழுதிப் படிக்க வேண்டிய அவலநிலைக்கு ஆளானார்கள். அவர்களிடம் பேசுவதற்கு ஒரு தாய்மொழி இருந்தது. ஆனால், அதன் எழுத்து வடிவம் இன்னொரு மொழியால் களவாடப்பட்டுவிட்டது.
என்றாலும், அரச கட்டளையை மீறி சிலர் ரகசியமாகத் தங்களின் பண்டைய இலக்கியங்களையும் ஆன்மிக நூல்களையும் பாதுகாத்து வந்தார்கள். தலைமுறை தலைமுறையாக அவர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு அவற்றைச் சொல்லிக்கொடுத்து, தங்கள் தாய்மொழி எழுத்து வடிவம் அழியாமல் பார்த்துக்கொண்டனர்.
1949-ம் ஆண்டு இந்தியாவின் ஒரு மாநிலமாக இணைந்தது மணிப்பூர். மன்னராட்சி அகன்ற அந்தத் தருணத்தில் மொழியுரிமைக் குரல் மீண்டும் ஒலித்தது. மணிப்பூரி அறிவுஜீவிகள், இலக்கியவாதிகள் பலரும் தங்கள் தாய்மொழியின் எழுத்து வடிவத்தை மீட்க முனைந்தனர். ஆனால், மீட்டி மேக் என்பது எத்தனை எழுத்துகள் கொண்டது என்பதில் குழப்பம் ஏற்பட்டது. ‘18' என்றனர் சிலர், ‘27' என்றனர் சிலர். ‘இல்லை, 36' என்றனர் வேறு சிலர். இடைப்பட்ட ஆண்டுகளில் இதுவும் மறந்துபோயிருந்தது. இறுதியாக அரசு ‘27' என்பதை ஏற்றது. ஆனாலும் அது எழுத்து வடிவம் பெறுவதில் சிக்கல் நீடித்தது. இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் எட்டாவது அட்டவணையில் மணிப்பூரி மொழியும் 1992-ம் ஆண்டு சேர்க்கப்பட்டது. ஆனாலும் வங்காள மொழி வடிவத்தில்தான் அது இடம்பெற்றது.

2003-ம் ஆண்டு மணிப்பூரின் 38 அமைப்புகள் ஒன்றிணைந்து மீலால் (Meetei Erol Eyek Loinasillol Apunba Lup-MEELAL) என்ற கூட்டு இயக்கத்தை உருவாக்கின. மீட்டி மேக் எழுத்து வடிவத்தை மீட்க வேண்டும் என்ற ஒற்றை இலக்குடன் அது செயல்பட்டது. அதன் முயற்சியால் 2006 முதல் மணிப்பூர்ப் பள்ளிகளில் மீட்டி மேக் எழுத்து வடிவத்தில் பாடநூல்கள் அறிமுகமாகின. முதல் வகுப்பில் தொடங்கி ஆண்டுதோறும் ஒவ்வொரு வகுப்பாக அது மாறிக்கொண்டே வந்தது. இப்போது பள்ளிகளில் முழுக்க முழுக்க வங்காள மொழி வடிவம் இல்லாமல்போய்விட்டது.
ஆனாலும், வயது வந்தவர்களுக்கு மீட்டி மேக்கைப் படிப்பது சிரமமாக இருந்தது. இதற்காக அந்த அமைப்பே மாநிலம் முழுவதும் வகுப்புகளை நடத்தியது. கல்லூரி ஆசிரியர்களுக்கும் வகுப்புகள் நடத்தப்பட்டு, விரைவில் அங்கும் மீட்டி மேக் எழுத்து வடிவ நூல்கள் அறிமுகமாகவிருக்கின்றன.
கடைகளின் பெயர்ப்பலகைகளில் மீட்டி மேக் எழுத்து வடிவம் இல்லாவிட்டால், அதைத் தார் பூசி அழிக்கும் போராட்டத்தை மீலால் அமைப்பு நடத்த, இப்போது எல்லாக் கடைகளும் மாறியிருக்கின்றன. வாகனங்களின் நம்பர் பிளேட் வரை மீட்டி மேக் இருப்பதை உறுதி செய்கிறது அந்த அமைப்பு. அரசு நிகழ்ச்சிகளுக்கான விளம்பரங்களோ, அறிவிப்புகளோ தவறுதலாக வங்காளி எழுத்து வடிவில் வந்துவிட்டால், இந்த அமைப்பிடம் அரசு மன்னிப்பு கேட்கும் அளவுக்கு நிலைமை மாறிவிட்டது. மணிப்பூர் சட்டமன்ற அவைக்குறிப்புகள் இப்போது மீட்டி மேக் எழுத்து வடிவிலும் அச்சிடப்படுகின்றன. பல எழுத்தாளர்கள் வங்காளி எழுத்து வடிவத்தில் ஏற்கெனவே எழுதிய நூல்களைத் திரும்பப் பெற்று, இப்போது அவற்றை மீட்டி மேக் வடிவத்தில் எழுதிவருகின்றனர்.
என்றாலும், மணிப்பூரில் வெளியாகும் செய்தித்தாள்கள் இதுவரை மாறாமல் இருக்கின்றன. 30 வயதுக்கு மேற்பட்டவர்களே செய்தித்தாள் படிக்கிறார்கள். ஏழு தலைமுறைகளாக வங்காளி எழுத்து வடிவத்தில் படித்துப் பழகிய மக்களுக்கு மீண்டும் தாய்மொழிக்குத் திரும்புவது கடினமாக இருக்கிறது. மணிப்பூர் செய்தித்தாள்களில் ஒரே ஒரு செய்தியாவது மீட்டி மேக் எழுத்து வடிவில் இருக்க வேண்டும் என்று மீலால் அமைப்பு கேட்டிருந்தது. அதைப் பெரும்பாலான செய்தித்தாள்கள் பின்பற்றுகின்றன. இந்நிலையில் 2023 ஜனவரி 15 முதல் மணிப்பூரின் எல்லாச் செய்தித்தாள்களும் மீட்டி மேக் எழுத்து வடிவத்துக்கு மாற வேண்டும் என மீலால் அமைப்பு கெடு விதித்திருக்கிறது. ஏழு காலை நாளிதழ்களும் ஒன்பது மாலை நாளிதழ்களும் இதை ஏற்றிருக்கின்றன. ‘‘இதைச் செய்தால் ஆரம்பத்தில் விற்பனை கணிசமாகக் குறையும். என்றாலும், மணிப்பூர் மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து இந்த மாற்றத்தை ஏற்கிறோம்'' என மணிப்பூர் பத்திரிகை ஆசிரியர் சங்கம் தெரிவித்திருக்கிறது.
தங்கள் தாய்மொழியை மீட்பதற்காக இந்த நூற்றாண்டின் தொடக்கத்தில் மணிப்பூரி மக்கள் தொடங்கிய மொழிப்போரின் லட்சியம் நிறைவேற இன்னும் 30, 40 ஆண்டுகள்கூட ஆகலாம். 200 ஆண்டுகளாக இல்லாமல்போயிருந்த எழுத்து வடிவம் ஒரே நாளில் திரும்ப வந்துவிடாது என்பது அவர்களுக்கும் தெரியும். என்றாலும், ஒரு மொழி பேசும் இனக்குழு ஒன்று தங்கள் தாய்மொழியைக் காக்க என்ன செய்ய வேண்டும் என உலகத்துக்கே வழிகாட்டியிருக்கிறார்கள் மணிப்பூரிகள்.
உலகெங்கும் சிறுசிறு இனக்குழுக்கள் பேசிவரும் பல மொழிகள் வேகமாக அழிந்துவருகின்றன. அமேசான் காடுகளில் தங்கள் மொழியில் கலந்துரையாட, அம்மொழியறிந்த சக மனிதர்கள் வாய்க்காமல் ஏங்கும் பழங்குடிகள் இருக்கிறார்கள். ஒவ்வொரு 40 நாள்களிலும் ஒரு மொழி அழிந்துவருவதாகக் கவலை தெரிவிக்கின்றன மொழியாய்வு அமைப்புகள். இப்போது பேசப்படுவனவற்றில் பாதி மொழிகள் அடுத்த நூறாண்டுகளில் இல்லாமல்போய்விடும் என்பது வேதனை. ஒவ்வொரு பிரதேசத்திலும் பேசப்படும் பெரிய மொழிகள், அங்கு புழக்கத்தில் இருக்கும் சிறிய மொழிகளை விழுங்கிவிடுகின்றன.
ஒரு மொழி அழியும்போது, பல்லாயிரம் ஆண்டுகளாக அம்மொழி பேசுவோர் சேகரித்த அனுபவங்களும், கண்டறிந்த அறிவியல் உண்மைகளும், மருத்துவப் பொக்கிஷங்களும், தாவரங்கள் மற்றும் உயிரினங்களைக் குறிக்கப் பயன்படுத்திய வார்த்தைகளும், உருவாக்கிய இலக்கியங்களும் சேர்ந்தே அழிகின்றன.
இந்த மொழியைக் கற்றுக்கொண்டால் உலக அனுபவம் கிடைக்கும், அந்த மொழி அறிந்தால் வேலை கிடைக்கும், குறிப்பிட்ட மொழியைப் பேசினால்தான் நான் இந்தியன் என்றெல்லாம் வாதிடும் அத்தனை பேருக்கும் ஒரு செய்தி... தாய்மொழியை மறந்தால் நீங்கள் வேரற்ற மரமாகிவிடுவீர்கள்.