
மனிதம்
எந்த ஒரு மாற்றமும் வீட்டில் இருந்து, தனிமனிதனிடம் இருந்தே தொடங்க வேண்டும். அதுவே சிறந்த மாற்றமாக இருக்க முடியும். இதற்கு ஓர் உதாரணம் தஞ்சாவூர் ஹாஜா மைதீன்.
தஞ்சாவூர் அருகேயுள்ள பூக்காரத் தெருவைச் சேர்ந்த 60 வயதாகும் ஹாஜா மைதீன், பழக்கடை நடத்தி வருகிறார். இவர் மனைவி கெளரி, அரசுப் பள்ளியில் தலைமை ஆசிரியராகப் பணிபுரிகிறார். காதல் திருமணம் செய்திருக்கும் ஹாஜா, தன் மகளுக்கும் வேற்று மதத்தில் காதல் மணம் செய்து வைத்திருக்கிறார்.
``தஞ்சாவூரோட மையப் பகுதியில் இருக்கிற இந்தப் பூக்காரத் தெரு சண்டை சச்சரவுகளுக்குப் புகழ்பெற்றது. சாதி, மதத்தினால வர்ற சண்டைகளைத் தவிர்க்க நினைச்சு 1981-ம் வருஷம் ‘சமாதானம் இளைஞர் நற்பணி மன்ற'த்தைத் தொடங்கினேன். 110 உறுப்பினர் களோடு செயல்பட்டோம்.
மக்களிடையே சாதி, மதம் பார்க்கக் கூடாது, ஆண்கள் குடிச்சிட்டு தெருவுக்குள் வரக் கூடாது, இறுதி ஊர்வலத்தில் ஆடக் கூடாது, சண்டை சச்சரவுகளை நியாயமான முறையில் தீர்த்து வைக்கணும், ஏழை எளிய மக்களுக்குத் தொண்டு செய்யணும். இப்படியான எங்கள் கொள்கைகள் மக்களை ஈர்த்தன. மாற்றம் ஒரே நாள்ல நடக்கலை. மெதுமெதுவா குடியினால ஏற்படுற குற்றச் சம்பவங்கள் குறைய ஆரம்பிச்சது. ஒவ்வொரு வருடமும் 5 நாள்கள் விளையாட்டுப் போட்டி நடத்தி, அதில் ஜெயிக்கிறவங்களுக்கு அரசியல் விழிப்புணர்வு ஏற்படுத்துகிற புத்தகங்களைப் பரிசளிக்க ஆரம்பிச்சேன். அப்படி நான் வெச்ச போட்டி மூலமாதான் கெளரி எனக்கு அறிமுகமானாங்க” என்று மனைவியைப் பார்த்தபடி சிரிக்கிறார் ஹாஜா மைதீன். கணவரைப் பெருமையாகப் பார்த்துக் கொண்டிருந்த கெளரி பேச ஆரம்பிக்கிறார்.

‘‘இவங்க நடத்தின போட்டியில ஜெயிச்சு இவர் கையால பரிசு வாங்கினேன். பார்த்த நொடியில ஓர் ஈர்ப்பு. அப்போ நான் பத்தாவது படிச்சுக்கிட்டிருந்தேன். நாளடைவுல ஈர்ப்பு காதலாச்சு. மதம் பெரிய தடையா இருந்தது. ஆனா, நான் பன்னிரண்டாவது முடிக்கிற வரைக்கும் அவர் எனக்காகக் காத்திருந்தார். எங்க வீட்ல வந்து பேசினார். ஆனா, ஒப்புக்கலை. அவர் வீட்டுலேயும் கடுமையான எதிர்ப்பு. வேற வழியில்லாம நாகூர் போய் அங்க இருக்கிற பள்ளி வாசல்ல திருமணம் பண்ணிக்கிட்டோம்.
அதுக்கப்புறம் `அலைபாயுதே' ஸ்டைல்ல அவங்கவங்க வீட்டுல அவரவர் வேலையைப் பார்த்துட்டு இருந்தோம். ஆனா, எங்க காதல் விவகாரம், கல்யாணம் எல்லாம் வீட்டுக்குத் தெரிஞ்சதும் பெரிய பிரச்னை ஆகியிருச்சு. வேற வழியில்லாம வீட்டை விட்டு வந்து ரெண்டு பேரும் தனிக்குடித்தனம் ஆரம்பிச்சோம். அவர்தான் என்னை டீச்சர் டிரெய்னிங் முடிக்க வைச்சு, எம்.எட் வரைக்கும் படிக்க வெச்சார். என்னை ஆசிரியர் என்கிற பொறுப்புக்குக் கொண்டுவந்ததும் அவர்தான்” என்று முப்பது வருடத்துக்கு முந்தைய காதல் கதையைச் சிரிப்புடனேயே விவரிக்கிறார் கெளரி.
‘‘திருமண வாழ்க்கை நல்லபடியா போயிட்டு இருந்த நேரம் அது. எங்க மன்றத்தின் சார்பில் நாங்க செய்த நல்ல செயல்பாடுகளால் தங்கள் எக்ஸ்ட்ரா வருமானமான மாமூல் குறைஞ்சு போனதா நினைச்சாங்க காவல்துறையைச் சேர்ந்த சிலர். அதனால பொய்யான காரணம் சொல்லி எங்களைச் சிறையில் அடைச்சாங்க. அப்போ, என்னைப் பத்தி தெரிஞ்ச கம்யூனிஸ்ட் கட்சி தோழர்கள்தான் எங்களை வெளியே கொண்டு வந்தாங்க. ஒரு மன்றம் மூலம் செய்கிற நல்ல காரியத்தை கட்சியிலே சேர்ந்து செய்யலாமேன்னு நினைச்சு கம்யூனிஸ்ட் கட்சியில என்னை இணைச்சுக்கிட்டேன். என்னோட கடும் உழைப்பால, இப்போ சுமை தூக்கும் பணியாளர் சங்கத்தில் மாநிலக்குழு உறுப்பினரா இருக்கிறேன்.
காதல் மனசு இணையுற இடம். அதுல மதத்தை நுழைக்க எங்களுக்குத் துளிகூட விருப்பம் இல்லை. பொண்ணு இப்ப ரொம்ப சந்தோஷமா அவ விரும்பின வாழ்க்கையை வாழறா.
எங்களுக்கு மூணு பையன்கள், ஒரு பொண்ணு. ஒரு பையன் விபத்துல இறந்துட்டான். அதுல இருந்த மீள முடியாம கடுமையான மன உளைச்சல்களையெல்லாம் சந்திச்சோம். என்கூட பணியாற்றின தோழர்கள்தான், ‘இப்படியே இருந்தா வாழ்க்கை வீணா போயிடும். பசங்களுக்காக மீண்டு வாங்க’னு சொன்னாங்க. ஒரு வழியா மீண்டு வந்தோம். வீட்டையும் திறம்பட சமாளிச்சுக்கிட்டு, பள்ளியில சிறந்த தலைமை ஆசிரியராகவும் பொறுப்பெடுக்கிற என் கெளரியினாலதான் நான் பொது வாழ்க்கையில நிம்மதியா ஈடுபட முடியுது. ஒரு தகப்பனா பொருளாதார ரீதியா என் பசங்களுக்கு உதவ என் பழக்கடை தொழிலையும் நான் கைவிடலை” என்கிற ஹாஜா மைதீனை குழந்தைகள் பிறந்ததற்குப் பிறகே ஏற்றுக்கொண்டிருக்கிறார்கள் இரண்டு தரப்பு குடும்பத்தினரும்.
‘‘என் மக, கிறிஸ்துவப் பையனை விரும்புறான்னு தெரிஞ்சதும் மனப்பூர்வமா சம்மதிச்சு, பையன் வீட்டுல போய் வெளிப்படையா எங்களைப் பத்தி எல்லா விவரங்களையும் சொன்னோம். காதல் மனசு இணையுற இடம். அதுல மதத்தை நுழைக்க எங்களுக்குத் துளிகூட விருப்பம் இல்லை. பொண்ணு இப்ப ரொம்ப சந்தோஷமா அவ விரும்பின வாழ்க்கையை வாழறா. மகன்களுக்கு இஸ்லாமிய மதத்தைச் சேர்ந்த பெண்களை மருமகளா ஏத்துக்கிட்டோம். அவங்களும் நிம்மதியா வாழ்க்கையை நடத்துறாங்க. இதைவிட வேற என்ன சந்தோஷம் வேணும்” என்கிற கெளரியின் வார்த்தைகளில் அவ்வளவு ஆனந்தமும் நிம்மதியும் வெளிப்படுகிறது.
பூக்காரத்தெருவில் உள்ள பிரசித்தி பெற்ற முருகன் கோயிலில் ஹாஜா மைதீன் தன் நண்பர்களுடன் இணைந்து பல வருடங்களாக அன்னதானம் செய்து வருகிறார். இதைப் பார்த்து வியந்த அறநிலையத்துறையினர், ஹாஜாவை கெளரவிக்கும் விதமாகச் ‘சிறப்புப் பணியாளர்’ என்கிற அடையாள அட்டையை வழங்கியிருக்கின்றனர். கடந்த 28 வருடங்களாக சபரிமலைக்கு மாலை போட்டு செல்லும் ஹாஜா மைதீன், மத நல்லிணக்கத்துக்காக நெற்றியில் பிறை வடிவில் சந்தனப் பொட்டும் வைத்துக்கொள்கிறார்.
‘‘எனக்கும் கெளரிக்கும் திருமணமாகி 30 வருஷங்கள் ஆகிடுச்சு. இதுவரைக்கும் எங்களுக்கிடையே ஒரு சண்டை சச்சரவு வந்தது கிடையாது. அனைத்து மதப் பண்டிகைகளையும் கொண்டாடுறோம். மனங்களுக்கு மத்தியில் மதம் தோற்றுப் போகும் என்கிறதுக்கு நாங்கதான் சாட்சி” என்று நிறைவாகச் சொல்லி முடிக்கிறார் ஹாஜா மைதீன்.
இந்த சாதி, மதமற்ற அன்பு காற்றில் பரவட்டும்!