
அன்பின் வலிமை
காதல் என்கிற ஒற்றை வார்த்தையில் இவர்கள் இருவரின் வாழ்க்கையை அடக்கிவிட முடியாது... அதற்கும் மேலாக அன்பிலான வாழ்க்கையை இதயத்தில் தேக்கிவைத்திருந்தவர்கள்தாம் காஞ்சனாமாலாவும் மொய்தீனும்.
இந்தியா சுதந்திர காற்றைச் சுவாசிக்கத் தொடங்கியிருந்த காலகட்டம். கடவுளின் தேசமான கேரளாவில் இந்து, இஸ்லாம் மதங்களைச் சேர்ந்த இரு குடும்பங்கள் ஆழ்ந்த நட்பில் இருக்கிறார்கள். அவர்களின் பிள்ளைகள்தாம் காஞ்சனாமாலாவும் மொய்தீனும். இவர்களின் காதல் பள்ளிப் பருவத்திலேயே தொடங்கிவிட்டது. சில ஆண்டுகளிலேயே விஷயம் வீட்டுக்குத் தெரிய வருகிறது. என்னதான் நண்பர்களாக இருந்தாலும், காதலுக்கு இரண்டு வீடுகளிலும் தடை போடுகிறார்கள். வீட்டில் சிறைவைக்கப்படுகிறார் காஞ்சனாமாலா. மொய்தீனோ தந்தையால் குத்தப்பட்டு மோசமான நிலைக்குச் சென்று மீண்டும் உயிர்தெழுந்து வருகிறார். பத்து ஆண்டுகளாகக் காதலர்கள் இருவரிடையே எந்தப் பேச்சுவார்த்தையும் இல்லை. ‘என்ன ஆனாலும், எனக்கு நீ... உனக்கு நான்’ என்பதில் மட்டும் இருவரும் உறுதியாக நிற்கின்றனர்.
`இணைந்து வாழலாம்' என்கிற சூழல் வரும்போது, மொய்தீனை இயற்கை அழைத்துக்கொள்கிறது. அன்றிலிருந்து இன்று வரை மொய்தீன் நினைவாக, தன் நினைவுகளில் வாழ்க்கையைக் கரைத்துக்கொண்டிருக்கிறார் 79 வயதான காஞ்சனாமாலா. இவர்களின் வாழ்க்கை 2015-ல் `என்னு நிண்டே மொய்தீன்' என்கிற பெயரில் சினிமாவாக வெளியானது.
கோழிக்கோடு அருகிலுள்ள முக்கம் கிராமத்தில் தன் தங்கையுடன் வசிக்கிறார் காஞ்சனாமாலா அம்மா. “வரு மோனே...” என்று அன்பாகப் புன்னகைத்தபடி, “மொய்தீன் சேவா மந்திருக்குச் சென்று பேசுவோம்” என்று ஆட்டோவில் ஏறுகிறார்.

“அப்பா, அச்சுதன். மர வியாபாரம் செய்தார். அம்மா, தேவகி. நாங்கள் மொத்தம் 12 குழந்தைகள். நான் ஆறாவது குழந்தை. என் அப்பாவும் மொய்தீனின் வாப்பாவும் நண்பர்கள். மொய்தீனும் என் அண்ணனும் நண்பர்கள். மொய்தீன், நான், என் சகோதரி எல்லோரும் எட்டாம் வகுப்பு வரை ஒன்றாகப் படித்தோம். பள்ளிக்குச் செல்லும்போது, இருவாஞ்சிபுழா ஆற்றை ஒன்றாகக் கடப்போம். அப்போது ஏதாவது பேசிக்கொள்வோம்”-காஞ்சனாமாலா ஆர்வத்துடன் சொல்லிக் கொண்டிருக்க, இறங்கவேண்டிய இடத்தைத் தாண்டி சென்றுவிட்டது ஆட்டோ.
“சாரி மோனே... பழைய நினைவில் வழி சொல்ல மறந்துவிட்டேன்” என்று சிரிக்கிறார்.
`மொய்தீன் சேவா மந்திர்' அலுவலகத்தில் காஞ்சனா அம்மாவைப் பார்க்க பலர் காத்திருக்கின்றனர். புன்னகையுடன் அவர்களிடம் பேசு கிறார். குழந்தைகளை அள்ளிக் கொஞ்சுகிறார்.
“எட்டாம் வகுப்பு பாஸான நேரம்.அப்போது தபாலில் எனக்குச் சில புத்தகங்கள் வந்தன. அதில் காதல் கவிதை புத்தகமும் ஒரு செய்தித்தாளும் இருந்தது. அதில், ஒவ்வொரு பக்கத்திலும் ஓர் எழுத்து வட்டமிடப்பட்டிருந்தது. பள்ளிக் காலத்தில், பல மாணவர்கள் என்னை ஒருதலையாகக் காதலித்துக்கொண்டிருந்ததால், அதை அனுப்பியது அவர்களில் ஒருவர்தான் எனத் தோழிகள் என்னை கிண்டல் செய்ய, என் மனமோ அது மொய்தீன் என்றது. காரணம், என் மனதுக்குள் இருந்தது மொய்தீன்தானே? பிறகு வட்டமிடப்பட்டிருந்த எழுத்துகளை ஒன்றாக வாசித்தபோது, அது மொய்தீன்தான் என்பது உறுதியானது.
சந்தோஷத்தை நான் வெளிப்படுத்திக் கொள்ளவில்லை. பிறகு, ஒருநாள் மொய்தீனிட மிருந்து காதல் கடிதம் வந்தது. என் மனத்தில் இருந்த அதே உணர்வுகளை மொய்தீனின் வரிகளில் பார்த்தேன்” என்கிற காஞ்சனா அம்மாவின் வார்த்தைகள் ஒவ்வொன்றிலும் அத்தனை குதூகலம்.
“எனக்கு அவரோட காந்தக் கண்களை ரொம்பப் பிடிக்கும். நிறம், பல்வரிசை, முடின்னு ஒவ்வொண்ணும் அவ்வளவு அழகு. பாலிவுட் கதாநாயகன்போல இருப்பார். பல பெண்கள் அவரை காதலித்தார்கள். கால் பந்தாட்டத்தில் கில்லி. நன்கு நீச்சலடிப்பார். அழகாக எழுதுவார். அருமையாக போட்டோ எடுப்பார். மாத்ருபூமியில் பத்திரிகையாளராகப் பணியாற்றிருக்கிறார். சினிமாவிலும் ஆர்வம். `ப்ரஜா சோஷியல்' கட்சியில் இருந்தார். நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் என்றால் அவருக்கு உயிர். பஞ்சாயத்துத் தலைவராக இருந்த தன் வாப்பாவையே எதிர்த்து, பல போராட்டங்களை நடத்தியிருக்கிறார். எதிராளியை ஒருமுறை பார்த்து சிரித்தே தன் பக்கம் வசீகரித்துவிடுவார்” என்கிறவரிடம், “உங்கள் காதல் விஷயம் வீட்டுக்கு எப்படித் தெரிந்தது?” என்றோம்.
“மொய்தீன் வீட்டில் அவருக்கு நிக்கா செய்ய பெண் பார்த்துக்கொண்டிருந்தனர். மொய்தீன், ‘நான் காஞ்சனாவைத்தவிர வேறு யாரையும் திருமணம் செய்துகொள்ள மாட்டேன்’ என்று சொல்லிவிட்டார். மதமும் அரசியலும்கூட எங்களுக்கு எதிர்ப்பாக நின்றன. ஊர்க்காரர்களின் அழுத்தமும் அதிகமாக இருந்தது.
காதல் பிரச்னையில் கோபமான மொய்தீன் வாப்பா, மொய்தீனைச் சுட குறிபார்க்க அவர் அம்மா வந்து காப்பாற்றிவிட்டார். ஆனால், பொதுவெளியில் மொய்தீனை 22 முறை கத்தியால் குத்திவிட்டார். மருத்துவமனையில் இருந்த மொய்தீனுக்கு என் ரத்தத்தில் ஒரு கடிதம் எழுதினேன்.
‘எனக்கு நீ மட்டும்தான்... உனக்கு நான் மட்டும்தான்’ என்று அதில் சொன்னேன். என் கடிதத்தைப் படித்துக்காட்டிய பிறகே அவர் மீண்டதாகச் சொன்னார் மொய்தீன் அம்மா. ஒருகட்டத்தில் மொய்தீனை வீட்டை விட்டு விரட்டிவிட்டார் வாப்பா. என்னை வீட்டுச் சிறையில் வைத்தார்கள். இருந்தாலும் வீட்டு வேலை
யாட்கள் மூலமாக, கடிதப் பரிமாற்றம் செய்து `கோடு வேர்டு' மூலமாகப் பேசிக்கொண்டோம்.
பத்து ஆண்டுகளுக்குப் பிறகு, நண்பர் ஒருவரின் வீட்டில் நாங்கள் சந்தித்தோம். அப்போது, `நம் திருமணம் சீக்கிரம் நடக்கும்' என்றபடியே எனக்கு மோதிரத்தை அணிவித்தார். நானும் அவருக்கு மோதிரம் அணிவித்தேன். இத்தனை ஆண்டுகளில் முதன்முறையாக அவர் விரல் என்மேல் பட்டது அப்போதுதான். எங்களைப் பொறுத்தவரை மோதிரம் மாற்றியபோதே திருமணம் நடந்துவிட்டது'' என்கிறவரின் குரல் கம்முகிறது.
காதலித்த காலத்தில் பலமுறை வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்ய நினைத்தோம். என் சகோதரிகளின் எதிர்காலம், என் சகோதரர் இறப்பு, என் தந்தையின் நெஞ்சுவலி, மொய்தீன் வாப்பா இறப்பு என எங்களைச் சேரவிடாமல் இயற்கை தடங்கல் செய்துகொண்டே இருந்தது.
மனமுடைந்த மொய்தீன் விரக்தியாக எனக்கு ஓர் கடிதம் எழுதியிருந்தார். படிக்கும் போதே வலியாக இருந்தாலும் ‘எனக்காக ஏழு ஜென்மம் வரை காத்திருப்பேன் என்றாயே..? ஒரு ஜென்மம் முடிவதற்கு முன்பே சோர்ந்துபோனால் எப்படி?’ என்று பதில் கடிதம் போட்டேன். அதற்கு, ‘இன்னும் உங்கள் வீட்டில் சம்மதிப்பார்கள் என்று நம்புகிறாயா..? நீ இங்கே வந்துவிடு’ என்று பதில் வந்தது. ஆனால், அந்தக் கடிதத்தை எழுதியது மொய்தீன் இல்லை. அவர் அம்மா ஃபாத்திமா. அப்போதுதான், மொய்தீனின் அம்மா எங்கள் காதலை ஏற்றுக்கொண்டிருக்கிறார் என்பது தெரியவந்தது.

ஒருவழியாக எல்லாப் பிரச்னைகளையும் கடந்து, `இணைந்து வாழலாம்' என்று முடிவெடுத்தோம். மொய்தீன், வீட்டைப் புதுப்பிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார். நான், உறவினர் வீட்டுக்குச் சென்றுவிட்டு, பேருந்தில் வந்து கொண்டிருந்தேன். பேருந்து பயணம் எப்பவுமே எங்களுக்கு மறக்க முடியாத நினைவாக இருக்கும். எங்கள் காதல் மலர்ந்ததும் பேருந்தில்தான். அந்தத் துயரச்செய்தி வரும்போதும் நான் பேருந்தில்தான் பயணம் செய்துகொண்டிருந்தேன்...” - காஞ்சனா அம்மாவின் புன்னகை மறைந்து குரல் உடைகிறது.
“மழை பெய்துகொண்டிருந்தது. பேருந்தில் இருந்த நண்பர் ஒருவர், ‘விஷயம் தெரியுமா... மொய்தீன் தண்ணீரில் மூழ்கி இறந்துவிட்டான்’ என்றார். இதயமே எனக்கு நின்றுவிட்டது. சற்று நிதானத்தை வரவழைத்துக்கொண்டு பயத்துடன் ‘எந்த மொய்தீன்?’ என்று கேட்டேன். ‘உங்கள் மொய்தீன்தான்’ என்று சொல்லிட்டு சென்றார். கம்பியை இறுக்கப்பிடித்துக் கொண்டேன்... வலிப்பு வந்ததுபோல ஆகிவிட்டது. அருகில் இருந்த சகோதரியை இறுக்கமாகக் கட்டிப்பிடித்துக் கொண்டேன். உடனடியாக பேருந்தை விட்டு இறங்கி அருகில் இருந்த நண்பரின் வீட்டுக்குச் சென்றேன். மாத்ருபூமி அலுவலகத்துக்கு போன் செய்து கேட்டோம். ‘வெள்ளத்தில் சிக்கியவர்களைக் காப்பாற்ற இறங்கியபோது, சுழலில் சிக்கிவிட்டார். தேடும் பணி நடந்து கொண்டிருக்கிறது’ என்கிற தகவல் கிடைத்தது. ‘மொய்தீனின் வீட்டுக்குச் செல்ல வேண்டும்’ என்று பெரும் குரலெடுத்துக் கதறினேன். என்னுடைய வேதனையைப் புரிந்துகொண்டு அழைத்துச் சென்றனர். அவ்வளவு நேரம் யாருடனும் பேசாமல் இருந்த மொய்தீனின் அம்மா, என்னைப் பார்த்ததும் வெடித்து அழுதுவிட்டார். என்னாலும் அழுகையை நிறுத்த முடியவில்லை.
நீண்ட தேடுதலுக்குப் பிறகுதான், மொய்தீனின் உடல் கிடைத்ததாம். மொய்தீன் இறந்த நொடியிலிருந்து எனக்குத் தோன்றிய ஒரே விஷயம், ‘மொய்தீன் இல்லாத உலகில் இனி நாமும் இருக்கக் கூடாது’ என்பதுதான். இரண்டு முறை தூக்கு மாட்டிக்கொள்ள முயன்றேன். உறவினர்கள் காப்பாற்றிவிட்டனர்.
15 நாள்கள் சாப்பிடவில்லை. ‘என்னதான் வேண்டும்?' என என் வீட்டில் கேட்டனர். ‘மொய்தீன் உயிரிழந்த இருவாஞ்சி புழா ஆற்றுநீர் வேண்டும்’ என்று கேட்டேன். தூக்க மாத்திரைகளைச் சாப்பிட்டுவிட்டு, கடைசியாக அந்தத் தண்ணீரை குடித்து இறப்பதுதான் என் திட்டம். அப்போது, எதிர்பாராதவிதமாக எங்கள் வீட்டுக்கு வந்த மொய்தீனின் அம்மா ‘ஏன் இப்படி இருக்கிறாய்? மொய்தீனின் கடமைகளை எல்லாம் யார் செய்வது? மொய்தீன் இருந்திருந்தால் என்ன செய்திருப்பானோ, அதையெல்லாம் இனி நீதான் செய்ய வேண்டும்’ என்று சொன்னார். அங்குதான் வாழ்வில் திருப்புமுனை ஏற்பட்டது. அந்த நேரத்தில் யோசித்துத் தொடங்கியதுதான், மொய்தீன் சேவா மந்திர்.
நூலகம், ஆதரவற்ற முதியவர்களுக்கு அடைக்கலம், உளவியல் ஆலோசனை, பள்ளி களில் தொழிற்கல்விப் பயிற்சி என ஏராளமான பணிகளைச் செய்துகொண்டிருக்கிறோம். வரும் அக்டோபர் 20 அன்று மொய்தீன் பெயரில் கட்டிக்கொண்டிருக்கும் கனவுக் கட்டடத்தைத் திறக்க உள்ளோம்.
இப்போதும், மொய்தீன் என்னுடன்தான் இருக்கிறார். அவர் அன்பும் காதலுமே என்னை இவ்வளவு வருடம் இயக்கிக் கொண்டிருக்கிறது'' என்கிறார் கண்ணீருடன். பிரமிப்பு அடங்க நமக்கு வெகு நேரம் பிடித்தது.