சினிமா
ஆன்மிகம்
பேட்டி - கட்டுரைகள்
இலக்கியம்
Published:Updated:

ஆனந்தம் பொங்கும் அமிர்தசரஸ்

அமிர்தசரஸ்
பிரீமியம் ஸ்டோரி
News
அமிர்தசரஸ்

பயணம்

பஞ்சாப் மாநிலத்துக்குப் பயணம் செல்பவர்களை, ‘ஒரு எட்டு பொற்கோயிலுக்கும் போய்விட்டு வரலாமே...’ என எண்ணவைத்து, சுண்டியிழுக்கும் தங்க நகரம் அமிர்தசரஸ். 24 காரட் சொக்கத் தங்கத்தால் ஜொலிக்கும் இந்தப் பொற்கோயில்தான் சீக்கியர்களின் புனிதத் தலம். அமிர்தசரஸ் பஸ் ஸ்டாண்டைவிட்டு வெளியே வந்தால் ஆட்டோ, சைக்கிள் ரிக்‌ஷா ஓட்டுநர்கள் `அமிர்தசரஸ், ஜாலியன் வாலாபாக், வாகா...’ எனக் கூவிக் கூவி அழைக்கிறார்கள். நெருக்கடியான தெருக்களையும், வாகனங்களின் அழுக்கையும் பார்க்கும்போது, ஏதோ வேறு நாட்டுக்குள் போனதுபோல இருந்தது. அங்கிருந்து கூப்பிடும் தூரத்தில்தான் பாகிஸ்தானையும் இந்தியாவையும் பிரிக்கும் `வாகா’ எல்லை. முதலில் அமிர்தசரஸ் பொற்கோயிலை தரிசிக்கலாம் என சைக்கிள் ரிக்‌ஷாவில் ஏறி உட்கார்ந்தோம். சில கிலோமீட்டர் தூரத்திலிருந்த பொற்கோயிலுக்குச் செல்ல, `முக்கால் மணி நேரம் பிடிக்கும்’ என்றார் ரிக்‌ஷாக்காரர். அதற்குள், பொற்கோயில் வரலாற்றைக் கொஞ்சம் அசைபோட்டுப் பார்த்தோம்.

லகின் பழைமையான நாகரிகங்களில் ஒன்றான சிந்து சமவெளிப்பகுதியில் அமிர்தசரஸ் இருக்கிறது. செல்வச் செழிப்புமிக்க, இந்தியாவுக்குள் தரைவழியாக வருவதற்கு அமிர்தசரஸ் பகுதிதான் நுழைவாயில். இதனால்தான் மாவீரன் அலெஸ்சாண்டர் தொடங்கி, அல்லுசில்லுக் கொள்ளையர்கள்வரை அமிர்தசரஸ் பகுதியை `உண்டு இல்லை’ என்று செய்திருக்கிறார்கள். இந்து, முஸ்லிம் மோதல்களுக்கு இங்கு பஞ்சம் இல்லை.

அமிர்தசரஸ்
அமிர்தசரஸ்

குரு நானக், 1469-ம் ஆண்டு, ஏப்ரல் 15-ம் தேதி தற்போது பாகிஸ்தான் பகுதியிலுள்ள ‘டல்வாண்டி’ என அழைக்கப்படும் கிராமத்தில் இந்துமதக் குடும்பத்தில் பிறந்தார். `இறைவன் முன் அனைவரும் சமம்’, `அன்பே சிவம்’ எனத் தென்னிந்தியாவில் பக்தி இயக்கம் வலுப்பெற்று, அதன் தாக்கம் வட இந்தியாவில் வீசிய காலம் அது. கபீர் என்ற ஞானி, `ரஹீமும் ராமனும் ஒன்றே...’ என பக்திப் பாடல்களைப் பரவசமாகப் பாடிவந்தார். கபீரின் வழியொட்டி, `இந்து, முஸ்லிம் எனப் பிரிவினை வேண்டாம்...’ என மக்களுக்கு அன்புவழி போதனை செய்யத் தொடங்கி, ‘சீக்கிய மதம்’ உருவாக விதை ஊன்றினார் குரு நானக். இவரைத் தொடந்து வந்த குருக்களும், `அன்பு காட்டுவோம், அதுவே, ஆண்டனைச் சேரும் வழி’ என அடக்கமாகச் சொல்லிவந்தார்கள். ஆனால், அப்போதிருந்த முஸ்லிம் ஆட்சியாளர்கள், சீக்கிய குருக்களை, உண்டு இல்லை என உலுக்கி எடுத்திருக்கிறார்கள். `அன்பும் காட்டுவோம்; அடித்தால், திருப்பியும் அடிப்போம்...’ என சீக்கியர்களுக்குள்ளிருந்த சிங்கத்தைத் தட்டியெழுப்பினார்கள், அடுத்தடுத்து வந்த குருக்கள்.

 24 மணி நேரமும் செயல்படும் ‘லங்கர்’ சமுதாய உணவுக்கூடம்.
24 மணி நேரமும் செயல்படும் ‘லங்கர்’ சமுதாய உணவுக்கூடம்.

குரு ராம்தாஸ் என்ற 4-வது குருவுக்கு, முகலாய அரசர் அக்பர் பெரும் நிலத்தை தானமாகத் தந்து அதில், `ராம்தாஸ்பூர்’ என்ற நகரத்தைக் கட்டியமைத்தார். இதுதான் இன்று `அமிர்தசரஸ்’ என்று அழைக்கப்படுகிறது. 5-வது குருவான குரு அர்ஜுன் இங்கு சீக்கியர்களின் பொற்கோயிலைக் கட்டினார். பலமுறை போர்களால் பாதிக்கப்பட்டாலும், சீக்கியர்களின் விடாமுயற்சியால் மீண்டும், மீண்டும் கட்டியெழுப்பப்பட்டிருக்கிறது. அந்தக் காலத்தில் சீக்கியர்களிடம் வசூலிக்கப்பட்ட வரிகளால் வந்த பெரும் செல்வத்தை, பொற்கோயிலிலுள்ள பொக்கிஷ அறையில்தான் வைத்திருந்திருக்கிறார்கள். அந்த இடமே ‘அகாலிதளம்’ (அழியாத சிம்மாசனம்) என்று அழைக்கப் பட்டது. இன்றும்கூட, இதே பெயரில் சீக்கியர்களின் அரசியல் கட்சி இருக்கிறது என்பது கவனிக்கதக்கது.

பொற்கோயிலில் போற்றி வணங்கப்படும் சீக்கியர்களின் புனித நூல், முதலில், `ஆதி கிரந்தம்’ என்று அழைக்கப்பட்டது. இந்த நூலுக்கு, பத்தாவதும் கடைசி சீக்கிய குருவுமான குரு கோவிந்த் சிங், ‘இனி, சீக்கிய மதத்தில் குரு உருவாக மாட்டார். இந்து, முஸ்லிம் மதத்தின் சிறப்புகளையும், பத்து குருக்களின் போதனைகளையும் உள்ளடக்கிய, இந்தக் கிரந்தத்துக்கு, ‘குரு’ தகுதி வழங்கப்படுகிறது. இனி இது, `குரு கிரந்த சாகிப்’ என்று அழைக்கப்படும்’’ என்று வழிகாட்டியுள்ளார். எனவே, வாழும் பதினோராம் குருவாகவே இந்த நூலைப் போற்றி வணங்குகிறார்கள் சீக்கிய மக்கள். குர்முகி எழுத்தில் எழுதப்பட்டுள்ள இந்தப் புனித நூலை வணங்கத்தான் தாடிவைத்து, டர்பன் கட்டிய சிங்குகளும், சல்வார் கமீஸ் அணிந்திருக்கும் பஞ்சாபிப் பெண்களும் பொற்கோயிலுக்குள் வந்து குவிந்தவண்ணம் இருக்கிறார்கள். தினமும் லட்சக்கணக்கான மக்கள் வந்து போகும் இந்த நகரம், நெரிசலில் சிக்குவதில் ஆச்சர்யமில்லை.

பொற்கோயில் வளாகத்தில் நுழையும்போதே தலையில் கர்ச்சீப்பால் மூடிக்கொண்டும், கை கால்களைச் சுத்தம் செய்துகொண்டும்தான் செல்ல வேண்டும் என அன்பாகச் சொல்கிறார்கள். தூரத்திலிருந்து பார்க்கும்போதே, கண்களைக் கூசச் செய்யும் அளவுக்கு ஜொலித்துக் கொண்டிருந்தது பொற்கோயில். கோயிலைச் சுற்றிலும், அகழியிலிருந்த நீரிலும் சொக்கத் தங்கத்தின் ஒளி, நீரையும் பொன்னிறமாகக் காட்டியது. நீண்ட வரிசையில் நின்று, தள்ளு முள்ளு இல்லாமல் உள்ளே சென்று, வாழும் குருவாக வழிகாட்டிவரும் `குரு கிரந்த சாகிப்’ நூலை தரிசித்துவிட்டு வெளியில் வந்தால், கை நிறைய கோதுமையால் செய்யப்பட்ட இனிப்பு மாவைக் கொடுத்துக்கொண்டிருந்தார்கள்.

அமிர்தசரஸ்
அமிர்தசரஸ்

‘‘இந்த இனிப்பைப்போலவே, உங்கள் வாழ்க்கையும் இனிப்பாக மாறும்’’ என நல்வாக்குச் சொன்னபடி நமக்கும் கைநிறைய இனிப்பை அள்ளிக் கொடுத்தார்கள். நம் தோற்றத்தைக் கண்ட, சேவை செய்யும் தொண்டர், ‘‘நீங்கள் வெளி மாநிலத்திலிருந்து வருகிறீர்கள் என்று தெரிகிறது. பொற்கோயிலில் நீங்கள் அவசியம் பார்க்க வேண்டிய இடம் உள்ளது. ‘லங்கர்’ என அழைக்கப்படும் சமுதாய உணவுக்கூடத்தில், தினமும் பல்லாயிரக்கணக்கானவர்கள் பசியாறுகிறார்கள். 24 மணி நேரமும் திறந்திருக்கும். நீங்களும் சென்று, குருவின் பிரசாதத்தை உண்டு மகிழுங்கள்’’ என்று சீக்கிய வணக்கம் சொல்லி, லங்கர் செல்ல வழிகாட்டினார். வழி முழுக்க, அதன் புகழைப் பேசியபடியே மக்கள் வந்து கொண்டிருந்தனர். சுத்தமான உணவு அருந்தும் கூடம், தரையில் பாயை விரித்துப் போட்டு உட்காரவைத்தார்கள். ஒரே நேரத்தில் ஆயிரம் பேர் சாப்பிடும் அளவுக்குப் பரந்து விரிந்திருந்தது கூடம். கோயிலில் வழங்கப்படும் சாப்பாடுதானே என்று சாதாரணமாக நினைக்க வேண்டாம். அந்தச் சப்பாத்தியின் சுவை ஐந்து நட்சத்திர ஓட்டலில்கூடக் கிடைக்காது. நெய் தடவிய சப்பாத்தி, சூடான அரிசி சாதம், பருப்புக் கடைசல், பஞ்சாபி சப்ஜி, கோதுமைப் பாயசம் என விருந்துபோல அமுது படைத்தார்கள். சீக்கியர்கள் அந்த உணவையும் மனதார வணங்கிவிட்டுத்தான் உண்ணத் தொடங்குகிறார்கள். சிலர், வீட்டிலுள்ள குழந்தைகள், முதியவர்களுக்கு கோதுமை ரொட்டியைப் பிரசாதமாக வாங்கி வைத்துக் கொள்கிறார்கள். குளிர்காற்று வீசும் அமிர்தசரஸில் ஆவி பறக்கச் சாப்பிடுவது ஆனந்தமாக இருந்தது. எத்தனை முறை, எவ்வளவு கேட்டாலும் சலிக்காமல் அள்ளி அள்ளிப் பரிமாறுகிறார்கள். உணவு பரிமாறியவர்களின் வயது இருபதைக்கூடத் தாண்டியிருக்காது. நூற்றுக்கணக்கான இளைஞர்கள் கண்ணும் கருத்துமாக உணவு பரிமாறிக்கொண்டிருந்தனர். சீக்கிய குருக்களின் மகா பிரசாதத்தைப் பெற்றுக்கொள்ள மக்கள் வரிசை வரிசையாக வந்துகொண்டிருந்தனர். சாப்பிடும்போதே, `இத்தனை பேர் சாப்பிடுகிறார்களே, இங்கிருக்கும் சமையற்கூடம் எப்படியிருக்கும்?’ என்று நினைக்கத் தோன்றியது. உணவு பரிமாறும் சேவையிலிருந்த இளைஞர்களிடம் விசாரித்தோம்.

‘‘நாங்கள் எல்லோரும் கல்லூரி மாணவர்கள். வார இறுதியில், லங்கரில் வந்து சேவை செய்வோம். வாருங்கள், எங்கள் மெகா கிச்சனைக் காட்டுகிறோம்’’ என்று அழைத்துச் சென்றார் அவர்களில் ஓர் இளைஞர். ஒருபக்கம் நூற்றுக்கணக்கான ஆண்களும் பெண்களும் குழுக் குழுவாகக் காய்கறிகளை நறுக்கிக்

கொண்டிருந்தனர். மற்றொரு பக்கம், தட்டு டம்ளர்களைச் சுத்தம் செய்துகொண்டிருந்தனர். பெரிய அடுப்பில் பால், பருப்பு வகைகள் வெந்துகொண்டிருந்தன. விளையாட்டு மைதானம்போல விரிந்து நின்ற கட்டடத்தின் ஒவ்வொரு தளத்திலும் சமையல் கன ஜோராக நடந்து கொண்டிருந்தது. மனிதர்களுக்கு உதவிசெய்ய, நிமிடத்துக்குப் பல நூறு சப்பாத்திகளைச் சுட்டுக் கொடுக்கும் இயந்திரமும் சுற்றிச் சுழன்று கொண்டிருந்தது. பல வண்ணங்களில் உடையணிந்த பஞ்சாபிப் பெண்கள், கூட்டம் கூட்டமாக உட்கார்ந்து, சாப்பாத்தியின் மேல் வாசம் வீசும் நெய்யை அள்ளி அள்ளித் தடவி வைத்துக் கொண்டிருந்தனர்.

பெரிய கூடைகளில் நெய் தடவிய சப்பாத்திகளைக் கொட்டி, வெதுவெதுப்பான பெட்டியில் அடுக்கி வைத்துக்கொண்டிருந்தனர். அந்த இடத்திலிருந்த சர்தார்ஜியிடம் பேச்சுக் கொடுத்தோம்.

‘‘என்னை எல்லோரும், ‘சப்பாத்தி சர்தார்ஜி’ என்றுதான் அழைப்பார்கள். சுமார் 20 ஆண்டுகளாக இங்கு சேவை செய்கிறேன். மக்களின் பசியாற்றும் பணி செய்வதில் மகிழ்கிறேன். இங்கு சமைக்கப்படும் உணவுப் பண்டங்களை மக்கள் வடிவில் குருக்கள் வந்து உண்பதாகக் கருதப்படுகிறது. எனவே, சுத்தம், சுகாதாரம் மட்டுமல்ல, எங்கள் அன்பையும் கலந்து சமைக்கிறோம். இதனால்தான் இங்கு வழங்கப்படும் உணவுகளின் சுவை வேறு எங்கும் கிடைப்பதில்லை’’ என்றவர், ``நீங்கள் சாப்பிட்டுவிட்டீர்களா?’’ என வாஞ்சையுடன் கேட்டார்.

இரண்டு நாள்கள் அமிர்தசரஸ் பொற்கோயில் வளாகத்திலே சுற்றித் திரிந்தோம். நாள் முழுக்க மக்கள் வருவதும் செல்வதுமாக இருந்தார்கள். ஒரு மணி நேரத்துக்கு ஒரு முறை, ‘‘நமக்கு பழநி, திருப்பதி எப்படியோ, அது மாதிரிதான், சீக்கியர்களுக்கு இந்தக் கோயில்...’’ எனப் பேசியபடி செல்லும் தமிழர்களின் தமிழோசையைக் கேட்க முடிந்தது. புழுதிபடிந்த ஷூக்களைக் கொடுத்தால், திரும்பப் பெறும்போது அவை பளபளவென மின்னுகின்றன. இலவசக் காலணிப் பாதுகாப்பகத்தில் எட்டிப் பார்த்தால், கோட்டு சூட்டு போட்ட சர்தார்ஜிகள் ஷூக்களுக்கு பாலிஷ் போட்டுக்கொண்டிருந்தார்கள். அங்கிருந்த சேவகரிடம் பேசினோம். ‘‘மக்களின் காலணிகளைச் சுத்தம் செய்யும் இவர்களில் பலர் கோடீஸ்வரர்கள். அமெரிக்காவில் சாஃப்ட்வேர் கம்பெனியில் சி.இ.ஓவாக இருப்பவர்கூட இன்று இந்தச் சேவையில் ஈடுபட்டிருக் கிறார்...’’ எனச் சொல்லி ஆச்சர்யப்படுத்தினார். பக்கத்திலேயே மரக்கன்றுகளை இலவசமாகக் கொடுத்துக் கொண்டிருந்தனர்.

`சர்தார்ஜி ஜோக்’ சொல்லிப் பழக்கப்பட்ட நமக்கு அவர்களின் ஆன்மிகச் சேவையை நேரில் கண்டபோது ஆச்சர்யமாக இருந்தது.

எந்த இடத்திலும் நெரிசல் கிடையாது. யாருக்கும் எந்தச் சலுகையும் கிடையாது. அரசியல்வாதிகள், அதிகாரிகள் என எல்லோருக்கும் ஒரே வழிதான். எல்லோரும் தரையில் அமர்ந்து சாப்பிட வேண்டும். இரண்டு நாள்களும் ரம்மியமான சூழல், இனிமையான இசை, சுவையான உணவு, நேசமான மனிதர்கள் என... அன்பும் கருணையுமாக அமைந்தது அமிர்தசரஸ் பயணம்.

வாஹே குரு வாஹே குரு வாஹே குருஜி

போலோ சத்நாம், சத்நாம், சத்நாம் ஜி போலோ!

500 குடும்பங்களும் ஆனந்த வழிபாடும்!

சீக்கியர்கள் வாழும் பகுதிகளில் ‘குருத்துவாரா’ (குருவை அடையும் வழி) அமைத்து, அங்கு ‘குரு கிரந்த சாகிப்’ நூலை வணங்கிவருகிறார்கள். அந்த வகையில், சென்னை மாநகரிலும் தி.நகர், ஜி.என்.செட்டி சாலையில் பிரமாண்டமான குருத்துவாரா உள்ளது. 1953-ம் ஆண்டு கட்டப்பட்ட குருத்துவாரா குறித்து, இதன் நிர்வாகிகளில் ஒருவரான ஹர்பன் சிங்கிடம் பேசினோம்...

 ஹர்பன் சிங்
ஹர்பன் சிங்

‘‘சென்னை மாநகரில் மட்டும் 500-க்கும் மேற்பட்ட சீக்கியக் குடும்பங்கள் உள்ளன. ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமை அன்றும் காலை 9 மணி முதல் மதியம் 1 மணிவரை சிறப்பு வழிபாடு, கீர்த்தன் (சமயப் பாடல்கள்), சமுதாய விருந்து... ஆனந்தம் பொங்க நடைபெற்றுவருகின்றன. தினசரி காலை, மாலை வழிபாடும் உண்டு. பைசாகி, குருநானக் பிறந்த தினம், தீபாவளி (பந்திச்சோர் திவசு) போன்றவையும் கொண்டாடப்படுகின்றன. தினமும் மூன்று வேளையும், குருத்வாராவுக்கு வருபவர்களுக்குப் பசியாற்று கிறோம். முதலில் வயிற்றுப் பசியைப் போக்கிய பிறகுதான் இறைப்பசிக்கு அழைத்துச் செல்கிறோம். சாதி, மத பேதம் கிடையாது. அனைவரும் வரலாம்; வணங்கலாம்; பசியாறலாம்; இறையை தரிசிக்கலாம். இங்கு வெளியூரிலிருந்து வந்து தங்குபவர்களுக்குக் குறைந்த கட்டணத்தில் தங்கும் விடுதி உள்ளது. திருமண மண்டம் உள்ளது. இதில் யார் வேண்டுமானாலும் திருமணம் நடத்திக்கொள்ளலாம். ஆனால், அதில் சைவ உணவு மட்டுமே சமைக்கவும் உண்ணவும் வேண்டும் என்ற கட்டுப்பாடு இருக்கிறது. இவை தவிர, கல்வி, மருத்துவ உதவிகளையும் செய்துவருகிறோம். சென்னையிலுள்ள குரு நானக் கல்லூரியை, நாங்கள்தான் நடத்திவருகிறோம். அறப்பணிகள் அன்பர்களின் நன்கொடையால்தான் நடந்துவருகின்றன’’ என்றார்.

ராமநாதபுரத்தில் ஒரு பசுமைப் பண்ணை!

ஐந்து நதிகள் ஓடுவதால்தான், `பஞ்சாப்’ என்று அந்த மாநிலத்துக்குப் பெயர். வற்றாத ஜீவநதிகள் ஓடும் மாநிலத்திலிருந்து வறட்சிப் பகுதியான ராமநாதபுரம் மாவட்டத்துக்கு வந்து விவசாயம் செய்கிறார்கள் பஞ்சாப் விவசாயிகள். கமுதி தாலுகா, அபிராமம் என்ற சின்ன நகருக்கு அருகிலுள்ள வல்லந்தை கிராமத்தில் சீக்கிய விவசாயிகள் இப்போது பிரபலம். ஒருகாலத்தில் சீமைக்கருவேல மரங்கள் மட்டுமே முளைத்துக்கிடந்த பகுதியில் தென்னை, மா என்று விதவிதமான மரங்களைச் சாகுபடி செய்து சோலையாக்கியிருக்கிறார்கள். இவர்கள் தமிழ்நாட்டுக்கு வந்ததுக்குப் பின்னால் ஒரு கதை உண்டு. ராமேஸ்வரம் பகுதியில் சீக்கியர்களின் குருத்துவாரா உள்ளது. இங்கு ஆன்மிகப் பயணம் வந்த கல்கிதார் அறக்கட்டளையின் தலைவர் இக்பால் சிங், ராமநாதபுரம் மாவட்டத்தைச் சுற்றிப் பார்த்திருக்கிறார். அவர் மனதில், அந்த வறண்ட நிலத்தின் காட்சி பிடித்துப்போனது. வறட்சி இருந்தாலும், வளமான மண் வளம் இருப்பதைக் கண்டுகொண்டார். காரணம், இவர் வேளாண்மைத்துறையில் இயக்குநராகப் பணியாற்றியவர். வேளாண் வித்தை அறிந்த இக்பால் சிங் பஞ்சாப் திரும்பியதும், ராமநாதபுரத்தைப் பற்றி, தன்னைச் சந்திக்க வருபவர்களிடம் சொல்லியிருக்கிறார். அந்தச் சமயத்தில் குறைந்த விலைக்கு நிலம் கிடைத்தது. `பஞ்சாப்பில் ஒரு ஏக்கர் வாங்கும் பணத்தில் பல ஏக்கர் இங்கு வாங்க முடியும்’ என்று இக்பால் சிங் சொன்னதைக் கேட்டு மன்மோகன் சிங், ஹர்ஷன் சிங், சர்பஜித் சிங் என மூன்று பேர் 2007-ம் ஆண்டு ராமநாதபுரம் மாவட்டத்துக்கு மூட்டை முடிச்சுகளுடன் வந்துசேர்ந்தனர்.

மன்மோகன் சிங்
மன்மோகன் சிங்

வல்லந்தை கிராமத்தினர், உழைப்பில் நம்பிக்கைகொண்டு வந்திருந்த இவர்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்தனர். சிறிய அளவு நிலம் வாங்கி, ‘அகல் விவசாயப் பண்ணை’யை ஆரம்பித்துப் பயிர் செய்யத் தொடங்கினார்கள். இப்போது நூற்றுக்கணக்கான ஏக்கரில் பண்ணை விரிந்திருக்கிறது.

‘‘இப்போது நினைத்தாலும் ஆச்சர்யமாக உள்ளது. எங்களின் இடைவிடாத உழைப்புக்கு சாட்சிதான் இங்கு நிற்கும் பல வகையான பழ மரங்கள். தண்ணீர்தான் இங்கு பிரச்னை என்று தெரிந்தது. எனவே, பெரிய கிணறு வெட்டி சிக்கனமாக நீரைப் பயன்படுத்தத் தொடங்கினோம். குட்டை வகைத் தென்னை, மா, நெல்லி, கொய்யா போன்ற மரங்களுடன் கம்பு, சோளம் எனச் சிறுதானியங்களைச் சாகுபடி செய்கிறோம். இயற்கை முறையில்தான் சாகுபடி செய்கிறோம். எங்களுக்குத் தேவையான மண்புழு உரம், பஞ்சகவ்யாவைப் பண்ணையிலேயே தயாரித்துக்கொள்கிறோம்’’ என உற்சாகமாகச் சொல்கிறார் பண்ணையை உருவாக்கியவர்களில் ஒருவரான மன்மோகன் சிங்.

திருக்குறள் சிங்!

சென்னை முகப்பேர், ஸ்பார்டன் அவென்யூ பகுதியிலுள்ள ஒரு வீட்டிலுள்ள தோட்டம் அந்தப் பக்கம் செல்பவர்களைக் கவர்ந்திழுக்கிறது. முண்டாசு கட்டி ஆஜானுபாகுவாக நிற்கிறார் வீட்டின் உரிமையாளர் ஜஸ்வந்த் சிங். ‘``எங்கள் பூர்வீகம், பஞ்சாப் மாநிலத்திலுள்ள ஹோஷியார்பூர். 1937-ம் ஆண்டில் என் தாத்தா காலத்திலேயே சென்னையில் குடியேறினோம். கட்டுமானத் தொழிலைத்தான் பரம்பரையாகச் செய்துவருகிறோம். நான் பிறந்தது, வளர்ந்தது எல்லாமே சென்னையில்தான். 1978-ம் ஆண்டிலிருந்து இந்த வீட்டில் வசித்துவருகிறோம். 35 ஆண்டுகளுக்கு முன்னர் பூக்கள் மற்றும் துளசிச் செடியுடன் ஆரம்பித்தது இந்தத் தோட்டம். இன்று மரங்கள், மூலிகைகள், கீரைகள், காய்கறிகள், பழங்கள், மலர் வகைகள் என வனம்போலக் காட்சியளிக்கிறது. 5,000 சதுர அடி இடம்; 300-க்கும் மேற்பட்ட மூலிகைச் செடிகள்; 100-க்கும் மேற்பட்ட பூச்செடிகள் மற்றும் காய்கறிச் செடிகள் உள்ளன. மழை பெய்ய வேண்டுமென்றால் மரம், செடி, கொடிகளை வளர்க்க வேண்டும்’’ என்றவர்,

திருக்குறள் சிங்!
திருக்குறள் சிங்!

‘`விண்ணின்று பொய்ப்பின் விரிநீர் வியனுலகத்து

உண்ணின்று உடற்றும் பசி.

இது 13-வது திருக்குறள். `உரிய காலத்தில் மழை பெய்யாமல் பொய்க்குமானால், கடல் சூழ்ந்த இப்பேருலகத்தில் வாழும் உயிர்களைப் பசி வருத்தும்’ என்பதுதான் இதன் பொருள். 2,000 ஆண்டுகளுக்கு முன்னர், இயற்கையின் அருமை பெருமைகளைத் திருவள்ளுவர் விளக்கமாகச் சொல்லியிருக்கிறார். தமிழ்மொழியை நேசிப்பவர்கள் நிச்சயம் இயற்கையை நேசிப்பவர்களாக இருப்பார்கள்’’ என்று செந்தமிழில் சொல்லிவிட்டு, தான் உருவாக்கிய திருவள்ளுவர் சிற்பத்தை வாஞ்சையுடன் தடவிப்பார்க்கிறார் இந்த ‘திருக்குறள்’ சிங்.

ஆனந்தம் பொங்கும் அமிர்தசரஸ்

ஆகா, வாகா எல்லை!

அமிர்தசரஸ் நகரிலிருந்து 32 கி.மீ தூரத்தில்தான், வாகா (Wagah) எல்லை இருக்கிறது. தினமும் மாலை 4:30 மணிக்கு நடைபெறும் கொடியிறக்க நிகழ்ச்சி, உலகப் புகழ்பெற்றது. இந்தியாவின் எல்லைப் பாதுகாப்புப் படையும் பாகிஸ்தான் ரேஞ்சர்ஸும் இணைந்து நிகழ்த்தும் நிகழ்ச்சி இது. இந்தியக் கொடி இறக்கும்போது, இந்தியா பக்கம், ‘ஜெய் ஹிந்த்’ என்றும், பாகிஸ்தான் கொடி இறக்கும்போது, ‘பாகிஸ்தான் ஜிந்தா பாத்’ என இரண்டு நாட்டு மக்களும் குரலை உயர்த்தி முழங்குகிறார்கள். இந்திய எல்லைப் பாதுகாப்புப் படையின், மிடுக்கான நடையும், அதைப் பார்த்து, கடுப்பாகி நடக்கும் பாகிஸ்தான் வீரர்களின் அணிவகுப்பும் முடியும்போது, மாலை 6 மணி ஆகியிருக்கும். வாகா எல்லைக்கும் பாகிஸ்தானின் லாகூருக்கும் 22 கி.மீ தூரம்தான் உள்ளது. பாகிஸ்தான் ராணுவத்தினரால் சிறைப்பிடிக்கப்பட்ட இந்திய விமானப் படை வீரர் அபிநந்தன் வர்தமான் இந்த வாகா எல்லை வழியாகத்தான் இந்தியாவுக்குத் திருப்பி அனுப்பிவைக்கப்பட்டார்.

பத்து குருமார்கள்!

`குரு கிரந்த சாகிப்’ என்ற சீக்கியர்களின் புனித நூலில் `ஒவ்வொரு நாளும் அங்கு வருபவர்களுக்கான அருள் உரை இருக்கும்’ என்கிறார்கள். `நம்பிக்கையுடனிருந்தால், நாம் மனதில் நினைத்த சொல்கூட அருள் உரையில் வரும்’ என்றும் கருதுகின்றனர். சீக்கிய குருமார்கள்: 1. குரு நானக், 2. குரு அங்கத், 3. குரு அமர்தாஸ், 4. குரு ராம்தாஸ், 5. குரு அர்ஜுன், 6. குரு ஹர்கோவிந்த், 7. குரு ஹார்ராய், 8. குரு ராம்ராய், 9. குரு தேஜ்பகதூர், 10. குரு கோவிந்த் சிங்.

குரு கிரந்த சாகிப்
குரு கிரந்த சாகிப்

சீக்கியர்கள் உருவ வழிபாடு செய்வதில்லை. மதகுருமார்களின் புகழையும் அவர்களின் அறிவுரை களையும் போற்றிப் பாடுகிறார்கள். தங்கள் மதகுருவிடம் மிகுந்த பக்தியும் அர்ப்பணிப்பும் கொள்வதில் மிகுந்த நம்பிக்கைகொண்டிருந்ததால் இந்த மதம், `சீக்கிய மதம்’ என்று அழைக்கப்படுகிறது. `சீக்’ என்றால், `சிஷ்யன்’ அல்லது `சீடன்’ என்பதும், `சிங்’ என்றால், `வீரம் மிக்கவன்’ என்றும் பொருள்.

வீரம் விளைந்த மண்!

அமிர்தசரஸ் பொற்கோயிலிலிருந்து, நடந்து செல்லும் தூரத்தில்தான் ஜாலியன்வாலா பாக் பூங்கா இருக்கிறது. பொற்கோயிலுக்கு வருபவர்கள், இந்தப் பூங்காவையும் பார்வையிடத் தவறுவதில்லை.

ஆனந்தம் பொங்கும் அமிர்தசரஸ்

1919-ம் ஆண்டு ரௌலட் சட்டத்தின்படி, `விடுதலைப் போராட்ட வீரர்’ எனச் சந்தேகிக்கும் எவரையும் விசாரணையின்றிக் கைது செய்து, காலவரையறையின்றிச் சிறையில் அடைக்கலாம். இந்தச் சட்டத்தைக் கடுமையாக எதிர்த்த காந்தியடிகள், ஒத்துழையாமை இயக்கத்தை அறிவிக்க, நாடெங்கும் தேசபக்தி கொழுந்துவிட்டு எரிந்தது. பஞ்சாப்பைச் சேர்ந்த டாக்டர் சத்யபால், டாக்டர் சைபுதீன் கிச்சுலு இருவரையும் கைதுசெய்தனர்.

ஏப்ரல் 13, `பைசாகி’ என்ற சீக்கியர்களுக்குப் புனித தினம். அன்று ஊரின் பொது இடமான ஜாலியன் வாலாபாக்கில், கைதுக்குக் கண்டனக்கூட்டத்துக்கு ஏற்பாடானது. சுற்று வட்டாரத்திலிருந்து சுதந்திர தாகம்கொண்ட ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டனர். மாலை சுமார் நாலரை மணிக்குக் கூட்டம் தொடங்கியது. ஒரு மணி நேரத்தில் ஜெனரல் டயர் 150 சிப்பாய்களோடு வந்திறங்கினார். முன்னறிவிப்பு ஏதுமின்றி, மக்களை நோக்கிச் சுட உத்தரவிட்டார். பெண்களும் குழந்தைகளும் மற்றவர்களும் உயிர் தப்பிக்க முண்டியடித்துக்கொண்டு ஓடினார்கள். சுமார் 400 பேர் உயிர் இழந்ததாகவும், இரண்டாயிரம் பேர் காயமுற்றதாகவும் சொல்கிறார்கள். இந்த ரத்தம் சிந்திய மண்ணைப் பார்த்துதான் பகத்சிங், மாவீரன் பகத்சிங்காக உருவெடுத்தார். ஆங்கிலேய அராஜகத்துக்கு சாட்சியாக இருக்கின்றன ஜாலியன்வாலா பாக் சுவர்கள்.

படங்கள்: கே.கார்த்திகேயன்