அறிவியல் கண்டுபிடிப்புகள் உலக வரலாற்றின் போக்குகளில் முக்கியத் திருப்பங்களை ஏற்படுத்திவந்துள்ளன. தொழில்துறைப் புரட்சி தொடங்கிய நேரம் அது பல்வேறு கண்டுபிடிப்புகளுக்கு வித்திட்டது. நீராவி இயந்திரம் என்கிற ஒற்றைக் கண்டுபிடிப்பு உலக வரைபடத்தையே மாற்றிப்போட்டது. நீராவி இயந்திரம் பல்வேறு துறைகளுக்கு ஏற்ப தன்னைத் தகவமைத்துக் கொண்டது. தொழில்துறையில் நடைமுறையிலிருந்து பல வேலைகளை அது சுலபமாக்கியது. குதிரைகளுக்கு ஓய்வு கொடுத்து சிறிய வண்டிகளை இயக்கிய நீராவி இயந்திரங்கள் உலகத்தையே இணைக்கும் ரயில்களாக பரிணாம வளர்ச்சி பெற்றன.

1832-ல் கிழக்கிந்திய கம்பெனி தனது வர்த்தகத்தை மேலும் வலுப்படுத்த அதற்கான கட்டமைப்புகளை இந்தியாவில் உருவாக்கத் திட்டமிட்டது. இந்தியாவில் சாலைகள் போதாது என்பதால் ரயில்வே துறையை நிறுவ ஆயத்தமானது. இங்கிலாந்தில் இதற்கான விவாதங்கள் கம்பெனியின் பங்குதாரர்கள் மத்தியில் நடத்தப்பட்டன. முதலில் இப்படி ஒரு தொலைதூரத் தேசத்தில் இது தேவையா, இது சாத்தியமா என்று விவாதிக்கப்பட்டது, ஆராயப்பட்டது. எனினும் அடுத்த பத்தாண்டுகளுக்கு எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கையைக் கொடுக்க ரயில்வே திட்டத்திற்கான நிலம் முழுவதும் இலவசமாக அளிக்கப்படும் என்றும், அவர்களின் மூலதனத்திற்கு ஆண்டுக்கு 5% வளர்ச்சி உத்திரவாதம் அளிக்கப்பட்டது. அத்துடன் எப்பொழுது வேண்டுமானாலும் அவர்கள் தங்கள் முதலீட்டைத் திரும்பப்பெறும் உரிமையும் வழங்கப்பட்டது. அதன் பின்னர் அதற்கான தேவை இன்னும் வலுப்பெற்றதையடுத்து இங்கிலாந்திலிருந்து தளவாடங்களை ஏற்றிக்கொண்டு கப்பல்கள் மெட்ராஸ் துறைமுகம் நோக்கிக் கிளம்பின.
இந்தியாவில் முதல் சரக்கு ரயில் 1837-ல் செங்குன்றம் முதல் சிந்தாதிரிப் பேட்டைப் பாலம் வரை ஓடியது. ரெட்ஹில் ரயில்வே என்று அது அழைக்கப்பட்டது. இந்த ரயில் வில்லியம் ஏவரி தயாரித்த ரோட்டரி நீராவி என்ஜினைப் பயன்படுத்தியது. சென்னை நகரத்தில் சாலைக் கட்டுமானப் பணிக்கான கிரானைட் கற்களைக் கொண்டுசெல்ல இந்த ரயில்கள் முக்கியமாகப் பயன்படுத்தப்பட்டன. இந்தியாவில் ரயில்வே தொடங்கப்பட்ட போது அது வர்த்தகம் மற்றும் பொருள்களை ஏற்றிச் செல்லும் சரக்கு ரயில்களாகவே தொடங்கப்பட்டன. இருப்பினும் அடுத்த சில ஆண்டுகளிலேயே பயணிகளை ஏற்றிச் செல்லும் ரயில்களுக்கான அடிப்படைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இங்கிலாந்திலிருந்து பயணிகள் செல்வதற்கான ரயில் பெட்டிகள் இந்தியா வந்திறங்கின. இருப்புப்பாதைக்கான நிலம் கையகப்படுத்துவதில் ஏராளமான சிக்கலை, பெரும் கிளர்ச்சிகளை இந்தியாவெங்கும் ஆங்கிலேயர்கள் எதிர்கொண்டனர்.
இந்தியாவின் முதல் பயணிகள் ரயில், 16 ஏப்ரல் 1853 அன்று மும்பைக்கும் தானேவுக்கும் இடையே இயக்கப்பட்டது. பிற்பகல் 3:30 மணியளவில், பாம்பே கவர்னரின் மனைவியான லேடி பால்க்லாண்ட் ரயிலில் ஏறினார். பிரிட்டிஷ் அரசு அதிகாரிகள், பணக்காரர்கள் என 400 விருந்தினர்கள் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றனர். சரியாக 3.35 மணிக்கு 21 துப்பாக்கிக்குண்டுகள் முழங்க, போரிபந்தர் ரயில் நிலையத்திலிருந்து தானேவுக்கு ரயில் கிளம்பியது. 32 கிலோ மீட்டர் பயணிக்க, இந்த ரயில் 57 நிமிடம் எடுத்துக்கொண்டது.

இந்தியாவில் ரயில்வே கம்பெனி தொடங்குவது பெரும் லாபம் தரும் தொழில் என்று அறிந்ததும் ஏராளமான நிறுவனங்கள் இந்தியா வெங்கும் ரயில்கள் தொடங்க ஆர்வம் காட்டினர். ரெட் ஹில் ரெயில்வே (The Red Hill Railway), மெட்ராஸ் ரயில்வே (Madras Railway), ஈஸ்ட் இந்தியா ரயில்வே கம்பெனி (East Indian Railway Company), கிரேட் இந்தியன் பெனின்சுலர் ரயில்வே (Great Indian Peninsular Railway), ஈஸ்ட் கோஸ்ட் ஸ்டேட் ரயில்வே ( East Coast State Railway), கல்கத்தா ட்ராம்வேஸ் கம்பெனி (Calcutta Tramways Company), சவுத் இந்தியன் ரயில்வே (South Indian Railway Company) என இந்தியா முழுவதும் இங்கிலாந்தின் தனியார் நிறுவனங்கள் பல ரயில் கம்பெனிகள் தொடங்கி அதை நிர்வகித்தன. இந்தியாவின் ரயில் வரைபடத்தில் இடம்பெற்ற ஊர்கள் அனைத்தும் பருத்தி அல்லது நிலக்கரிச் சுரங்கங்கள் உள்ள ஊர்களாகவே இருந்தன.

1853-ல் மதுரையில் ரயில்கள் இருப்புப்பாதை அமைப்பதற்கான திட்டமிடுதல்கள் தொடங்கப்பட்டன. மதுரை திருச்சி நகரங்களை இணைக்க முடிவு செய்யப்பட்டது. இருப்பினும் இந்த நகரங்களை இணைக்கும் அதே வேளையில் வர்த்தகம், போர்த் தளவாட இடமாற்றங்கள், மற்றும் பிரிட்டிசார் கொடைக்கானல் என்கிற மலை நகரத்தையும் மனதில் கொண்டு இந்தப் பாதையை திண்டுக்கல் வழியே அமைத்தனர்.

1857-ல் முதல் ரயில் மதுரை நகரத்தை வந்தடைந்தது. இந்த அதிசயத்தைக் காணப் பெரும் கூட்டம் மதுரையில் கூடியது. முதலில் அவர்களுக்கு உலகின் ஓர் அதிசயமாகவே ரயில் கண்ணில் பட்டது. இருப்பினும் அவர்களால் இதனை நம்ப முடியவில்லை. இந்தப் பெரும் இயந்திரம் நகரத்திற்குள் நுழைந்த போது மக்களின் கண்களில் பெரும் அச்சம் காணப்பட்டது.
இதுவரை குதிரை வண்டிகளை மாட்டு வண்டிகளைப் பார்த்தவர்கள், யானைகள் பாரம் இழுப்பதைப் பார்த்தவர்கள் அப்படி யாரும் இல்லாமல் ஒரு கறுப்பு இயந்திரம் தன் தலையில் இருந்து புகையைக் கக்கும் காட்சி புரியவேயில்லை. இப்படி ஓர் இயந்திரத்தால் எப்படி நகர்ந்து செல்ல முடிகிறது, அது எப்படி வேகமாகச் செல்கிறது? தீய சக்தி அல்லது தெய்வீக சக்தி என ஏதோ ஒன்று இதை இயக்குகிறது என்று நகரம் முழுவதும் பேசிக் கொண்டார்கள். தீய சக்தி இருப்பதற்கான வாய்ப்புகளே அதிகம் என சத்திரம் சாவடிகளில் மக்கள் முடிவுக்கு வந்தார்கள்.

இந்த ரயில் இன்ஜின்களுக்கு சக்தி கொடுக்க, ஒரு குழந்தையையும், இளம் தம்பதியையும் பலி கொடுக்க வேண்டும் என்றும், இதற்காக பிரிட்டிஷ் சிப்பாய்கள் ஆட்களை மதுரை எங்கும் தேடுவதாகவும் புரளிகள் கிளம்பின. மக்கள் இருட்டியதும் வீடுகளில் பதுங்கிக்கொண்டார்கள். இருப்பினும் மெல்ல மெல்ல ரயில் வரும் நேரங்களில் அதைக் காணப் பெரும் கூட்டம் கூடியது. ரயில்கள் எழுப்பும் ஒலியும், தண்டவாளங்களின் கீச்சொலியும், கையசைக்கும் இன்ஜின் டிரைவர்களும் அவர்களின் சிரிப்பும் ரயில்களின் மீதான பயத்தை மெல்ல மெல்ல போக்கியது.

நிலக்கரி இன்ஜின்கள் பெரும் புகையைக் கக்கும். தொலை தூரங்களிலிருந்து வருபவர்கள் உடையெல்லாம் புகை வீச்சமும் அவர்கள் முகம் கைகள் எல்லாம் ஒரு கறுப்புப் பூச்சுடனேயே இருக்கும். மதுரை டவுன்ஹால் ரோட்டில் ஒருவர் நுழையும்போதே அவர் ரயிலிலிருந்து இறங்கி வருபவர் என்பதை எளிதாகக் கண்டுபிடித்துவிட மக்கள் பழகினார்கள். ஒருவர் ரயிலில் பயணித்தால், அவரது ஆயுசு குறையும் என ஓர் அச்சம் மதுரை மக்கள் மத்தியில் நீண்ட நாள் புழங்கியது.
மதுரையிலிருந்து தூத்துக்குடி, ராமேஸ்வரம், திருநெல்வேலி, கன்னியாகுமரி என விரைவாகவே பெரும் வலைப்பின்னலாக தென் தமிழகம் ஒட்டுமொத்த இந்திய ரயில்களின் இருப்புப் பாதைகளுடன் இணைக்கப்பட்டது.

1860கள் முதல் பயணிகள் ரயில்களின் முதல் வகுப்பு பெட்டிகளில் மின்சார விளக்குகள், கழிவறைகள் என வசதிகள் அறிமுகப்படுத்தப்பட்டன. பின்னர் மெல்ல மெல்ல அவை மூன்றாம் வகுப்பு வரை வந்து சேர்ந்தன. 1901-ம் ஆண்டு ரயில்வே வாரியம் அமைக்கப்பட்டது. இருப்பினும் 1907-ம் ஆண்டுதான் அனைத்து ரயில் நிறுவனங்களும் அரசினால் கையகப்படுத்தப்பட்டன.

தொடங்கப்பட்ட போது முற்றிலும் ஆங்கிலேயர்களால்தான் ரயில்வே நிர்வாகம் நடத்தப்பட்டது. இன்ஜின் ஓட்டுநர்கள், கார்டுகள், பயணிச்சீட்டு வழங்குபவர்கள் என ரயில்வே நிர்வாகம் முழுவதும் ஆங்கிலேயர்களாகவே இருந்தனர். இருப்பின் விரைவில் அவர்களால் இத்தனை பெரிய ரயில்வே துறையை தங்களால் மட்டுமே நிர்வகிக்க இயலாது என்பதை உணர்ந்து இந்தியர்களைப் பணியில் சேர்த்தனர். இன்றும் மதுரையில் வசிக்கும் ஆங்கிலோ-இந்திய சமூகத்தினர் மத்தியில் ஏராளமானவர்கள் ரயில்வே துறையில் பணிபுரிவதை நீங்கள் காணலாம்.
மதுரையில் பழைய கோட்டைச் சுவர் இடிக்கப்பட்டதற்குப் பின்னர் மேல வெளி வீதிக்கு வெளியே நடைபெற்ற முதல் பெரும் பணி என்பது ரயில் நிலையம் கட்டப்பட்டதும் ரயில்வே காலனி அமைக்கப்பட்டதுமே! இன்றுவரை மதுரையின் முகமாக மதுரை ரயில் நிலையம்தான் திகழ்கிறது. சரக்குப் போக்குவரத்திற்கு எனத் தனியே ஒரு வாசல் அமைக்கப்பட்டு அதற்கு நேர் எதிராக குட் ஷெட் தெரு என ரயில் மூலம் நடைபெறும் சரக்கு வர்த்தகத்திற்கு ஒரு தெருவே ஒதுக்கப்பட்டது.
மதுரைக்குப் பயணிகள் ரயில்கள் வரத்தொடங்கிய காலத்தில் இங்கே பெரிய அடிப்படைக் கட்டமைப்புகள் எதுவும் இல்லை ரயில் நிலையத்திற்கு மேற்கே ஒரு பயணியர் விடுதி மட்டுமே இருந்தது. அதுவும், இந்த விடுதியில் இருந்த நான்கு அறைகள் ஆங்கிலேயர்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டன. இந்த விடுதியில் ஒரு பட்லர் இருந்தார், அவர் உணவுகளை சமைத்து வழங்கினார். இங்கே தங்கும் ஆங்கிலேயர்கள் தங்களுக்கான மது வகைகளைத் தாங்களே ஏற்பாடு செய்துகொள்ள வேண்டும் என்றது அந்த அறையில் இருந்த அறிவிப்பு பலகை.

1926-ல் வெளிவந்த தென்னிந்திய ரயில்வேயின் கையேடு (South Indian Railway Illustrated Guide) மதுரை வரும் பயணிகளுக்கான அடிப்படை கட்டமைப்புகளை விவரிக்கிறது. ஆங்கிலேயர்களைத் தவிர்த்து வருகை தரும் ஏனையோருக்கு மதுரையில் ஏராளமான சத்திரங்கள் சாவடிகள் இருக்கின்றன என்று வழிகாட்டியது. இதில் பல சத்திரங்களில் இலவசமாகவே தங்கலாம் என்றும் அது தெரிவிக்கிறது. சில இடங்களில் ஆங்கிலேயர்களுக்கு மட்டுமே என்று இருந்த வசதிகள் அடுத்த படியாக பிராமணர்களுக்கு மட்டுமேயாக இருந்தது. அதன் பின்னர் சுதந்திரப் போராட்டமும் தேசிய இயக்கங்களுமே அனைத்தையும் அனைவருக்கானதாக மாற்றியது.

மதுரை ரயில் நிலையத்தில் முதல் மற்றும் இரண்டாம் வகுப்புப் பயணிகளுக்கு மட்டும் சிறிய காத்திருப்பு அறை இருந்தது. ரயில் நிலையத்தில் ஒரு சிற்றுண்டிக் கடையும் இருந்தது. இரவு நேரத்தில் தூங்குவதற்கு என மாடியில் படுக்கை வசதிகள் இருந்தன, சிறிய அறைகளும் அங்கு இருந்தன. இந்தச் சேவைகளுக்குக் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டிருந்தது. ரயில் நிலைத்திலிருந்து இரண்டு மைல் தொலைவில் ஆங்கிலேயர்களுக்கான ஐரோப்பிய கிளப் இருந்ததையும் அந்தக் கையேடு தெரிவிக்கிறது.
ரயில் நிலையத்தில் நாளிதழ்கள் புத்தகங்கள் வாங்கச் சிறிய கடை இருந்தது. மதுரை ரயில் நிலையத்தில் மாட்டு வண்டிகள், குதிரை வண்டிகளை நீங்கள் நாள் வாடகைக்கு எடுத்து மதுரையைச் சுற்றிப்பார்க்கலாம். ஒரு நாள் வாடகை ரூ.3 என்று கட்டணம் நிர்ணயிக்கப்பட்டிருந்தது. மதுரை பஸ் ஸ்டேஷனில் இருந்து திருப்பத்தூர், தேவகோட்டை, காரைக்குடி, அலங்காநல்லூர், மேலூர், உத்தமபாளையம் ஊர்களுக்கு மட்டும் பேருந்துகள் இயங்கின. மதுரையில் மஸ்லின் துணிகள், மரவேலைப்பாடுகள், செம்பு வேலைப்பாடுகள், பருத்தித் துணிகள், பட்டுத் துணி வகைகள் வாங்கலாம் என அந்தக் கையேடு பரிந்துரை செய்தது.

ரயில்களின் வருகை மதுரையில் புதிய சாத்தியங்களுக்கு வித்திட்டது. புதிய தொழில்கள், புதிய தொழில்நுட்பங்கள், புதிய வர்த்தகங்கள் எனப் பல புதியவை மதுரையில் ரயில்களின் வழியேதான் வந்தன. மதுரையின் சந்தைகள் ரயில்கள் மூலம் தொலைதூர நகரங்களின் சந்தைகளுடன் இணைந்தது. மதுரையில் ரயில் இருப்புப்பாதை இல்லையெனில் மதுரா கோட்ஸ் ஆலை இங்கு அமைய வாய்ப்பில்லை. மதுரை மல்லிகைப்பூ, மேற்குத் தொடர்ச்சி மலையின் ஏலக்காய், கிராம்பு, மதுரையின் பருத்தித் துணி, சுங்குடிச் சேலைகள், ராமேஸ்வரம் தொடங்கி தூத்துக்குடி வரை பிடிக்கப்படும் மீன் என இந்த மொத்த நிலத்தின் உற்பத்திக்கும் ரயில் எனும் சிறகு முளைத்தது.

மதுரைக்காரர்கள் சாதி வித்தியாசமில்லாமல் ரயில்களில் ஒன்றாக சமமாக அமர்ந்து செல்லும் வாய்ப்பினை ரயில்கள் சாத்தியப்படுத்தின. இது அனைவருக்கும் பெரும் தன்னம்பிக்கையைக் கொடுத்தது. மதுரைக்காரர்கள் தங்களின் வாழ்வை மேம்படுத்த கல்வி, வேலை என அனைத்திற்கும் தொலை தூரங்கள் நோக்கிச் செல்வதற்கான சாத்தியங்களை ரயில்கள் நனவாக்கின.
மதுரை ரயில் நிலையத்திற்கு ஒப்பாக மதுரையின் முகமாக மதுரைக்கு வருபவர்களை வரவேற்க மங்கம்மாள் சத்திரம் 1890கள் முதல் காத்திருக்கிறது. ஐந்து கட்டடத் தொகுதிகளாகக் கட்டப்பட்ட இந்தச் சத்திரத்தில் மொத்தம் 97 அறைகள் உள்ளன. இந்தச் சத்திரத்தில் நீண்ட காலம் குதிரை லாயங்களும் இருந்தன. பிராமணர்களுக்கும், பிறருக்கும் தனித்தனியே அறைகள் ஒதுக்கப்படும் நடைமுறை இங்கு அமலில் இருந்தது. இந்த நடைமுறைகள் நீதிக்கட்சி அரசினால் ஒழிக்கப்பட்டது.

மதுரைக்கு இரண்டாயிரம் ஆண்டுகளாகப் பயணிகள் வந்த வண்ணம் உள்ளனர். மதுரை கோட்டையின் நான்கு வாயில்களின் வழியே இவர்கள் மதுரை நகருக்குள் நுழைந்தனர். ஆனால் ரயில்களின் வருகைக்குப் பின் மதுரைக்கு வருபவர்களின் நுழைவாயிலாக மதுரை ரயில் நிலையம் மாறியது. இன்றும் மதுரைக்குள் நுழைபவர்கள் ரயிலடியிலிருந்து வெளியேறி டவுன்ஹால் ரோட்டில் நடந்து சென்றால் சாமானியர்கள் உங்களை நோக்கி வந்து அறைகள் வேண்டுமா என்று கேட்பார்கள், ஆங்கிலத்தில் தொடங்கி அவர்கள் ஹிந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம் என ஒரு நொடியில் பல மொழிகளுக்கு மாறி விருந்தினரின் மொழியைக் கண்டடைய முனைவார்கள். ஐரோப்பியர்கள் எனில் உடன் பிரஞ்சு, ஸ்பானிஸ் என வித்தை காட்டுவார்கள். டவுன்ஹால் ரோட்டின் நாவுகளில் சுழலும் இந்த மொழிகளின் நடனத்தில் மதுரைக்கு வந்த பயணிகளின் ரேகைகள் படிந்திருக்கின்றன. ஓர் ஊரில் எத்தனை மொழி பேசுகிறவர்கள் இருக்கிறார்கள் என்பதைப் பொறுத்துதான் அந்த ஊரின் வயதை, தொன்மையை நாம் கணக்கிட இயலும். இந்த விஷயத்தில் மதுரை உலகின் மிகத்தொன்மையான நகரில் ஒன்றாக சிம்மாசனத்தில் அமர்ந்திருக்கிறது.
நன்றி:
Indian Railways - London: W H Allen, Andrew, W. P. (1884)
Building the Railways of the Raj: OUP.Kerr, Ian J
South Indian Railway Co. - Illustrated Guide to the South Indian Railway Company, London.