விடுதலை வேள்வி இந்தியாவெங்கும் பெரும் அலையாக வீசியது. மதுரையிலும் அந்த அலை தீவிரமாக மையம் கொண்டிருந்தது. தொடர்ந்து பல ஆட்சி மாற்றங்களை வரலாறு நெடுகிலும் பார்த்து வந்த மதுரை மக்கள் பிரித்தானிய ஆட்சியின் நுணுக்கங்களை உற்றுப் பார்த்துக்கொண்டுதான் இருந்தனர். மருது பாண்டியர்கள், கட்டபொம்மன், வேலு நாச்சியார், குயிலி என்று தொடர்ச்சியான எதிர்ப்பின் குரல்கள், போராட்டங்கள், எழுச்சிகள் இந்த நிலத்தில் நிலைபெற்றிருந்தன.
மதுரையில் கைத்தறி நெசவாளர்கள் பெரும் எண்ணிக்கையில் இருந்தனர், இவர்களுடன் மதுரா கோட்ஸ் உள்ளிட்ட பஞ்சாலைகளின் வருகை தொழிலாளர்கள் எனும் ஒரு புதிய வர்க்கம் உருவாகக் காரணமாக அமைந்தது.
1919-ல் ரௌலட் சட்டத்திற்கு எதிராக மக்களைத் திரட்ட மதுரைக்கு காந்தி வருகை தந்தார். மதுரை வடகரையில் ஆழ்வார்புரத்தில் இருந்த பாரிஸ்டர் ஜார்ஜ் ஜோசப்பின் வீட்டில் அவர் தங்கினார். இந்த வருகையின் போது காந்தி மீனாட்சி அம்மன் கோவிலுக்குச் செல்வதாக இருந்தது. ஆனால் தலித்துகளுக்கு இந்தக் கோயிலுக்குள் அனுமதியில்லை என்கிற தகவல் அவர் காதிற்கு எட்டவே, உடனடியாகத் தன் பயணத்திட்டத்தில் மாற்றம் செய்தார். நான் இந்தக் கோயிலுக்குச் செல்ல மாட்டேன் என்பதை அவர் கறாராக அறிவித்தார்.
மார்ச் 29, 1919 அன்று மதுரையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் 20,000 பேர் கலந்துகொண்டார்கள். இந்தப் பொதுக்கூட்டத்தில் பெரும் பகுதியானவர்கள் பஞ்சாலைத் தொழிலாளர்களாக இருந்தனர். ஜார்ஜ் ஜோசப் அவர்களின் தொடர் முயற்சியில் ஏப்ரல் 5, 1919 அன்று மிகப்பெரும் பேரணியும் அதனைத் தொடர்ந்து அடுத்த நாள் முழு நாள் ஹர்தாலும் (முழு அடைப்பு) நடைபெற்றன. மதுரையின் பஞ்சாலைகளில் தொழிலாளர் இயக்கம் வலுவாகக் கட்டப்பட்டது, மில் தொழிலாளர்கள் மற்றும் கைத்தறி நெசவாளர்கள் மத்தியில் சுதந்திர வேள்வி ஒரு பொறியாகப் பற்றியிருந்தது.
இரண்டாவது முறையாக மதுரைக்கு 1921-ல் வருகை தந்த காந்தி மேலமாசி வீதியில் தன் நண்பரும் காங்கிரஸ் பிரமுகர் ராம்ஜி கல்யாணி வீட்டில் (175-A,மேல மாசி வீதி) தங்கினார். இந்த வீட்டில் தங்கியிருந்தபோதுதான் அவருக்கு சராசரி இந்தியர்கள் நிலை என்ன என்கிற பாடத்தை மதுரை நகரம் புகட்டியது.

காந்தி தனது மேல் சட்டையைக் கழற்றினார், தொப்பி, அங்கவஸ்திரம் அனைத்தையும் துறந்தார். பத்து முழ வேஷ்டியை நான்கு முழமாகக் கிழித்து இடுப்பில் கட்டிக்கொண்டு அன்றைய பொதுக்கூட்டத்திற்குக் கிளம்பினார். இந்தப் பொதுக்கூட்டம் நடைபெற்ற இடம் மதுரையில் இன்றுவரை காந்தி பொட்டல் என்றே அழைக்கப்படுகிறது.
காந்தியின் உடைமாற்றம் நடைபெற்ற வீடு இன்றளவும் காதி வஸ்திராலயமாகவும் காந்தி நினைவகமாகவும் உள்ளது. இந்த வீட்டின் மாடியில் ஒரு அருங்காட்சியகம் அமைக்கும் பணி 15-20 ஆண்டுகளாக விடாமல் நடைபெற்று வருகிறது. 1927, 1934, 1946 என மகாத்மா காந்தி மதுரைக்கு ஐந்து முறை வருகை தந்தார்.

இந்தியா விடுதலை பெற வேண்டும் என்கிற தாகம் ஒரு தனல் போல் மதுரையின் கல்விச்சாலைகளிலும் கனன்று கிடந்தது. மதுரை அமெரிக்கன் கல்லூரியின் மாணவர் மன்றத்தில் அரசியல் தலைவர்கள் பலர் வந்து உரையாற்றினார்கள். இந்த ஒவ்வொரு உரையும் மாணவர்கள் மத்தியில் தேசிய மனநிலையைக் கட்டமைத்தது. 1937-ல் சென்னை மாகாண சட்டமன்றத் தேர்தல் நடைபெற்றது. மதுரையில் காங்கிரஸ் கட்சியின் சார்பாக என்.எம்.ஆர்.சுப்புராமனும் நீதிக் கட்சியின் சார்பாக இ.எம்.கோபாலகிருஷ்ண கோனும் போட்டியிட்டனர். இந்தத் தேர்தல் நடைபெற்றபோது மதுரையில் இருக்கும் படித்தவர்களுக்கும், சொத்து உள்ளவர்களுக்கும் மட்டுமே வாக்குரிமை இருந்தது, ஆனாலும் இந்தத் தேர்தலுக்காக நடைபெற்ற பிரச்சாரக் கூட்டங்களில் மாணவர்கள் பெரிய எண்ணிக்கையில் கலந்துகொண்டனர்.
மதுரையில் பல தொழிலாளர் சங்கங்களில் தலைவராக முத்துராமலிங்கத் தேவர் இருந்தார். அவரது தலைமையில் அஹிம்சா இன்சூரன்ஸ் நிறுவனமும் செயல்பட்டு வந்தது. பல தொழிலாளர் சங்கங்களில் அவர் தலைவராக இருந்த போதும் அவர் பைக்கரா மகாலட்சுமி மில் மற்றும் என்.என்.ஆர் நிட்டங் நிறுவனத்தில் இயங்கிய சங்கங்களை முழுமையாக கவனித்து வந்தார்.
1938-ல் மதுரையில் மாணவர் சங்கம் தொடங்கப்பட்டது. ரீகல் டாக்கிஸில் நடைபெற்ற பெரிய விழாவில் மாணவர் சங்கத்தை பாரிஸ்டர் மோகன் குமாரமங்கலம் தொடங்கி வைத்தார். மாணவர் சங்கம் மதுரையில் உள்ள மாணவர்களின் கோரிக்கைகளுக்கு வேலைகள் செய்தது, அதே நேரம் மக்கள் மத்தியில் எழுத்தறிவு இயக்கத்தையும் நடத்தியது.

1939-ல் இங்கிலாந்து ஜெர்மனியின் மீது தாக்குதல் தொடுத்து இரண்டாம் உலகப்போரைத் தொடங்கியது. இந்தப் போருக்கு எதிராகப் பெரும் வேலை நிறுத்தங்கள் மதுரையில் நடைபெற்றன. மதுரையில் அமெரிக்கன் கல்லூரி மாணவர்கள் கல்லூரியில் இருந்து தொடங்கி யானைக்கல் வழியாக கீழமாசி வீதி, தெற்குமாசி வீதி வழியாக ஜான்சி ராணி பூங்காவை அடைந்து பெரிய போராட்டத்தை நடத்தினார்கள். அன்றைய காலத்தில் மதுரையின் முக்கியப் பொதுக்கூட்டங்கள் ஜான்சி ராணி பூங்கா திடலில்தான் நடைபெற்றன. இப்படியான பெரிய ஊர்வலங்களில் மதுரையின் அனைத்து உயர்நிலைப் பள்ளி, இன்டர்மீடியேட், கல்லூரி மாணவர்கள் இணைந்துகொண்டனர். ஊர்வலங்கள் செல்லச் செல்ல ஒவ்வொரு கல்விச்சாலையாக இணைந்து ஒரு பெரும் நதியாக மக்கள் திரள் மாசிவீதிகளைத் திக்குமுக்காடச் செய்யும்.
1939 செப்டம்பர் 4-ம் தேதி அன்று நேதாஜி சுபாஸ் சந்திர போஸ் மதுரைக்கு ரயிலில் வந்தார். அவரை மாணவர் சங்கத்தின் சார்பாக சங்கரய்யா அவர்கள் வரவேற்றார். அன்று நேதாஜி மதுரையில் உள்ள மாணவர் சங்க உறுப்பினர்கள் மத்தியில் உரையாற்றினார். அந்தப் பெரும் கூட்டம் மதுரை சென்ட்ரல் தியேட்டரில் நடைபெற்றது. அன்று மதுரையில் பல இடங்களில் தேசியக் கொடியை ஏற்றிவிட்டு இரவில் நடைபெற்ற பெரும் பொதுக்கூட்டத்தில் மக்கள் மத்தியில் நேதாஜி உரையாற்றினார்.

காங்கிரஸ் சோசலிஸ்ட் கட்சி இந்தியா முழுவதும் பெரும் அரசியல் அலையைத் தோற்றுவித்த காலம் அது. இந்த இயக்கத்தின் மதுரை மாவட்ட ஊழியர்களுக்கு அரசியல் பயிற்சி அளிக்க ஒரு முகாம் நடத்துவது என்று திட்டமிடப்பட்டது. இந்த முகாம் திருப்பரங்குன்றம் அருகே உள்ள மொட்டையரசில் நடைபெற்றது. மலபாரில் இருந்து வந்த தோழர் ராகவ மாரார் அனைவருக்கும் தொண்டர்படை பயிற்சிகளை வழங்கினார். சுதந்திரப் போராட்டத்திற்கு தேச பக்தர்களைப் பக்குவமடையச் செய்வதுதான் இந்த முகாமின் பிரதான நோக்கம், இந்த முகாமின் நோக்க உரையை ஏ.கே.கோபாலன் நிகழ்த்தினார். காந்தியவாதிகளான வைத்தியநாத அய்யர், ஜில்லா போர்டு தலைவர் குமாரசாமி ராஜா, காமராஜர், ராமமூர்த்தி ஆகியோர் இந்த முகாமை நடத்துவதில் உதவி புரிந்தனர்.

மொட்டயரசு முகாமின் தொடர்ச்சியாக அடுத்த முகாம் நாகமலை புல்லூற்றில் நடைபெற்றது. இந்த இரு முகாம்களும் பிரிட்டிஷ் அரசுக்குத் தெரியாமல் நடைபெற்ற ரகசிய முகாம்கள். மொட்டையரசு முகாமிற்கு நிதி திரட்டினால் இந்தச் செய்திகள் வெளியே வரும் என்பதால் கே.பி.ஜானகியம்மாள் அவர்கள் தன்னுடைய நகைகளை விற்று இந்த முகாமை நடத்தினார்.
1942-ல் பம்பாயில் நடைபெற்ற அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் மாநாடு செய் அல்லது செத்து மடி என்கிற முழக்கத்தை முன்வைத்தது. இப்படி தேசிய அளவில் விடப்பட்ட ஒவ்வொரு அறைகூவலுக்கும் மதுரை செவி சாய்த்தது. மதுரையின் கல்லூரி விடுதிகளை, பஞ்சாலைத் தொழிலாளர் சங்கங்களைக் காவல்துறை முற்றுகையிடுவதும். துண்டுப்பிரசுரங்களுடன் மாணவர்களை, தொழிலாளர் தலைவர்களைக் கைது செய்து சிறையில் அடைப்பதும் வாடிக்கையாக இருந்தது. ஒவ்வொரு முறையும் கைதுகளின் போதும் விடுதலையின் போதும் மதுரை மக்கள் பெரும் திரளாகக் கூடினர், இந்த மக்கள் திரளின் முழக்கங்களில் இருந்து பல தலைவர்கள் உருவானார்கள். கதர் சட்டை, வேட்டி சேலை அணிந்தாலே போலீசார் லத்தியைச் சுழற்றிய நேரம் சொர்ணத்தம்மாள் கதர் சேலை உடுத்திக்கொண்டு கிராமம் கிராமமாகச் சென்று ’வந்தே மாதரம்’ முழக்கங்கள் எழுப்பி மக்கள் மத்தியில் எழுச்சியை ஏற்படுத்தினார்.

1945-ல் பாபாசாகேப் அம்பேத்கர் அவர்கள் (29.12.1945) மதுரைக்கு வருகை தந்தார். திடீர் நகர்ப் பகுதியில் வசித்த மக்கள் மத்தியில் சென்று அம்பேத்கர் உரையாற்றினார். மதுரை ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற ஒரு கூட்டத்தில் அம்பேத்கர் பங்கு கொண்டார், அந்தக் கூட்டத்தில் அம்பேத்கருடன் அன்னை மீனாம்பாள் சிவராஜ், டபிள்யூ .பி. சௌந்திரபாண்டியனார், பி.டி.ராஜன். போடி மீனாட்சிபுரம் செல்வராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர். இவர்கள் அனைவரும் மதுரை ஆட்சியர் அலுவலக நுழைவாயிலின் அருகில் எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்று மட்டுமே அம்பேத்கரின் மதுரை வருகையின் நினைவாக உள்ளது. அங்கிருந்து நீதிக் கட்சியின் தலைவர்களில் ஒருவரான பி.டி.ராஜன் அவர்களின் இல்லத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட தேநீர் விருந்தில் கலந்துகொண்டார். அங்கிருந்து எட்வர்டு மன்றத்தில் நடைபெற்ற கூட்டத்திலும் அம்பேத்கர் உரையாற்றினார்.
விஸ்வநாததாஸ், மதுரகவிபாஸ்கரதாஸ், கே.பி.ஜானகியம்மாள் என நாடக அலை ஒன்று மதுரையைத் தன்வசம் வைத்திருந்தது. எந்த நாடகமாக இருப்பினும் அதன் ஊடே தற்காலச் சூழலும் இந்தியா அடிமைப்பட்டிருக்கும் நிலை குறித்தும் வசனங்கள் இடம்பெறும். நாடகங்கள் சுதந்திர உணர்வை மக்களிடம் கொண்டு செல்லும் பெரும் அரசியல் கருவியாக இருந்தது. கே.பி.ஜானகியம்மாள் நாடகங்களில் நடிப்பார், அவர் நாடகங்களின் மூலம் சுதந்திர உணர்வை மக்களிடம் விதைத்தார், விடுதலைப் போராட்ட வீரருக்குரிய ஓய்வூதியத்தை நிராகரித்து இறுதிவரை தியாக வாழ்வு வாழ்ந்தார்.

1942-ல் காந்தியடிகளின் வெள்ளையனே வெளியேறு இயக்கம் மூலம், அவரது வேண்டுகோளான, செய் அல்லது செத்து மடி என்பதை உணர்வாகக் கொண்டு சொர்ணத்தம்மாள் மதுரையில் தெருத் தெருவாக இறங்கி மக்களிடையே சுதந்திரத்தீயை மூட்டினார். நெல்லை சதி வழக்கு தொடங்கி ஏராளமான வழக்குகளைச் சந்தித்த மாயாண்டி பாரதி அவர்கள், ஏறினால் ரயில் இறங்கினால் ஜெயில் என்று விவரிக்கும் அளவிற்கு சிறைவாசத்தை அனுபவித்தார். தொடர்ந்து ஒரு பேச்சாளராக, இதழாளராக தனது 98வது வயதில் அவர் காலமானார்.

மதுரை சதி வழக்கில் கைது செய்யப்பட்ட சங்கரய்யா 1947 ஆகஸ்ட் 14 நள்ளிரவு 12 மணிக்கு விடுதலை செய்யப்பட்டார், சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்ட ஏனைய தலைவர்களுடன் மத்திய சிறையில் இருந்து ஜெயில் ரோட்டில் பெரும் ஊர்வலமாக வந்தனர், மதுரா கோட்ஸ் மில் வழியாக அவர்கள் திலகர் திடல் வந்தடைந்து அங்கு மிகப்பெரும் பொதுக்கூட்டம் நடைபெற்றது. சுதந்திர இந்தியாவில் மதுரையில் நடைபெற்ற முதல் கூட்டம் அது, மதுரை மக்கள் பெரும் திரளாக வீதிகளில் இறங்கி நாடு சுதந்திரம் பெற்றதைக் கொண்டாடினார்கள். மதுரை எங்கும் பொங்கல் வைத்து வீட்டு வாசலில் கோலமிட்டு மதுரை மக்கள் மகிழ்ந்தனர், அரசாங்கம் சுதந்திரத்திற்கு ஐந்து நாள்கள் விடுமுறை அறிவித்தது.
ஓரளவிற்கு வாசிப்பு என்னுள் ஒரு விழிப்பை ஏற்படுத்திய பின்பு மதுரையில் நான் பல நாள்கள் வைத்தியநாத அய்யர் அவர்களின் மகன் வை.சங்கரன் அவர்களைச் சந்தித்துப் பேசியிருக்கிறேன் அவரது சொற்களின் வழியே சுதந்திரப் போராட்டத்தின் பல காட்சிகளை நேரடி விவரிப்பில் கேட்டிருக்கிறேன். சொர்ணத்தம்மாள் அவர்களை தீச்சட்டி கோவிந்தனின் லத்தி பதம் பார்த்து எப்படி அவரது காது கேட்காமல் போனது என்பதையும், அவர் எவ்வாறு தீச்சட்டி கோவிந்தனால் நிர்வாணப்படுத்தப்பட்டார் என்பதையும் வை.சங்கரன் அவர்கள் கூறக் கேட்டிருக்கிறேன். 1992-ல் கே.பி.ஜானகியம்மாளின் இறுதி ஊர்வலத்தில் நானும் கலந்துகொண்டேன். ஐ.மாயாண்டி பாரதி அவர்களுடன் தொடர்ந்து உரையாடியிருக்கிறேன். அவர் மேல மாசி வீதியில் இருந்த மாடி வீட்டில் பல நாள்கள் என் பொழுது கழிந்துள்ளது, அவரது பேச்சு இன்னும் என் காதுகளில் ஒலித்துக் கொண்டேயிருக்கிறது.

என் தாத்தா ஆர்.எம்.பெருமாள் அவர்கள் நேதாஜியின் இந்திய ராணுவத்தில் இருந்த ஒரு வீரர், அவருடன் மதுரை ஐ.என்.ஏ அலுவலகத்திற்கு 1988 முதல் தொடர்ந்து சென்று வருகிறேன். ஐ.என்.ஏ-வின் காரியதரிசி வைத்தியலிங்கம் அவர்களைப் பார்ப்பது எனக்கு நேதாஜியைப் பார்த்த உணர்வை ஒவ்வொரு முறையும் தரும். தன் இறப்பு வரை ஒவ்வொரு விழாவின் போதும் அவரது ராணுவ உடையில் வருவார்.
மதுரை மேல அனுமந்தராயர் தெருவில் இருக்கும் அலுவலகத்திற்கு தினசரி காலை வரும்போது அவர் முதலில் ஜான்சி ராணி பூங்காவில் இருக்கும் நேதாஜி சிலைக்குச் சென்று ஒரு “ஜெய் இந்து” சலாம் வைத்துவிட்டுத்தான் வருவார். என் தாத்தா ஆர்.எம்.பெருமாள் மற்றும் அவரது நண்பர் வைத்தியலிங்கம் ஆகியோரின் 75 ஆண்டுக் கால நட்பைப் பற்றி இதே விகடனில் ’யுத்த நண்பேண்டா’ என்ற தலைப்பில் வெளிவந்த கட்டுரை என் நினைவிற்கு வருகிறது.
கடந்த வாரம் சங்கரய்யா அவர்கள் அவரது நூறாவது வயதில் அடியெடுத்து வைத்தார், நம் நாட்டிற்கு சுதந்திரத்தைப் பெற்றுத்தந்தது மட்டும் அல்லாமல் தனது மாணவர் பருவம் முதல் தொடர்ச்சியாக 80 ஆண்டுகள் சமூக-அரசியல் களத்தில் தொடர்ந்து இந்த நாட்டிற்காக அவர் உழைத்துவருகிறார், ஆனால் அவரது பிறந்த நாளை மதுரையில் எத்தனை கல்லூரிகள், பள்ளிகள் கொண்டாடின என்பது ஒரு கேள்வியாக மனதில் எழுகிறது. இவரை கொண்டாடவில்லை என்றால் வேறு யாரைத் தான் நம் பிள்ளைகளுக்கும் அடுத்த தலைமுறைக்கும் அடையாளம் காட்டப்போகிறோம்?

மதுரையில் இன்று நாம் வாங்கும் சுதந்திரக் காற்றுக்குப் பின்னால் எத்தனை காயங்கள், எத்தனை தடியடிகள், எத்தனை வலிகள், எத்தனை தியாகங்கள்! இன்றும் சுதந்திரப் போராட்ட வீரர்கள் எதற்காகப் போராடினார்கள் என்பது அறியாமல் ஒவ்வொரு சாதியும் சுதந்திரப் போராட்டத் தலைவர்களைத் தங்கள் சாதியின் தலைவர்களாக உரிமை கொண்டாடும்போது இந்த தேசம் மீண்டும் மீண்டும் அடிமைப்படுவதாக, காலச் சக்கரத்தில் பின்னோக்கிச் செல்வதாகவே நான் உணர்கிறேன், நீங்கள்?