“எத்தனைதான் அழகாக வர்ணித்தாலும் அவ்வருவியின் வனப்பை உள்ளது உள்ளபடி வர்ணிப்பது அசாத்தியம். அறுபது எழுபது அடி உயரத்தினின்று தாமிரபரணி ஆறானது, வெண்பட்டைப்போலவும் உதிர் பனியைப்போலவும் நுரைதள்ளிக்கொண்டு இடைவிடாமல் இரைந்துகொண்டு, யார் கைக்கும் அடங்காத ஒரு காளையைப்போலப் பாய்ந்து பூமியில் வீழ்கிறது” இப்படித்தான் கல்யாண தீர்த்த அருவியை தனது 'பாபநாச யாத்திரை' என்னும் கட்டுரையில் ரசிக்கிறார் வ.வே.சு ஐயர்.

அதே அருவியில் குளிக்கத்தான் ஆசிரமக் குழந்தைகளுடன் மீண்டும் வ.வே.சு ஐயர் சென்றார். அவரது ஆசை மகள் சுபத்ரா அருவியை கடக்க முயன்றபோது கால் சறுக்கி அருவியில் விழுந்துவிட்டாள். அவளைத் தாவிப்பிடிக்க வ.வே.சு ஐயரும் அருவியில் குதித்தார். தாமிரபரணியின் சுழலில் சிக்கி மரணத்தைத் தழுவினார். அவரது வாழ்வின் குறியீடாகவே 'சுழல்' அமைந்துவிட்டது. 1925ஆம் ஆண்டு ஜூன் 3 ம் தேதி 44 ஆம் வயதில் அந்த வீர விளக்கு அணைந்தது.
வ.வே.சு ஐயரின் மரணம் கேட்டு பாரதிதாசன்,
“கேட்டீரோ தமிழர்களே நம்மில் மிக்க
கீர்த்தி கொண்ட தமிழன் உயிர்நீத்த செய்தி”
என்று துடித்தார்.
திருச்சி காந்தி சந்தைக்கு அருகிலுள்ள வரகனேரிதான் வ.வே.சு ஐயரின் சொந்த ஊர். வரகனேரி அக்கிரகாரத்தில் அவரின் பூர்வீகவீடு உள்ளது. அந்த வீட்டை அவரது மகன் டாக்டர் கிருஷ்ணமூர்த்தி, தந்தையின் நினைவாக அரசுக்குத் தந்துவிட்டார். அதில் ஒரு கிளை நூலகம் வ.வே.சு ஐயரின் நினைவாக இயங்குகிறது. டாக்டர் கிருஷ்ணமூர்த்தி தந்தையின் மரணத்தை அருகிருந்து பார்த்தவர். அவரது உறவினர் ரங்கூன் பசுபதி ஐயர்தான் படிக்க உதவினார். திருவானைக்காவலிலும் மணச்சநல்லூரிலும் மருத்துவராகப் பணி செய்த இவர், தன் தந்தை வ.வே.சு ஐயரின் நினைவாக திருச்சி IMA ல் ஒரு கூட்ட அரங்கம், திருவரங்கம் பெண்கள் பள்ளிக்கு ஓர் அரங்கம் திருவெள்ளரையில் ஒரு பள்ளி, மணச்சநல்லூர் அரசுப்பள்ளிக்கு ஓர் அரங்கம் என்று உதவியதாக வ.வே.சு ஐயரின் உறவினர்கள் சொன்னார்கள்.
நம்மை அந்த வரகனேரி வீட்டுக்கு அழைத்துச்சென்ற நூலகர் செந்தில்குமார், வ.வே.சு வணங்கிய அதே தெருவில் உள்ள பெருமாள் கோயிலைக் காட்டினார். சற்று தொலைவில் உள்ள குளத்தைக்காட்டி, வ.வே.சு ஐயரின் 'குளத்தங்கரை அரசமரம்' கதையின் குளம் இதுவாக இருக்கலாம் என்றார். வ.வே.சு தனது 15-ம் வயதில் மணமுடித்த பாக்கியலட்சுமி அம்மாவின் படம் பெரிதாக அந்த நூலகத்தில் இருந்தது.

வ.வே.சு ஐயரின் மகன் டாக்டர் கிருஷ்ணமூர்த்தியின் வீடு 'வ.வே.ஸு ஐயர் நிலையம்' ஶ்ரீரங்கத்தில் உள்ளது. நாங்கள் போனபோது கிருஷ்ணமூர்த்தியின் மருமகள் விஜயலட்சுமியும் பேத்தி பாக்கியலட்சுமியும் இருந்தார்கள். வ.வே.சு ஐயர் பயன்படுத்திய கத்தியை நம் கையில் தந்தபோது நமக்கு ஏற்பட்ட உணர்ச்சி அலாதியானது. சுத்தானந்தபாரதி, ஏ.கே.செட்டியார் போன்றோர் எழுதியுள்ள கடிதங்களை பத்திரமாக வைத்துள்ளனர். காந்தி எழுதிய கடிதமும் உள்ளது. வ.வே.சு ஐயரின் மூக்குக்கண்ணாடியைப் பார்த்தபோது, நம்மையே அவர் பார்ப்பது போல் இருந்தது. அந்தக் குடும்பம் அவரை வணங்கிக் கொண்டாடுகிறது.
வ.வே.சு வின் அப்பா வேங்கடேசய்யர். பள்ளி ஆய்வாளராக வேலை செய்தவர். அம்மா காமாட்சி அம்மாள். இவர்களுக்கு 1881-ம் ஆண்டு ஏப்ரல் 2ம் நாள் பிறந்தவர்தான் சுப்பிரமணியம். படிப்பில் படு சுட்டி. மெட்ரிக் தேர்வில், சென்னை ராஜதானிலேயே 5-ம் இடம் பிடித்து திருச்சியின் பேசு பொருளானார். செயின்ட் ஜோஸப் கல்லூரியில் சேர்ந்து பி.ஏ முடித்தார். பின்னர் வக்கீல் படிப்பில் (Pleader) வென்று, திருச்சி மாவட்ட நீதிமன்றத்தில் 5 ஆண்டுகள் முதல் வகுப்பு வக்கீலாகத் தொழில் செய்தார். இங்கிருந்து ரங்கூன் சென்றார். ரங்கூனில்தான் பின்னாட்களில் ராஜாஜி அமைச்சரவையில் மந்திரியாக இருந்த டி.எஸ்.எஸ். ராஜன் நெருங்கிய நண்பரானார். அங்கிருந்து பாரிஸ்டர் பட்டம் பெற 1907 ம் வருடம் லண்டன் போனார். தமிழ்நாடு கொந்தளித்த காலம் அது (1905-1906). வ.உ.சி, பாரதி, சிவா என்ற மூவர் கூட்டணியால் தமிழகம் தகித்தது. ஆனால் அப்போது வ.வே.சு அதில் ஆர்வம் காட்டவில்லை. லண்டன் வாழ்க்கைதான் அவரை மாற்றியது.
தமிழில் முத்துமுத்தான 81 புத்தகங்கள் எழுதிய வெ.சாமிநாத சர்மா வ.வே.சு ஐயரின் உருவத்தை நம் கண்முன் நிறுத்துகிறார். “அப்போது அவருக்கு நாற்பது வயதுகூட பூர்த்தியாகவில்லை. ஆயினும் அவருடைய தலை முடியிலும் தாடிமீசையிலும் நூற்றுக்கு சுமார் முப்பத்தைந்து சதவிகிதம் நரைத்திருந்தது. நெற்றியில் திரையும் விழுந்திருந்தது. ஆயினும் உடலுறுப்பு ஒவ்வொன்றும் வஜ்ரக் கட்டுடையதாக இருந்தது. அகன்ற மார்பு, வளையாத முதுகெலும்பு, கர்லா கட்டைகள் மாதிரி கையும் காலும். ஒளியும் அருளும் நிறைந்த கண்கள். இவற்றை எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் பார்த்துக்கொண்டிருக்கலாம். ஓவியனோ சிற்பியோ தங்கள் கைத்திறனைக் காட்டுவதற்கேற்ற உருவம்.”
இந்த உருவம் லண்டனில் சைவ உணவைத்தேடி 'இந்தியா ஹவுஸ்' சென்றது. அங்குதான் வ.வே.சு, தன் வாழ்க்கையை முற்றிலும் மாற்றிய வீர சாவர்க்கரை 1907 டிசம்பரில் சந்தித்தார். அவர் 'சுதந்திர இந்திய சங்கம்' என்ற அமைப்பை உருவாக்க, அதன் ரகசிய உறுப்பான 'அபிநவ பாரதம்' என்ற தீவிரவாத அமைப்பில் வ.வே.சு துணைத்தலைவரானார். அதில்தான் டி.எஸ்.எஸ்.ராஜன், எம்.பி.டி.ஆச்சார்யா ஆகியோரும் செயல்பட்டனர்.
வ.வே.சு ஐயர் - தமிழ், சமஸ்கிருதம், இந்தி, வங்காளி, ஆங்கிலம், பிரஞ்சு, கிரேக்கம், லத்தீன் ஆகிய மொழிகளில் வல்லவர். அந்த மொழிகளில் பேசும்போது தாய்மொழிக்காரர்கள் பேசுவதுபோலவே உச்சரிப்பும் இருக்கும் என்கிறார் சாமிநாத சர்மா. இந்த மொழியாற்றல் அவரது தலைமறைவுக்கும் நாடுவிட்டு நாடு தப்பிக்கவும் ரொம்பவே பயன்பட்டது. லண்டன் இந்தியா ஹவுஸ்தான் வ.வே.சு ஐயரை புரட்சிக்காரராக மாற்றியது.

விடுதலைப்போரில் பல வழிகளை போராட்டக்காரர்கள் கையாண்டனர். எல்லா வழிகளும் ஏதோவகையில் தாயின் விலங்கை உடைக்கவே செய்தன. வ.வே.சு ஐயர், 'தனிநபர் பயங்கரவாதம்' என்ற தீவிரவாதத்தை ஆதரித்தார்.
1857ல் நடந்த ராணுவப் எழுச்சியை 'கலகம்-Mutiny' என்று கொச்சைப்படுத்தியது பிரிட்டிஷ் அரசு. இல்லை அது 'முதல் சுதந்திரப்போர்' என்றது சாவர்க்கரின் இந்தியா ஹவுஸ். இதை நூலாக்கியதில் வ.வே.சு பங்கு முக்கியமானது. அப்போது லண்டனில் இருந்த காரல் மார்க்ஸ் இதை The First Indian war of Independence என்றுதான் அழைத்தார்.
வெள்ளையர்களை நடுங்கவைத்த ஒரு பெயர் மதன்லால் திங்காரா. பஞ்சாபியன். பொறியியல் படிக்க லண்டன் வந்தவன். ஏகாதிபத்திய அடையாளமாக 'கர்சான் வைலியை' இம்ப்ரீயல் இன்ஸ்டிடியூட்டில் வைத்து திங்காரா சுட்டுக்கொன்றார். விடுதலையை தன் 22ம் வயதில் மறுத்து, பேரரசர் பகதூர் ஷாவின் கவிதையைச் சொல்லி தூக்குக்கயிற்றை முத்தமிட்டார். இதில் திங்காரா வ.வே.சு.ஐயரின் தயாரிப்பு என்பதை கவனிக்கவேண்டும். இந்த அழித்தொழிப்பை பாரதியின் இந்தியா பத்திரிகையில் தன் லண்டன் கடிதத்தில் வ.வே.சு பாராட்டி எழுதினார்.
வ.வே.சு வின் லண்டன் வாழ்க்கையில் காந்தியின் வருகை, சில கேள்விகளை அவருள் எழுப்பியது. வ.வே.சு - காந்தி சந்திப்பு 1909 அக்டோபர் 14 ல் நடந்தது. மூன்று நாள்கள் பேசினார்கள். இந்த சந்திப்பின் சாரமே 'ஹிந்து ஸ்வராஜ்' என்ற காந்தியின் புத்தகமாக நமக்கு கிடைக்கிறது.
அன்று இரவு டி.எஸ்.எஸ் ராஜனை சந்தித்த வ.வே.சு சொன்னாராம்... “மனித சிருஷ்டியில் உயர்ந்தவரும் ஒப்பற்றவருமான ஒருவரை இன்று சந்தித்தேன். அவர் சாமானிய மனிதரன்று. அவருடன் பேசப்பேச என் மனம் அவரிடம் ஈடுபட்டுவிட்டது. என்ன அன்பு, என்ன மரியாதை, என்ன தேசபக்தி, என்ன உண்மை சொல்லி முடியாது போ...” என்று.
இப்படியான ரசவாதம் அவருள் கொப்பளித்தபோதுதான் பாரிஸ்டர் தேர்வில் வெற்றி பெற்றார். இங்கிலாந்து வழக்கப்படி ஜார்ஜ் மன்னர்மீது விசுவாசப்பிரமாணம் எடுத்தால்தான் பட்டம் கிடைக்கும். வீரர் வ.வே.சு. மன்னரின் பெயர் சொல்ல மறுத்தார். கனவு கைக்கு வரும் நேரமது. வயது வெறும் 29தான். இப்படி பட்டத்தை துறந்த முதல் இந்தியர் வ.வே.சுதான். மானம் பெரியதென்று வாழும் மனிதராக லண்டனைவிட்டு கிளம்பினார்.
பாரிஸ் வழியாக புதுச்சேரி போகும் திட்டம். ஒரு சாகசக்காரனின் சினிமா மாதிரியான பயணம் அது. ஆங்கிலமே தெரியாத சீக்கியராகப் பயணம். பெட்டியில் VVS என்ற எழுத்து வேண்டுமென்றே. விசாரணையில் வி.விக்ரம் சிங் என்ற பதிலோடு பாரிஸ் சேர்ந்தார். அங்கிருந்து ரஸ்டம் சேட் என்ற பார்சி கனவானாக லத்தீன் பேசினார். பிறகு முஸ்லிம் சந்நியாசியாக மாறி புதுச்சேரி போய்சேர்ந்தார் - அது அக்டோபர் 1910.

அடுத்த பத்து ஆண்டுகள் (1910-1920) வ.வே.சு வின் வாழ்வில் முக்கியமான ஆண்டுகள். பாரதி, சிவா, அரவிந்தர், பாரதிதாசன், நீலகண்டர் என்று நண்பர்கள் சூழ வாழ்ந்தார். வ.வே.சு வின் இலக்கிய வாழ்க்கை ஒளிவீசியது இங்குதான். போலிஸின் கெடுபிடியும் அதிகம்.
தினப்பத்திரிகையால் இலக்கியம் வளர்க்க முடியாது. அதற்கு ஒரு மாதப் பத்திரிக்கை வேண்டும் என்பது அவர் எண்ணம். கல்கத்தாவின் ராமானந்த சாட்டர்ஜியின் மாடர்ன் ரெவ்யூ மாதிரி ஒன்று வேண்டும் என்பாராம். அதன் விளைவே குருகுலம் தொடங்கியபோது அவர் ஆரம்பித்த 'பாலபாரதி'. புதுவையில் கம்பநிலையம் என்ற புத்தக வெளியிட்டு நிறுவனத்தைத் தொடங்கினார். தருமம் என்ற மாதமிருமுறை இதழைத் தொடங்கினார். புரட்சிகரமான இளைஞர்களைத் திரட்டும் பணியில் ஈடுபட்டார். வீர விளையாட்டுகளில் பயிற்சியளித்தார்.
மேடம் காமாவுடன் பாரிஸில் ஏற்பட்ட தொடர்பு புதுச்சேரியிலும் நீடித்தது. 'பாரீஸ் குழு'வின் புரட்சிப் போக்குடன் வ.வே.சு உடன்பட்டார். இந்தச் சூழலில் வாஞ்சிநாதனை புதுச்சேரியில் சந்தித்த வ.வே.சு அவருக்குத் துப்பாக்கி சுடும் பயிற்சியளித்தார். வாஞ்சியின் துப்பாக்கி 1911 சூன் 17 காலை 10-40 மணிக்கு மணியாச்சியில் வெடித்தது. வ.உ.சியின் கப்பல் கம்பெனியை சிதைத்து, அவரின் கொடிய சிறை தண்டனைக்குக் காரணமான தூத்துக்குடி சப்-கலெக்டர் ஆஷ் வாஞ்சியால் சுடப்பட்டார். தன்னையும் சுட்டுக்கொண்டு வாஞ்சி மரணமடைந்தார். வாஞ்சியின் பையிலிருந்த கடிதம் தனிநபர் பயங்கரவாதத்தில் மத உணர்வும் அரசியலும் கலந்திருப்பதை தெளிவாகப் பேசியது.
வாஞ்சிநாதனின் ஆஷ் கொலையை திட்டமிட்டவர் வ.வே.சுதான் என்பது நீலகண்டபிரம்மச்சாரின் வாக்குமூலம். 1918-ம் வருடத்தின் புலனாய்வுத் துறை அறிக்கையும் வ.வே.சு வை கைகாட்டுகிறது. ஆனாலும் குற்றப் பத்திரிகையில் வ.வே.சு பெயர் இல்லை. மிகத்தெளிவான திட்டமிடலால் வ.வே.சு தப்பித்தார். 1920-ம் ஆண்டு சென்னை மாநில அரசு தந்த பொதுமன்னிப்பால் அவரால் சென்னைக்குள் வரமுடிந்தது.
காந்தி யுகத்தின் செல்வாக்கு பரவியது. “காந்தி சொற்கேட்டார், காண்பார் விடுதலை கணத்தினுள்ளே” என்று திலகரின் சீடர் பாரதி பரவசமானார். திரு.வி.க காந்தியை முதன்முதலாக அடிகள் என அழைக்கலானார். திரு.வி.க வைத் தொடர்ந்து வ.வே.சு தேசபக்தன் ஆசிரியரானார். காந்தியின் கிலாபத் இயக்கத்தை ஆதரித்து மத ஒற்றுமையை போற்றினார்.

தேசபக்தனில் தான் எழுதாத 'அடக்குமுறை' என்ற தலையங்கத்துக்காக ராஜதுரோக வழக்கில் தண்டிக்கப்பட்டு ஒன்பது மாதங்கள் பெல்லாரி சிறையில் இருந்தார். சிறை சென்ற வ.வே.சு வை அவர் மனைவி பாக்கியலட்சுமி வாழ்த்தி அனுப்பியது வெறும் செய்தியல்ல. அவரின் சமஸ்கிருதம் விரவிய மொழிநடையை அறிய தேசபக்தன் கட்டுரைகள் முழுதும் தொகுக்கப்படவேண்டும் என்பது ஆய்வாளர் பெ.சு.மணியின் விருப்பம்.
பல மொழிகள் கற்ற வ.வே.சு ஐயர் எழுதி, ஆங்கில நூல்கள் இரண்டும் தமிழ் நூல்கள் ஏழும் வந்துள்ளன. அவரின் கம்பநிலையம் பல நூல்களை வெளியிட்டது.
வ.வே.சு ஐயரின் இலக்கிய பேரறிவு தனியாகப் பேசப்படவேண்டிய அளவு விரிவானது. அவரின் திருக்குறள் மொழிபெயர்ப்பு அலாதியானது. அதன் 44 பக்க முன்னுரை அதுவரை வந்த (1820-1886) மொழிபெயர்ப்புகளை ஆய்வு செய்கிறது. அதில் ட்ரூ பாதிரியாரின் மொழியாக்கம் மேலோட்டமானது என்கிறார். போப்பின் மொழியாக்கம் நீர்த்துப்போன நடையால் குறளின் வீச்சை வெளிப்படுத்தவில்லை என்பது வ.வே.சு-வின் கருத்து. அதனால் பைபிளின் பழைய ஏற்பாட்டின் சாலமோன் ஞானம், மலைப்பிரங்கம் போன்றவையின் மொழிபெயர்ப்பில் கையாளப்பட்ட மொழிநடை, மரபுத்தொடர்களை தழுவி என் மொழிபெயர்ப்பை செய்துள்ளேன் என்கிறார். இப்படிச் சொல்ல எவ்வளவு ஞானம் வேண்டும். இதை புதுச்சேரியில் இருக்கும்போது ஐந்து மாதங்களில் முடித்துள்ளார். இதை 1916-ல் சுப்ரமண்ய சிவா வெளியிட்டுள்ளார். மனிதகுலத்தின் மகத்தான படைப்பு திருக்குறள் என்பது வ.வே.சு ஐயரின் கருத்து. இந்த முன்னுரை இப்போது வரும் TIRUKKURAL BY VVS AIYAR மொழிபெயர்ப்புகளில் இல்லை. பாவம் தமிழர்கள்!

இதைப்போலவே ரால்ப்வால்டோ எமர்சன் எழுதிய உலகப்புகழ்பெற்ற SELF RELIANCE புத்தகத்தை 'தன்நம்பிக்கை' என்று மொழியாக்கம் செய்து உலக அறிவுக்குத் தமிழர்களை தயாரித்தார்.
தமிழில் விமர்சனக்கலையை தன்னுணர்வோடு முதன்முதலில் கையாண்டவர் வ.வே.சு ஐயர் என்பது மார்க்சீய ஆய்வாளர் கைலாசபதியின் கருத்து. அதற்கு வ.வே.சு ஐயரின் கம்பன் குறித்த ஆய்வை அவர் மேற்கோள் காட்டுகிறார்.

முழு வீச்சோடு அவரை அடையாளம் காட்டிய பெரும் படைப்பு அவரது - KAMBA RAMAYANA—A STUDY. பெல்லாரி சிறையில் எழுதியது இது. இதற்கு அவர் வைத்த தலைப்பு STUDY OF KAMBAN. வால்மீகி, துளசிதாசர், பாஸ்கரா முதலிய ராமாயணங்களுடன் மற்ற உலக காவியங்களையும் சேர்த்து கம்பனோடு ஒப்பிட்ட வ.வே.சு ஐயரின் ஆற்றலை வியப்பதைத்தவிர வேறு என்ன நாம் செய்யமுடியும்.
தமிழ் சிறுகதையின் முன்னோடியும் அவர்தான். அவரின் குளத்தங்கரை அரச மரத்தை புதுமைப்பித்தன் முதல் கா.நா.சு வரை ஸ்லாகிக்கிறார்கள். புதுமைப்பித்தன் வ.வே.சு வை 'சிறுகதையின் பிதா' என்கிறார். அவரது மங்கையர்கரசியின் காதல் முக்கியமான தொகுப்பு.
இவ்வளவு பெரிய ஆளுமை பாபநாசம் அருவியின் சுழலில் மட்டுமல்ல சாதியச் சுழலிலும் சிக்கினார். வ.வே.சு ஐயர் இமயமலைச்சாரலில் பார்த்த காங்டி குருகுலம்போல தமிழ் குருகுலம் ஒன்றை சேரன்மாதேவியில் நிறுவினார். அதை நடத்துவதற்கு பாரத்வாஜ ஆசிரமத்தை உருவாக்கினார். அங்கு உணவு அளிப்பதில் சாதி வேற்றுமை காட்டப்பட்டது. இதை எதிர்த்து மிகப்பெரும் புயல் வரதராஜூலு நாயுடு தலைமையில் கிளர்ந்தது. காந்தியடிகள் தலையிட்டும் சமரசம் கிடைக்கவில்லை. மிகப்பெரிய ஆய்வாக இதை பழ.அதியமான் எழுதியுள்ளார்.
வ.வே.சு ஐயர் சொந்த முறையில் சாதி வேற்றுமை பார்க்காதவர் என்று பல சம்பவங்களை சர்மாவும் திரு.வி.கவும் ராய சொக்கலிங்கமும் குறிப்பிடுகிறார்கள். காலச்சூழலால் பிரச்னை தொடர்ந்தது. உயர்ந்த நோக்கங்களுக்காக தொடங்கப்பட்ட ஆசிரமப் பொறுப்பிலிருந்து 1925-ம் ஆண்டு ஏப்ரல் 21ம் நாளில் வ.வே.சு ஐயர் மனம் கசந்து விலகினார்.
விடுதலைப்போர் வரலாற்றில் ஒரு போக்கு தெரிகிறது. அரசியலில் தீவிரமாக இருந்த பலர் சமூக சீர்திருத்தத்தில் மிதவாதிகளாக இருந்துள்ளனர். வேறு சிலரோ நேர் எதிராக சமூக சீர்திருத்தத்தில் தீவிரமாகவும் அரசியலில் மிதமாகவும் இருந்துள்ளனர். இதற்கு வ.வே.சு ஐயரும் தப்பவில்லை என்றே காலம் பதில் சொல்கிறது.

96 ஆண்டுகள் முடிந்த நிலையில் வ.வே.சு ஐயரின் வாழ்க்கையை அசைபோடும்போது, இரண்டு தரப்புமே சற்று நிதானித்திருக்கலாம்; வ.வே.சு ஐயர் கொஞ்சம் பிடிவாதத்தை தளர்த்தியிருக்கலாம். இப்படி நடப்பதற்கான அவகாசத்தை இயற்கை அவருக்கு தரவில்லை. அதற்குள் காலதேவதை அவசரப்பட்டு வ.வே.சு என்னும் மேதையை தன் கைகளில் ஏந்திக்கொண்டது. நஷ்டம் நமக்குத்தான்.
'சுழல்' ஒரு வகையில் குறியீடாகவே அவருக்கு அமைந்துவிட்டது. சுழலில் சிக்கிய அவர் உடல் ஐந்து நாள்கள் கழித்து ஜூன் 8ம் தேதி அருவியின் அருகே ஒரு குளத்தில் கிடைத்தது. ஆசிரமம் பிரச்னையில் அவரோடு முரண்பட்ட வரதராஜூலு நாயுடு தலைமையில் இரங்கல் கூட்டம் நடந்தது. எல்லோரும் வ.வே.சு ஐயரின் வீரத்தை, தியாகத்தை, தேசபக்தியை புகழ்ந்தனர். அந்த பொருணை நதி அமைதியாக ஓடிக்கோண்டிருந்தது.
வ.வே.சு ஐயரின் மனம் கவர்ந்த திருக்குறள் இப்படி சொல்கிறது:
“கொன்றன்ன இன்னா செயினும் அவர்செய்த
ஒன்றுநன்று உள்ளக் கெடும்” (109)
“The mortallest Injury is forgiven the moment the mind recalleth a single kindness received from the injurer.”BY V.V.S. AIYAR