
மாற்றம்
குருகுலம், திண்ணை, பள்ளி, ஸ்மார்ட் கிளாஸ் ரூம்... இப்போது ஹோம் ஸ்கூலிங் எனக் கல்வி பயிலும் இடமும் கல்வியின் பரிணாமமும் மாறிக்கொண்டே வருகின்றன.
அதென்ன 'ஹோம் ஸ்கூலிங்' என்பவர்களுக்கு... வீட்டிலேயே குழந்தைகள் விரும்பும் வாழ்வியலுக்குத் தேவையான படிப்பை, கலையைப் பெற்றோர்களே சொல்லித்தருவதுதான் ஹோம் ஸ்கூலிங். முக்கிய மாநகரங்களில் பரவி வரும் இந்தக் கல்வி முறையைப் பற்றி பேசினார்கள் சென்னையைச் சேர்ந்த பிரியங்கா - பரத் தம்பதி.
``எங்க பொண்ணு த்ரியாவைப் பள்ளிக்கூடத்துக்கு அனுப்பினதே இல்லை. ஆனா, சரளமா ஆங்கிலம் பேசுவா, நல்லா பாடுவா, சூப்பரா வரைவா, டெக்னாலஜில செம அப்டேட், யூடியூப்ல வீடியோ பண்றா'' என்று அடுக்க, நம்மிடம் தயக்கமில்லாமல் கைக்குலுக்கி, அசத்தும் ஆங்கிலத்தில் தன்னை அறிமுகப்படுத்திக்கொள்கிறார் ஆறு வயதான த்ரியா. மிரண்டுதான் போனோம்.
``நீங்க என் பொண்ணுக்கிட்ட பார்க்கிற தன்னம்பிக்கைதான் ஹோம் ஸ்கூலிங் முறையின் வெற்றி. நாம படிக்கிற டிகிரியைவிட, கூடுதலா படிக்கிற கலைகளே வேலைக்கு உதவும்கிறதை எங்க ரெண்டு பேர் அனுபவத்துல உணர்ந்தோம். நம்ம கல்வி முறையோட தோல்வியை எங்களால உணர முடிஞ்சது. அதனாலதான் எங்க குழந்தைக்குத் தேவையான வாழ்வியல் கல்வியை வீட்டில் இருந்தே அவளுக்குக் கற்பிக்கிறோம். பள்ளிக்கூடத்துல எல்லா குழந்தைகளும் ஒரே மாதிரி படிக்கணும்னு நினைக்கிறாங்க. ஏன் ஒரு குழந்தை மெதுவா கத்துகிறா / எழுதுறாங்கிறதைகூட குறையா நினைக்கிற பள்ளிகள் நிறைந்த சமூகத்துல வாழ்றோம். மதிப்பெண்ணை மட்டும் வெற்றியா பார்க்கிற பள்ளிக் கூடங்களுக்குள் என் குழந்தை தொலைஞ்சுடக் கூடாதுங்கிறதுல தீர்மானமா இருக்கோம்.

உண்மையைச் சொல்லணும்னா நம்ம பாடத் திட்டம், வாழ்வியலோடு இணைந்திருக்கா... கணிதத்தில் இருந்த அல்காரிதத்தை கற்க, நான் ஓர் ஆண்டு முழுக்க சிரமப்பட்டேன். மார்க் எடுக்க பயன்பட்டதை தவிர, அல்காரிதம் எங்கேயுமே பயன்படலை. அப்டேட் இல்லாத ஒரே துறைன்னா அது கல்வித்துறை மட்டும்தான். நான் படிச்சதைத்தான் என் மகளுக்கும் கத்துக்கொடுக்கிறேன்'' என்று பரத் முடிக்க, தொடர்ந்தார் பிரியங்கா...
“த்ரியாவோட ரெண்டு வயசுல அவளுக்கு டான்ஸ், பாட்டுல ஆர்வம் இருக்கும்கிறதை பலகட்டத் தேர்வுகளுக்குப் பிறகு தெரிஞ்சுக்கிட்டு, அதுல சிறப்பா அவளை கொண்டுவர வழி ஏற்படுத்தியிருக்கோம். காலையில தூங்கி எழுந்ததில் ஆரம்பிச்சு படுக்கிற வரை தொடர்ச்சியா தனக்கு தோணுற சந்தேகங்களை, கேள்வி களை எங்களிடம் கேட்டுட்டே இருப்பா. தெரிஞ்சதுக்குப் பதிலும், தெரியாததுக்கு எக்ஸ்பர்ட்கிட்ட கேட்டும் சொல்லுவோம். அவகூடவே நாங்க எந்த நேரமும் இருந்துட்டே இருப்போம்.

மாதம் ஒருமுறை டிராவல் பண்ணுவோம். அது தொடர்பான தகவல்களை எல்லாம் அவளுக்குச் சொல்வோம். உதாரணத்துக்கு மெரினா பீச்சுக்குப் போறோம்னு வெச்சுக் கோங்க. மெரினாவோட நீளம், அதன் நிலப்பரப்பு, நீரில் இருக்கும் சத்துகள், மீனவர்களின் வாழ்க்கை முறை, கடல்வாழ் உயிரினங்கள்னு எல்லாத்தையும் நேர்ல காட்டி விளக்கறதுனால எதையும் மறக்க மாட்டா. மன அழுத்தம் இல்லாமலே பல விஷயங்களைப் புரிஞ்சுக்கிறா. அது போதும் எங்களுக்கு.
இப்போ வரை `நான் ஏன் ஸ்கூலுக்கு போகலை’ன்னு என் பொண்ணு கேட்டதே இல்லை. ஒருவேளை இன்னும் பத்து வருஷங்கள் கழிச்சுக்கேட்டால், நேஷனல் இன்ஸ்டிட்யூட் மூலமாகத் தேர்வு எழுத வெச்சு உயர்கல்வியைப் படிக்க வைப்போம்'' என்று மிகத் தெளிவாகப் பேசுகிறார் பிரியங்கா.
``எல்.கே.ஜி-யில ஆரம்பிச்சு 12-வது வரைக்கும் லட்சக்கணக்கில் குழந்தைகளின் படிப்புக்காக பெற்றோர் செலவிடறாங்க. நாங்க அதைவிட ரொம்ப குறைவாதான் செலவிடறோம். எங்க பசங்க மேடைக் கூச்சம் இல்லாத திறமையான, தன்னம்பிக்கையானவங்களா வளர்றாங்க. மொத்தத்துல குழந்தையா...'' என்று சொல்லி முடித்தார் பரத்.
லின்சி - பிரசாத் தம்பதி
“எங்க பையன் ஜாக்ரிக்கு இப்போ நாலு வயசு. டி-ஷர்ட் பெயின்டிங், பில்டிங் டிசைனிங்கில் அவன் எக்ஸ்பர்ட். இதுக்காக என் பையனும் நாங்களும் நிறைய உழைப்பைக் கொடுத்திருக்கோம். ஹோம் ஸ்கூலிங் முறை பெத்தவங்களுக்குச் சவாலான ஒண்ணுதான். உங்க குழந்தைக்கு ஒரு விஷயம் தெரியுறதுக்கு முன்னாடி, அது உங்களுக்குத் தெரிஞ்சிருக்கணும். பள்ளிக்கூடத்துல மிஸ்கிட்ட கேட்டா பதில் கிடைக்காத கேள்விகளை எங்ககிட்ட கேட்டு தெரிஞ்சு கிறதுனால மனசுல ஆழ பதிச்சுக்கிடுறாங்க.
தமிழ்நாட்டைப் பொறுத்தவரை ஆங்கிலம் பேசுறதுக்காகவே பிரபல பள்ளிக்கூடத்துல சேர்க்கிற பெற்றோர் இருக்காங்க. அதே தப்பை நாங்க பண்ண விரும்பலை. தமிழ்ல பேசுற மாதிரி என் பையன்கிட்ட நான் ஆங்கிலத்துலயும் பேசுறேன். அதனால, அந்த மொழி மேல என் மகனுக்கு பயம் இல்லை. என் குழந்தை வயசுக்கு என்னவெல்லாம் அடிப்படையா தெரிஞ்சிருக்கணுமோ, அதையெல்லாம் கட்டாயப்படுத்தாம, வாழ்வியல் முறையோடு சொல்லிக்கொடுக்கிறோம்.
ஹோம் ஸ்கூலிங் பண்ற எங்களை மாதிரி பெற்றோரெல்லாம் தினமும் ஓர் இடத்துல எங்க குழந்தைகளுடன் மீட் பண்ணுவோம். எங்க குழந்தைகள் எல்லோருமே ஒவ்வொரு விஷயத்துல தனித்துவமா இருப்பாங்க. ஒரு குழந்தையுடன் மத்த குழந்தையை ஒப்பிடாம, அதே நேரம் குழந்தைகள் வளர்ச்சிக்கு என்ன பண்ணணும்னு எல்லாருமே யோசிப்போம். ஒரு விஷயத்தை எப்படி சொல்லிக்கொடுக்க லாம்னு எல்லோரும் சேர்ந்து டிஸ்கஸ் பண்ணிதான் சொல்லிக்கொடுப்போம்” என்ற லின்சியிடம், `வெற்றி தோல்வி பற்றி குழந்தைகள் அறியாமலேயே போய்விடுவார்களே' என்று கேள்வி எழுப்பினோம்.
“(சிரிக்கிறார்) என் குழந்தையோட திறமையை தெரிஞ்சுக்கிட்டு அது சார்ந்த போட்டிகளுக்கு அனுப்பிட்டுதான் இருக்கோம். என் பையன் வரைஞ்ச டி-ஷர்ட்களை ஸ்டால் போட்டு விற்பனை பண்ணியிருக்கோம். நூலகங்கள், கதைசொல்லிகள் நடத்தும் நிகழ்ச்சிகள்னு பல இடங்களுக்குப் போற எங்க குழந்தைகளுக்கு தேசிய அளவிலான போட்டிகளில் பங்கேற்கும் வாய்ப்புகள் மத்த குழந்தைகளைவிட அதிகம்" என்று அழகாகப் புரியவைக்கிறார் லின்சி.
மனைவி பேசுவதை கவனித்துக் கொண்டிருந்த பிரசாந்த் தொடர்ந்தார்... ``ஹோம் ஸ்கூலிங் பண்ற குழந்தைகளுக்கு, என்.ஐ.ஓ.எஸ்-னு ஒரு பாடத்திட்டம் வெச்சிருக்காங்க. அதில் குறிப்பிட்ட வயசு குழந்தைகள் அந்த வயசில் குறைந்தபட்சம் என்னென்ன தெரிந்து வெச்சிருக்கணும்னு இருக்கும். அதை அவங்களுக்குப் புரியும் விதத்தில் எந்த வற்புறுத்தலும் இல்லாமல் சொல்லிக்கொடுக்கிறோம். எங்க குழந்தையிடம் மார்க் இருக்காது. ஆனால், நிச்சயமாக அதிக திறமை இருக்கும்” என்று உறுதியாகச் சொல்கிறார் பிரசாந்த்.